Saturday, 23 February 2013

வெற்றி தோல்வி என்பது சமகால மதிப்பீடு அல்ல!

எழுத்தாளர் உதயசங்கருடன் ஒரு நேர்காணல் – திருவுடையான்DSC01583

( எட்டு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து கவிதைத் தொகுதிகள்,குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று,ஐம்பதுக்குமேற்பட்ட மொழிபெயர்ப்புப் புத்தகங்கள், குழந்தை இலக்கியத்தில் முக்கியப்பங்களிப்பு, என இயங்கி வரும் எழுத்தாளர் உதயசங்கர் சமகாலத்தில் உரிய கவனிப்பு பெறாதவர் என விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். தமிழின் ஆகச் சிறந்த கதைகள் பலவற்றுக்குச் சொந்தக்காரரான உதயசங்கர் ஒரு படைப்பிலக்கியவாதியின் வெற்றி-தோல்வி என்பது சமகால மதிப்பீடு அல்ல என்கிறார். இவரது திரைக்கதை,வசனம்,பாடல்களில் உருவான நினைவோடு கலந்து விடு என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. )

1 . 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இப்பயணம் பல வெற்றி - தோல்விகளைக் கொண்டதாக இருக்கும். இதில் சலிப்பில்லாமல் பயணிக்கும் துணிச்சலை எவ்வாறு பெற்றீர்கள்?

30 ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதை மிக அதிகமான காலம் என்று நான் நினைக்கவில்லை. எழுத்து என்னைத் தன்வயப்படுத்திய பின் எழுதிக் கொண்டிருப்பது என் வாழ்வின் அர்த்தம் என்று நான் இயல்பாகவே எடுத்துக்கொண்டேன். மகத்தான மானுடவாழ்வின் இருண்ட பக்கங்களையும், ஒளிவீசும் நம்பிக்கைகளையும் கலை இலக்கியத்தைத் தவிர வேறு எதனால் சொல்லிவிட முடியும். மனிதமனதின் அத்தனை சலனங்களை, ஆசைகளை, லட்சியங்களை, குரூரங்களை, அன்பை, நேசத்தை, வெறுப்பை கசப்பை, எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் மீண்டும் அந்த மனிதமனதின் முன் எடுத்தியம்புகிறார்கள். மனிதன் உள்ளும்புறமுமாக தன்னை ஒருமுறை திரும்பிப்பார்த்துக்கொள்கிறான். தன் மேன்மைகளையும் கசடுகளையும் அறிந்து கொள்கிறான். அதன் மூலம் தன்னையும் வாழ்வையும் புரிந்துகொள்கிறான். இலக்கியவாதி இத்தகைய மகத்தான காரியத்தைச் செய்யவே தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். அதில் அவன் எந்த அளவுக்கு வெற்றியடைகிறான் அல்லது தோல்வியடைகிறான் என்பது வேறு விஷயம். பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ரா. எம்.வி.வி, கரிச்சான்குஞ்சு, தொடங்கி இன்று வரை இலக்கியவாதிகள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மானுடவாழ்வுக்காக அர்ப்பணித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். எழுத்தில் இயங்குவதில் எனக்குச் சலிப்பேற்பட்டதில்லை. அது இன்னும் இன்னும் தாகமேற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.

இலக்கியத்தில் வெற்றி தோல்வி என்று கணிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் இது பந்தயப்போட்டி இல்லையே. பரவலான வாசிப்பு அதன் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அதுவும் சந்தேகத்துக்குரியதே. ப.சிங்காரம் எழுதிய காலத்தில் அவருடைய புயலிலே ஒரு தோணி பேசப்படவில்லை. ஆனால் பின்னர் பேசப்பட்டது. கொண்டாடப்பட்டது. அதே போல வணிகப்பத்திரிகைகளில் எழுதிப் பரபரப்பாகப் பேசப்பட்ட, வாசிக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் அந்தக்காலத்திற்குப் பிறகு மறைந்து போயிருக்கின்றன. எனவே இப்போது பரவலாக வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் படைப்புகள் உன்னதமானவை என்றோ பரவலாக வாசிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத படைப்புகள் சாதாரணமானவையென்றோ சொல்லி விட முடியாதென்றே அஞ்சுகிறேன்.

அந்த வகையில் என்னுடைய இலக்கியப்பயணத்தில் சில படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டும், அங்கீகரிக்கப்பட்டும் சில படைப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. அங்கீகரிக்கப்படும்போது எவ்வளவு உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு அடுத்த படைப்பை நோக்கி பயணிக்கிறேனோ அதே போல அலட்சியப்படுத்தப்படும்போதும் அதே தீவிரமான வலியோடு அடுத்த படைப்பை நோக்கிப் பயணிக்கிறேன்.

2. கவிதை - சிறுகதை - மீண்டும் கவிதை, குறுநாவல்கள்- மொழிபெயர்ப்பு- குழந்தை இலக்கியம்- மீண்டும் சிறுகதைகள்- நான் பிக்சன் - திரைக்கதை உருவாக்கம் என ஒரு மாதிரியான ‘ரைட்டா- தப்பா?’ விளையாட்டு போல ஒன்றுக்கு ஒன்று ரிலீஃபாக இருந்ததா?

கவிதை, சிறுகதை, குறுநாவல், குழந்தை இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, என்ற எல்லாவகைமைகளும் இலக்கியத்தின் உள்ளடங்குபவை தானே. எழுத்தாளன் என்பவன் அவனுக்கு விருப்பமிருந்தால் மேலே குறிப்பிட்ட இன்னும் குறிப்பிடப்படாத எல்லா இலக்கியவகைமைகளையும் கைக்கொள்கிறவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அத்துடன் ஒருவன் ஏன் எழுதுகிறான்? என்ற கேள்விக்குப் பின்னால் ஆயிரம் காரணகாரியங்கள் இருந்தாலும் மிக அடிப்படையான ஒரு காரணம் இருக்கிறது. அவனுக்கென்று பிரத்யேகமாக இந்த உலகத்தைப்பற்றி, மனித வாழ்வைப்பற்றிச் சொல்வதற்கு ஏதோ இருக்கிற காரணத்தினால் தான் அவன் எழுதுகிறான் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தான் சொல்ல விரும்புவதை எந்த இலக்கியவகைமையில் சொன்னால் அது வாசகரைப் பாதிக்கும் என்று நினைக்கிறானோ அந்த வகைமையில் சொல்ல அவன் அதை பழகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாரதி, புதுமைப்பித்தன் தொடங்கி ஏராளமான எழுத்தாளர்கள் பல இலக்கிய வகைமைகளில் எழுதியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மேலே சொன்ன காரணங்களோடு என் படைப்புகள் கவனிக்கப்படாமல் போகிறபோது ஏற்படும் சோர்வினால் நான் மூழ்கி விடாமல் அடுத்த இலக்கிய வகைமைக்குள் பயணம் செய்து என்னை மீட்டெடுத்துக் கொள்வேன். அதன் மூலம் எனக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றிக் கொள்வேன். இதுவா அல்லது அதுவா என்ற ஒற்றைநிலையை விட இதுவும் அதுவும் என்ற பன்முகநிலை என் மனதுக்கு உகந்ததாக இருக்கிறது

3. 1980 களின் பொற்காலம் என அழைக்கப்பட்ட கோவில்பட்டி உங்களுக்குக் கொடுத்தது என்ன?

கோவில்பட்டி என்ற சிறுநகரம் தன்னுடைய கந்தகபூமியின் வெம்மையையும், விருவோடிக்கிடக்கும் கரிசக்காட்டின் சுழன்றடிக்கும் பெருமூச்சை எங்களுக்குத் தந்தது. தீப்பெட்டியாபீஸ்களிலும், வேட்டாபீஸ்களிலும், தங்கள் உயிரைப் பணயம் வைத்த மக்களின் அழுகையையும் சிரிப்பையும் எங்களுக்குள் கடத்தியது. பாரதி, வ.உ.சி., என்று போராளிகள் நடந்து திரிந்த மண்ணாக இருந்தது. விவசாயிகளின் எழுச்சிக்களமாக இருந்தது கோவில்பட்டி. எனவே இடதுசாரிகள் இந்த மண்ணில் வேரூன்றினார்கள். இளமைப்பருவத்தில் எங்களுக்கு அரசியல்,தத்துவம், இலக்கியம், என்று எல்லாவற்றையும் போதித்த ஞானமரமாக கோவில்பட்டி இருந்தது. நாங்கள் வாழ்வை எதிர்கொள்ள தைரியமளித்தது. காருக்குறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சாமிகள்,கு.அழகிரிசாமி, கி.ரா,, போன்ற கலைஞர்கள் தங்கள் இருப்பினாலேயே எங்களுக்கு உத்வேகமளித்தார்கள். தயக்கமும், தாழ்வுமனப்பான்மையுமிக்க என்னை வாரியணைத்து பால்வண்ணம், தேவப்பிரகாஷ், பாலு, நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி, சிவசு, , போன்ற சகதோழர்களை எனக்களித்தது கோவில்பட்டி தான். பூமணி, தேவதச்சன், அப்பாஸ், கௌரிஷங்கர், வித்யாஷங்கர், தமிழ்ச்செல்வன், கோணங்கி, சோ.தர்மன், அப்பணசாமி, மாரீஸ், போன்ற இலக்கியவாதிகளை தமிழிலக்கியத்துக்குக் கொடுத்ததும் கோவில்பட்டிதான். இன்னும் சொல்லப்போனால் என்னை இங்ஙனம் ஆக்கியது என் ஊர் என்றால் . மிகையில்லை

4. இப்போது திரும்பிப் பார்க்கையில் எதிர்பார்த்ததை கோவில்பட்டி வழங்கியதாக நினைக்கிறீர்களா? அல்லது தமிழ் இலக்கியத்துக்கு கோவில்பட்டி வழங்கிய கொடை என்ன?

எல்லோரிடமும் அவரவர் ஊர் பேசிக்கொண்டிருக்கிறது. அதன் மொழி புரியாதவர்களுக்கு அந்த ஊரின் ரகசியங்களோ, செல்வங்களோ, புதையல்களோ, சாபங்களோ, தெரியாது. 80-களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கொடுத்தது கோவில்பட்டி. உலக இலக்கியவாதிகளை கோவில்பட்டித் தெருக்களில் அலைய விட்டது. தகிக்கும் எங்கள் விவாதங்களின்போது தெருக்களில், டீக்கடைகளில், கீழே சிதறி விழுந்த சொற்களை தன்இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டு எங்களை ஆற்றுப்படுத்தியது.. எங்கள் பண்பாட்டு நடவடிக்கைகளை, வீதி நாடகங்கள், பிக்காசோ நூற்றாண்டு கண்காட்சி, கார்ட்டூன் கண்காட்சி, யுத்த எதிர்ப்புக்கண்காட்சி, சமாதானக்கண்காட்சி, ஊக்குவித்தது. தமிழகத்தின் எல்லாத்திசைகளிலிருந்தும் கலைஞர்களை ஈர்த்தது. குறுகிய காலவர்த்தமானங்களைக் கடந்த ஊராக கோவில்பட்டி திகழ்ந்தது. தமிழிலக்கியத்துக்கு யாராலும் புறக்கணிக்க முடியாத படைப்பாளிகளான கு.அழகிரிசாமி, கி.ரா, பூமணி, தேவதச்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, சோ.தர்மன் போன்றவர்களைக் கொடையாகக் கொடுத்திருக்கிறது. அதேபோல நாவல், சிறுகதை, கவிதை, என்று எல்லாவகைமைகளிலும் தமிழிலக்கியத்துக்கு குறிப்பிடத்தகுந்த படைப்புகளைப் பங்களித்திருக்கிறது.

5) உங்கள் சிறுகதைகள் குறித்த சிறந்த மதிப்பீட்டினை க.நா.சு போன்றவர்கள் அளித்தனர். ஆனால் அந்த அளவுக்கு நீங்கள் நெருக்கமாகச் செயல்படும் இயக்கங்கள் உங்கள் படைப்புகள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன் வைத்ததா?

என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியான யாவர் வீட்டிலும் வெளியான போது க.நா.சு. அதைப்பாராட்டி எழுதியிருந்தார். அவருக்கு அந்தத் தொகுதியைக் கொடுத்தது வெங்கட்சாமிநாதன் என்று கேள்விப்பட்டேன். பின்னர் வெங்கட்சாமிநாதன் சாகித்ய அகாடமி வெளியிட்ட தமிழ்ச்சிறுகதைகளின் ஹிந்தி மொழிபெயர்ப்பு நூலிலும் என்னுடைய இரண்டாவது சிறுகதைத்தொகுதியான நீலக்கனவு நூலிலிருந்து அய்யம்பெருமாள் என்றொரு மனிதர் என்ற கதையைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துச் சேர்த்திருந்தார். நீலக்கனவு தொகுதிக்கு லில்லிதெய்வசிகாமணி சிறப்புப்பரிசும் கிடைத்தது. நான் சார்ந்திருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களான மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், அவ்வப்போது என் படைப்புகள் குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அமைப்பிலிருந்து எந்த ஒரு எழுத்தாளருக்கும் விமர்சனம் செய்வதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.

6. அதிகம் மறுக்கப்பட்ட (கவனிக்கப்படாத) சிறுகதை எழுத்தாளராகச் அதிகமாகச் சொல்லப்படுகிறீர்கள்.. ஏன் கவனிக்கப்பட வில்லை?

அப்படி மொத்தமாகக் கவனிக்கப்படாத எழுத்தாளர் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் போதுமான அளவுக்குக் கவனிக்கப்படவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதோடு இதெல்லாம் ஒருவகையில் ரிலேட்டிவ்வான விஷயம். இதில் இன்னும் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு படைப்பாளிக்கும் தான் முழுவதும் கவனிக்கப்பட்டதாகவோ, தன் படைப்புகள் பரவலாக வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவோ திருப்தி வராது. மற்றொன்று இன்றையச் சூழ்நிலையில் ஒரு படைப்பாளி கவனிக்கப்படுவதற்கு அவருடைய எழுதினால் மட்டும் போதாது. அதாவது எழுதுவது, புத்தகம் போடுவது,என்பதோடு மட்டும் முடிந்துபோவதில்லை. அதை புரோமோட் செய்ய அந்தப்படைப்பாளியே எல்லாமுயற்சிகளையும் எடுக்க வேண்டியிருக்கிறது. இலக்கிய நண்பர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு விமர்சகர்களுக்கு, அனுப்பி அவர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பது, கூட்டங்கள் நடத்துவது, மதிப்புரைகளை எழுதி வாங்கி அதை சரியான பத்திரிகைகளில் வரவழைப்பது, என்று படைப்பாளியே தன்முனைப்புடன் இறங்கி வேலை செய்யவேண்டும். எல்லாம் சரியாக அமைந்து, அந்தப்படைப்பும் நல்ல படைப்பாக அமைந்து விட்டால் பரவலாக கவனிக்கப்படுதலும் அங்கீகரித்தலும் நடைபெறுகிறது. இன்றைய உலகமயச்சூழலுக்கு ஏற்ப இது போட்டிப்பந்தயமாகவே மாறி விட்டது. எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். என்னைப்போல தன்முனைப்பு குறைவான எழுத்தாளர்களுக்கு தற்செயலாக ஏதாவது நடந்தால் தான் உண்டு

7. சோஷலிச யதார்த்த வாதம் கிட்டத்தட்ட காலாவதி ஆகிவிட்ட இன்றைய சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வாழ்க்கையை இசங்களுக்குள் அடக்க முடியாது. ஆனால் வாழ்க்கையில் எல்லா இசங்களுக்கும் இடமிருக்கிறது. அதுதான் இந்த வாழ்க்கையை வசீகரமிக்கதாக ஆக்குகிறது. எனவே சோசலிசயதார்த்தவாதம் முற்றிலும் காலாவதி ஆகிவிடாது என்று நினைக்கிறேன். மானுடவாழ்வில் பொருளில்லாமை, ஏற்றத்தாழ்வு, சமநிலையின்மை, இருக்கும்வரை சோசலிசயதார்த்தவாதம் இருந்து கொண்டேயிருக்கும் மாறியுள்ள சூழலுக்கேற்ப தன்னை புணருத்தாரணம் செய்து கொள்ளும்..

8. நீண்டகாலமாக தமுஎச போன்ற அமைப்பில் செயல்படுகிறீர்கள். ஒருகாலத்தில் புதுமைப்பித்தனையே வறட்டு இலக்கியவாதி என்றனர். கு.ப.ரா போன்ற மேதைகளை நச்சிலக்கியம் என்றனர். புதுக்கவிதை எழுதுபவர்கள், சிறுபத்திரிகை ஆதரவாளர்கள், வீதி நாடகம் போடுபவர்களை சி ஐ ஏ ஏஜண்ட் என்றனர். இப்போது அந்தத் தடமே இல்லாமல் மாறியிருக்கிறது. இந்த மாற்றத்தை அமைப்பு ஏற்றுக்கொள்கிறதா? ஒரு உண்மையான கலைஞன் இவற்றைச் சகித்துக் கொள்வதெப்படி?

படைப்பாளிகளும் பண்பாட்டு ஊழியர்களும் கொண்ட கலாச்சார அமைப்பில் கலை இலக்கிய,பண்பாட்டு விஷயங்களை விட பொருளாதார அரசியல் காரணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாலும், அமைப்பு அப்போது தான் பாலபருவம் தாண்டியிருந்ததாலும் முதிர்ச்சியின்மையானாலும் சில விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. சில விஷயங்கள் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டன. ஆனால் அமைப்புக்குள்ளிருந்து நடந்த போராட்டங்களினால் வெகுசீக்கிரத்திலேயே தவறான தன் புரிந்துகொள்ளலை சரிசெய்து கொண்டது. சரி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் எந்தக்காலத்திலும் அமைப்பிலுள்ள படைப்பாளிகளைக் கட்டுப்படுத்தியதோ, படைப்பு சுதந்திரத்தில் தலையிட்டதோ இல்லை. இன்றையச்சூழலில் இத்தகையதொரு பண்பாட்டு அமைப்பின் தேவையை கட்டாயம் எல்லோரும் உணரமுடியும்.

9. தற்போது இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் அடையாளம் சார்ந்ததாக, சாதி, மொழி மற்றும் இனக்குழு என்ற வட்டங்களுக்குள் சிக்குண்டிருக்கிறது. அல்லது கட்சி சார்ந்த அதிகார அரசியலை மையப்படுத்தியதாக உள்ளது. இந்த வட்டங்களுக்குள் இல்லாத ஒரு படைப்பாளி காணாமல் போகும் நிலை உள்ளது? (விருப்பம் இருந்தால் பதிலளிக்கலாம்.)

90-களுக்குப்பின் எழுந்து வந்த பின்நவீனச்சூழல் சமூகத்தை அடையாள அரசியலால் கூறு போட்டது. அதன் விளைவாக சாதிய, இன, மொழி சார்ந்த முக்கியத்துவம் முன்னுக்கு வந்தது. சமூகத்தின் விளைபொருளான இலக்கியமும் அதன் தாக்கத்திற்கு உள்ளானது. இன்று குழுசார்ந்த படைப்பாளிகளும் அதிகாரமையம் சார்ந்த படைப்பாளிகளும் தங்களுடைய அடையாளம் சார்ந்த படைப்புகளை முன்னிறுத்துகின்றனர். இன்று மதிப்பீடுகளை நீங்கள் விலைக்கு வாங்கி விடலாம். உருவாக்கலாம். விற்கலாம். இத்தகையச் சூழலில் எந்தக்குழுவையும் சாராமல், எந்த அடையாள அரசியலின் வலையிலும் சிக்காமல் ஒருபடைப்பாளி இருப்பதென்பது மிகப்பெரிய சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியாமல் படைப்பாளிகள் ஏதாவது ஒரு அடையாளக்குழுவில் இணைந்து கொள்கிறார்கள். இன்றைய நவீன வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பிரதிபலிக்கிற படைப்பாளிகள் இந்த நெருக்கடிகளின் வேரைத் தேடிச் செல்ல விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழலைப்புரிந்து கொள்வதற்கும், படைப்பியக்கத்தில் இயங்குவதற்கும் மார்க்சியம், துணை செய்யும் என்று நம்புகிறேன்.

10. இன்றைய முக்கியப் பண்பாட்டு விழுமியங்களாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

இன்றைய முக்கியமான பண்பாட்டு விழுமியம் என்று சொல்லும்போது அடையாள அரசியலின் விளைவாக மக்களை சிறு சிறு கூறுகளாக பிரித்து வைத்திருக்கும் சாதிய அடையாள பண்பாட்டு அரசியல் தான் முக்கியமானதாகத் தோன்றுகிறது.90-களில் சாதிய அரசியல் முன்னுக்கு வந்ததின் விளைவு பெரியார், அம்பேத்கர் போன்ற சமூக சிந்தனையாளர்கள் சாதியத்துக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்த முற்போக்கு ஜனநாயக உணர்வை சடுதியில் மாற்றி விட்டது. இதில் விநோதம் என்னவென்றால் எந்த சாதியம் ஓழிய தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்களோ அந்தத் தலைவர்களை சாதிய அடையாளக் கட்சிகளே தங்கள் பதாகைகளில் பொறித்துக் கொண்டனர். இப்போது சாதியத் தூய்மை பற்றிப் பேசவும் அதற்காக சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கவும் துணிந்துள்ளனர். தொல்காப்பியக்காலத்திலிருந்தே உருவாகி வர்ணாசிரமக்கோட்பாடு முறை இன்னும் தன் இளகவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒரே நேரத்தில் உலகமயமாக்கலின் விளைவாக உணவு, உடை, பழக்கவக்கங்கள் ஆகியவற்றில் மேற்கத்திய மனதையும், உள்ளே அழுகிப் புழு வைத்த சாதிய மனமும் கொண்டு இன்றைய சிவில் சமூகம் இருக்கிறது. இத்தனை சீக்கிரமாய் இது மீண்டும் உயிர்த்தெழ வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இடதுசாரிகளிடம் பண்பாட்டு விழுமியங்கள் குறித்த அக்கறையின்மை, சாதியத்தை எதிர்கொள்ள திட்டமின்மை, பண்பாட்டுத்தளத்தில் பிற மாற்றுப்பண்பாட்டுச் சிந்தனையாளர்களுடன் ஒருங்கிணைப்பின்மை என்று சொல்லலாம். ஒரு விரிந்த அளவில் இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள், பெரியாரியவாதிகள், பெண்ணியவாதிகள், பாலினச்சிறுபான்மையினர், சமூகமாற்றத்தில் அக்கறையுள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள், உண்மையான ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள், என மாற்று பண்பாட்டு ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து பண்பாட்டுத் தளத்தில் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். இன்று உடனடியாக செய்ய வேண்டிய காரியம் இது என்று உணர்கிறேன்.

11. மொழிபெயர்ப்பில் ஈடுபட நேர்ந்தது எப்படி?

மலையாளத்திலிருந்து வைக்கம் முகமது பஷீரின் சப்தங்கள், மலையாளச்சிறுகதைகள், எம்.டி.வாசுதேவன் நாயரின் தயா, மாதவிக்குட்டி கதைகள், முல்லக்கோயாவின் லட்சத்தீவின் ராக்கதைகள், லட்சத்தீவின் கிராமியக்கதைகள், கிரேஸியின் சிறுகதைகள், குழந்தைகளுக்கான சிறிய படக்கதைகள் ஐம்பது புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். 80-களில் இலக்கியநூல்கள் வாசித்துக் கொண்டிருக்கும்போது மலையாள இலக்கியத்தின் மீதும், வங்க இலக்கியத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. குறிப்பாக பஷீரின் இளம்பருவத்துத்தோழியும், பாத்தும்மாவின் ஆடும், எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, என்னை மிகவும் கவர்ந்தன. எனக்கு வேலை கிடைத்து சேர்ந்த ரயில்வே ஸ்டேஷனில் என்னுடன் பணிபுரிந்த சகாவான டி.என்.வெங்கடேஸ்வரனிடம் அட்சரம் கற்றுக்கொண்டு மலையாளம் படித்தேன். பின்னர் நெய்வேலி மூழிக்குளம் ஆர்.சசிதரனும், குறிஞ்சிவேலனும் என்னுடைய மொழிபெயர்ப்பு முயற்சிகளில் உதவியவர்கள்.

12.மண்டோ மொழிபெயத்த அனுபவம்..?

மண்ட்டோ நம் காலத்தின் கலைஞன். இருபதாம் நூற்றாண்டின் மனசாட்சியின் குரல். வாழ்வின் குரூரங்களை யாருக்கும் அஞ்சாமல் உரத்துச் சொன்ன உண்மையான கலைஞன். மனிதமனதின் அழுக்குகளை வெளிக்கொண்டுவந்தவன். கொந்தளிக்கும் சமூகச்சூழ்நிலையில் கொந்தளிக்கும் மனநிலையோடு நிலைதப்பி வாழ்ந்த கலைஞன் மண்ட்டோ. அவர் அவருடைய கதைகளில் எழுதிச் சென்ற மதவெறிப்பைத்தியநிலை இப்போதும் அழிந்துவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்னும் பயங்கரமாகியிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எங்கு உரசினாலும் தீப்பற்றிக் கொள்ளும் நிலைமையிலேயே இருக்கிறது. இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு.

1990-களிலே முதன்முதலாக மண்டோ கதையை மொழிபெயர்த்தேன். இப்போதும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அவரது கதைகளை மொழிபெயர்க்கும்போது. அவருடைய கலைஆளுமையை வியக்காமல் இருக்க முடியாது. இப்போதும் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய படைப்பாளியாக மண்ட்டோ இருக்கிறார். அவரை வாசிப்பதன் மூலமே நாம் மதவெறிப்பைத்திய நோய்க்கு ஆளாகாமல் நம்மை நிதானமாக பகுத்தறிவோடு வைத்துக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.

12. திரைக்கதை அமைத்த அனுபவம்?

திரைப்படத்துறை அநுபவம் தற்செயலானது தான். நாடகக்கலைஞர் அன்புத்தம்பி முருகபூபதி பாண்டிச்சேரி நாடகப்பள்ளியில் அவருடன் படித்த அவருடைய நண்பரான அஜித் எம்.கோபிநாத் ஒரு திரைப்படம் எடுக்கவிருக்கிறார் என்றும் அதற்கு உதவ முடியுமா என்று கேட்டு அறிமுகப்படுத்தி வைத்தார். அதற்குப்பின் நினைவோடு கலந்துவிடு என்ற அந்தத் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஏற்கனவே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பிரசாத் திரைப்படக்கல்லூரியில் திரைக்கதை பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்ததாலும், உலக இந்திய சினிமாக்களை அவ்வப்போது பார்த்து வந்ததாலும் எனது திரைப்பட அநுபவம் இனிமையாகவே இருந்தது. நிறையக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது. அனைத்துக் கலைகளும் சங்கமிக்கும் ஒரு கலையாக திரைப்படம் இருப்பதாலேயே எல்லோரையும் அது ஈர்க்கிறது. அதை இன்னும் வலிமையாக சமூக மாற்றத்தில் அக்கறையுள்ளோர் பயன்படுத்த வேண்டும்.

14.உங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் எவை?

இது வரை அப்படி ஏதும் மிக முக்கியமாக ஏதும் நிகழவில்லை. இனிமேல் தான் நிகழவேண்டும்.

15. தற்போதைய புனைவிலக்கியம் எவ்வாறு இருக்கிறது?

பொதுவாகச் சொல்வதென்றால் இன்றைய புனைவிலக்கியம் மிக ஆரோக்கியமாக இருக்கிறது. இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் ஈடு கொடுக்கும் அளவிலும், ஏன் அதை விட மேலாகவும் நம்முடைய புனைவிலக்கியம் இருக்கிறது என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம். பின்நவீனத்துவம் புனைவிலக்கியத்தில் சிலபல தடைகளை உடைத்தறிந்திருக்கிறது. விரிந்து பரந்த இது வரை இலக்கியம் கண்டிராத புதிய புதிய பிரதேசங்களை புனைவிலக்கியம் பதிவு செய்திருக்கிறது. வணிகப்பத்திரிகைகளிலும் சிறந்தபடைப்புகள் வருவது இந்தக்காலகட்டம் தான். ஆனாலும் சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிறு பத்திரிகைகளில் ஒரே மாதிரியான பாலியல் சார்ந்த அநுபவங்களைப் பேசும் கதைகளே பெரும்பாலும் வருகின்றன. முற்போக்கு எழுத்தாளர்கள் நவீனத்துவத்தின் புதிய சூழலை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். இன்றைய உலகமய, பழமைவாதச்சூழல் படைப்பாளிகள் முன் புதிய சவால்களை வைக்கிறது. அதை எதிர்கொள்ள தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி- த சண்டே இந்தியன் மார்ச் 2013.

4 comments:

 1. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் ( 24.02.2013 ) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 24.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  ReplyDelete
 2. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்…

  வாழ்த்துக்கள்... தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

  ReplyDelete
 3. ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.
  மிக சிறப்பான நேர்காணல் தோழர் .அதிகம் கவனிக்கப்படாத எழுத்தாளர் என்கிற கேள்விக்கு உங்கள் பதில் மிக நிதர்சனமானது . இங்கு குழு மனப்பான்மை தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது .

  ReplyDelete
 4. மற்றொன்று இன்றையச் சூழ்நிலையில் ஒரு படைப்பாளி கவனிக்கப்படுவதற்கு அவருடைய எழுதினால் மட்டும் போதாது. அதாவது எழுதுவது, புத்தகம் போடுவது,என்பதோடு மட்டும் முடிந்துபோவதில்லை. அதை புரோமோட் செய்ய அந்தப்படைப்பாளியே எல்லாமுயற்சிகளையும் எடுக்க வேண்டியிருக்கிறது. இலக்கிய நண்பர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு விமர்சகர்களுக்கு, அனுப்பி அவர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பது, கூட்டங்கள் நடத்துவது, மதிப்புரைகளை எழுதி வாங்கி அதை சரியான பத்திரிகைகளில் வரவழைப்பது, என்று படைப்பாளியே தன்முனைப்புடன் இறங்கி வேலை செய்யவேண்டும். எல்லாம் சரியாக அமைந்து, அந்தப்படைப்பும் நல்ல படைப்பாக அமைந்து விட்டால் பரவலாக கவனிக்கப்படுதலும் அங்கீகரித்தலும் நடைபெறுகிறது. இன்றைய உலகமயச்சூழலுக்கு ஏற்ப இது போட்டிப்பந்தயமாகவே மாறி விட்டது.

  அருமையான நேர்காணல். எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார்.

  ReplyDelete