Friday, 7 October 2016

குழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..

குழந்தைகளின் கற்பனைச்சிறகுகள் விரிய விரிய..

உதயசங்கர்

குழந்தை இலக்கியமா அல்லது சிறுவர் இலக்கியமா இதிலேயே நிறைய்யப் பேருக்குக் குழப்பம். ஏனெனில் குழந்தை என்றால் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் சிறுவர் என்றால் ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் நம்முடைய பொதுப்புத்தியில் ஆழப்பதிந்து விட்டது. ஆனால் இது வரை வெளிவந்துள்ள நம்முடைய குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இப்படியான எந்த விவாதங்களோ உரையாடல்களோ இல்லை எனலாம். இன்னும் சொல்லப்போனால் இப்போது தான் குழந்தை இலக்கியத்தின் மீது சிறிது வெளிச்சம் படர ஆரம்பித்திருக்கிறது. அதனால் இனிமேல் தான் விவாதங்களும் உரையாடல்களும் உருவாக வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு ஒரு நூறு புத்தகங்களாவது வெளிவந்தால் மட்டுமே ( மொழிபெயர்ப்பு நூல்களைத் தாண்டி ) அடுத்த கட்டத்தை நோக்கி சிறுவர் இலக்கியம் நகரும் என்று நம்புகிறேன். அது விரைவில் நிகழும் என்ற நம்பிக்கையை இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இளைஞர் குழாம் அளிக்கிறார்கள்.
மனிதமனம் கதைகளால் கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக இருந்தபோது கேட்ட கதைகளே அவனுடைய ஆழ்மனதில் அவனுடைய அக உலகைத் தீர்மானிக்கிற அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் தன்னுடைய குழந்தைப்பருவத்தை மீட்டெடுக்கும் முயற்சியிலேயே அவன் தன் அநுபவங்களை கதைகளாகச் சொல்கிறான். சினிமா பார்க்கிறான். பத்திரிகைகள் படிக்கிறான். உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை வாசித்துக் கொண்டிருக்கிறான். மனிதனுடைய மொழி அடிப்படையில் கதை மொழி. அதனால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒவ்வொரு கதையாக மாறுகிறது. இந்த வெளியெங்கும் இப்படியான கதைகளே மிதந்து கொண்டிருக்கின்றன. இந்தக்கதைகள் தான் கடந்த கால வாழ்க்கையையும், நிகழ்கால மதிப்பீடுகளையும், எதிர்காலக்கனவுகளையும் மனித மனதில் விதைத்துக் கொண்டேயிருக்கின்றன. 
குழந்தைகளின் மிக உயர்ந்த படைப்பூக்கியாகக் கதைகளே செயல்படுகின்றன. கதைகள் மீதான குழந்தைகளின் பிரியமே அவர்களிடம் எதையும் எதிர்கொள்ளும் திறனையும், நம்பிக்கையையும், அன்பையும் உருவாக்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல குழந்தைகள் கதைகளின் மீது மொய்க்கிறார்கள். கனவுகளின் வண்ணங்களைப்பூசிக் கொண்டு அவர்கள் கட்டற்ற கதையுலகில் பறந்து திரிகிறார்கள். அவர்களின் பறத்தல் எல்லையில்லாதது. கவிஞர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், அறிவொளி இயக்க செயல்பாட்டாளர், குழந்தை இலக்கிய எழுத்தாளர் என்று பன்முகப்பரிமாணம் கொண்ட மு.முருகேஷின் சிறுவர் கதைப்புத்தகம் ” பறக்கும் பப்பி பூவும், அட்டைக்கத்தி ராஜாவும் ” என்ற நூல் அகநி வெளியீடாக வெளிவந்துள்ளது.  
சிறுவர் கதைப்புத்தகத்தின் மிக முக்கியமான அம்சம் குழந்தைகளை ஈர்க்கும் விதத்தில் அட்டைப்படமும், வடிவமைப்பும், ஓவியங்களும் அமைவது தான். பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் நூலின் வடிவமைப்பும் கதைகளுக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்களும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் புத்தகத்திலுள்ள பனிரெண்டு கதைகளிலும் மு.முருகேஷ் புதிய மதிப்பீடுகளை குழந்தைகளிடம் உருவாக்குகிறார். சமகால சமூகச் சூழல்களுக்கேற்ப புதிய அறவிழுமியங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறார்.
’ காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி “ கதையில் உருவத்தை வைத்தோ, நிறத்தைவைத்தோ, ஒருவரைக் குறைத்து எடை போடக் கூடாது என்ற மதீப்பீட்டை குழந்தைகள் மனதில் பதியும்படி சொல்கிறார் மு.முருகேஷ். கல்யாணியின் மோதிர வளையல் கதையில் பழைய முடிச்சேயானாலும் மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான கதைகளை எழுதுவதின் மூலம் குழந்தைகள் தங்களின் படைப்பூக்கத்தைக் கூர் தீட்ட முடியும். எலி ராஜாவுக்குக் கலியாணம் கதையில் உள்ள கதைப்பயணம் மிகுந்த சுவாரசியமுள்ளது.  உயிர்க்குரல் கதையில் சமகால சமூகத்தில் மிக முக்கியமான விழுமியம் நிலைநிறுத்தப்படுகிறது. சில நாரைகளும் ஒரு நண்டு அக்காவும் கதை திருட்டைப் பற்றிய ஒரு கேள்வியை எழுப்புகிறது. இன்றைய குடும்பத்தில் ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியதை ஒரு காட்சியின் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். நாங்க நகரத்தைப் பார்க்கப் போறோம்… என்ற கதையில் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து அல்லல்பட்டு திரும்ப கிராமத்துக்கே போகத்துடிக்கும் எளிய உயிர்களைப் பற்றி கவலைப்பட வைக்கிறார். அலுவலகவேலைக்காரர்களை உயர்வாகவும் உடலுழைப்பை. தாழ்வாகவும் மதிக்கும் எண்ணம் மிகுந்த சமூகம் நம்முடைய சமூகம். இந்த மதிப்பீட்டைத் தகர்த்து நொறுக்கிறது பாதி முட்டாளும் முழுச்சம்பளமும் என்ற கதை. பறக்குது பார் பச்சோந்தி அவரவர் திறமைகளை உணர்ந்து கொள்ளச் சொல்கிறது. நான்குபங்கு திருடர்கள் பேராசையினால் ஒருவருக்கொருவர் கொன்றுவிடக்கூடிய அளவுக்குப் போவதைச் சொல்கிறது. குட்டி முயலின் சமயோசிதத்தை புதிய முறையில் விவரிக்கும் டாம் மச்சான்..டூம் ம்ச்சான் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் கதையில் வழக்கம்போல் ராஜா மூடனாக இருக்கிறது. ராஜாக்களைப் பற்றிய இப்படியான கதைகள் ராஜாக்களைப் பற்றிய கதைகள் மட்டுமில்லை என்று புரிந்து கொண்டால் கதை வேறு வேறு தளங்களுக்கு விரிவதைப் பார்க்க முடியும்.
பனிரெண்டு கதைகளில் பெரும்பாலான கதைகளில் மிருகங்கள், பறவைகளே கதை மாந்தர்களாக வந்து கதைகளை சுவாரசியமாக்குகின்றனர். கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான எளிய மொழியில் எழுதியிருக்கிறார் மு.முருகேஷ். சமீபத்தில் வெளியான குழந்தை இலக்கிய நூல்களில் பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி ராஜாவும் ஒரு காத்திரமான புத்தகமாகத் திகழ்கிறது. வாசிக்கும் குழந்தைகளின் சிறகுகள் விரியும். பப்பி பூக்களைப் போல பறந்து திரிவார்கள் கதை வானில்……….

வெளியீடு – அகநி வெளியீடு
வந்தவாசி
விலை 40/

நன்றி – புத்தகம் பேசுது அக்16

No comments:

Post a Comment