மனதை வசப்படுத்தும் மகாக்கலைஞன் வண்ணதாசன்
உதயசங்கர்
ஒருவருடன் பார்க்காமல் பேசாமல்
பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரமுடியுமா?, நம் குடும்பத்தில் சொந்த அண்ணாச்சி
போலவோ, நீண்ட நாட்கள் ஒரே தெருவில் அருகருகே குடியிருந்து பிரிந்த, எப்போது சந்தித்தாலும்
தோளில் கை போட்டு பிரியத்துடன் கைகளைப் பிடித்துக்
கொண்டு ஈரம் ததும்பும் விழிகளோடு விட மறுக்கும் பாலிய சிநேகிதன் போலவோ, உரிமையுடன்
அடுக்களைக்குள் சென்று குளிர்ச்சியாய் ஒரு சொம்புத் தண்ணீர் குடித்து விடும் சொந்தம்
போலவோ தாமிரபரணி ஆற்றில் குளித்து வரும்போது ஈரக்கால்களில் ஒட்டிய மணல் தெருவெங்கும்
பரவி ஆற்றின் மணத்தை ஊருக்கே அளிப்பதைப் போலவோ, அதிகாலைக்குளிரில் இசக்கியம்மன் படித்துறையில்
உடலும் மனமும் குளிர குளிர போடும் முங்காச்சி போலவோ சந்திக்காத போதும் சந்தித்துக் கொண்டேயிருப்பதைப்
போலவோ, ஏக்கம் தரும் ஒரு ஆளுமை அவர்.. தன் கலையாளுமை மூலம் எல்லோரையும் அணுக்கமாக்கிக்
கொள்ளும் வல்லமை படைத்த வண்ணதாசன்.
80 – களில் கவிதை எழுதிக் கொண்டிருந்த
நான் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி,
லா.ச.ரா, கி.ரா, சுந்தரராமசாமி, பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், என்று தேடித் தேடி வாசித்துக்
கொண்டிருந்தேன். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதான பாவனையில் இலக்கியம் படித்துக்
கொண்டிருந்தேன். அப்போது கோவில்பட்டியில் பெரும் இளைஞர்குழாம் இலக்கியவேள்வி நடத்திக்
கொண்டிருந்தது. வாசிப்பு அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ
புத்தகங்கள் கொண்டு வந்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு வாசித்தோம். இருபத்திநாலுமணி
நேரமும் புத்தகங்கள் ஓய்வில்லாமல் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. புத்தகங்களுக்காகச்
சண்டைகள் நடந்தன. புத்தகங்களுக்காக காய் விட்டனர். புத்தகங்களுக்காகப் பழமும் விட்டனர்.
அப்படி மாறிக் கொண்டே வந்த புத்தகங்களில் அந்தப் புத்தகம் வித்தியாசமாக இருந்தது. அந்தப்
புத்தகத்தின் வடிவமைப்பு எங்களுக்கு அற்புத உணர்வைத் தந்தது. காகிதத்தில் கற்சிற்பம்
வடித்ததைப் போல மனதை விட்டு நீங்க மறுத்தது. அப்படி ஒரு புத்தக வடிவமைப்பை நாங்கள்
அதுவரை பார்த்ததில்லை. கலைக்கமுடியாத ஒப்பனைகள் என்ற அந்த வண்ணதாசனின் சிறுகதை நூல்
எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
ஓவியர் அஃக் பரந்தாமன் அதை வடிவமைத்திருந்தார்.
மிகச் சாதாரணமான டெடில் பிரசில் தன் கலையாளுமையை முழுவதும் செலுத்தி அச்சிட்டிருந்தார்.
அப்போது வடிவமைப்புக்காகப் பரிசும் வாங்கியதாக ஞாபகம். சிற்பங்களைப் போல எழுத்துகள்
மனதில் பதிந்தன. அந்த மகத்தான ஓவியர் அஃக் பரந்தாமன் நாங்கள் நடத்திய பிகாசோ நூற்றாண்டு
விழா ஓவியக்கண்காட்சியைத் திறந்து வைக்க கோவில்பட்டி வந்திருந்தார். அவரைப் பார்க்கும்போது
பயமாக இருந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட வில்லனின் அடியாட்களைப் போல முகத்தில் பாதி கிருதாவுடன்
சுருட்டை முடியுடன் கருஞ்சிலையென இருந்தார். அருகில் செல்ல பயந்து கொண்டிருந்தேன்,
ஆனால் அவர் ஒரு குழந்தையைப் போல பழகினார். ஓவியக்கண்காட்சி முடிந்ததும் எங்களுடன் சேர்ந்து
ஆட்டம் போட்ட அவருடைய புகைப்படம் இப்போதும் மாரீஸிடம் இருக்கிறது. ( ஆனால் இப்போது அஃக் பரந்தாமன் ஏதோ முதியோர் இல்லத்திலோ
ஆதரவற்றோர் இல்லத்திலோ இருப்பதாக ஊர்ஜிதமாகாத தகவலைக் கேள்விப்பட்டேன்.)
வண்ணதாசனின் சிறுகதைகளை வாசிக்க
வாசிக்க வேறொரு புதிய உலகத்துக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. ஆனால் நாங்கள் பார்த்த
அதே பழைய உலகம் தான். வண்ணதாசன் என்ற கலைஞனின் மொழியில் புத்தம்புதிதாய் வேறொன்றாய்
இந்த உலகம் தெரிந்ததே. எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மனிதர்கள் இப்போது புதிதாகத் தெரிந்தார்கள்.
வண்ணதாசன் இந்த உலகத்தை மாற்றி விட்டார். இந்த மனிதர்களை மாற்றி விட்டார். எங்கள் மனதை
மாற்றி விட்டார்.. மனிதர்களிடம் எதைப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தன அவருடைய
கதைகள். இந்த ரசவாதத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தும் வண்ணதாசனின் கதைகளை நாங்கள் கொண்டாடினோம்.
குறிப்பாக எனக்கு நான் வெகுநாட்களாக
மறந்திருந்த புதையலின் ரகசியம் ஒன்று ஞாபகத்துக்கு வந்ததைப் போல இருந்தது. என் பாலியகாலம்
முழுவதும் என் கண்ணில் ஆடியது. என் மனதில் அந்த நாட்களின் இனிமை மீண்டும் தேனாய் இனித்தது.
என் பள்ளிவிடுமுறை நாட்களை கழித்த என்னுடைய ஆச்சியும் தாத்தாவும், திருநெல்வேலி மீனாட்சிபுரமும்,
புளியந்தோப்புத்தெருவும், சியாமளாதேவி கோவிலும், உலகம்மன் கோவிலும், சிக்கிலிங்கிராமமும்,
குறுக்குத்துறையும், சுப்பிரமணியன் கோவிலும், பாப்புலர் தியேட்டரும், வயக்காட்டு வழியே
நடந்து போய் சினிமா பார்த்த ரத்னா தியேட்டரும், தட்டாக்குடித் தெருவும், கொக்கிரகுளமும்,
சுலோச்சன முதலியார் பாலமும், தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டே நடந்து போன பாளையங்கோட்டை
ஊரும், வழியில் வந்த ஊசிக்கோபுரமும், பாளையங்கோட்டை அசோக் தியேட்டரும், பாளையங்கோட்டை
வாய்க்காலும், வழியெங்கும் பெரிய பெரிய மருத மரங்களும் எல்லாம் என் மனதை அலைக்கழித்தன.
காய்ந்து வெப்பம் உமிழும் தண்ணீர்ப்பஞ்சம்
மிக்க கரிசல் பூமியான கோவில்பட்டி என் வாழ்விடமாக இருந்தது. புரண்டோடும் தாமிரபரணியின்
கரைகளில் செழித்து எங்கும் பச்சைபசேலென்று வயக்காடுகள் நிறைந்த, தெருக்கள் தோறும் அவித்த
பச்சை நெல்லின் வாசம் பொங்கிய, திருநெல்வேலி என் மனதின் கனவாக இருந்தது. வண்ணதாசனின்
கதைகளைப் படித்தவுடன் என் மனதின் அடியாழத்தில் புதைந்து கிடந்த என் இனிய நினைவுகள்
தன் சிறகுகள் விரித்து பறந்தன. நான் அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை பலமுறை வாசித்தேன்.
ஏற்கனவே கோவில்பட்டியில் தர்சனா
என்ற வீதி நாடகக்குழு ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற பல நண்பர்கள் மனோகர்,
வித்யாஷங்கர், கௌரிஷங்கர், போன்றவர்கள் வேலை கிடைத்தும், வேலை தேடியும் வெளியூர் சென்று
விட்டனர். அதன் பிறகு நாங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில்
சிருஷ்டி என்ற நாடகக்குழுவை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது வத்திராயிருப்பில் பொன்.தனசேகரன்,
புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சி ஆகியோர் ஏற்பாட்டில் பேரா.ராமானுஜம், மு.ராமசாமி, ராஜு,
ஆகியோர் நடத்திய ஐந்து நாள் நாடகப்பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டேன். நாடகப்பயிற்சியின்
போது இரண்டு முறை பெண்ணாக நடிக்க வேண்டி வந்த போது என்னுடைய பெயரை தனலட்சுமி என்றே
சொன்னேன். அதைக் கேட்ட புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சியும், வைகை குமாரசாமி அண்ணாச்சியும்
என்ன தனுமை தனலட்சுமியா? என்று கேலி செய்தார்கள் என்றால் வண்ணதாசன் எந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார்
என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் ஒன்றிரண்டாய் கதைகளை எழுதத்
துணிந்தபோது வண்ணதாசனின் பாதிப்பில் அவருடைய நடையை ஈயடிச்சான் காப்பி பண்ணி கான மயிலாட
அதைக் கண்ட கோழி ஆடியதைப் போல எழுதிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. அவருடைய எழுத்தின்
தனித்தன்மையை யாராலும் காப்பியடிக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய மனதில் எழுந்து
வருகிற மனிதநேயமிக்க சுயம்புவான ராகம். அந்த ராகத்தை வேறொருவர் இசைக்க முடியாது. மனிதர்களை
இத்தனை அழகாய் யாராவது வர்ணித்திருக்க முடியுமாவென்று தெரியவில்லை.
மிச்சத்தில் கசக்கிப்பிழியப்பட்டு
மிச்சமாய் வருகிற அவளையும் குட்டியப்பனையும் மறக்கமுடியுமா? தனுமையில் வருகிற ஞானப்பனில்
நானும் ஏன் நீங்களும் கூட இருக்கிறீர்கள் தானே, தேரி மணலில் கெந்தி கெந்தி மென்மையாய்
நடந்து வருகிற தனலட்சுமி மட்டுமல்ல, தடித்தடியாய் தரை அதிர நடக்கும் டெய்சி வாத்திச்சியும்,
வேண்டியர்வர்களாக இருக்கிறார்களே. கலைக்க முடியாத ஒப்பனையில் கோவிலில் திருமணம் முடிந்து
மகிழ்ச்சியை மேய்த்துக் கொண்டு வரும் பாப்பா ஏன் அவனைச் சீண்டிக் கொண்டேயிருக்கிறாள்?
அவனிடம் நெருக்கமாய் இருக்க எடுக்கும் முயற்சிகளால் எதை உணர்த்த விரும்புகிறாள்? பாம்பின்
காலில் வருகிற சவரக்கலைஞரின் பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளுமே. உல்லாசபயணத்தில்
வருகிற கடைசி ஒற்றை வார்த்தையில் நம் மனம் அதிர்ந்து போகுமே… பிச்சுவும் புட்டாவும்,
பிரபாவும், ஆச்சியும், எத்தனையெத்தனை மனிதர்கள்? உணர்ச்சிகளின் சிகரங்களில் மனிதர்கள்
எப்படி இவ்வளவு அழகானவர்களாக மாறினார்கள்? சண்டையும் சல்லியமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற
மனிதர்களா இவர்கள்? இந்த உலகம் எப்படி இவ்வளவு அழகாக மாறிப் போனது? முருங்கைப்பூக்களும்,
ஒரு நிமிடமும் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டேயிருக்கும் அணிலும்,
அந்தியின் வர்ணஜாலமும், காலையில் எழுந்தவுடன் உதடுகளில் ஒட்டிக் கொள்கிற பழைய பாடலும்,
என்று உலகம் இப்படியும் மாறித் தெரிவதை எப்படிக் கவனிக்கத் தவறினோம்? கவித்துவமான ஒற்றைவரியில்
மனநிலையை உணர்த்த முடியுமா? சிலவரிக்காட்சிச் சித்தரிப்புகளின் மூலம் மனிதர்களின் குணத்தை
வெளிப்படுத்திய மனச்சித்திரக்காரன் வண்ணதாசன். ஒற்றைவரித் தீட்டலில் ஒரு மகத்தான மானுடநாடகத்தை
உணர்த்திச் செல்லும் மகாகலைஞன். வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் யாவரும் வசியப்படுத்தப்
பட்டவர்களைப் போல மாறி விட நேர்வதும், அதன் பிறகு அவர்களுக்கு இந்த உலகம் அழகாகவும்
மனிதர்களைப் பார்க்கையில் அன்பும் கருணையும் சுரக்கும். அதன் பிறகான நம்முடைய வார்த்தைகளில்
மனிதர்களின் மீதான பிரியம் பொங்கும். அஃக் பரந்தாமன் அச்சிட்ட வண்ணதாசனின் கலைக்க முடியாத
ஒப்பனைகள் புத்தகத்தை வாசித்த பிறகு நானும் வசியத்தில் விழுந்தவனைப் போல ஆகி விட்டேன்.
82- ஆக இருக்கலாம். கோவில்பட்டி
பேருந்து நிலைய வணிகவளாகத்தில் கிராஜூவேட்
பரமன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட வண்ணதாசனின் அருமை நண்பர் பரமசிவன் ஒரு
டீக்கடை திறந்தார். அங்கே அவரைச் சந்திக்க அடிக்கடி வண்ணதாசன் வருவதாகக் கேள்விப்பட்டு
அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அந்தச் சமயத்தில் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் வெளிவந்திருந்தது. நான் என்னுடைய கதை வெளியாகியிருந்த
செம்மலரை கையில் வைத்திருந்தேன். நெடிதுயர்ந்த, உருவமும் சாந்தமான முகமும், பாந்தமான
குரலும் அணுக்கமான உடல்மொழியும் அவரோடு நீண்ட நாள் பழகிய உணர்வைத் தந்தது. என் கதையைப்
படித்து விட்டு “ ஷங்கர், எழுதுங்க.. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாம நீங்க பாட்டுக்கு
எழுதுங்க..” என்று சொன்னார். உண்மையில் அந்த வார்த்தைகள் என் ஆழ்மனதில் தங்கி விட்டது.
இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன்.
வேலை கிடைத்து வடமாவட்டங்களில்
ஒரு பதினான்கு வருடங்கள் சுற்றியலைந்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களுக்குப்
பிறகு வண்ணதாசனை நேரில் சந்தித்த போதும் கால இடைவெளி சிறிதுமின்றி அதே அந்நியோன்யத்துடன்
அவர் உரையாடினார். அவருடைய கதைகள், கவிதைகள், கடிதங்கள், ஓவியம், பேச்சு, உரையாடல்,
எல்லாமும் ஒரு கலைநேர்த்தியோடு இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அது பலருக்கு மெனக்கிடலாக
இருக்கிறபோது அவருக்கு இயல்பாக இருக்கிறது. மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள பேரன்பைப்
போல.
எப்போதெல்லாம் வண்ணதாசனை வாசிக்கிறேனோ,
எப்போதெல்லாம் அவரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ செய்கிறேனோ அப்போதெல்லாம் திருநெல்வேலியின்
ஸ்பரிசம் என் மனதை வருடும். தாமிரபரணியின் தாமிரவாசம் என் உடலில் தோன்றும். மீண்டும்
என் பாலியகாலம் தன் வண்ணங்களின் விகசிப்பை எனக்குள் ஏற்படுத்தும். என் அபூர்வக்கனவுகளை
மீண்டும் நான் காண்பேன். அந்தக் கனவுகளைக் காண்பதற்காகவே மீண்டும் மீண்டும் வண்ணதாசனை
வாசிப்பேன். மகத்தான கலைஞன் எங்கள் வண்ணதாசன்!
( மீள் பதிவு )
போற்றுதலுக்கு உரிய மகத்தான கலைஞர்
ReplyDeleteநன்றி ஐயா