Showing posts with label உற்பத்தி சக்தி. Show all posts
Showing posts with label உற்பத்தி சக்தி. Show all posts

Tuesday, 26 May 2015

வேதங்களின் அறம்

 

உதயசங்கர்Mohan Das (54)

 

அறம் என்றும் அறவுணர்ச்சி என்றும் அறவிழுமியங்கள் என்றும் பலவாறு சொல்லப்படுகிற சொல்லின் அரத்தம் என்ன? மனித குல வரலாற்றில் எப்போதும் அறவிழுமியங்கள் ஒன்று போல இருந்திருக்கிறதா? எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்று இருக்கிறதா? வேதகாலம் பொற்காலம் என்றும் அதில் உன்னதமான அறவிழுமியங்கள் இருந்ததாகவும் கூறப்படுவது உண்மையா? அப்படி ஏதேனும் அறவிழுமியங்கள் இருந்தால் அவை எப்படிப்பட்டவையாக இருந்தன?

அறம் என்றால் அந்தந்தக்கால சமூக வாழ்க்கையில் உருவான மதிப்பீடுகள், தர்ம அதர்மக்கோட்பாடுகள், நாகரீக வளர்ச்சியினால் பெறப்படும் மதிப்பீடுகள், அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த மதிப்பீடுகள், என்று சொல்லலாம். இந்த சமூக அறவிழுமியங்கள் தனிமனிதர்களையும், சமூகத்தையும் தார்மீகமாக அல்லது மானசீகமாகக் கட்டுப்படுத்துகிறது. சமூகத்தின், தனிமனிதர்களின் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் நன்மை, தீமைகளைச் சொல்கிறது. பண்பாடு, பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதற்கு உதவுகிறது. சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் வழி சமூக மனதையும், தனி மனித மனதையும், கட்டமைக்கிறது. கிட்டத்தட்ட அந்தந்தக்கால சமூகப்பொருளாதார அமைப்பின் ஆன்மாவாகச் செயல்படுகிறது எனலாம்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்திக்கருவிகளுக்கும் இடையில் ஊடாடும் உறவையே நாம் உற்பத்தி உறவுகள் என்கிறோம். இந்த உற்பத்தி உறவுகள் நீடித்திருக்க உற்பத்தி சக்திகளைக் கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்கமானது பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, நீதிநெறிமுறைகளை, சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்களை, உணவு, உடை, உறையுள், முதலான லௌகீக வாழ்க்கையை, இவையெல்லாவற்றின் அடிப்படையில் உருவாக்கிய அறவிழுமியங்களை நடைமுறைப்படுத்துகிறது. அதற்கு தன்னுடைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. தன்னுடைய இருத்தலை நியாயப்படுத்துகிற விதத்தில் கலை, இலக்கியம், அறிவியல், பண்பாடு, சட்டம், நீதி, மதம், என்று எல்லாவிதங்களிலும் தன்னுடைய ஆக்கிரமிப்பை மக்கள் மனங்களின் மீது செலுத்துக்கிறது. இந்த கலாச்சாரமேலாண்மை மூலம் தன் அதிகாரத்துக்குத் தேவையான இசைவை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. உற்பத்திசக்திகளின் நிலைத்த தன்மைக்கு அறவிழுமியங்களும் அவசியம் என்று தெரிகிறது.

வர்க்க சமூதாயத்தில் வர்க்க அறமே மேலோங்கியிருக்கும். முதலாளித்துவம் தனக்குச் சாதகமான அறவிழுமியங்களையே பிரச்சாரம் செய்யும். முன்னெடுக்கும். இதற்கு மாற்றாக பாட்டாளிவர்க்கம் வரலாற்றிலுள்ள முற்போக்கான அறவிழுமியங்களையெல்லாம் தொகுத்து ஒரு மாற்று, புதிய பாட்டாளி வர்க்க அறவிழுமியங்களை முன்னெடுக்கும். அதற்கு முதலில் எல்லாக்காலத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் எல்லாவர்க்கத்துக்கும் பொதுவான அறம் என்ற ஒன்றும் கிடையாது என்பதை புரிந்து கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் அறவிழுமியங்களும் மாறும். அப்படியானால் வேதகாலத்தில் எப்படிப் பட்ட அறவிழுமியங்கள் இருந்தன?

சிந்து வெளி நாகரீகத்தின் பொற்காலம் என கி.மு.2500 ஆம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் தான் ஆரியர்கள் சிந்துவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். அதாவது இந்தியாவில் ஆரியர்கள் கி.மு. 1500 –க்கு முன்னால் வந்திருக்க வாய்ப்பில்லை. வேதங்களில் மிகப்பழமையான ரிக் வேதத்தை முதலில் இயற்றிய ரிஷிகளான பரத்வாஜரும், வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும், குறைந்தது முந்நூறு வருடங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரிக் வேதத்தில் ஆரியர்களுக்கும் சிந்து வெளி மக்களுக்கும் இடையில் நடந்த சண்டை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த சண்டையாகக் காட்டப்படுகிறது. அதன் பிறகு ஆரிய மன்னர்களான திவோதாஸ்-சுதாஸ் காலமான கி.மு. 1200 ஆம் ஆண்டு வரையிலான காலம் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் இல்லை.

ஆரியர்கள் கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாகவும் இருந்தனர். அப்போது அவர்களிடையே எந்த உடமை வர்க்கமும் உருப்பெறவில்லை. ஒருவகையான ஆதிப்பொதுவுடைமை சமுதாயமாக இருந்ததெனக் கருதலாம். மேய்ச்சல் நிலம் தேடியே வந்தவர்கள். சிந்துவெளியில் அப்போதிருந்த நாகரீக வளர்ச்சி என்பது பழங்குடிச்சமூகத்திலிருந்து கிட்டத்தட்ட புராதன நிலவுடைமைச் சமூகமாக மாற்றமடைந்திருக்கும் நிலைமையை ஒத்திருந்தது. வர்க்க வேறுபாடுகள் தோன்றியிருந்தன என்பதை அங்கிருந்த குடியிருப்புகள் காட்டுவதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அவ்வளவு முன்னேறிய சமூகத்தையே நாகரீகத்தில் மிகவும் பின் தங்கிய காட்டுமிராண்டிகாலத்தின் உயர்ந்த நிலையில் இருந்த ஆரியர்கள் அழித்திருக்கிறார்கள்.. எனவே ரிக், வேதத்தில் உள்ள பாடல்களில் பாரம்பரியமாக தாங்கள் வணங்கும் இந்திரன் முதலான கடவுள்களின் புகழைப்பாடியும், எதிரிகளை வெற்றி கொள்ள வேண்டியும், அதற்காக சோமபானம் அருந்த வேண்டியும், வேள்விகளைப் பற்றியும், உடல் நலம், செல்வம், நீண்ட ஆயுள், பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் எதிரிகளாக தாசர்களையும் தஸ்யூக்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வேதகாலத்துக்கு முன்பும் பல ஆரிய இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் சண்டை நடந்திருக்கிறது. இப்படி முழுக்க முழுக்க யுத்தங்களைப் பற்றிய பாடல்கள் கொண்டதே ரிக் வேதம். இந்த யுத்தமும் சமயக்கோட்பாடுகளின் வேற்றுமையினால் விளைந்ததாகவே ரிக் வேதம் சொல்கிறது. யாகங்களையோ, பலிகளையோ செய்யவில்லை, இந்திரனைக் கும்பிடவில்லை, எனவே ஆரியரல்லாத அவர்களை அழிக்க வேண்டும். ரிக் வேதத்தின் ஒவ்வொரு பாடலிலும் அதைப் பாடிய ரிஷி குறிப்பிட்ட நோக்கத்தை அடைய விரும்பி குறிப்பிட்ட கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்கிற பாடல்களின் தொகுப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

” நீங்கள் எப்போது யக்ஞம் செய்தாலும் தேவர்களான இந்திரனையும், அக்னியையும், புகழத் தவறாதீர்கள். அவர்கள் நிலையை உயர்த்தி அவர்களது புகழைக் காயத்திரி சந்தத்தில் பாடுங்கள்” ( ரிக் வேதம் 1.21.2 )

” இந்திரன், வருணன், அக்னி, ஆகியோரின் மனைவியர் என் வீட்டுக்கு வந்து சோமரசம் பருக விரும்புகிறென்.”

“ ஓ இந்திரனே நீ வீரன். நீ வந்து நாங்கள் தயாரித்திருக்கும் சோமரசத்தைப் பருகி எங்களுக்குச் செல்வத்தைக் கொடு. உனக்கு நிவேதனம் கொடுக்காதவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து அதை எங்களுக்குக் கொடு.” ( ரிக் வேதம் 1.81-8-9 )

” இந்திரனே எங்களைக் காப்பாற்றும்! நீர் எங்களைப் பகைவர்களிடமிருந்து பாதுகாப்பவர். நீர் எங்கள் விருப்பங்களை நிறைவேற்றுபவர். மலைகளைத் தூளாக்கும் வஜ்ராயுதம் படைத்தவர் நீர். குதிரைகள் மேல் சவாரி செய்யும் நீர் எங்களுக்கு பலவித உணவு வகைகளையும், செல்வங்களையும் வழங்குவீர்! “ ( 6-17-2 )

இதைத்தவிர அறநெறிகளாகவோ, ஆன்மீகதத்துவமாகவோ மனிதனை ” உயர்ந்த “ நிலைக்குக் கொண்டு செல்பவை என்று எதையும் சொல்ல முடியாது. சரி ரிக் வேதம் தான். இப்படி யென்றால் யஜூர் வேதம் வேள்விச் சடங்குகளுக்கான மந்திரங்களைப் பற்றிய தொகுப்பு. அசுவமேத யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும். ராஜசூய யாகத்தில் என்ன மந்திரங்களை ஓத வேண்டும் என்பது போன்ற பாடல்களின் தொகுப்பு எனலாம். அவையும் பெரும்பாலும் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவையே.

பிந்தைய வேதமான அதர்வண வேதத்தில் பேய், பிசாசு, பில்லி,சூனியம் நோய்நொடி, இவற்றை விரட்டுவதற்கான மந்திரங்களின் தொகுப்பு. உதாரணத்துக்கு, காய்ச்சலுக்கெதிரான மந்திரம், மலச்சிக்கல், சிறுநீர் போகாமை இவற்றுக்கான மந்திரம், கண்டமாலை நோய்க்கெதிரான மந்திரம், பொறாமையைச் சாந்தப்படுத்தும் மந்திரம், எலும்பு முறிவுக்கு மந்திரம், குழந்தைகளிடம் காணப்படும் புழுக்களுக்கெதிரான மந்திரம், பாம்பு நஞ்சுக்கெதிரான மந்திரம், கணவனை அடைவதற்கு மந்திரங்கள், கருத்தரிப்பதற்குத் தாயத்தாக கையில் அணியும் காப்பு, சுகப்பிரசவத்துக்கு மந்திரம், பெண்ணின் தீவிர அன்பைப் பெறுவதற்கு மந்திரம், ஆணின் தீவிர அன்பைத் தூண்டுவதற்கு மந்திரம், ஆணின் ஆண்மையை அழிக்கும் மந்திரம், குழந்தைக்கு முதல் இரண்டு பல் ஒழுங்கின்றி முளைப்பதன் தோஷத்தை நீக்கும் மந்திரம், கால்நடைகள் செழிக்க மந்திரம், சூதாட்டத்தில் வெற்றி பெற பிரார்த்தனை, என்று அன்றாட வாழ்வின் அத்தனை விஷயங்களுக்கும் மந்திரங்கள், மருத்துவம் என்று நிரம்பி வழிகிறது அதர்வண வேதம். சாம வேதமோ ரிக் வேதத்தை கிட்டத்தட்ட திரும்பச்சொல்வதைப் போன்றது. நாகரிகத்தின் ஆரம்பநிலையில் இருந்த ஒரு இனக்குழுவின் வாழ்க்கைப்பிரச்னைகள் அதற்கான கற்பனையான தீர்வுகளாகவே அதர்வண வேத சுலோகங்கள் இருக்கின்றன.

ஆரியமொழி பேசிய இனக்குழுக்கள் மேய்ச்சல் வாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியிருந்து வேளாண் சமூகமாக மாறத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட வேதங்களில் நாகரிகமற்ற, புராதன, தொன்மங்களைச் சமயங்களாகக் கொண்ட ஒரு மக்கள் திரளின் சமயக்கோட்பாடே வெளிப்படுகிறது. அந்தச் சமயக்கோட்பாட்டுக்கு எதிரான அல்லது மாற்றான சமயக்கோட்பாட்டைக் கொண்டவர்களை எதிரிகளாகப் பாவித்ததும் அவர்களை வெற்றி கொள்ள தங்களுடைய இஷ்ட தெய்வங்களைப் போற்றி பிரார்த்திக்கும் பாடல்கள் நிறைந்தது. உணவு, உடை, உறையுள், பாலியல் உறவுகள், பழக்கவழக்கங்கள் ஆகிய எல்லாவற்றிலும் புராதன இனக்குழு சமுதாயத்தின் எச்சங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. எந்த வேதத்திலும் மனிதனை மேன்மைப்படுத்தும் அறநெறிகள் இல்லை.

வேதங்களில் எந்த அறவிழுமியங்களும் இல்லை என்று வேதகாலத்திலேயே ஆதிப்பொருள்முதல்வாதிகளான சார்வாகர்கள், பிரகஸ்பதிகள் முழங்கியிருக்கிறார்கள்.

“ அக்னிஹோத்திரம், மூன்று வேதங்கள், சன்னியாசி, திரிதண்டம், சாம்பலைப் பூசிக்கொள்வது இவையெல்லாம் ஆண்மையும் அறிவும் இல்லாதவர்களுக்கு வயிறு வளர்க்கும் வழிகளே..” என்றும்

“ சிரார்த்தம் நடத்துவது இறந்தவர்களுக்குத் திருப்தியளிக்கும் என்றால் இங்கேயும்கூட பயணம் செய்பவர்கள் புறப்படும்போது அவர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்து விடுவது அவசியமில்லை…..”

“ வேதங்கள் மூன்று குறைபாடுகளால் கறைப்பட்டுள்ளது.- உண்மையில்லாதது, தனக்குத் தானே முரண்படுவது, கூறியது கூறல் என்பவை இந்த முரண்பாடுகள்..”

என்றும் கூறுகிறார்கள். நாகரிகத்தின் ஆரம்பநிலையில் உள்ள விசித்திரமான சித்திரங்களே வேதங்கள். இந்த விசித்திரங்களையோ, காலத்துக்கு ஒவ்வாத பிரார்த்தனகளையோ, வேள்விகளையோ யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாதென்பதற்காகவே வேதங்கள் புனிதமானவை என்றும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவையென்றும் வெளிப்படையான தோற்றத்தை விட உள்ளார்ந்த ரகசியங்கள் நிரம்பியது என்றும் வேதங்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் சுழல வைக்கப்படுகிறது. மனுவின் வர்ணாசிரமம் இந்திய சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் வருணங்களாகப் பிரித்தது. சாதிகளாகப் பிரித்தது. சாதிவாரியாகத் தொழில்களைப் பிரித்தது. எல்லா சாதியினருக்கும் சாஸ்திர சடங்கியல், வழிபாட்டு முறையில் படிநிலைகளை ஏற்படுத்தி அதன் சிகரத்தில் பிராமணியத்தை வைத்ததன் மூலம் இந்து சமூகத்திற்கு நிர்வாகரீதியான சட்டத்திட்டங்களை, தண்டனைகளை உருவாக்கியது மனுவின் வர்ணாசிரமம். இந்த கூம்பு வடிவ சமூக அமைப்பிற்கு தலைமையில் பிராமணர்களும் அடுத்தடுத்த கீழ்நிலையில் மற்றவர்களையும் வைத்தது. இந்துத்வ பழமைவாதிகள் தங்களுடைய உண்மையான நோக்கம் தெரியாமலிருக்க தங்களுடைய நோக்கங்களுக்கு புனிதத்தையும் பழம்பெருமையும் வேண்டி வேதங்களைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே வேளாண்மை செய்த அரைநாடோடி இடையர் குலம் தங்களுடைய புராதன சமய வழிபாடு, தெய்வங்கள், நம்பிக்கைகள், வேண்டுதல்கள், பிரார்த்தனைகள், இனக்குழு பழக்கங்கள் இவைகளைப் பற்றி பாடித் தொகுத்த தொகுப்பே வேதங்கள். மற்றபடி வேதங்களில் என்றும் நிலைத்திருக்கும் அறவிழுமியங்கள் என்று ஒரு சுக்கும் இல்லை.

துணை நூல்கள்- 1. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்

2. ரிக் வேதகால ஆரியர்கள்-ராகுல்ஜி

3. வேதங்கள் ஒரு ஆய்வு- சனல் இடமருகு

4. பண்டைக்கால இந்தியா – டி.என்.ஜா

நன்றி - வண்ணக்கதிர்

Monday, 27 April 2015

வேத காலத்துக்குத் திரும்ப முடியுமா?

 

உதயசங்கர்vedas

 

வேதகாலம் பொற்காலம் என்றும் வேதகாலத்துக்குத் திரும்புவோம் என்றும் பழமைவாதிகளும் இந்து மதவெறியர்களும் இன்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே வேதகாலம் பொற்காலமாக இருந்ததா? இப்போது வேதகாலத்துக்கு திரும்பினால் எப்படி இருக்கும்? ஆனால் வேதகாலம் எனப்படுவது என்ன? வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சமுதாயம் எப்படிப் பட்டது? அந்த சமூகவிழுமியங்களை இன்று நடைமுறைப்படுத்த முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகள் நம் முன்னே வரிசை கட்டுகின்றன. வேதங்களின் பெயர்களைக் கூட உச்சரிக்கக்கூடாது; அப்படி உச்சரித்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரவேண்டும் என்று மனு தர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு அதை நடைமுறைப்படுத்தவும் செய்திருக்கிறார்கள். அந்தப்படி வேதங்களிலிருந்து விலக்கப்பட்ட பெரும்பான்மையான உழைப்பாளி மக்களான சூத்திரர்கள் இன்று சநாதனவாதிகளின் முழக்கங்களை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வேதங்களைப் படிக்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் தானே இப்படியெல்லாம் சொல்ல முடிகிறது.

வேதகாலம்

வேதங்களில் மிக முக்கியமானதாக கருதுவது ரிக் வேதம். இதுவே காலத்திற்கு முற்பட்டது. அதாவது கி.மு.2500 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆரியர்கள் கி.மு. 1500 வாக்கில் இங்கே இருந்த தஸ்யூக்களை வென்று கி.மு. 1200-1000 ஆண்டுகள் வாக்கில் ரிக் வேதத்தின் ஆரம்ப கால ஸ்தோத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்தோத்திரங்கள் கி.மு.1000- 800 க்குமிடையில் திருத்தி எழுதப்பட்டது. கி.மு.600 வாக்கில் புதுப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டங்களில் அதாவது கி.மு.1000-800 களுக்குமிடையிலேயே சாம, யஜூர் அதர்வ வேதங்களும் உருவாக்கப்பட்டன எனலாம். இந்த வேதங்கள் வந்தேறிகளான ஆரியர்களின் நம்பிக்கைகள், சமூக நிலை, புனைவுகள், கடவுள்கள், உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் போன்றவை பற்றிய தொகுப்பு. ஆனால் ஆரியர்கள் நாகரிகத்தில் அதிக முன்னேற்றம் பெற்றிராத இடையர் குலத்தவர். நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்கள் குடியேறிய பகுதியான ஹரப்பா மொகஞ்சோதரா மக்களோ நாகரிகத்தில் மிகவும் முன்னேறியவர்களாகவும், நகர வாசிகளாகவும் இருந்தனர் செப்புக் கருவிகளை பயன்படுத்தினர், என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை சாம, தான, தண்ட, பேதங்களால் வெற்றி கொண்ட ஆரியர்கள் இயற்றியதே இந்த வேதங்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

காலத்தில் முற்பட்ட ரிக் வேதத்தை அடிப்ப்டையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களின் பல பகுதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன. என்றாலும் சாம, யஜூர், அதர்வ வேதங்களின் கால சமூக வாழ்க்கையிலிருந்து ரிக் வேத கால மக்களது சமூகவாழ்க்கை வேறு பட்டிருந்தது. ஆடு, மாடு, மேய்க்கும் நாடோடி வாழ்க்கையிலிருந்து பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கைக்கும் நகர வாழ்க்கைக்கும் முன்னேறிக் கொண்டிருந்ததை சாம, யஜூர், அதர்வ வேதங்கள் தெரிவிக்கின்றன. வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டு நினைவிலிருத்தப்பட்ட இந்த வேதங்களை கி.பி. 400 ஆம் ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்த ஸாயணாச்சாரியார் என்பவரே எழுதியவர்களில் முக்கியமானவர். யாகம் முதலிய சடங்குகளுக்காக பல சமயங்களில் இயற்றப்பட்டு திருத்தி எழுதப்பட்ட சூக்தங்களின் ( ஸ்லோகங்கள் ) தொகுப்பே இன்றைய வேதங்கள்.

மொத்தமாக நான்கு வேதங்களிலும் சேர்த்து 20358 ஸ்லோகங்கள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் 10,522, யஜூர் வேதத்தில் 1984, சாம வேதத்தில் 1875, அதர்வ வேதத்தில் 5977 உள்ளன. ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்களும் உண்டு. குறிப்பாக வருணம் பற்றிய சுலோகம். மூல புருஷனைப் பலி கொடுத்ததன் மூலம் வருணம் உருவானதாக ஒரு இடத்தில் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது. நெற்றிலிருந்து பிராமணரும், தோள்களிலிருந்து ஷத்திரியரும், தொடைகளிலிருந்து வைசியரும், பாதங்களிலிருந்து சூத்திரரும் உருவாக்கப்பட்டனர் என்ற சுலோகம் காலத்தால் பிற்பட்டது என்று மொழியியல் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வருணத்தத்துவத்துக்கு ஒரு பழமையான கருதுகோளை உருவாக்கப் புனைந்த தொன்மப்புனைவு தான் இந்த மூலபுருஷன் கதையும் வருணங்களின் தோற்றம் பற்றிய ஸ்லோகம். அதே போல நாடோடிகளான ஆரியர்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்தில் நுழைந்ததும் ஏற்பட்ட ஆச்சரியமான அதிசயமான உணர்வுகளும் பல ஸ்லோகங்களில் பதிவாகியுள்ளன. அங்கே ஏற்கனவே இருந்த தஸ்யூக்களை வெற்றி கொள்ள இந்திரனை உதவி செய்யுமாறு வேண்டி அழைக்கும் துதிப்பாடல்களின் தொகுப்பே ரிக் வேதம்

யாகச்சடங்குகளுக்கான மந்திரங்கள் அடங்கிய வேதமே யஜூர் வேதம். சொன்னதையைத் திரும்பத் திரும்பச்சொல்வதும் அர்த்தமில்லாத ஒலிக்குறிப்புகள் கொண்டதும் ஆகும். யஜூர் வேதத்தில் உள்ள மந்திரங்களில் நான்கில் ஒரு பகுதி ரிக் வேதத்திலிருந்து பிறந்ததாகும்.

சாம வேதமும் புரோகிதர்கள் வேள்வி நேரத்தில் உச்சரிப்பதற்காக இயற்றப்பட்ட மந்திரங்களே நிறைந்தது. அவற்றில் ஆறுக்கும் குறைவான ஸ்லோகங்களைத் தவிர மற்றவை அப்படியே ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

அதர்வ வேதத்தில் மாந்த்ரீகம் சம்பந்தப்பட்டது. பேய், பிசாசு, நோய் நொடி, வனவிலங்குகளைப் பற்றிய அச்சம் இவைகளைக் கட்டுப்படுத்தவற்காக இயற்றப்பட்ட மந்திரங்கள். அதுமட்டுமல்லாமல் பகைவரை அழிக்க மந்திரம், போர் வெற்றிக்கு மந்திரம், நோய் சாந்திக்கு, குழந்தைப்பேறுக்கு, நீண்ட ஆயுளுக்கு, செல்வம் குவிய என்று பல்வேறு மந்திரங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இன்று அரசியல்வாதிகள், பணக்காரர்கள், தொடங்கி சாமானியர் வரை செய்யும் பெரும்பாலான வேள்விகளில் இந்த மந்திரங்களே ஓதப்படுகின்றன.

இத்தகைய தன்மையுள்ள வேதங்கள் இன்றைய அறிவியல் யுகத்துக்குப் பொருத்தமானது தானா என்று சிந்தியுங்கள்?

வேதகால நாகரிகம்

நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி, ஆரியர்கள் நாடோடிகள். ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள். நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் அவர்களுடைய உற்பத்தி உறவுகள் எப்படி பட்டதாக இருக்கும்? அவர்களுடைய சமூக மதிப்பீடுகள் அவர்களுடைய உற்பத்தி சக்திகளான ஆடு, மாடுகள், நாடோடி வாழ்க்கை இவற்றின் அடிப்படையிலேயே இருப்பது இயற்கை தான். எனவே அவர்கள் வாழ்க்கையில் சோம பானம்( கஞ்சா ) என்கிற போதையூட்டுகிற பானம் மிக முக்கியமானதகிறது. அந்த சோம பானத்தை அவர்களுடைய முக்கியக் கடவுளான இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கு கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்துகிற ஸ்லோகங்களும், அப்படி குடித்து திருப்தியடைந்த தேவர்களும் ஆரியர்களுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்கிறவர்களாகவும் மாறுவதைப் பற்றி 120 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் ரிக் வேதத்தில் இருக்கின்றன. அதே போல சுரா பானமும் தானியங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை மதுவாகும். இதைத் தவிர பிராமணர்கள் வேறு மது வகைகளைக் குடிக்கக்கூடாது என்று போதாயன தர்ம சூத்ரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு பானங்களும் அனுபூதியும், மரணமற்ற சாகாநிலையையும் அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இனக்குழு வாழ்க்கையிலிருந்து அரசுகள் உருவாகிக்கொண்டிருந்தது. நிலப்பிரபுத்துவக்கால கட்டம் நிலை பெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், அரசு என்ற இயந்திரம் உருவாகிக் கொண்டிருந்த போது அரசர்கள் தங்களுடைய நாட்டு எல்லையை விரிவு படுத்த, அருகிலிருக்கும் நாட்டு அரசர்களிடம் அங்கீகாரம் பெறுவதற்கும் நடத்தப்படும் அசுவமேதயாகம். கருநிறஅசுவம் ( குதிரை ) ஒன்றை அவிழ்த்து விட்டு அதை நாடுகளெங்கும் சுற்றி வரச்செய்து அதை யாகவேள்வியில் பலி கொடுத்து, அப்படி பலி கொடுக்கப்பட்ட குதிரையோடு அரசனின் மனைவி புணர்ந்து எழுவதான சடங்குகள் கொண்டது. இந்த மாதிரியான யாகத்தை சில பதிலிகளை வைத்து இப்போதும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தது கோமேத யாகம். பசுவைக் கொன்று, கொல்லப்பட்ட பசுவின் கொழுப்பை இறந்து போன முன்னோர்களுக்கு யாகவேள்வியில் அர்ப்பணிப்பத்தும், பசுவின் இறைச்சியை யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பது உண்டு. இன்னும் யஜூர் வேதத்தில் எத்தகைய லட்சணமுள்ள பசுக்களையும் காளைகளையும் எந்தெந்த கடவுள்களுக்கு யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

யஜூர் வேதத்தில் புருஷமேதம் என்று சொல்லப்படுகிற யாகத்தில் நரபலி எப்படிக் கொடுப்பது என்பதைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இதன் நடைமுறைகள் அசுவமேதயாகத்திலுள்ள நடைமுறைகளை ஒத்திருக்கும். சர்வ மேதம் என்ற யாகத்தில் விசுவகர்மா யாகம் வளர்த்து ஆத்மவதை செய்து கொள்வதைப் பற்றி விவரிக்கிறது. வாஜபேய யாகத்தில் விலங்குகளைப் பலி கொடுப்பதைப் பற்றியும், எந்தெந்த மிருகங்களை, மிருகங்களின் எந்தெந்தப் பாகங்களை யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே போல ராஜசூய யாகத்தின் முக்கியமான சடங்கே சூதாட்டம் தான். மகாபாரதம் நினைவுக்கு வருகிறதா?

சமூக உறவுகளைப் பொறுத்த வரை புராதன கால மனித குலத்தின் மதிப்பீடுகளையே கொண்டிருந்தனர். மிருகங்களுடன் ( பெண் ஆடு, கிடா, காளை ) புணர்ச்சியில் ஈடுபவது நல்லது என்று யஜூர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதே போல அதர்வ வேதத்திலே சகோதர சகோதரிகளுடன் உறவு கொள்வது, தந்தை மகளுக்கிடையேயான உறவு, பாலியல் வீரியத்தை வேண்டியும், பாலியல் சுகத்தை வேண்டியும், பல ஸ்லோகங்கள் யஜூர்,, அதர்வ வேதங்களில் இருக்கின்றன.

வேதகாலத்தில் பெண்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் இல்லை. அதோடு அவர்கள் சுயசொத்தாகக் கருதப்பட்டார்கள். பெண் ஆணின் அடிமையாகவே கருதப்பட்டாள். வரதட்சணை கொடுக்கும் வழக்கமும் இருந்தது.பெண்கள் அறிவில் குறைந்தவர்களாகவும் கருதப்பட்டனர். எனவே பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை.

உடைகளைப் பொறுத்தவரை கோவணமும், துண்டும் உடுத்தியதாகவும் மீசை, தாடி, குடுமி உடையவர்களாகவும் இருந்தனர் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆரியர்கள் அசைவர்கள். பசு, குதிரை, ஆடு, எருமை உடும்பு, ஆமை, பன்றி, முள்ளம்பன்றி, முயல், கண்டாமிருகம், போன்ற மிருகங்களைக் கொன்று சாப்பிட்டனர். பால் தயிர், பால், நெய், போன்ற பொருட்களைப் பயன்படுத்தினர். கோதுமையும், பார்லியும் முக்கிய உணவுப் பொருட்களாக இருந்தன.

ஆரம்ப காலகட்டத்தில் விவசாயம் அறியாத ஆரியர்கள் அவர்கள் வெற்றி கொண்ட ஹரப்பா வாசிகளான தஸ்யூக்களைடமிருந்தே விவசாயத்தைக் கற்றிருக்கலாம் என்று கருதுகிற ஆராயச்சியாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் ரிக் வேதத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய சடங்குகள் விரிவாகச் சொல்லப்படுகின்றன.

அனைத்து நோய்களையும் வேள்விகள் மூலம் குணமாக்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. இப்படி வாழ்க்கையின் எல்லா சமூகவிஷயங்களிலும், மதிப்பீடுகளிலும் மனித குல நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில் மனிதசிந்தனையின் தொடக்க கால கற்பனைகளில் உருவானவையே வேதங்கள்.

எனவே வேதகாலம் என்பது அனைவருக்குமான பொற்காலமாக இல்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு வேண்டுமானால் அது பொற்காலமாக இருந்திருக்கலாம். மனித குலம் அந்த வேதகாலத்திலிருந்து எவ்வளவோ தூரம் கடந்து வந்து விட்டது. தொழில், அறிவியல், பகுத்தறிவு, வாழ்க்கை மதிப்பீடுகள் என்று என்று வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் உலகளாவிய சிந்தனைப்போக்குகளோடு கலந்து உறவாடி புதிய பரிமாணங்களைப் பெற்றிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. வரலாற்றை பின்னோக்கி சுற்றுவது அறிவுடைமை ஆகாது. அதிலும் புராதன நாகரிக கால கட்டத்தை நோக்கி வரலாற்று சக்கரம் சுற்றவும் சுற்றாது. வேதகாலம் திரும்பவும் திரும்பாது. திரும்பவும் கூடாது.

துணை நூல்கள்- 1. வரலாறும் வக்கிரங்களும் –ரொமிலா தப்பர்

2. வேதங்கள் ஓர் ஆய்வு-சனல் இடமருகு

நன்றி- தீக்கதிர்

Sunday, 26 April 2015

மந்திரச்சடங்குகளும் பண்பாட்டு அசைவுகளும்

 

உதயசங்கர்

mulaippaari

ஆதியில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மந்தைகளாக வாழ்ந்தனர். கைகளின் உழைப்பின் வழியே மூளை வளர்ச்சி பெற பகுத்தறிவு பிறந்தது. பகுத்தறிவு வளர இனக்குழுவாக மாறினர். மந்தைகளாக இருந்த போது இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த ஆதிமனிதர்கள் இனக்குழுவாக மாறிய போது இயற்கையுடன் போராடி தங்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மாற்றத்தொடங்கினர். குகைகளிலிருந்தும் மரப்பொந்துகளிலிருந்தும் வெளியேறி குடியிருப்புகளைக் கட்டிப்பார்த்தனர். விவசாயம், மீன் பிடித்தல், துணி நெய்தல், கால்நடைகளை வளர்த்தல், போன்ற தொழில்களை செய்யத் தொடங்கினர். இயற்கையின் மீதான அவர்களுடைய தலையீடு எப்போதும் சாதகமாக இல்லை. இயற்கையின் இயக்கவியலைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவர்களுடைய பகுத்தறிவோ, அறிவியலறிவோ முதிர்ச்சி பெற வில்லை. எனவே அவர்கள் இயற்கையில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற இறந்து போன அனைத்துப்பொருட்களிலும் ஆவி இருப்பதாக கற்பனை செய்தனர். அந்த ஆவிகள் தான் தங்களின் மீது வினை புரிகிறது என்று நம்பினர். அதனால் அந்த ஆவிகளை வழிபடுவதன் மூலம் தங்களுக்கு தேவையான நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதே போல தங்களுக்குத் தீமை செய்யும் கெட்ட விளைவுகளைக் கட்டுபடுத்தலாம் என்று நினைத்தனர். அதற்காக கற்பனைச்சித்திரங்களை உருவாக்கி அதன் மூலம் புறவயமான யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கருதினர்.

இந்த வழிபாட்டு முறையே மந்திரச்சடங்குகளாக மாறியது. மொழி தோன்றுவதற்கு முன்னால் இந்த ஆதி மந்திரங்கள் வெறும் பாவனையாக மட்டுமே இருந்தது. மந்திரங்களை உருவாக்கியதற்கு ஆன்மீக அல்லது கடவுள் நம்பிக்கை காரணமல்ல. பொருளாதாரக்காரணங்கள் தான். ஆரம்ப காலத்தில் உற்பத்திக்கருவிகளும் திட்ட மிட்ட விளைவுகளை உருவாக்குகிற அளவுக்கு சிறப்பாகவோ, போதுமானதாகவோ இல்லை. எனவே இந்த மந்திரச்சடங்குகள் மனிதர்களின் உளவியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதனால் உழைப்புச்சக்தி அதிகமானது. அதாவது உற்பத்திக்கருவிகளின் போதாமையை இந்த மந்திரச்சடங்குகள் ஈடுகட்டியது. இந்த வகையில் அப்போது மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளின் ஒரு அங்கமாகவே திகழ்ந்தது. மனிதனுடைய பொருளாதார , வாழ்வாதார செயல்பாடுகள் அனைத்திலும் மந்திரச்சடங்குகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.

குழந்தைப்பருவத்தில் இருந்த மனித குலம் காலப்போக்கில் வழிபட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களுக்கும் மனித உருவங்களைக் கற்பனை செய்தது. மனிதன்..குலமரபுச்சின்னங்களை உருவாக்கினான். தொன்மங்களை உருவாக்கினான். அறிவியலறிவின் ஆதிப்பருவத்தில் இருந்த மனிதன் இந்தக் கற்பனையான உருவங்கள் அதீத ஆற்றல் கொண்டவையென நமபத் தொடங்கினான். ஆக ஆரம்பத்தில் மந்திரச்சடங்குகள் உற்பத்திக்கருவிகளோடு உற்பத்திக்கருவியாகவே செயல்பட்டிருக்கிறது.

உற்பத்திக்கருவியாகச் செயல்பட்ட மந்திரச்சடங்குகள் உற்பத்தி சக்திகளைக் ( இயற்கை) கட்டுப்படுத்தி தங்களுக்குத் தேவையான உற்பத்தியைப் பெருக்க முயற்சித்தன. எனவே தான் இத்தகைய மந்திரச்சடங்குகளில் இயற்கையின் செயல்களை ஒத்த செயல்களையே பாவனையாக செய்து வழிபட்டனர். கனடாவில் உருளைக்கிழங்கு வளர்வதற்காக உருளைக்கிழங்குச் செடி எப்படி செழிப்பாக வளர வேண்டும் என்று பாவனை நடனம் ஆடினர். .பிரேசிலில் மழை வேண்டி வாயில் தண்ணீரை வைத்து மழை பொழியும் சத்தம் போல ஒலியெழுப்பவர். பின்னர் கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து வானில் எறிந்து இதோ பார்.. இது போலவே செய்.. என்று சத்தமிடுவார்கள். நமது ஊர்களில் பயிர்கள் செழித்து வளர்வதற்கு நவதானியங்களை விதைத்து முளைப்பாரி வளர்த்து அம்மனை வழிபாடு நடத்துவது, உரக்குழி அம்மன் வழிபாடு, என்று பெரும்பாலும் விவசாய வேலைகள் சார்ந்தே சடங்குகள் இருக்கின்றன. அம்மனை வழிபடுவதற்கான காரணம் புராதன சமூகத்தில் பெண்களே விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் ஆவர். அதுமட்டுமில்லாமல் மனிதகுல உற்ப்பத்திக்கும் காரணமாக இருக்கும் பெண்களைச் செழிப்பின் அடையாளமாகவே புராதன சமூகம் கண்டது. அதே போல தானியங்களைப் பெண்களாக உருவகிப்பதும் பல நாடுகளில் இருக்கிறது.

உழைப்பினோடு இயைந்த மந்திரசடங்குகளில் உடலசைவுகள், அருள் வந்து ஆடுதல், பொங்கலிடுதல், போன்ற சடங்குகளில் ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்ற நம்பிக்கையே தொழிற்படுகிறது. இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளில் கூட வேளாண்சமூகத்தின் செயல்பாடுகளே பாவனையாகச் செய்யப்படுகின்றன. தீயாற்றுகிற சடங்கின் போது இறந்தவரின் எலும்புகளை எடுத்து வைத்து நவதானியங்களை விதைத்து பயிரிட்டு அவை முளைத்து செழிப்பாக வளர்வதை ஒத்த சடங்குகளை நாம் பார்க்கலாம். உற்பத்திக்கருவிகளைக் கும்பிடுதல், இயற்கையை வழிபடுதல், படையல் வைத்தல் பலியிடுதல், போன்ற செயல்கள் உற்பத்தி சக்திகளை திருப்திப்படுத்துவதாகவும், வேண்டுவதாகவும், கட்டளையிடுவதாகவும் அமைகின்றன. இத்தகையச் சடங்குகள் வேட்டைச்சமூகத்தில் தோன்றி வேளாண்மை சமூகத்தில் வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. இனக்குழுக்கள் தங்களுக்குத் தேவையான உற்பத்தியை அதிகரிக்கவே இத்தகைய மந்திரச்சடங்குகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் ஒவ்வொரு இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளும், பண்பாட்டு சேகரங்களும் கலந்திருக்கும். இந்தச் சடங்குகளை நிகழ்த்த தனியான மந்திரங்கள் பொதுவாக இல்லை. அந்தந்த இனக்குழுவிலுள்ள ஒருவரே இந்தச் சடங்குகளை நிகழ்த்துபவராக இருப்பார். இந்தச் சடங்குகள் நிகழும் காலம் தவிர மற்ற காலங்களில் அவரும் இனக்குழுவில் ஒரு அங்கத்தினராக உழைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பார். இந்த மந்திரச்சடங்குகளில் கூட்டான உளவியல் சக்தி ஓருமுகப்படுத்தப்பட்டு புறவயமான யதார்த்தத்தின் மீது வினை புரிந்து அதை மாற்றுகிறது.

புரோகிதச்சடங்குகள்

இதற்கு மாறாக புரோகிதச்சடங்குகள் எல்லாம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக ரிக் வேதத்திலும், யஜூர், அதர்வ வேதங்களிலும் ஏராளமான யாகவேள்விகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 400 யாகவேள்விகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வேதங்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பின் போது இயற்றப்பட்டவை. நாடோடிகளாக, ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இனம் சிந்து சமவெளியை ஆக்கிரமித்து அங்கிருந்த தஸ்யூக்களோடு சணடையிட்டு நிலைபெறத்தொடங்கிய காலத்தில் தங்களுடைய போர்வெற்றி, பகைவர் அழிவு, பாபச்செயல்கள், நோய் சாந்தி, கருவுறுதல், கருப்பாதுகாப்பு, அன்ன சித்தி, ஐஸ்வரியம், இதையே அஸ்வமேத யாகம், ( ராஜீய அதிகரிக்க நடத்தப்படும் யாகம். இதில் குதிரையைப் பலி கொடுப்பர் ) ராஜசூய யாகம்,( அரசர்கள் தங்கள் மேலாண்மையை சிற்றரசர்களுக்கு அறிவிக்க நடத்தப்படும் யாகம். இந்த யாகத்தில் சூதாட்டம் ஒரு முக்கியமான சடங்கு ) புருஷமேதம்,( நரபலி கொடுக்கும் யாகம்) கோமேத யாகம்,( பசுவைப் பலியிட்டு அதன் பாகங்களை பிராமணர்கள் பங்கிட்டுக் கொள்கிற யாகம்) சர்வ மேதம்,( தானாக முன்வந்து அக்னியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் யாகம் ) சுதர்சன யாகம் ( எதிரிகளை அழிக்கச்செய்யப்படும் யாகம் ) என்று எல்லாயாகங்களிலும் தீ வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி, பால் நெய் போன்ற பொருட்களை தீயிலிட்டு, புரியாத மந்திரங்களை ஓதி தங்களுடைய ஆன்மீகமேலாண்மையை நிலை நாட்டிக் கொண்ட புரோகிதர்களின் காலம் அது. இன்றும் புரோகிதச்சடங்குகள் இன்று பரவலாகி விட்டன. புதுமனைப்புகுவிழாவுக்கு கணபதி ஹோமம், திருமணச்சடங்கு, பெண் பூப்பெய்த தீட்டுக்கழிக்கும் சடங்கு, குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு, இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு என்று வாழ்நாள் முழுவதும் புரோகிதச்சடங்குகள் எல்லோர் குடும்பங்களிலும் நடந்து கொண்டேயிருக்கின்றன. புரோகிதச்சடங்குகளில் எல்லாம் மாடு மிகுந்த முக்கியத்துவம் பெறும். மாட்டு மூத்திரம் இல்லாமல் எந்தச் சடங்கும் இருக்காது. காரணம் அவர்களுடைய வேள்விகளிலெல்லாம் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் பலி கொடுக்கப்பட்டு உணவாக்கப்பட்டன. ரிக் வேதப்பாடல்களில் பலியிடப்படும் மாடுகளின் எந்தெந்தப் பகுதிகள் எப்படிப்பட்ட சுவையுடன் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இப்போது நடத்தப்படும் எல்லாச்சடங்குகளிலும் பலிப்பொருட்கள், உயிர்களின் பெயர்களைச் சொல்லும் மந்திரங்கள் இருக்கும். ஆனால் அதற்கு மாற்றாக வேறு பொருட்களை வேள்வியில் இட்டுக் கொள்வார்கள்.

தீ வளர்த்து செய்யப்படும் புரோகிதச்சடங்குகள் எந்த உற்பத்தியோடு தொடர்புடையவை? உற்பத்தியோடு எந்தத் தொடர்புமில்லாத யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படுகின்ற வேத மந்திரங்களின் உண்மையான அர்த்தமே ஆரியர்களின் போரும் அதன் வெற்றியும் ஆக்கிரமிப்பும், பகைவர் அழிப்பும் அவர்களுடைய செழிப்பும் தான். தந்தைவழிச்சமூகமான ஆரியர்கள் தங்களுடைய சடங்கு முறைகளை ரிஷிகோத்திரம் என்று சொல்லப்படுகிற தந்தைவழி கோத்திரம் சார்ந்தே நடத்துகின்றனர். ஆனால் தாய் வழிச்சமூகமாகவே வெகுகாலம் இருந்த உழைப்பாளி மக்களுக்கு அந்தக் கோத்திரம் கிடையாது.. ஏழு ரிஷிகளின் கோத்திரத்தில் வந்த பிராமணர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஒரே கோத்திரம் சிவகோத்திரம் தான். இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட புரோகிதச்சடங்குகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஆரியர்கள் இயற்றிய இந்த வேதங்கள் இன்றும் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருப்பதற்கான அடிப்படையான காரணம் மநு தர்மம். மநு தர்மத்தில் வேதங்களைப் பகுத்தறிய முயலக்கூடாது. அவை கடவுளுடைய வார்த்தைகள். அதை ஓதுகிற புரோகிதர்களும் கடவுளுக்கு நிகரானவர். வேதங்களைக் கேள்வி கேட்கவோ, ஆராயவோ கூடாது என்று ஆன்மீக அதிகாரத்தை வேதங்களுக்கு ஏற்றி வைத்ததன் காரணமே இன்றும் அவை செல்வாக்கோடு இருக்கிறது..

எல்லாவற்றையும் தன்வயப்படுத்துவதின் மூலம் தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் பிராமணியம் இப்போது இந்த இனக்குழுவின் பண்பாட்டு அசைவுகளையும் கபளீகரம் செய்து அதற்கு சமஸ்கிருதத்தன்மையை ஏற்றுகிறது. உதாரணத்துக்கு அறுவடைத்திருநாளான பொங்கல் மகர சங்கராந்தியாக மாற்றப்படுகிறது. உழைப்பாளிகள் தங்களுடைய உற்பத்திக்கருவிகளைக் கும்பிடும் நாள் இன்று சரஸ்வதி பூஜையாகி விட்டது. கார்த்திகைத்திருவிழா தீபாவளிக்கு முன்னால் ஒளி மங்கி விட்டது. இது போக பௌணர்மி, அமாவாசை, பிரதோஷம், பாட்டிமை, அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எம கண்டம், சூலம், பரிகாரம் என்று வாழ்க்கை முழுவதும் பிராமணியமாக்கல் நடக்கிறது. எல்லோர் வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குச் சற்றும் புரியாத புரோகிதச்சடங்குகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. வீடு கட்டினால் கணபதி ஹோமம், குழந்தை பிறந்தால் பெயரிடும் சடங்கு, பெண் பெரியவளானால் புண்ணியானம் என்று சொல்லப்படுகிற தீட்டுக்கழிக்கும் சடங்கு, திருமணச்சடங்கு, இறந்தவருக்கு திதி கொடுக்கும் சடங்கு, சந்தானப்பாக்கியத்துக்குச் சடங்கு, என்று பெரும்பாலும் புரோகிதச்சடங்குகள் நடைபெறாத வீடுகளே இல்லை எனலாம். இதற்கு முக்கியமான உளவியல் காரணம் பிராமணியத்தின் மேல்நிலையாக்கம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான். பிராமணரைக் கூட்டிக் கொண்டு வந்து சமஸ்கிருத மந்திரங்களைச் சொல்லி நடத்தப்படும் சடங்குகள் சமூகத்தில் மதிப்பு மிக்கவையாக இருப்பதனால் முன்பை விட இப்போது பிராமணப்புரோகிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

புராதன சமூகத்தில் தோன்றி நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் நிலைபெற்ற இந்த மந்திரச்சடங்குகள் இன்றைய நவீன முதலாளித்துவ காலத்தில் பொருளற்றவை தானே. அறிவியல் வளர்ச்சியையும் நவீன விஞ்ஞான சாதனங்களின் கண்டுபிடிப்பையும் முதலாளித்துவம் தன்னுடைய லாபவேட்டைக்குப் பயன்படுத்துவதற்காக நிலப்பிரபுத்தோடு செய்துகொண்ட சமரசத்தினால் மீண்டும் பழமைவாதமும், சநாதனவாதமும், மதவெறியும் முன்னுக்கு வந்திருக்கின்றன. உலக நிதி மூலதனத்தின் நெருக்கடிகளைத் தற்காலிகமாகத் திசை திருப்ப இவை உதவக்கூடும். மக்களிடம் அறிவியல் நோக்கோடு கூடிய சமூகப்பார்வையை வளர்ப்பதும்தான் மநுவையும், புரோகிதச்சடங்குகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிப்பதற்கு உதவும்.

துணை நூல்கள்- 1) மந்திரமும் சடங்குகளும்-ஆ.சிவசுப்பிரமணியன்

2) வேதங்கள் ஒரு ஆய்வு—சனல் இடமருகு

நன்றி-வண்ணக்கதிர்

yagam