மீசை
உதயசங்கர்
முதன் முதலாக கிட்டு அதைச் சொன்னபோது
கோபால் நம்பவில்லை. அடங்காத கோபத்துடன் கிட்டுவோடு
சண்டைக்குப் போனான். அவனுடன் இனி பேசவே கூடாது என்று முடிவெடுத்தான். பிறகென்ன?
“ டேய் உங்கம்மாவுக்கு மீசை இருக்குடா.. “
என்று சொன்னால் யாருக்குத்தான்
கோபம் வராது. அதுவும் மார்கழி மாதம் திருவாதிரையன்று விடியற்காலை மூன்று மணிக்கு வீட்டுக்கு
வந்து எழுப்பி வெந்நீர் போட்டுக் குளித்து விட்டு பெரிய கோவிலில் செண்பகவல்லியம்மனைக்
கும்பிட உள்ளே நுழையும்போது, வெளியே பெரிய மீசையுடன் இருந்த துவாரபாலகர்களைப் பார்த்த
கிட்டு அதைச் சொன்னான். இதைச் சொல்வதற்காகத்தான் கிட்டு வீட்டுக்கு வந்து அவனை எழுப்பிக்
கூட்டிக் கொண்டு வந்தானோ. இவ்வளவு நாளாய் ராமலிங்கம் தான் வீட்டுக்கு வருவான். ஆனால்
இன்றைக்கு ஆச்சரியமாய் கிட்டு வந்து கூப்பிட்டபோது கோபாலுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
பள்ளிக்கூடத்தில் கிட்டு தான் எப்பவும் பர்ஸ்ட் வருவான். கோபால் என்ன குட்டிக்கரணம்
போட்டாலும் மூன்றாவது இடத்துக்கு மேலே உன்னி ஏற முடியவில்லை. அதனால் கிட்டுவின் நெருக்கம்
அவனுக்குக் கணக்கில் இருக்கும் சில தயக்கங்களைப் போக்க உதவும் என்று நினைத்தான். அதற்காக
ராமலிங்கத்தின் நட்பைக்கூட தியாகம் செய்யத்தயாராக இருந்தான். அவ்வளவு மகிழ்ச்சியாக
இருந்த அந்த அதிகாலைப் பொழுதில் தான் கிட்டு அப்படிச் சொல்லிவிட்டான். அதைக் கேட்டவுடன்
“ அதெல்லாம் கிடையாதுடா…”
“ உண்மைக்குமே.. என்னோட அம்மா
தான் சொன்னா. செல்வியக்காவுக்கு மீசை இருக்கு.”
இதைக்கேட்ட கோபால் கோபத்துடன்,
“ இருந்தா என்ன? “ என்றான்.
“ பொம்பிளைக்கு மீசை இருக்கக்கூடாதுடா..மண்டு..”
என்று சொல்லிச்சிரித்தான் கிட்டு. அதைக்கேட்ட கோபால் கிட்டுவை விட்டு விட்டு வேகமாக
நடந்தான். பெரிய படிப்ஸ்னு தலைக்கனம். வாய்க்கு வந்ததைச் சொல்றான். அடுத்த பரீட்சையில
பாரு நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குறேனா இல்லையான்னு என்று மனசுக்குள் கருவிக்கொண்டே
வீட்டுக்குப் போய்விட்டான்.
. வீட்டுக்குப் போனதும் எழுந்து
புறவாசலில் பல் தேய்த்துக்கொண்டிருந்த அம்மாவின் முகத்துக்கு நேரே போய் உதடுகளுக்கு
மேல் உற்றுப்பார்த்தான். மஞ்சளாய் மெல்லிய பூனை ரோமங்கள் தெரிந்தன. உற்றுப்பார்த்தால்
மட்டும் தான் அதுவும் தெரியும். அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவன் சிரிக்காமல்
உள்ளே போய்விட்டான். போகும்போது வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே போனான்.
“ என்ன ஆச்சி இந்தப் பயலுக்கு…
“ என்று அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த அம்மா வாயைக் கொப்பளித்தாள். காலையில்
அவளைப் பார்த்ததும் அப்படியே அடிவயிற்றில் முகம் பதிய கட்டிப்பிடிப்பான். அப்படியே
தலையைத் தூக்கி,
“ அம்மா பூவாசனை அடிக்கும்மா உங்கிட்ட..”
என்று முகத்தை உயர்த்திச் சிரிப்பான். அம்மா கோபாலின் தலையைக் கோதி அவன் தலையிலோ, நெற்றியிலோ,
கன்னத்திலோ, முத்துவாள். கூச்சத்தில் கெக்க்க்க்கே என்று சிரிப்பான் கோபால். கோபாலுக்கு
அவனுடைய அம்மாவைப் பற்றி அவ்வளவு பெருமை. மஞ்சள்
நிறத்தில் பச்சை நரம்புகள் வெளியே தெரிய ஒளிவீசிக் கொண்டிருப்பாள். அவளுடைய எல்லாநடவடிக்கைகளிலும்
ஒரு அழகும் கம்பீரமும் இருக்கும். அவள் நடக்கும்போது மற்ற பெண்களைப்போல கைகளை ஆட்டிக்
கொண்டோ, இடுப்பை வளைத்துக் கொண்டோ, முதுகைக் கூனிக்கொண்டோ, கால்களை ஒடுக்கிக்கொண்டோ,
நடக்க மாட்டாள். நிமிர்ந்து நேராகக் கால்களை முன்னால் நீட்டி நடப்பாள். பள்ளிக்கூடத்தில்
என்.சி.சி. மாணவர்கள் நடப்பார்களே அந்த மாதிரி. என்ன அவர்களை மாதிரி கைகளை வீசி நடக்க
மாட்டாள் அவ்வளவு தான். தெருவில் அவளைப்பார்த்தவுடனே நின்று பேசாமல் போகிறவர்கள் குறைவு.
“ என்ன செல்வி எங்கே தூரமா? “
என்று கேட்காதவர்கள் கிடையாது. அவளிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டால் போதும் என்பது போல
எல்லோரும் நடந்து கொள்வார்கள். திரும்பி ஒரு தடவையாவது பார்க்காமல் போகிறவர்கள் யாருமே
கிடையாது. அதனால் அம்மா அலுவலகத்துக்கு ஒரு அரைமணிநேரமாவது முன்னால் கிளம்பிவிடுவாள்.
தெருவில் உள்ள அத்தனை பேருக்கும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பங்கள், என்று
எழுதிக்கொடுப்பது அம்மா தான். அம்மாவுடன் வெளியே போவது என்றால் கோபாலுக்கு அவ்வளவு
ஆனந்தம்! அம்மாவின் ஆகிருதி பிரம்மாண்டமாய் இருந்தது என்றால் அதில் நிழலாக நடமாடிக்கொண்டிருந்தார்
அப்பா. அப்பாவும் மீசை வைத்ததில்லை. இப்படி அநியாயமாக கிட்டுப்பயல் அம்மாவைப்பற்றிச்
சொல்லியிருக்கானே. அன்று முழுவதும் பல்வேறு சமயங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில்,
அம்மாவின் முகத்தை உற்று உற்றுப் பார்த்தான் கோபால்.
மறுநாள் பள்ளிக்கூடம் போனதும்
கிட்டுவிடம் சண்டை போட்டான். இரண்டுபேரும் வகுப்பறையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.
தேவகி டீச்சர் வந்து இரண்டு பேருக்கும் அடிஸ்கேலால் இரண்டு அடி போட்டு உட்காரவைத்தாள்.
“ எதுக்குடா சண்டை போட்டீங்க?
“
“ இல்ல டீச்சர் எங்கம்மாவுக்கு
மீசை இருக்குன்னு இவன் சொல்றான்.. டீச்சர்..”
“ இல்ல டீச்சர் எங்கம்மா தான்
சொன்னாங்க.. கோபாலோட அம்மாவுக்கு மீசை இருக்கு…”
டீச்சருக்குச் சிரிப்பு வந்தது.
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிரித்துக்கொண்டே,
“ உட்காருங்கலே.. ரொம்ப முக்கியமான
ஆராய்ச்சி பண்ண வந்துட்டாங்க..”
டீச்சரின் முகத்திலும் மீசை அரும்பியிருந்ததை கோபால்
பார்த்தான். அந்தச் சண்டையுடன் கிட்டுவுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். ஆனால் எந்தப்
பெண்ணைப்பார்த்தாலும் அவளுடைய முகத்தில் மீசை இருக்கிறதா என்று பார்க்கத்தொடங்கினான்.
ஒருநாள் அரைக்கீரையைக் குப்பை பார்த்துக்கொடுக்க குச்சுவீட்டு கூனிப்பாட்டியிடம் கொடுப்பதற்காகப்
போனான். அவளுக்கு வெள்ளை நிறத்தில் மீசை முடிகளும் நாடியில் சில முடிகளும் முளைத்திருந்தன.
இவர்கள் வீட்டுக்குப்பின்னால் இருந்த சுனந்தாக்கா
அடிக்கடி அம்மாவிடம் வந்து ஏதாவது சமையல் டிப்ஸ் கேட்டுக் கொண்டேயிருப்பாள். அவளுடைய
உதட்டுக்கு மேலே அங்கங்கே பூனை முடி முளைத்திருந்தது. அவள் விரல்களால் அதைப் பிடுங்கிக்
கொண்டேயிருந்தாள். கோபால் செல்வியத்தை வீட்டுக்கு பலகாரம் கொண்டுபோய் கொடுக்கப்போகும்போது
அத்தை அப்பாவை மாதிரி ஷேவிங் செய்து கொண்டிருந்தாள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
நந்தினியக்கா ஒரு ஞாயிற்றுக்கிழமை உடம்பு முழுவதும் ஒரு கிரீமைப் பூசிக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.
“ எதுக்குக்கா இது ? “ என்று கேட்டான்
கோபால்.
“ உடம்பு முழுசும் ஒரு முடி இல்லாம
வழுவழுன்னாயிரும்…”
“ யெக்கா.. எனக்கும் கொஞ்சம்..
“
“ போடா லூசு.. இதை ஆம்பிளைங்க
தேய்க்கக்கூடாது…”
“ ஏங்க்கா? “
“ உனக்கென்னடா.. நீ பெரிய மீசையே
வைக்கலாம்.. உன்னிஷ்டப்படி நடந்துக்கலாம்.. நீ சொல்றத எல்லோரும் கேப்பாங்க.. உனக்கென்ன
ராஜா? “
என்று கேலி செய்கிற மாதிரி சிரித்தாள்.
கோபாலுக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும் சிரித்து வைத்தான்.
அம்மா எப்போதும் சனிக்கிழமை ராத்திரி
மனசே இலகுவானது மாதிரி இருப்பாள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வரும் சுகமான உணர்வு.
அன்று தெருவிலும் விளையாட பையன்கள் இல்லை. வாசலில் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள்
அம்மா. கோபால் அம்மாவின் மடியில் தலை வைத்துப்படுத்திருந்தான். அம்மா அவன் தலைமுடியில்
கைவிட்டு அளைந்து கொண்டிருந்தாள். வானத்தில் நட்சத்திரங்கள் கொய்யென்று மொய்த்துக்கிடந்தன.
கோபால் அம்மாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக்குறைந்த ஒளியில் அம்மாவின்
மஞ்சள்முகம் தன் உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டிருந்தது. அவளுடைய உதடுகள் துடிப்பதைப்
போல நடுங்கின. அவள் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும்
விழி நானுனக்கு
அந்தப்பாடலை அவன் இதுவரை கேட்டதில்லை.
அந்தப்பாடலை அவள் தன் தொண்டையிலிருந்து பாடவில்லை. அவள் இதயத்திலிருந்து பாடிக்கொண்டிருப்பதைப்
போல குரல் அவ்வளவு இழைந்து வந்தது. கோபால் அமைதியாக இருந்தான். அவள் அவனுடைய நெஞ்சில்
கை வைத்திருந்தாள். அவளுடைய விரல்கள் குரலின் அதிர்வுக்கேற்ப துடித்தன. அந்த விரல்களில்
அந்தக்குரலின் உயிர்த்துடிப்பை உணர்ந்தான். அம்மா அவனை குனிந்து பார்க்கவில்லை என்றாலும்
அவனைப் பார்த்துக் கொண்டேயிருப்பது போன்ற உணர்வு அவனுக்குத் தோன்றியது. அம்மாவின் உடலிலிருந்து தாழம்பூவின் வாசனை வந்து கொண்டிருந்தது. அந்த வாசனைதான்
அந்தப்பாடலாகக் கிளம்பியதோ அல்லது அந்தப்பாடல் தான் அந்த வாசனையைக் கிளப்பியதோ என்று
சொல்லமுடியவில்லை. பாடல் நின்றதும் அம்மாவின் முகம் குனிந்தது. அந்தக் கண்கள் பளபளத்தன.
கோபால் கண்களை மூடாமல் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். வலது கையினால் அம்மாவின்
முகத்தைத் தடவினான். அவள் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு,
“ என்னடா ராஜா..”
அம்மாவின் குரலில் அத்தனை அன்பு
தேனைப்போலச் சொட்டிக்கொண்டிருந்தது. அவனுக்கு அதைத் தாங்கமுடியவில்லை. உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால்வரை புளகாங்கிதம் அடைந்தான். தன்னையறியாமலே தலையை அசைத்தான். ஆனந்தமான அந்தத்
தருணத்தை அவனால் தாங்கமுடியவில்லை. கண்கள் செருகியது. அப்படியே உறங்கிப்போனான். அம்மா
அவனுடைய நெஞ்சில் லேசாகத் தட்டிக்கொடுத்தபடி வானத்தைப் பார்த்தாள். மீசை நட்சத்திரங்கள்
தெரிந்தன. தமிழ்ச்செல்வியின் உதடுகள் புன்னகை பூத்தன.
தமிழ்ச்செல்வியின் அப்பா பெரிய
மீசை வைத்திருந்தார். அவருடைய பெரிய உதடுகளையும் மூக்குக்குக் கீழே இடைவெளியின்றியும்
அடர்ந்து வளர்ந்திருக்கும். அவளுக்கு அந்த மீசையை மட்டுமல்ல அப்பாவையும் ரொம்பப்பிடிக்கும்.
அப்பா மீசையை ஒதுக்குவதில்லை. அப்படியே அதுபாட்டுக்கு வளர்ந்து கொண்டிருக்கும். அந்த
மீசை அப்பாவுக்கு ஒரு முரட்டுத்தோற்றத்தைக் கொடுத்தது. எல்லோரும் அவரிடம் பேசப்பயந்தார்கள்.
அவர் சிரித்தால்கூட வெளியில் தெரியாது. அம்மா தேவையே இல்லாமல் அப்பாவைப் பார்த்துப்
பயந்து கொண்டிருந்தாள். அதற்கு அப்பாவின் வித்தியாசமான நடவடிக்கைகளும் ஒரு காரணமாக
இருக்கலாம். அவர்களுடைய திருமணத்தில் வரதட்சணை என்ற பேச்சே எடுக்கக்கூடாது என்று வீட்டில்
கறாராகச் சொல்லியது மட்டுமல்லாமல் மாமனாருக்கும் கடிதமாக எழுதிப்போட்டு விட்டார். கலியாணம்
பதிவுத்திருமணமாக நடத்த வேண்டும். தாலிகூடாது. பட்டுப்புடவை வேண்டாம். எந்த வைதீகச்சடங்கு
முறைகளும் நடத்தக்கூடாது திருமணச்செலவுகளை இரண்டு வீட்டாரும் பகிர்ந்து கொள்ளலாம்.
மிகக்குறைந்த உறவினர்களை, நண்பர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மொய், அன்பளிப்பு, வாங்கக்கூடாது.
என்று ஏராளமான கட்டுப்பாடுகளைச் சொன்னதும் அப்படியே பயந்து போனார்கள். சரியான ஒரு அரைலூசைத்
தன் தலையில் கட்டுவதாகச் சொல்லி என்று அம்மாவிடம்
அழுதாள்.
அப்பாவின் எண்ணப்படி சில நடந்தன.
பல விஷயங்கள் நடக்கவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அப்பா ஒரு மறை கழன்றவர் என்ற எண்ணம்
அம்மாவிடமிருந்து கடைசி வரை மறையவே இல்லை. திருமணம் முடிந்த மறுவாரம் அலுவலகம் விட்டு
வரும்போது அம்மாவுக்கென்று ஒரு பேண்ட் சட்டை வாங்கி வந்து போடச்சொன்னார். இனிமேல் சேலை
கட்டக்கூடாது. தலைமுடியை வெட்டச்சொன்னார். அவ்வளவு தான் உடனே மூலையில் உட்கார்ந்து
அழ ஆரம்பித்துவிட்டாள். அப்பா அப்புறம் அதைப்பற்றிப் பேசவில்லை. ஆனால் ஒருவாரத்தில்
இரண்டுபேரின் வீட்டிலிருந்தும் பெரியவர்கள் பஞ்சாயத்து பண்ண வந்து விட்டார்கள். கடைசியில்
அம்மாவின் விருப்பமில்லாமல் அப்பா அதிரடியாக எதுவும் செய்யக்கூடாது என்று முடிவானது.
அதன்பிறகு அப்பா இந்த மாதிரியான புதுமைகளை அம்மாவிடம் செய்யத்துணியவில்லை. ஆனால் அம்மாவுக்கு
மிகுந்த மரியாதை கொடுத்தார். அம்மாவிடம் கேட்காமல் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை.
அம்மாவும் அப்பாவுக்குப் பழகிக் கொண்டாள். கோபத்தின் நிழலைக்கூட அப்பாவிடம் அவள் பார்க்கவில்லை.
அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் எப்போதும் சண்டைக்காடாகக் கிடக்கும்போது அவளுடைய வீடு
அமைதியாக இருக்கும். அப்பா புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பார். தெருக்குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருப்பார்கள். சில சமயம் அப்பாவும் சேர்ந்து விளையாடுவார். வேறு எந்த சத்தமும்
இருக்காது.
ஒரு தடவை பக்கத்து வீட்டுக் கோகிலாக்காவை
அவளுடைய கணவன் செல்வம் தண்ணியடித்து விட்டு வந்து அவள் அவனைக் கேட்காமல் சமையல் செய்ய
நல்லெண்ணெய் நூறு வாங்கிவிட்டாள் என்று விறகுக்கட்டையால்
அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தான். தெருவே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது தான் அலுவலகம் விட்டு வந்திருந்த அப்பா விறு விறுவென்று செல்வத்தைப் பிடித்து
ஒரு தள்ளு தள்ளினார். அவன் கையிலிருந்த விறகுக்கட்டையைப் பிடுங்கி எறிந்தார். கோபமாய்
அப்பாவைப் பார்த்து,
“ எங்குடும்ப விஷயத்தில தலையிட
நீ யாரு? “ என்று கேட்டு முடிப்பதற்குள் செல்வத்தின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை
விட்டார். செல்வம் அப்படியே ஒடுங்கி நின்று விட்டான். அப்பாவின் கோபத்தை அப்போது தான்
அம்மா பார்த்தாள். இரண்டு நாட்கள் செல்வம் முறைத்துக் கொண்டு திரிந்தார். அப்புறம்
அப்பாவே அவரை அழைத்துச் சமாதனாப்படுத்தி விட்டார். பலநேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள்
அப்பாவிடம் ஆலோசனை கேட்பார்கள். எந்தப்பிரச்னையாக இருந்தாலும் அப்பா வந்து விட்டால்
தெருக்காரர்கள் அவரைக் கலக்காமல் முடிவெடுப்பதில்லை. அம்மாவுக்கு அப்பாவின் ஆளுமை கொஞ்சம்
கொஞ்சமாக தெரியத் தெரிய அவளுக்கு பெருமையாக இருந்தது.
அம்மாவிடம் மட்டுமல்ல தெருவில்
அந்தச் சிறிய ஊரில் அவர் வேலை பார்த்த பஞ்சாயத்து அலுவலகத்தில் அப்பா எப்போதும் எல்லோராலும்
விரும்பப்படுகிறவராக இருந்தார். அப்பாவின் ஆலோசனை எல்லோருக்கும் தேவையிருந்தது. அப்பா
எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக யோசித்து தர்க்க நியாயங்களோடு முன்வைப்பார். மூடநம்பிக்கைகளுக்கு
எதிராக அவர் சொல்வதை மறுக்க முடியாமல்,
“ எல்லாம் அந்த ஈரோட்டு தாடிக்காரக்கிழவன்
கெடுத்த கெடுதலை…”
என்று அவருக்குப் பின்னால் பேசுவார்கள்.
தமிழ்ச்செல்வி பிறந்தபிறகு அப்பா
தினம் ஒருமணிநேரமாவது அவளிடம் பேசிக்கொண்டிருந்தார். அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ
அவர் பேசிக்கொண்டிருந்தார். இந்த உலகத்தைப் பற்றி, பெண்களைப் பற்றி, கடவுள்களைப் பற்றி,
சாதி, மதங்களைப் பற்றி, பேசுவார். அப்பா எதைப் பற்றித்தான் பேசவில்லை. உணர்ச்சி பொங்கும்
அந்த முகமும், பேசும்போது துடிக்கும் அந்த மீசையும் அப்படியே கல்வெட்டாய் மனசில் பதிந்து
விட்டது. எப்போதும் அப்பாவின் மடியில் உட்கார்ந்து அந்த மீசையைத் தடவி விட்டுக்கொண்டேயிருப்பாள்
தமிழ்ச்செல்வி. அந்த மீசைக்குள்ளிருந்து தான் தைரியம் தமிழ்ச்செல்வியின் மனதில் உருக்காய்
படிந்தது. அப்பாவிடமிருந்து ஏராளமாய் கற்றுக் கொண்டாள். கம்பிமுடி மாதிரி வார்வாராய்
நீண்டிருக்கும் அந்த மீசை ஒரு நாள் தூக்கத்திலிருந்து எழுந்திரிக்கவில்லை. ஒரு வாரத்துக்கு
தமிழ்ச்செல்வி பித்துப்பிடித்தவள் போல இருந்தாள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது
ஆசிரியர் ஒருவர் பல்லையிளித்துக்கொண்டே அவளைத் தொடக்கூடாத இடத்தில் தொட்டு விட்டார்.
அவள் அந்த ஆசிரியரைக் கன்னத்தில் அடித்து விட்டாள். தலைமையாசிரியரிலிருந்து அனைத்து
வாத்தியார்களும் அவளை மிரட்டி உருட்டினார்கள். அடுத்த வகுப்பு போகமுடியாது என்று பயமுறுத்தினார்கள்.
அவள் பயப்படாமல் மேலதிகாரிக்கும், கல்வித்துறைக்கும், புகார் அனுப்பினாள். அந்த ஆசிரியர்
அங்கிருந்து மாற்றலாகிப் போகும்வரை விடவில்லை.
பள்ளி இறுதிவகுப்பு முடிந்ததும்
கல்லூரிப்படிப்புக்காக வெளியூர் போகக்கூடாது என்று அம்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிணாள்.
படிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கட்டும். இரண்டு மூன்று வருடங்களில்
திருமணம் முடித்து விடலாம் என்றாள். தமிழ்ச்செல்வி கேட்கவில்லை. தமிழ்ச்செல்வி அம்மாவிடம்
“ அம்மா நீயா அனுப்பினா உன் சம்மதத்தோட
போறேன்.. இல்லைன்னா உன் சம்மதமில்லாமப் போறேன்.. ஆனா போறது உறுதி..”
“ அப்படியே அப்பனை உரிச்சி வைச்சிப்
பொறந்திருக்கு..” என்று ஒரு நாள் முழுவதும் பொருமிக்கொண்டே இருந்தாள் அம்மா. கல்லூரியில்
பேரவைத்தேர்தலில் முதல் பெண்ணாக நின்று வெற்றி பெற்றாள். அந்த நாள் ஆகோஷம் இன்னும்
காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
படித்து முடித்ததும் வேலைக்குப்
போனாள். உடன் வேலை பார்த்த கணேசனைக் காதலித்தாள். சாதி, மதம், பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
கலியாண ஏற்பாடுகளில் அவளே முன்னின்று சபையில் பேசினாள். அப்பாவைப்போலவே கலியாணத்தின்
போது பல கட்டுப்பாடுகளைச் சொன்னாள். தாலி கிடையாது. எளிமையான கலியாணம். வரதட்சணை, நகை,
சீர், சீதனம், எதுவும் கிடையாது. கலியாணச்செலவு இருவருக்கும் சமப்பங்கு. அவள் அழகாக
இருந்ததும் நல்ல வேலையில் இருந்ததும் பல விஷயங்களில் அவள் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக்
கொள்ளச்செய்தது. அவளுடைய கணவன் கணேசன் அவளைப் புரிந்து கொண்டான்.
எதிரே இருந்த வேம்பு பூக்களைக்
கொட்டியது. வேப்பம்பூக்களின் மணம் காற்றில் மிதந்து வந்தது. அவள் அந்த மணத்தை நுகர்ந்தாள்.
அப்பாவின் மணம் அவள் நினைவில் பொங்கியது. ஒரு நாள் மாலை அப்பாவின் மடியில் உட்கார்ந்து
அவருடைய மீசையைத் தடவிக் கொண்டே தமிழ்ச்செல்வி கேட்டாள்,
“ எனக்கு மீசை வளருமாப்பா.. வளந்தபிறகு
உன்னை மாதிரி பெரிய மீசை வைப்பேன்..”
அதைக்கேட்ட அப்பா அவள் முகவாயில்
தடவிக் கொடுத்தபடி, சிரித்தார்.
“ மீசைங்கிறது வெறும் மயிர்ல இல்லைடா..”
அப்போது தமிழ்ச்செல்விக்கு அது
புரியவில்லை. வெளியே குளிரத்தொடங்கியது. கோபாலின் உடலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது.
அம்மா கோபாலைத் தூக்கிக்கொண்டு உள்ளே போனாள்.
மறுநாள் காலை எழுந்தவுடன் கோபால்
அம்மாவிடம் வந்து,
“ ஏம்மா பொம்பிளங்களுக்கு பெரிசா
மீசை வளர மாட்டேங்கு..”
“ எதுக்குடா கேக்கிறே? ..”
“ இல்லைம்மா.. மீசை வைச்சா தான்
எல்லோரும் பயப்படுவாங்கன்னு கிட்டுப்பயல் சொல்றான்..”
அம்மா சிரித்தாள்.
” நானும் பெரிசா மீசை வைச்சிருக்கேன்..”
என்று விரல்களால் உதட்டுக்கு மேலே தடவிக் கொடுத்தாள்..”
கோபால் அம்மாவின் உதட்டுக்கு மேலே
தடவினான்.
“ ஐயே ஒண்ணும் தெரியலை..”
“ கண்ணுக்குத் தெரியாதுடா செல்லம்!
“
“ ஏன் தெரியாது? “
“ ஏன்னா மீசைங்கிறது வெறும் மயிர்ல
இல்லைடா..”
என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்
அம்மா. இப்போது கோபாலுக்குப் புரியவில்லை. ஆனால் அதை நாளை கிட்டுவைப் பார்க்கும்போது
சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
நன்றி - செம்மலர்
"மீசை மயிர்ல இல்ல" நிதர்சனமான வரிகள், சிறப்பு தோழர்...
ReplyDeleteசிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு சொல்லப்பட்ட கதை.வாழ்த்துகள் தோழர்.
ReplyDelete