Tuesday, 10 December 2019

அறை எண் 24 மாயா மேன்சன்


அறை எண் 24 மாயா மேன்சன்

உதயசங்கர்

திருவல்லிக்கேணியில் சந்துக்குச் சந்து மேன்சன்கள் இருந்தன. அதனால் தடுமாறிவிட்டான் பிரபு. மாயா மேன்சனைக் கண்டுபிடிக்க வேண்டும். இன்னமும் சாலைகள் இரவின் அசதியிலிருந்து இன்னும் விடுபடவில்லை. இவ்வளவு தான் குப்பைகளைப் போடமுடியுமா? என்கிற மாதிரி சாலையெங்கும் குப்பைகள் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தன. மெல்லிய குளிர் உடலைச் சூடேற்றத் தூண்டியது. தெருக்களெல்லாம் பள்ளிக்கூடம் போகிற குழந்தையைப்போல தூக்கம் கலையாமல் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தது. இதுவரை இரண்டு மூன்று சுற்று சுற்றிவந்து விட்டான். நாகு சொன்ன அடையாளம் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. மெயின் ரோட்டில் அப்போது தான் திறந்திருந்த ஒன்றிரண்டு டீக்கடைகளின் முன்னால் ஷார்ட்ஸ் அணிந்து ஒரு கையில் டீயும் ஒரு கையில் சிகரெட்டுமாய் அல்லது செய்தித்தாளுமாய் நின்றிருந்த ஒன்றிரண்டு பேரைப் பார்த்து நடந்தான். அவன் அருகில் வந்து நிற்பதையே பொருட்படுத்தாமல் அவர்களுடைய காரியத்தில் சிரத்தையாக இருந்தார்கள். அவன் சாம்பல் நிறத்தில் ஆஸ்க் மீ எனிதிங் என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த ஒரு இளைஞனிடம் போய்,
“ எக்ஸ்கியூஸ் மீ.. மாயா மேன்சன் எங்கேயிருக்கு சார்.? “ என்று கேட்டான். அவன்  இருக்கிறதா இல்லையா என்று நான்கு திசைகளையும் திரும்பிப்பார்த்தான். தலையைக்குனிந்து சிகரெட் புகையை பூமிக்கு அனுப்பினான். ஆனால் ஏழாவது திசையில் நின்று கொண்டிருந்த பிரபுவை மட்டும் பார்க்கவில்லை. பிரபு மறுபடியும் கேட்க முயற்சிக்கும்போது லேசாக தோள்பட்டையைக் குலுக்கினான். அப்படியே நேரெதிராகத் திரும்பிக்கொண்டான். அவனுக்கு அவமானமாக இருந்தது. அருகில் நின்று கொண்டிருந்த மற்றவன் அப்படியே நகர ஆரம்பித்தான். சரி. டீக்கடைக்காரரிடம் கேட்கலாம் என்று அவரிடம் சென்றான். அவர் நிமிரவில்லை. டீ அடிப்பதிலேயே குறியாக இருந்தார்.
“ அண்ணாச்சி.. இங்கன மாயா மேன்சன் எங்கேயிருக்கு? “ என்று கேட்டான். அவர் கவனிக்காத மாதிரி இருந்தார். ஒருவேளை ஓசி என்கொயரிக்குப் பதில் சொல்ல யோசிக்கிறாரோ.
“ அண்ணாச்சி ஒரு டீ சக்கரை கம்மியா..” என்று கேட்டான். அதையும் அவர் கேட்டதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு நொடியில் அவனுக்கு முன்னால் டீக்கிளாஸ் நின்றது. அவன் டீக்கிளாசைக் கையில் எடுத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்தான். குரு மேன்சன், மகாலட்சுமி மேன்சன், முனியாண்டி மேன்சன், கணேஷ் மேன்சன், கவிதா மேன்சன், மதுரை மேன்சன், எல்லாம் தெரிந்தது. ஆனால் மாயாவை மட்டும் காணவில்லை. நாகு அந்த ஏரியாவில் யாரிடம் கேட்டாலும் சொல்லிவிடுவார்கள் என்று வேறு சொல்லியிருந்தான். டீயைக் குடித்து முடித்து விட்டு ரூபாயைக் கொடுத்தான். அதுவரை யந்திரம் மாதிரி ஆடிக்கொண்டிருந்தவர் சற்று நின்று அவனைப் பார்த்தார். அதுதான் சமயம் என்று அவன் மறுபடியும் கேட்டான்,
“ மாயா மேன்சன்?…” என்று இழுத்தான். அவர் தலையை இடப்பக்கமாக ஆட்டினார். அவன் இடது பக்கமாக இருக்கிறது என்று புரிந்து கொண்டான். அவன் இடது பக்கம் இருந்த ஒரு தெருவுக்குள் நுழைந்தான். அங்கே வீடுகள் தான் ஒன்றையொன்று நெருக்கியடித்துக் கொண்டிருந்தன. மேன்சன் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அந்தத் தெருவின் முடிவில் ஒரு சந்து திரும்பியது. திரும்புகிற இடத்தில் சுவரில் ஒரு சின்னஞ்சிறிய இருசக்கரவாகனங்களில் முன்பக்கம் சின்னதாக ஒரு நம்பர்பிளேட் இருக்குமே அதைவிடச் சின்னதாக ஒரு பெயிண்ட் உரிந்த தகரப்போர்டில் மாயா மேன்சன் என்று எழுதப்பட்டு அதில் ஒரு அம்புக்குறி வேறு போடப்பட்டிருந்தது. அவன் அந்தப்போர்டை முறைத்தான். அந்தப் போர்டும் அவனைப்பார்த்து முறைத்தது.
ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அந்த சந்துக்குள் நுழைந்தான். அந்தச் சந்து வலதுபக்கமாக திரும்பியது. அதில் திரும்பினான். எதிரே ஊதா நிறத்தில் பளீரென மாயா மேன்சன் சீரியல் பல்புகளில் பகல் வெளிச்சத்தில் மங்கலாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் உள்ளே நுழைந்தான். வரவேற்பறையில் யாரும் இல்லை. சுற்றிச் சுற்றிப்பார்த்து விட்டு நின்றான். திடீரென அசரீரி போல ஒரு கனத்த குரல் கேட்டது,
“ என்ன வேணும்?..” 
குரல் வந்த திசை இருட்டாயிருந்தது. அவன் உத்தேசமாக இருட்டைப் பார்த்து,
“ ரூம் நம்பர் இருபத்திநாலு.. நாகுவைப் பார்க்கணும்..”
“ எத்தனை நாள் இருப்பீங்க?....”
“ இன்னக்கிப் போயிருவேன்..”
“ இப்படியே நேரேப்போய் லெஃப்டுல திரும்பி, வரிசையா பாத்துக்கிட்டே போங்க…”
“ ரொம்பத்தேங்கஸ் சார்..”
இருட்டு பதிலெதுவும் சொல்லவில்லை. அவன் தோள்ப்பையைச் சரி செய்து கொண்டு நேரே இருட்டாக இருந்த நடைபாதையில் நடந்தான். இடது பக்கம் திரும்பியதும் அறைகள் துவங்கிவிட்டன. அவன் நடைபாதையில் நடக்கும்போது அறை எண்களைப் பார்ப்பதற்காகத் தலையை உயர்த்தினான். அந்த அறைக்கதவுகள் திறந்து கிடந்தன. தற்செயலாக உள்ளே பார்த்தான்.
அறை எண் ஒன்று
உள்ளே அவனுடைய தாத்தா நின்று கொண்டிருந்தார். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. தாத்தா இறந்து போய் நாற்பது வருடங்களாகி விட்டது. அவனுக்கு இரண்டு வயதாக இருந்தபோது திடீரென வந்த நெஞ்சுவலியில் இறந்து விட்டார் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். அவர் எப்படி இங்கே? உடல் புல்லரித்தது. ஒருவேளை இது அவரில்லையோ. தாத்தாவின் கையில் இரண்டு குருவி பிஸ்கட்டுகள் இருந்தன. இடது கையில் ஒரு பிஸ்கட்டை முதுகுக்குப் பின்னால் மறைத்துக்கொண்டார். அவருக்கு எதிரே வீங்கிய வயிறுடன் குண்டியினால் தரையைத் தேய்த்துக்கொண்டு, தாத்தாவை நோக்கி கைகளை நீட்டிக்கொண்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தான் அவன். அவர் சிரித்துக்கொண்டே அவனிடம் ஒரு பிஸ்கட்டை நீட்டினார். அவன் ஒரு கணம் அந்த ஒரு பிஸ்கட்டைப் பார்த்தான். பின்னர் அப்படியே யு டர்ன் அடித்து அழ ஆரம்பித்தான். தாத்தாவுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. அவர் முன்பற்கள் விழுந்த தன் பொக்கை வாயால் கெக்க்கெக்கே என்று சிரித்துக்கொண்டே
“ படுக்காளிப்பய….கோபத்தைப்பாரு… அப்பனைப்போல..”
என்று சொல்லிக்கொண்டே திரும்பி உட்கார்ந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னால் இரண்டு பிஸ்கட்டுகளையும் நீட்டினார். அழுது கொண்டிருந்த அவன் சிரித்தான். படக்கென்று இரண்டு பிஸ்கட்டுகளையும் தாத்தாவின் கைகளிலிருந்து பறித்தான். கண்களில் நீர் ததும்ப தாத்தாவைப் பார்த்துச் சிரித்தான். தாத்தா அவனை அப்படியே அள்ளிக் கொண்டார். அவனுடைய கன்னத்தில் முத்தமிட்ட தாத்தா அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தார். அவனைத் தரையில் நழுவவிட்டவர் அப்படியே படுத்து விட்டார்.
பிரபுவுக்கு ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவனுடைய அம்மா சொன்ன காட்சிகள் எப்படி இந்த அறையில் தெரிகிறது. மனப்பிரம்மையோ? வேகமாக நடந்தான். அடுத்த அறை எண் இரண்டுக்குப் பதில் பனிரெண்டாக இருந்தது. கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தான். அது அறை எண் பனிரெண்டு தான்.
அறை எண் பனிரெண்டு
அவன் தன்னறியாமலே திறந்திருந்த அறைக்குள் திரும்பிப் பார்த்தான். உள்ளே தீபாவளி டிரஸ்ஸோடு பிரபு நின்று கொண்டிருந்தான். அவனுடைய கையில் ரோல் துப்பாக்கி. ரோப் பொட்டுவெடியை அதில் மாட்டிக்கொண்டு எதிரே தெரிகிற எல்லாவற்றையும் சுட்டுக்கொண்டே தெருவுக்கு வந்தான். தெருவில் யாரும் இல்லை. ஒருவேளை இருளப்பசாமி கோவிலில் யாராவது இருக்கலாம் என்று அங்கே போனான். அங்கே முன்பின் தெரியாத ஒரு பையன் ஈக்கிமாரில் தென்னங்குருத்தைச் சொருகி ராக்கெட் விட்டுக்கொண்டிருந்தான். துப்பாக்கியால் சுடுவதையும் மறந்து அவன் ராக்கெட் விடுவதை வேடிக்கை பார்த்தான். அவன் தூக்கி வீசுகிற ஈர்க்குச்சி பறந்து பறந்து மெதுவாகக் கீழே இறங்குவதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. அந்தப் பையன்
“ நீ விடுறியா..” என்று அவனைப் பார்த்துக் கேட்டான். உடனே வேகமாகப்போன பிரபுவிடமிருந்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டான். பிரபு ஈக்கிமாரைத் தூக்கி வீசினான். அது கீழே வரும்போது கைதட்டினான். தன்னுடைய திறமையைப் பார்த்து பெருமை பீத்திக்க திரும்பினான். யாரும் இல்லை. ஈக்கிமார் கொடுத்த பையனைக் காணவில்லை. அவன் கையில் கொடுத்த துப்பாக்கியையும் காணவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அழுகை பொங்கி வந்தது. அழ ஆரம்பித்தான். அழுது முரண்டு பிடித்து வாங்கிய துப்பாக்கியைக் காணவில்லை என்பதைவிட தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் அவனை மீளாத்துயரில் ஆழ்த்தியது. அங்கேயே உட்கார்ந்து இருட்டும்வரை அழுது கொண்டேயிருந்தான். அம்மா தேடி வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் இன்னும் அழுதான். அதைக்கேட்கச் சகிக்கவில்லை.
அறைக்கு வெளியே நின்ற பிரபுவுக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்தது. அவனுடைய மனதின் ஆழ் அறைகளில் ஒளிந்திருக்கும் உணர்வுகள் எப்படி இங்கே உருக்கொண்டு காட்சிகளாகிறது? மனதின் கண்ணாடியா? கண்ணாடியின் கண்ணாடியா?.தான் ஏதும் மாயச்சுழலில் சிக்கியிருக்கிறோமா? இல்லை ஏதும் போதையின் பள்ளத்தாக்கில் சுற்றிக்கொண்டிருக்கிறோமோ? அவனுக்குப் புரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால் அந்த அறையிலோ, நடைபாதையிலோ யாருமில்லை. அவன் அந்தப்புதிர்ப்பாதையில் நடந்தான்.
அடுத்த அறை இருபத்தி மூன்றாக இருந்தது. சரி. ஏதோ ஒரு மாயசக்தி விளையாடுகிறது. என்ன நடக்கிறதென்று பார்த்து விடலாம் என்ற முடிவோடு அறையைப் பார்த்தான்.
அறை எண் இருபத்திமூன்று
அறை முழுவதும் கும்மிருட்டு. மெல்லிய கிசுகிசுப்பான குரல்கள் கேட்டது. பிரபுவின் குரல் கேட்டது.
“ என்னோட செல்லம்ல.. உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கித் தாரேன்.. நாளைக்குச் சினிமாவுக்குப் போகலாம்.. புரோட்டாச்சால்னா சாப்பிடலாம்…”
“ எனக்கு இது பிடிக்கல.. என்னய விட்ரு..” என்ற குரல் முரளிக்குச் சொந்தமானது. அதைத்தொடர்ந்து முத்தமிடும் சத்தம் கேட்டது.
“ அவ்வளவு தான்.. அவ்வளவு தான்.. “ என்று முனகுகிற சத்தமும் கேட்டது.
அறைக்கு வெளியில் நின்ற பிரபுவுக்கு வேர்த்துக் கொட்டியது. அந்த இடத்தை விட்டு உடனே ஓடிவிட வேண்டும் என்று நினைத்தான். நாகுவின் அறை இருபத்திநான்கு அடுத்தது தானே என்ற எண்ணமும் வந்தது. உடனே ஓடினான். ஆனால் இருபத்திமூன்றாம் எண் அறை முடியவேயில்லை. நீண்டு கொண்டே வந்தது. நடைபாதையில் ஓடும்போதே பல பெண்களின் குரல்களும், பல ஆண்களின் குரல்களும் கேட்டன. நடைபாதை முடிந்து வலப்பக்கமாக மடங்கியது. திரும்பியவுடன் இருந்த அறை எண்ணைப் பார்த்த அவன் அதிர்ந்தான்.
அறை எண் நாற்பத்தியிரண்டு
அந்த மேஜையைச் சுற்றி அவர்கள் நான்குபேர் இருந்தார்கள். பிரபு, நாகு, பேச்சிமுத்து, ரத்தினம், நான்குபேரின் முன்னால் மேஜையின் மீது இரண்டு பாட்டில் பட்டைச்சாராயம் இருந்தது. பட்டறைச்சேவுப்பொட்டலங்களும், ஊறுகாய் பட்டைகளும் கிடந்தன. பாட்டில்கள் ஒவ்வொருவர் கையிலும் மாறியது. ஊறுகாயை விரலால் எடுத்து உள்நாக்கில் தடவிக்கொண்டு சாராயத்தைக் குடித்தார்கள். அப்போது பேச்சிமுத்து சொன்னான்,
“ டேய்.. பிரபு.. காயத்திரியை நான் காதலிக்கிறேன்.. அவ பின்னாடி சுத்தாதே..” அவன் தலை நிற்கவில்லை. அங்குமிங்குமாக குழைந்து சரிந்து கொண்டிருந்தது.
“ உன்னால முடிஞ்சா நீ கவுத்திப்பாரு.. என்னால முடிஞ்சா நான் கவுத்துறேன்..” வாயில் புகைந்த பீடிப்புகையை பேச்சிமுத்து முகத்தில் விட்டபடியே சொன்னான் பிரபு.
“ வேண்டாம்.. விட்ரு.” என்று நாற்காலியை விட்டு எழுந்து நிற்க முடியாமல் ஆடினான். அவனைப் பார்த்துச் சிரித்தபடியே,
“ நான் சொடக்கு போட்டா போதும்.. படுத்திருவா பாக்கிறீயா..” என்று சொன்ன பிரபுவின் வாயில் உடைந்த கண்ணாடி பாட்டிலால் ஒரு குத்து. நல்லவேளை பாட்டில் முகத்தை உரசிக்கொண்டு போனதால் பெரிய ரத்தக்காயமில்லாமல் சிராய்ப்போடு போய்விட்டது. ஆனால் பிரபு பயந்து விட்டான். நெற்றியில் துளிர்த்த ரத்தத்தோடு அந்த இடத்தை விட்டு ஓடினான். பின்னால் அவனைக் கூப்பிடும் குரல்கள் தூரத்தில் மெலிந்து கொண்டே வந்தன.
அறை எண் நாற்பத்தியிரண்டில் நடந்ததைப் பார்த்த பிரபுவுக்கு நடுக்கம் ஏற்பட்டது. அவனுடைய கைகள் நெற்றியைத் தடவின. வடுவிலிருந்து ஒரு புழு குடைவதைப்போல இருந்தது. உடனே அந்த இடத்தை விட்டு ஓடினான். அடுத்த அறை இருபத்தியைந்தாக இருந்தது. ஒரு வேளை முந்திய அறை எண்ணைச் சரியாகப் பார்க்கவில்லையோ என்று திரும்பிப்போனான். இல்லை அது நாற்பத்தியிரண்டு தான். இன்னமும் அந்த அறையில் பேச்சிமுத்துவின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது.
என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. அவன் அறை எண் இருபத்தியைந்துக்கு முன்னால் நின்றான்.
அறை எண் 25
பத்தாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் தினமும் சினிமாவுக்குப் போய்க்கொண்டிருந்தான் பிரபு. அரைப்பரிட்சையில் மூன்று பாடங்கள் ஃபெயில். வீட்டில் தேர்ச்சிச் சான்றிதழ் இன்னும் வரவில்லை என்று சொல்லிக் கொண்டேயிருந்தான். ஆனால் தேர்ச்சி சான்றிதழில் அப்பாவின் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்து விட்டான். போலிக்கையெழுத்தைக் கண்டுபிடித்த முத்தையா சார்வாள் வீட்டுக்கு ஆள்விட்டு அப்பாவை வரச்சொல்லிவிட்டார். பள்ளிக்கூட வகுப்பில் அப்பா அடி வெளுத்து விட்டார். அன்று மாலை வீட்டுக்குப் போகவில்லை. கதிரேசன் கோவில் மலையிலுள்ள புலிக்குகைப் பாறையில் போய் படுத்துக்கொண்டான்.
காலையில் பசி பொறுக்காமல் ஊருக்குள் வந்தவனை அவனுடைய நண்பர்கள் கூட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டார்கள். அம்மாவும், தங்கையும் ஒரே அழுகை. அப்பா இனிமேல் உன் விஷயத்தில் தலையிட மாட்டேன். என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.
மறதியின் புதைசேற்றில் மறைந்து போன துர்க்கனவை நேரில் பார்த்தபோது பிரபுவுக்கு துயரமாக இருந்தது. அப்பாவின் நிராசையான அந்த முகம் அவனை ஏதோ செய்தது. அவன் சோர்வுடன் நடந்தான். அடுத்த அறை எண் என்ன என்று ஊகிக்க முயற்சி செய்தான். இது ஒரு சுவாரசியமான விளையாட்டாகவும் மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். அடுத்த அறையில் காத்துக்கொண்டிருப்பது என்ன என்று அறிந்து கொள்ள ஆர்வமாகவும் இருந்தான்.
அறை எண் 52
அம்மா இரண்டு மூன்று சேலைகள் விரித்த படுக்கையில் படுத்திருந்தாள். ஒரு சிறிய பொம்மையைப் போல மாறிவிட்டாள். ஓங்குதாங்காக இருந்த அவளுடைய ஆகிருதியே அவள் எந்த இடத்திலிருந்தாலும் அந்த இடத்தை ஆளுமை செய்யும். அவளுடைய குரலில் இருந்த கம்பீரம் எல்லோரையும் வசீகரிக்கும். அப்பா அந்தக்குரலின் வழியாகத்தான் நடந்து திரிந்தார். அப்பா இதயத்தாக்கு நோயால் திடீரென இறந்த பிறகு அம்மாவின் ஆகிருதி மெல்ல சுருங்க ஆரம்பித்து விட்டது. அவளே எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்தாள். சர்க்கரை நோயின் தாக்கமே அது தீவிரமான பிறகுதான் தெரிந்தது. அம்மா விழித்திருந்தாள். ஆனால் அவனைப் பார்க்கவில்லை. அவனுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை. அவனுடைய தங்கை தான் பதில் சொன்னாள்.
அம்மா இப்போது பேசுவதில்லை. அவளால் அசைய முடியவில்லை. படுக்கைப்புண் வந்து விட்டது. ரெம்ப நாள் தாங்காது. அவன் பதிலெதுவும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அம்மா நேரே மேலே பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே அவளுடைய வாழ்க்கையின் வரலாறு எழுதப்பட்டிருப்பதைப் போல இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அரசு உத்தியோகத்தில் இருந்தான். அவனால் அம்மாவைக்கூட்டிக்கொண்டு போய் இன்னும் கொஞ்சநாள் வாழ்வதற்கான நம்பிக்கையையும், சம்ரட்சணையும் கொடுக்க முடியும். அங்கே அவனுடைய மனைவி வாசலை அடைத்துக் கொண்டு நின்றாள்.
அம்மாவிடம் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டான். தங்கையின் கையில் கொஞ்சம் ரூபாயைக் கொடுத்தான். அம்மா அப்போதும் திரும்பவில்லை. அவளுடைய கண்களின் ஓரத்தில் கண்ணீர் கோடுகளாய் இறங்கிக்கொண்டிருந்தது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு வெளியேறினான்.
அதைப்பார்க்கும் போது பிரபுவுக்கு இப்போதும் கண்கலங்கியது. மனம் தண்ணீரைப்போல தளும்பிக் கொண்டிருந்தது. எப்போது வேண்டுமானாலும் சிந்தி விடும். அவன் அடுத்த அறையை நோக்கி நடந்தான்.
அறை எண் 14
கஞ்சாக்குடி கேசில் போலீஸ் ஸ்டேஷனில் இரவு முழுவதும் உட்கார்ந்திருந்தான். முகம் வீங்கியிருந்தது.
அறை எண் 75
அலுவலக வேலையாக திருச்சிக்குப் போன இடத்தில் உடன் வந்த அலுவலகப்பெண்ணை வற்புறுத்தி உறவு கொண்டான்.
அறை எண் 87
அம்மா அப்பாவின் நினைவாக அமாவாசை விரதம் இருந்தான். அன்று ஒரு நேரச்சாப்பாடு. பூஜை, சடங்குகள், என்று அமர்க்களப்படுத்தினான். அதில் அவனுடைய மனைவிக்குப் பெருமை.
அறை எண் 45
வேலைக்கான நேர்காணலுக்காக மதுரை போகும்போது பேருந்தில் முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணை நோண்டிக் கொண்டே வந்தான். அவள் சத்தமிட அந்த பேருந்தில் இருந்த அத்தனை பேரும் அடித்து அவமானப்படுத்தி இறக்கிவிட்டார்கள்.
அறை எண் 8
பள்ளிக்கூடத்தில் நடந்த பாட்டுப்போட்டியில் எத்தனை முயற்சித்தும் முதல் வரியைத் தவிர வேறு பாடமுடியாமல் அழுது கொண்டே வந்தான்.
பிரபுவால் தாங்கமுடியவில்லை. அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் ஒரு புதிர் விளையாட்டின் ஒரு பகுதி போல இருந்தது. அவனையறியாமலே அவன் அந்தப்புதிர் விளையாட்டில் சிக்கிக்கொண்டானா? இல்லை. இதிலிருந்து வெளியேறி விட வேண்டும். மாயா மேன்சன் என்ற ஒன்று இந்த உலகத்தில் இல்லை. இதெல்லாம் மனதில் நடக்கும் மாயக்காட்சிகள். அவன் நடைபாதை வழியே ஓடத்தொடங்கினான். அவன் ஓடும் போது அறைகளும் அவனுடன் ஓடத்தொடங்கின.
ஒரு வீட்டின் சமையலறை வழியே ஓடினான். ஒரு அலுவலகக் கக்கூஸ் வழியே ஓடினான். ஒரு ஆற்றை நீந்திக்கடந்து ஓடினான். கருப்பு மண் நிறைந்த பாலைவனத்தில் ஓடினான். மிகப்பெரிய மலைகளில் ஏறி இறங்கினான். மிகப்பெரிய பள்ளத்தாக்குகளில் ஓடினான். அடர்ந்த வனங்களில் ஓடினான். மிருகங்களை வேட்டையாடியபடி ஓடினான். மிருகங்கள் அவனை வேட்டையாடத் துரத்தின. ஓடி ஓடி மூச்சு இளைத்து நின்றபோது முன்னால் ஒரு வாசல் திறந்திருந்தது. அந்த வாசல் வழியே வேறொரு தெருவுக்கு வந்தான். அங்கும் மாயா மேன்சன் என்று சீரியல் பல்புகளில் எழுத்துகள் ஒளிர்ந்தன.
அவன் அந்தத் தெருவில் ஓடி இடது பக்கம் திரும்பினான். மறுபடியும் மாயா மேன்சன் தெரிந்தது. மாயா மேன்சன் உயிருள்ள ஒரு மண்ணுள்ளிப் பாம்பைப் போல அங்கும் இங்கும் தலையையும் வாலையும் காட்டிக் கொண்டிருந்தது. அவனுக்குள் புதிரான உணர்வு தோன்றியது. கண்ட காட்சிகளின் சித்திரங்களும் காணாத சித்திரங்களும் அவன் கண்முன்னால் வேகமாக ஓடின. வாழ்க்கை இவ்வளவு குழப்பமா என்று அயற்சியாய் இருந்தது. இன்னொரு முறை முதலிலிருந்து வாழமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தான். மாயா மேன்சன் அவனை அழைத்தது. வாழ்க்கையின் குறியீடு போல அதன் வெளிப்புறம் சீரியல் லைட்டுகளுடனும் உள்ளே இருட்கிடங்காகவும் இருந்தது. அவன் அதற்குள் போகவேண்டாம் என்று நினைத்தான். ஆனால் யாருமற்ற தெருவில் சமிக்ஞைகள் காட்டி  அழைக்கும் இளம்பெண்ணின் இடுப்பு மடிப்பைப்போல மாயா மேன்சன் அவனை அழைத்துக் கொண்டிருந்தது. கால்கள் அவன் கட்டுப்பாட்டை மீறி மாயா மேன்சனின் வாசலை நோக்கி நடந்தன. கலவிக்கு முன்னால் ஏற்படும் புல்லரிப்பு போல அவனுடல் சிலிர்த்தது. மறுபடியும் மாயா மேன்சனுக்குள் நுழைந்தான். வரவேற்பறை இருளிலிருந்து அதே குரல்,
“ என்ன இன்னும் இருபத்திநாலாம் நம்பரைக் கண்டு பிடிக்கலையா? “
அவன் வெட்கத்துடன் ஏதோ முணுமுணுத்தான். மீண்டும் அந்த புதிர் விளையாட்டுக்கு மனதைத் தயார்ப்படுத்திக்கொண்டான். முதல் அறையில் என்ன நிகழப்போகிறது என்று ஆவலுடன் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு அறைகளை நோக்கி நடந்தான்.
வலது பக்கம் திரும்பியவுடன் இருந்த அறை எண்ணைப் பார்த்தான். அறை எண் 24.
உள்ளே நாகு பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தான்.

 நன்றி - காணிநிலம்



1 comment:

  1. மாயா மேன்சன் படித்தேன்.அருமை.கதை சொல்வதில் புதுமை.ஓரிருவர் இதற்கு முன் இந்த உத்தியில் எழுதியிருக்கலாம்.

    ReplyDelete