Sunday, 3 March 2013

தொலைந்தது…..

உதயசங்கர்sptlt102_1

 

சுப்பிரமணியனின் இல்லத்தரசி சுந்தரி சுப்பிரமணியனிடம் கோவித்துக் கொண்டு அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். ஏன் என்று கேளுங்களேன். கேட்க மாட்டீர்களா? இது என்ன பெரியவிஷயமா? இல்லை உலகில் எங்கும் நடக்காத புது விஷயமா? இரண்டு ஆண்களோ இல்லை பெண்களோ கூட சேர்ந்து கொஞ்சநேரம் இருக்கமுடியாது. இதில் ஒரு ஆணையும் பெண்ணையும் வாழ்நாள் பூராவும் சேர்ந்து இருக்கச்சொன்னால் ஒருத்தருக்கொருத்தர் கோவிக்காமல் கொள்ளாமல் இருக்க முடியுமா? அதனால் சுப்பிரமணியன் இல்லத்தரசி சுந்தரி கோவித்துக் கொண்டுபோனதில் என்ன அதிசயம் என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவகையில் நீங்கள் நினைப்பதும் சரிதான்.

உங்கள் வீட்டிலோ அல்லது எங்கள் வீட்டிலோ அவ்வப்போது சின்னச்சின்ன சச்சரவுகள் நடக்கும். ஒருவருக்கொருவர் பேசாமல்கொள்ளாமல் முறைத்துக் கொண்டே ஒருநாள் ஒருபொழுதோ இரண்டு சிங்கங்களைப் போல உறுமிக்கொண்டோ அல்லது சுவரையோ குழந்தைகளையோ பொருட்களையோ மொழிபெயர்ப்பாளராக அல்லது தொடர்பாளராக வைத்துக்கொண்டோ ஜென்மப்பகைவர்கள் போல நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு உன்னைக்கலியாணம் முடித்தது தான் என்று பரஸ்பரம் சொல்லிக்கொண்டோ அல்லது நினைத்துக்கொண்டோ அலைவோமில்லையா? நேரமாக ஆக அந்தச் சச்சரவு ஒரு காமெடியாகிவிடுவதும், இல்லாளைக் கள்ளப்பார்வை பார்த்து நோட்டமிடுவதும் அதேபோல இல்லாளும் ஜாடைமாடையாகப் பேசிக்கொள்வதும் நடக்கும். இரவு மாயாஜாலம் செய்து விடும். அப்புறம் பார்த்தால் குழந்தைகள் ஆச்சரியப்படுவார்கள் அல்லது எரிச்சல்படுவார்கள். சில குழந்தைகள் விபரம் தெரியாமல் எப்ப பேசுனீங்க? எப்படிப் பேசுனீங்க? என்று கேட்டு உயிரை எடுப்பார்கள். அப்புறம் ஒரு இரண்டு நாளைக்கு இரண்டுபேரும் நடந்துக்கிறதைப் பார்த்து இவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு ஏதோ இப்பதான் புதுசா ஃப்ரண்ட் ஆனவங்க மாதிரி கொஞ்சுறதும் குலாவுறதும்னு நெனப்பாங்க. இது அடுத்த சச்சரவு வரைக்கும் தொடரும். சிலர் இது ஈகோ பிராபளம் என்பார்கள். கணவன் மனைவி உறவு குறித்து ஏராளமான ஆலோசனைப்புத்தகங்கள், உளவியல் தொடர்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. மனைவியை மகிழ்விப்பது எப்படி? கணவனைப் புரிந்துகொள்ள சில எளிய சூத்திரங்கள். உங்கள் திருமணவாழ்க்கையை வெற்றிகரமானதாக்கிட சில வழிகள். தாம்பத்தியம் இனித்திட …. இத்யாதி இத்யாதி.. என்று எழுதித் தள்ளுவதற்கு எழுத்தாளர்களும் அதை வாங்கி வாசிப்பதற்கு வாசகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

சரி.போதும் விட்டால் உரைவீச்சை வீசிக்கொண்டே போகிறீர்களே என்று சொல்லநினைக்கிறீர்கள் தானே. என்ன செய்ய யாராவது கேட்பதுக்குக் கிடைத்தால் விடுவதற்கு மனசு வரமாட்டேனென்கிறது. சரி இப்பவாச்சும் சுப்பிரமணியனிடம் அவனுடைய இல்லத்தரசி ஏன் கோவித்துக் கொண்டு போனாள் என்று கேட்கநினைத்தீர்களே அது போதும். ஏன் என்றால் இந்தக் கதையே அதைப்பற்றித் தான். வேறொன்றுமில்லை. சுப்பிரமணியன் ஒரு முக்கியமான பொருளைத் தொலைத்து விட்டான். ப்பூ.. இது ஒரு பெரிய விஷயமா என்று அலட்சியப்படுத்துகிறீர்கள் அல்லது நாங்கள் தொலைக்காததா எத்தனை குடை? எத்தனை செருப்பு? எத்தனை ரூபாய்? எத்தனை பொருட்கள்? இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம். இதுக்குப் போய் கோவிச்சிகிட்டு அம்மா வீட்டுக்குப் போகலாமா?

நீங்கள் நினைப்பது சரிதான். நாம தொலைக்காத பொருளா பணமா? ஆனால் சுப்பிரமணியன் தொலைத்தது பொன்னோ பொருளோ பணமோ இல்லை. புதிதாகக் கட்டி முடித்து ஐந்து வருடங்களே ஆன ஒரு இரண்டு படுக்கையறை வீட்டையே தொலைத்து விட்டான். என்னது வீட்டைத் தொலைத்து விட்டானா? எப்படி? எப்படி? எப்படி? எதுக்கு இத்தனை எப்படி? அதைச் சொல்றதுக்குத் தானே இந்தக் கதையே.

சுப்பிரமணியனின் இல்லாள் சுந்தரி திருமணமான உடனே கேட்ட முதல் கோரிக்கை என்று நாகரிகமாகவும், போட்ட முதல் ஆணை என்று கொஞ்சம் முரட்டுத்தனமாகவும் சொல்லும்படியானது என்னவென்றால் முதலில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது தான். அதைக் கேட்டதும் முதலில் மலைத்துப் போய்விட்டான். வீடா? முதலில் சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் வீட்டுக்கு ஒரு பிளான் போட்டு அதற்கு நகராட்சியில் அனுமதி வாங்கி வங்கியில் கொடுத்து வீட்டுக்கடன் வாங்கி இஞ்சினியரைப்பிடித்து வீட்டைக் கட்டி முடித்து கிரகப்பிரவேசம் நடத்தி வீட்டுக்குக் குடிவந்து அப்பாடான்னு உட்காரும்வரை ………இப்படியே இந்த வாக்கியத்தை முடிக்கமுடியுமா என்ன? அப்புறம் கடனை யார் கட்டி முடிக்கிறது. பத்து வருடமோ பதினைந்து வருடமோ வங்கித் தவணைகளைக் கட்டி முடித்து வங்கியில் கிளியரன்ஸ் வாங்கி பத்திரம் கையில் கிடைத்தால் தான் அது நம்முடைய வீடு. அதுக்கே நமக்கு ரிடையர்மெண்ட் வயது நெருங்கிவிடும். வீட்டுப்பத்திரத்தைக் கையில் வாங்கி மனசாறுவதற்குள் பிள்ளைகள் வீட்டைப்பார்த்து விடுகிற பெருமூச்சுச் சத்தம் கேட்கும். அப்புறம் என்ன? எல்லாம் யாருக்காக? உங்களுக்காகத் தானே என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு ஈரத்துணியை அடிவயிற்றில் இறுக்கிக் கட்டிக் கொண்டு அலைந்து திரிய வேண்டியது தான். இதற்கா இத்தனை ஆண்டுகாலமும் சதாசர்வகாலமும் சிரமங்களைத் தலையிலேற்றிக் கொண்டுத் தள்ளாடித் தள்ளாடி நடக்க வேண்டியிருந்தது என்று விரக்தி வரும்.

ஆனால் விதி யாரை விட்டது என்று சொல்லமுடியாது.. சுந்தரியின் மதி சுப்பிரமணியனை விடவில்லை என்று சொல்லலாம். அங்க இங்க கடன உடன வாங்கி சுப்பிரமணியன் ஐந்து செண்ட் இடம் வாங்கி அதிலே வங்கிக் கடன் நகைக்கடன்களை நாயாய்பேயாய் அலைந்து பெற்று எப்படியும் போட்ட பிளானுக்குச் சம்பந்தமில்லாமல்தான் வீடு உருவாக, அந்த எக்ஸ்ட்ரா செலவுகளுக்கு நண்பர்களிடம் கையேந்தி அவர்களும் நம்மைப்பார்த்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட, அது தான் சந்தர்ப்பமென்று சுந்தரியும் என்னவோ உயிர் நண்பன்னீக.. உங்க உயிர் நண்பர் உங்களைப் பார்த்ததும் ஓடறாரு… அவரோட பொண்டாட்டி வழி மச்சினனுக்கு ஃபாரின் போறதுக்கு இருபத்தையாயிரம் கொடுத்துருக்காரு.. தெரியுமா? இனிமே ஃப்ரெண்டு கிரண்ட்னீக இருக்கு பார்த்துங்க… என்று காலை வாரிவிட, இஞ்சினீயர், கொத்தனார், கையாள், சித்தாள், என்று எல்லோரிடமும் வழிந்து வழிந்து சிரித்து அவர்கள் கமிஷன், கையாடல் எல்லாம் பொறுத்து ஒரு வீட்டைக் கட்டினான். கட்டிமுடித்து சுந்தரியைப் பார்த்து சிரித்தபோது தலையில் நரை எட்டிப்பார்த்தது. சுந்தரி சிரித்துக் கொண்டே “ என்ன அதுக்குள்ளே கிழவனாயிட்டீங்க… பக்கத்துவீட்டு சாரைப்பாருங்க இந்த வயசிலும் எப்படியிருக்கார்? “ என்று கேலி செய்தாள். ஆயிரொத்தொரு கவலைகளை இத்துனூண்டு தலையில் போட்டு அமுக்கினால் என்ன ஆகும்? நரை திரை மூப்பெய்தி கிழப்பருவம் சடுதியில் வாராதோ? என்று சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் அந்தக் கவலையையும் ஆயிரத்திரண்டாவது கவலையாகச் சேர்த்துக் கொண்டான்.

அப்படி அரும்பாடு பட்டு கட்டிய சுந்தரி இல்லத்தைத் தான் நம்ம சுப்பிரமணியன் தொலைத்து விட்டார். நம்பமுடியவில்லை இல்லையா? உண்மை தான் அவர் என்னிடம் சொன்னபோது என்னாலும் நம்பமுடியவில்லை. உங்களைப் போலவே நானும் சுப்பிரமணியனுக்கு ஏதாவது மனநிலை லேசாக பிசகியிருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்கலைஞர் வடிவேலு கிணத்தைக் காணவில்லை என்று காமெடி பண்ணியமாதிரி ஏதாவது செய்கிறாரோ என்று கூடத் தோன்றியது. ஆனால் அவர் கண்ணில் தளும்பிய கண்ணீர் கொஞ்சம் நம்புகிற மாதிரித் தான் இருந்தது. இந்தக் கதை கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கலாம் என்று நினைத்து எப்படித் தொலைத்தீர்கள் என்று கேட்டேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பிராய்லர்கோழிக்கறியை வகையாக ஒரு பிடிபிடித்து விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டுக்கு வெளியில் ஏதோ ஆட்கள் சத்தம் கேட்டு சுந்தரி எழுப்பி விட்டாள். உறக்கச்சடவுடன் வெளியில் போய்ப் பார்த்தான் சுப்பிரமணியன். ஒரு பத்துபேர் அவன் வீட்டுக்கு அருகிலிருந்த காலிமனையை அளந்து கொண்டிருந்தார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமில்லையே. அந்த இடத்தை வாங்குபவர்களாக இருக்கலாம் என்று நினைத்தபடியே மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம் என்று திரும்பி உள்ளே வர யத்தனித்தவன் கண்ணில் அவன் வீட்டையும் சேர்த்து சங்கிலியால் அளக்கிற மாதிரி ஒரு அரிச்சல் தென்பட்டது. உடனே உறக்கம் கலைந்து விட்டது. பதட்டத்தில் அவனுடைய சொங்கியான தேகக்கட்டை பிறர் கண்ணில் படாமல் மறைக்க மறந்து வேகமாக வெளியில் ஓடினான். உண்மையில் அவனுடைய வீட்டையும் சேர்த்துத் தான் அளந்து கொண்டிருந்தார்கள். அவன் அளந்து கொண்டிருந்தவர்களை நோக்கி வீராவேசமாகப் போனான். ஆனால் அவர்கள் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவனைப் போல தள்ளி நிற்கச் சொன்னார்கள். அவர்களுடைய அலட்சியம் அவனுக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டுபண்ணியது.

“ ஏங்க வீட்டையும் சேர்த்து அளக்கிறீங்க? “

“ வாங்குனா அளக்கமாட்டாங்களா? “

“ இது என்வீடு..”

“ அதெல்லாம் அண்ணன்கிட்ட பேசிக்கோ..”

“ யாருய்யா உங்க அண்ணன்? “

இந்தக் கேள்வியைக் கேட்டதும் சினிமாவில் வருகிற மாதிரி எல்லோரும் ஒன்றுபோல நிமிர்ந்து முறைத்துப் பார்த்தார்கள். ஒரு கணம் உள்ளுக்குள் நடுங்கித் தான் போய் விட்டான்.

“ இல்ல இது என் சொந்த வீடு… அதான் இதையும் சேர்த்து அளக்கிறீங்களேன்னு கேட்டேன்..”

என்று இழுத்தான். அதற்குள் வெளியே போன சுப்பிரமணியனைக் காணவில்லையே என்று தேடி வந்த சுந்தரி இந்தக் காட்சிகளையும் வசனத்தையும் கேட்டு விட்டாள். அவ்வளவு தான். பத்திரகாளியாக மாறி விட்டாள். அன்று தான் சுந்தரியின் முழு விஸ்வரூபத்தையும் சுப்பிரமணியன் பார்த்தான்.

“ என்னங்க இது இவங்ககிட்ட போய் கேட்டுகிட்டு..போலீசைக்கூப்பிடுங்க… பத்து வருசத்துக்கு முன்னாடி இடத்தை வாங்கி வீட்டைக்கட்டி குடியிருந்துகிட்டிருக்கோம்… இவுக நோகாம வந்து நொங்கு தின்பாங்களாம்… என்ன அநியாயமாருக்கு.. வீட்டை அளந்தீங்க நடக்கிறதே வேற…”

என்று ஆங்காரமாய் குரல் கொடுத்தாள். அதைக் கேட்டதும் அளந்து கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அடங்கிப் போனார்கள். அவர்களில் ஒருவர்,

“ ஏம்மா எங்ககிட்ட வந்து கத்துறீங்க.. எங்கள அளந்துட்டு வரச்சொன்னாங்க… நாங்க அளக்கறோம்… உங்களுக்குப் பிரச்னைன்னா நீங்க போய் இடத்தை வாங்குனவங்ககிட்ட போய் பேசுங்க…”

என்று சொன்னார். சுப்பிரமணியன் அதுவும் சரிதான் என்கிற மாதிரி தலையாட்டினான். ஆனால் சுந்தரி,

“ நாங்க எதுக்குப் போய் அவங்ககிட்ட பேசணும்..நாங்க இந்த இடத்த பத்து வருசத்துக்கு முன்னாலயே வில்லங்கம் பார்த்து பத்திரம் பதிஞ்சிருக்கோம்.. எங்ககிட்ட எல்லா ரெகார்டும் இருக்கு.. போலீஸ் பார்த்துகிடட்டும்… ஏங்க நம்ப கருப்பசாமியண்ணனுக்கு ஒரு போனைப் போடுங்க…”

என்று சொன்னதும் இதுவும் சரிதான் என்று சுப்பிரமணியன் தலையாட்டினான். உடனே கூட்டத்தில் ஒருவன் யாருக்கோ போனைப் போட்டான். சில நிமிடங்கள் பேசிய பிறகு அவன்,

“ யப்பா வாங்கப்பா… அண்ணன் எல்லாரையும் வரச் சொல்லிட்டாரு.. அவரு பேசிக்கிடுதாராம்….”

என்று சொன்னான். உடனே எல்லோரும் கிளம்பி விட்டார்கள். அன்று ஆரம்பித்த புயல் சின்னம் கொஞ்சம் கொஞ்சமாக இடி, மழை, என்று தொடர்ந்தது. ஒரு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு கருப்பு நிறஸ்கார்பியோ வந்து நின்றது. அதிலிருந்து அண்ணன் இறங்கி வந்தார். கூடவே இரண்டு துணை அண்ணன்களும் வந்தார்கள். வீட்டுக்குள் சுவாதீனமாக நுழைந்து சுப்பிரமணியனிடம்,

“ சார் உங்களுக்கும் நமக்கும் எதுக்குப் பிரச்னை.. வாங்க உட்காந்து பேசுவோம்..”

என்று சொல்லி சோஃபாவில் உட்கார்ந்து கொண்டார். உடனே சுப்பிரமணியன் தன் வீட்டுப்பத்திரம், வில்லங்கச் சான்றிதழ் எல்லாம் இருந்த ஃபைலைக் கொண்டு வந்து காட்டினான்.

“ அண்ணாச்சி… இந்தா இதப் பாத்தீங்களா.. வில்லங்கம் கிளியரா இருக்கு பாருங்க பக்கா ரிஜிஸ்ட்ரெஷன் …. என்னோட இடம் சர்வே நம்பர் 518/12 ல் மனை எண் 23 ல் கிழமேலா முப்பத்தியெட்டு அடியும் தென்வடலா ஐம்பத்தாறு அடியும் கொண்ட இரண்டாயிரத்து நூத்தி இருபத்தியெட்டு சதுர அடிப் பரப்பளவுள்ள காலி மனைன்னு இருக்கு பாத்தீகளா… அண்ணாச்சி..”

அதைபடித்ததும் அண்ணன் புருவத்தைச் சுளித்தார். பின்னால் கையை நீட்ட அவருடைய கையில் ஒரு புதிய பத்திரம் இருந்தது. அதைப்பிரித்து சர்வே எண் 518/12, 518/13, 518/14, 518/15, 518/16, தென்கிழக்கிலிருந்து வடமேற்கு வரைக்குமான காலி மனைகள் அத்தனையும்……..இத்யாதி இத்யாதி.. என்று எழுதப்பட்டிருந்தது.

சுப்பிரமணியனுக்குத் தலைசுற்றியது. “ இல்ல அண்ணாச்சி… அது தென்கிழக்கு, வடமேற்கு… என்னோடது தென்வடல் கிழமேல்… “ என்று சுரத்தில்லாமல் சொன்னான்.

அவர் மெல்ல தலையையுயர்த்தி,

“ நான் அவ்வளவு இடத்துக்கும் முப்பது லட்சத்துக்குக் கிரயம் பண்ணியிருக்கேன்.. என்ன செய்ய சரி கோர்ட்டுல பார்த்துக்குவோம்..”

என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு எழுந்து விட்டார். சுப்பிரமணியனுக்கு என்ன சொலவதென்றே தெரியவில்லை. அவருக்குப் பின்னாலேயே போய்,

“ அண்ணாச்சி.. ஏதோ உங்க பத்திரத்தில தப்பு நடந்துருக்குன்னு நெனக்கிறேன்… நான் ரெஜிஸ்ட்ரர் ஆபீஸ் போய் பார்த்துட்டு வந்து சொல்றேன்…”

என்றான். அவர் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தார். ரியல் எஸ்டேட்ல நாங்க கரை கண்டவங்க தெரியுமா? என்ற அர்த்தம் வெளிப்படையாகவே தெரிந்தது.

மறுநாள் பத்திரப்பதிவு அதிகாரியைப் போய் பார்த்தான். அவர் கையை விரித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் ,

“ அவங்க எழுதியிருக்கிற தென்கிழக்கு, வடமேற்கு, வகையில வில்லங்கமோ, வியாஜ்ஜியமோ இல்ல.. நீங்க தான் உஷாரா இருக்கணும்.. பத்திரம் முடிக்கும்போதே எட்டுத்திசையும் எழுதி வைச்சிக்கிடணும்.. பார்ட்டி மினிஸ்டரோட பினாமி.. எதுக்கு பெரிய இடத்துல வம்பு… ஏதாவது சமாதானமா பேசி கொடுக்கறத வாங்கிகிட்டு செட்டில் பண்ணிக்கோங்கோ… வீணா கோர்ட்டு கேஸுன்னு போனீங்கன்னா.. கேஸ் முடியதுக்கே பத்து வருசம் ஆனாலும் ஆகும்… ஏன்னா இது சிவில் கேஸு பாத்தீங்களா… அப்புறம் அவங்க செல்வாக்குக்கு ஜட்ஜை விலைக்கு வாங்கி வைச்சாலும் வைப்பாங்க… ஏதோ உங்களப் பாத்தா பாவமா இருக்கு.. அதான் சொல்றேன்… “

என்று இலவசமாக அறிவுரைகளையும் அள்ளி வீசினார். முகத்தில் அருள் இல்லாமல் வீட்டுக்கு வந்தவனை வேப்பிலை அடித்து அருளேற்றி வக்கீலைப் பார்க்க அனுப்பியவள் சுந்தரி தான். இதோ ஆச்சு.. வருசம் மூணு.. வாய்தாக்களாக காலம் கடந்து கொண்டிருக்கிறது. இடையில் கேஸ் முடியும்வரை அந்த வீட்டில் குடியிருப்பதற்கும் தடை வாங்கி விட்டார்கள். அப்புறம் என்ன குழந்தைகளோடு சுந்தரி அவளுடைய அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள்.

வீட்டைத் தொலைத்துவிட்டு ஆபீஸில் தங்கியிருந்து கோர்ட் வாய்தாக்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் சுப்பிரமணியன். பராசக்தி படவசனம் போல இந்த கோர்ட் எத்த்னையோ விசித்திரமான விந்தையான வழக்குகளைச் சந்தித்திருக்கலாம். ஆனால் ஒரு வீட்டைத் தொலைத்த வழக்கை இப்போது தான் சந்திக்கிறது. என் பெயர் சுப்பிரமணியன். துத்துக்குடி மாவட்டம் முழுக்க உள்ள ஆயிரக்கணக்கான சுப்பிரமணியன்களில் நானும் ஒருவன்….. என்று வசனம் பேச மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறான் நமது சுப்பிரமணியன். அவன் என்னிடம் கடைசியாகச் சொன்னதை நான் உங்களிடம் சொல்லி விடுகிறேன்.

“ சார் வீடு கட்டியிருந்தீங்கன்னா உங்க பத்திரத்த ஒரு தடவை நல்லா பாத்துக்குங்க.. எட்டு திசையும் போட்டிருக்கான்னு ஏன்னா எந்தத் திசையிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வந்து நம்ம வீட்டை நாமே தொலைக்க வைச்சிருவாங்க.. ஜாக்கிரதை…”

என்ன கேட்டுகிட்டீங்களா?  

1 comment: