Wednesday, 13 March 2013

எழுத்தாளர் தவசியின் மறைவு

IMG5663  

எழுத்தாளர் தவசி காலமானார். சுமார் முப்பத்தைந்து வயதுடைய தவசி மார்ச் 8 ஆம் நாள் பிற்பகலில் மதுரையில் காலமானார். ஒன்றரையாண்டு காலம் சிறுகுடல் புற்றுநோயால் அவதியுற்று வந்த தவசி அலோபதி மருத்துவம் மரணம் அவருக்கு வெகுபக்கத்தில் இருப்பதாகக் கூறி கைவிட, அவரும் சித்த மருத்துவத்தைத் தொடர்ந்தார். இப்பிரபஞ்சத்தையே பெருங்காதலுடன் சுவைக்கத் துடித்த ஒருவன் மரணத்தைக் கண்டு மிரள்பவன் அல்லவே. அதனால் அது வீசிய வஞ்சகப் புன்னகைக்குத் தன்னையே கொடுத்து விட்டான்.

தினகரன் நாளிதழில் வட்டாரப் பதிப்பில் துணையாசிரியாகப் பணியாற்றி வந்தார். மூன்று சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவல் ஆகிய பக்கங்களில் விரவி நிற்கும் தவசியின் எழுத்து முறை நண்பர்கள் வட்டத்திற்கும் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கும் நெருக்கமான உணர்வைத் தருபவை. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் திணைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தவசி எளிய விவசாயக் குடும்பத்தின் இரண்டாவது வாரிசு.

அப்பகுதியில் அடர்த்தியாக வசிக்கும் மறவர் குல மக்களின் இயல்பினையும், நிலம் சார்ந்த வாழ்க்கையையும் துல்லியமாகப் பதிவு செய்தவர். நிலத்தின் வெம்மையையும், குளுமையையும், மழைக்காலங்களில் வெள்ளை வெளேர் என்று நிற்கும் நீர்பரப்பையும், சின்னச்சின்ன கண்மாய்களையும், அதன் கரைகளில் அடர்ந்து நிற்கும் நீர்க்கருவேல மரங்களையும், உக்கிரமாக அடிக்கும் வெயிலையும், இரவுக் காலங்களில் பெருஞ் சமவெளியெங்கும் வெளிச்சம் பரப்பும் நிலவொளியையும், அடர்த்தியான ஆலமரத் தோப்புகளையும், அவை காட்டும் பயத்தையும், தோப்புகளுக்குள் உலவும் பயங்காட்டும் தொன்மைக் கதைகளையும், மரப்பொந்துகளில் வாழும் பச்சைக் கிளிகளையும், கருநாகப் பாம்புகளையும், வாய்க்கால் வரப்பு நண்டுகளையும் தம் எழுத்து வெளியின் பரப்பாக மாற்றியவர். அந்நிலத்தின் அறிமுகம் பெறாதவர்களும் தவசியின் எழுத்தைக்களை வாசிக்கும்போது அவற்றைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் விதமாக அலுப்பூட்டாமலும், நுணுக்கமாகவும் பதியச்செய்யும் திறனைக் கைவரப் பெற்றிருந்தார் தவசி.

குறிப்பாக ‘’சேவல்கட்டு’’ புதினத்திற்காக நடுவணரசின் விருது வழங்கப்பட்டது. யுவபுரஸ்கார் விருது அவருக்கு அளிக்கப்பட்டதன் மூலமாகவே அப்படி ஒன்று இருப்பதாகவும், அது கொஞ்சம் தகுதி வாய்ந்தது என்றும் என்னைப் போன்றவர்களுக்குத் தெரிய வந்தது.

மறக்குடிகளின் நிலத்தின் மீதான பிடிமானத்தையும், மாடு கன்றுகளை அவர்கள் தம் சகஉயிரியாகவே பேணுவதையும், சேவல் கட்டுக்காக மொத்த வாழ்வையும் பணயம் வைப்பதையும், சேவல்களின் குண நுணுக்கங்களையும், சில மறவர்களின் வறட்டுக் குலப் பிடிவாதத்தையும் பெண்களை அடிமையினும் கேவலமாக நடத்துவதையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தார். தன் மனைவியை அடித்தே கொன்று போடுவதையும், மேல் வாய்க்கு வறட்டு வீராப்பு பேசுமவன் உள்ளுக்குள் கசிதைவயும் எதார்த்தம் சிதையாமல் நுணுக்கமாக எழுதிய தவசி தனது இறுதிப் படைப்பான ‘’அப்பாவின் தண்டனைகள்’’ என்ற புதினத்தில் கண்டிப்பின் பெயரால் ஒரு தந்தை தன் மகன் மீது காட்டும் வெறுப்புணர்வையும், வெறித்தனமான வன்முறையையும் நம்பகத் தன்மை சிதையாமல் சித்தரித்துள்ளார்.

கையால் எழுதிய இந்நாவலின் கணினியச்சு வடிவத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவருக்கு உவப்பான பகுதிகளையே நானும் எடுத்து வைத்துப் பேசியதில் பெரும் மனநிறைவு கொண்டார். மரணம் தனக்குப் பக்கத்தில் இருப்பதாக உணர்ந்து என்னையே அவசரமாக முன்னுரை எழுதவும், மெய்ப்புத் திருத்தவும் பணித்தார். மார்ச் இறுதியில் சொந்த ஊரில் வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என்று தம்பிகள் விரும்புவதாகக் கூறினார். சந்தியா பதிப்பகத்தார் இரண்டு புத்தகக் கண்காட்சியை முடித்த கையோடு தவசியின் அவசரத்திற்கு ஈடுகொடுக்க முயன்ற நிலையில் தான் மரணம் முந்திக்கொண்டு விட்டது.

‘’நடக்கட்டும்யா, எதுன்னாலும் நடக்கட்டும். இயற்கையின் உத்தரவிற்குக் கட்டுப்படுவதைவிட நாமென்ன செய்ய முடியும். எது நடந்தாலும் நல்லதுக்குத் தானே’’ என்ற குரல் நான் தான் மரணப் படுக்கையில் வீ.ழ்த்தப்பட்டவன் போலவும் அவர் எனக்கு ஆறுதல் கூறுவது போலவும் இருந்தது. ஒவ்வொரு முறை பேசி முடித்ததும் என் மரணத்திற்காக நீங்கள் யாரும் வருத்தப்படக் கூடாது என்று மிகவும் அழுத்திக் கூறுவது போல் இருந்தது.

‘’அப்பாவின் தண்டனைகள்’’ 240 பக்கப் புதினத்தை சுமார் ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்கள் வீதம் அவசர அவசரமாக நோயையும் தாக்காட்டிக் கொண்டு, வேலைக்கும் போய்க் கொண்டு எழுதி முடித்துள்ளார். நோயின் வலியுடன் கூடிய இந்த உழைப்பு பிரமிப்பாகத் தான் இருந்தது. அது பற்றிப் பேசும்போது ‘’நான் எங்கய்யா எழுதினேன். அதுவா எழுதி வாங்கிருச்சில்லே. ஆள விட மாட்டேன்னுருச்சேய்யா.’’ எனத் தானுமே மிரண்டு தான் காணப்பட்டார். அடுத்த இரண்டு வாரத்தில் மதுரை மேலூர் சாலையில் அமைந்துள்ள தினகரன் அலுவகத்தில் வேலைப்பொறுப்பேற்று வீடு பார்த்துக் குடியமர்ந்து பிழைதிருத்தங்களையும் செய்து முடித்திருந்தார். இதற்கிடையில் உடல்நிலை அவரது வேகத்திற்கு ஒத்துழைக்காததால் சில வாரங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த கிராமத்திற்குச் சென்றிருந்தார். ஒருநாள் காலை இளம் வெயில் சூடேறும் நேரத்தில் அழைத்து ‘’ம்…. என்ன செய்யிரீய? …… சௌக்கியந்தானே’’ ‘’நல்லாருக்கேன் தவசி எப்படி இருக்கீங்க? ‘’ம்….. இருக்கேன்…. ம்… ஏதோ பரவால்லாம இருக்கேன். ரெம்ப முடியாமத்தான் ஊருக்கு வந்தேன். இப்போ பெய்ஞ்ச மழையிலே கம்மாய்க் குளமெல்லாம் தெத்து தெத்துன்னு ஒரேத் தண்ணிக் காடா இருக்கு. அங்கங்க புல்லு மொள விட்டு மண்ணைத் தெறிச்சுக்கிட்டு மேல கிளம்புது. இந்தக் காட்சியக் காங்க சூரியனும் மேலெழும்பி வருது. மனசே நெறஞ்சு கிடக்கய்யா. அதான் உங்களக் கூப்டு பேசணுன்னு தோணிச்சு.’’ ‘’அப்பிடியா உங்க குரல்லயே உற்சாகம் தெரியுதே. சந்தோசம். அங்கேயே ஒரு பத்து நாளைக்கு இருக்க முடியுமா’’ ‘’அதான் பாக்குறேன். சொந்தம் உறவெல்லாம் பார்த்துட்டுப் போகலான்னுதான் வந்தேன். இங்க இருக்குற சூழ்நிலை இன்னும் ஒரு அஞ்சாறு நாள் இருந்து கயித்துக் கட்டில் போட்டு ஆலமரத்துக்குக் கீழ படுத்து, இம்புட்டுக் கூழுத்தண்ணிக் குடிச்சு மனசையும் உடம்பையும் தேத்திக்கலாம்ன்னு தோணுது. நீங்க என்ன செய்யிறீய? பிள்ளங்க என்ன பண்றாங்க? ஆகட்டும். முடிஞ்சா மத்தியில பேசுவோம். இங்க சரியா டவர் கிடைக்கிறதில்ல. அதனால மதுரைக்கு வந்திட்டுக் கூப்புடுறேன்.’’ .

தவசிக்கு தன் மண் மீதும், தன் வாழ்வுடன் தொடர்புடைய மக்கள் மீதும் நேசம் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆனால் அதில் சாதியஅபிமானம் ஏறி விடக்கூடாது என்ற சமூகப் பொறுப்புணர்வு கொண்ட படைப்பாளிக்குரிய எச்சரிக்கையும் சேர்ந்தே இருந்தது.

தவசியின் விருப்பத்திற்கு ஈடு கொடுத்து அப்பாவின் தண்டனைகள் பிரதியை நூல்வடிவமாக்கி இரண்டாம் நிலை பிழைதிருத்தத்திற்கு தவசிக்கு அனுப்பி இருந்தார் சந்தியா சௌந்திரராஜன். படித்து விட்டு பேராவல் பொங்க என்னை அழைத்து. ‘’சந்தியாவுல இருந்து அனுப்பிட்டாக. படிச்சுட்டேன். நல்லா வந்திருக்கு. எனக்கேப் புதுசாப் படிக்கிற மாதிரி இருந்துச்சு. இனி அச்சாகி, புத்தகமாகி, முகம் தெரியாத ஒருத்தர் படிச்சு சொல்றது அப்புறம் இருக்கட்டும். மொதல்ல எனக்கே ரெம்பப் பிடிச்சுருக்கய்யா. ஆமா ரெம்பப்பிடிச்சிருக்கு. சந்தோசமா இருக்கு. நிலமும் இயற்கையும், வெயிலும் அப்பிடியே பாத்திரங்களா மாறியிருக்கே.’’ என்று நிறைந்த உற்சாகத்தில் பேசினார். ஒரு மாலை நடையில் பேசிய விதம் எனக்கு தவசியின் உடல் நிலையின் பால் மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியது. முழுமையாகத் தேறிவிடுவார் என்றும் நோயின் பொருட்டு ஆழ்மனதில் படிந்திருந்த அவநம்பிக்கையைத் துடைத்து விட்டார் என்றும் கருதி ஒருவாரம் கழியவில்லை தவசியை எனக்கு அறிமுகம் செய்வித்த தோழர் பாண்டியன் மூலமாகவே தவசியின் மரணச்செய்தி வந்து சேர்ந்தது.

மருத்துவ அதிகாரத்தால் கைவிடப்பட்ட பின்னரும் ஓராண்டிற்கு மேலாக நோயுடன் போராடி மீளமுயன்ற தவசி வேலைக்கும் போய்க்கொண்டு தனித்துவமான புதினம் ஒன்றையும் எழுதி முடித்துள்ளார். இயற்கையின் கட்டளைக்குப் பணியத் தன்னை மனப்பூர்வமாகத் தயார்ப்படுத்தி இருந்தார். தன் நோயைக்குறித்த அனுதாபம் வழியும் குரலை ஒருபோதும் அவர் கேட்க விரும்பியதில்லை. ‘’ஆகட்டும் பார்த்துக்கலாம். இயற்கை எதைச்செய்தாலும் நன்மை தானே’’ என்று சொல்லுமளவிற்குத் தவசி பெற்றிருந்த ஆரோக்கியமான மனப் பக்குவம் என்னைப்போல நிறைய உடல் ஆரோக்கியம் பெற்றவர்களுக்கு இல்லை என்கிறபோது தவசி விட்டுச் செல்கிற வெற்றிடம் மிகப் பிரமாண்டமாகத் தெரிகிறது. இனி மிச்சமிருக்கிற நாட்களிலேனும் நான் பெற்றுவிட முடியுமா? என்ற ஏக்கம் மேலிடுகிறது.

அஞ்சலி என்பது என்ன? மரணித்தவனின் இலக்கை நோக்கி நானும் கொஞ்ச தூரம் செல்ல முயற்சிப்பது தானே?

ஏழு வயதுப்பெண் நான்கு வயதுப் பையன் இவர்களைப் போலவே நாளை என்பது எத்தனை இருள் நிறைந்தது என்று கணக்கிடத் தெரியாத இளம் மனைவி ஆகிய தவசியின் குடும்பத்தாருக்கு ஒரு கை விளக்கேனும் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது.

நண்பர்கள் சமூகத்தில் நீங்களும் சேர்வீர்களா?

போப்பு

4 comments:

 1. எழுத்தாளர் தவசியின் மறைவு அதிர்ச்சியையும் மிகுந்த வருத்தத்தையும் உண்டாக்கியது. தவசியின் சேவல்கட்டு நாவலை வாசித்திருக்கிறேன். தமிழின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று அது. அவரது இறுதி நாட்கள் பற்றிய இக்கட்டுரை மனதை என்னவோ செய்கிறது. தமிழின் மிக முக்கியமான படைப்பாளியாக வரவேண்டிய ஒருவர் இத்தனை இளம் வயதில் மரணமடைந்தது பெரும் கொடுமை.

  எனது அஞ்சலிகள்.. :((

  ReplyDelete
 2. நடுவணரசின் பரிசு கிடைத்த செய்தியைப் பார்த்தே தவசியைப் பற்றி அறிந்தேன். அவரது நாவல்களைப் படிக்கும் ஆவலை உங்கள் மூலம் பெற்றிருக்கிறேன். அப்படியேனும் தவசியோடு உறவாடலாம்.

  ReplyDelete
 3. எழுத்தாளர் தவசியின் மறைவு

  ஆழ்ந்த அனுதாபங்கள். நிறைய காலங்களை படிக்காமல் வீணடித்து விட்டேன். திரு உதயசங்கர் வழிகாட்டலில் தேடித் தேடிப் படிக்க வேண்டும்.

  இந்த அற்புதமான பதிவை, திரு தவசியைப் பற்றிய விபரங்கள் அடங்கியது, எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  நன்றி & வாழ்த்துகள் திரு உதயசங்கர் - நல்ல நூல்கள் படிக்க வழிகாட்டுங்கள்.

  ReplyDelete
 4. இவரை நான் வாசித்ததில்லை. ஆனால் பதிவில் புரிந்துகொள்ள முடிகிறது. கடைசிப்பத்தி படித்தேன். என்ன செய்யலாம் என்று கூறுங்கள் நண்பரே. என்னால் இயன்றதைச் செய்கிறேன். பேஸ்புக்கில் இதைப் பகிர்கிறேன்.
  ஷாஜஹான்

  ReplyDelete