Showing posts with label மொழிபெயர்ப்பு.. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு.. Show all posts

Monday, 3 March 2025

நெய்யப்பத்தின் கதை

 

நெய்யப்பத்தின் கதை

மலையாளத்தில் - அஷீதா

தமிழில்- உதயசங்கர்



கசுமலா காக்கா, சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி வசிக்கிற கிராமத்தில் அய்யப்பன் என்ற பெயருடைய ஒரு சிறுவனும் இருந்தான். அவன் எப்போதும் சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியுடன் சச்சரவு செய்து கொண்டேயிருப்பான். அடிபிடி சண்டை போடுவான். சின்னுவிடம் கோவிப்பான். நாய்க்குட்டியின் மீது கல்லெறிவான். பூனைக்குட்டியின் மீது தண்ணீரை ஊற்றுவான்.

ஒருநாள் அய்யப்பனின் அம்மா நெய்யப்பம் செய்தார். நெய்யப்பம் என்ன மணம்! ஆலமரத்தின் கிளையிலிருந்து பறந்து சென்றது கசுமலா காக்கா. அடுக்களைப் பக்கமாக வாசலில் நின்று நெய்யப்பம் தின்று கொண்டிருந்தான் அய்யப்பன். அவன் கையிலிருந்த நெய்யப்பத்தைக் கொத்திப் பிடுங்கிக் கொண்டு பறந்தது.

அப்படியே சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாரும் விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது. கசுமலா காக்கா பறந்து வருவதைப் பார்த்ததும் மூன்று பேரும் விளையாட்டை நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஆசை வரவேண்டுமென்று வாயில் நெய்யப்பத்துடன் கீழே தாழ்வாகப் பறந்தது கசுமலா காக்கா.

ஒரு குதி குதித்து பூனை அதைத் தட்டிப்பறித்தது.

மின்னல் வேகத்தில் நாய்க்குட்டி அதைப் பிடிங்கிவிட்டது.

அடுத்த நிமிடம் சின்னு அதை விழுங்கி விட்டாள்.

கசுமலா காக்காவுக்கு வேதனையாகி விட்டது. இப்போதும் அந்த கிராமத்தில் குழந்தைகள் பாடுவார்கள்,

“ அய்யப்பன் அம்மா நெய்யப்பம் சுட்டார்

காக்கா கொத்திப் பறந்து போனது

பூனைக்குட்டி பாய்ந்து பறித்தெடுத்தது

நாய்க்குட்டி தாவி பிடுங்கியெடுத்தது

சின்னுக்குட்டி அதை விழுங்கி விட்டாள். “

நன்றி - புக் டே

பறயாம் நமுக்கு கதகள்

Tuesday, 11 February 2025

சின்னுவும் சிங்கமும்

 சின்னுவும் சிங்கமும்

மலையாளத்தில் - அஷீதா

தமிழில் - உதயசங்கர்




சின்னுவும், நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஆலமரத்தடியில் விளையாடுவார்கள். அந்த ஆலமரத்திற்குச் சற்று தூரத்தில் ஒரு ஆறு ஓடுகிறது.  ஆறு ஓடுகிற சத்தம் கேட்டுக்கொண்டே கதைப்பாட்டியின் மடியில் தலை வைத்து சின்னு படுத்திருப்பாள். அவளுடைய காலில் தலை வைத்து நாய்க்குட்டி படுத்திருக்கும். நாய்க்குட்டியில் வயிற்றில் தலை வைத்து பூனைக்குட்டி படுத்திருக்கும். ஆற்றின் பாடலைக் கேட்டுக் கொண்டே மூன்று பேரும் உறங்குவார்கள்.

அவர்கள் ஆற்றை ஆறம்மா என்று அழைப்பார்கள். ஆறம்மாவின் கரையில் போய் விளையாடலாமா? என்று கேட்டாள் சின்னு. நாய்க்குட்டி பௌ என்றது. பூனைக்குட்டி மியாவ் என்றது. ஆற்றின் அக்கரையில் ஒரு பெரிய காடு இருந்தது. பெரிய பெரிய மரங்கள் நிறைந்த இருண்ட காடு.

ஒரு நாள் ஆறம்மாவின் கரையில் மூன்று பேரும் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருந்தார்கள். சின்னு ஆ ஆ ஆ ஆ என்று பாடினாள். நாய்க்குட்டி பௌ பௌ பௌ என்றும் பூனைக்குட்டி மியாய் மியாவ் மியாவ் என்றும் பாடி ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

“ ஹேய்.. நிறுத்து..” என்று ஒரு கர்ச்சனை ஆற்றின் அக்கரையில் இருந்து கேட்டது.  மூன்று பேரும் துள்ளிக்குதித்து பார்த்தால் மறுகரையில் ஒரு சிங்கம். காட்டுக்குள் இருந்து வந்த வயதான சிங்கம் ஆற்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. தண்ணீரைக் குடித்தபிறகு அந்த வயதான சிங்கம், சிரித்துக்கொண்டே,

“ யார் நீங்கள்? “ என்று கேட்டது. நாய்க்குட்டி வாலை கால்களுக்கு அடியில் வைத்துக் கொண்டு சின்னுவின் பின்னால் ஒளிந்து கொண்டது. பூனைக்குட்டி நாய்க்குட்டியின் பின்னால் ஒளிந்தது.

“ நாங்கள் இங்கே தண்ணீர் குடிக்க வந்தோம்..” என்று சின்னு சொன்னாள்.

“ நீங்கள் இந்தப்பக்கம் காட்டுக்குள் வாருங்கள்.. நானும் விளையாட வாரேன்..”

என்று சிங்கம் சொன்னது.

” வேண்டாம் வேண்டாம்.. உப்பும் மிளகும் சேர்த்து எங்களைத் தின்பதற்கா? “ என்றாள் சின்னு. வயதான சிங்கம் சிரித்தது. பிறகு கேட்டது,

“ யாரு சொன்னார்கள்..”

“” இந்த ஆற்றைக் கலக்கியது நீ இல்லாமல் இருக்கலாம்.. உன்னுடைய தாத்தா கலக்கினார் என்று சொல்லி ஆட்டினைக் கொன்று தின்ற கதை எங்களுக்குத் தெரியும்..அங்கிருந்தே பேசினால் போதும்..”

 என்று சொன்னது பூனைக்குட்டி.

“ இந்தக் கதை எல்லாம் உங்களுக்குச் சொன்னது யார்? “

“ கதைப் பாட்டி..” என்று மூன்று பேரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சிங்கத்தின் முகம் சிவந்து விட்டது. மீசை முடி சிலிர்த்தது.

“ உங்களுடைய கதைப்பாட்டியினால் ஒரு விலங்கையும் வேட்டையாடிச் சாப்பிட முடியவில்லை..” என்று சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல காட்டுக்குள் சென்றது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கசுமலா காக்கா பறந்து சென்று சிங்கத்தின் தலையில் ஒரு கொத்து கொத்தியது

நன்றி - பறயாம் நமுக்கு கதகள்

Saturday, 31 December 2016

ஒரு குட்டிப்பாப்பாவின் கதை

ஒரு குட்டிப்பாப்பாவின் கதை

” இயற்கையின் அற்புத உலகில் ” இது ஒரு குட்டிப்பாப்பாவின் கதை. குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். முல்லைக்கொடி, ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள். அந்த அதிசயத்தை ஆராய்ந்து பார்க்கிறாள். அதற்கான காரணத்தைப் பொறுமையாகக் கண்டு பிடிக்கிறாள். தான் கண்டுபிடித்த விசயங்களைப் பற்றி யோசிக்கிறாள். அப்படிக் கண்டுபிடித்த தன்னை பாராட்டிக் கொள்கிறாள். தன்னை ஒரு துப்பறியும் நிபுணராக, கண்டுபிடிப்பாளாராக, நினைக்கிறாள். எதிர்காலத்தில் இயற்கை அறிவியலாளராக உருவாகவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு உருவாகிறது.
அப்படி என்ன கண்டுபிடித்து விட்டாள் குட்டிப்பாப்பா? வண்ணத்துப்பூச்சிகள் எப்படி உருவாகின்றன? பார்க்க அருவெறுப்பாகத் தெரிகிற புழுக்களின் கதை என்ன? அந்தப்புழுவே தன்னுடைய வரலாற்றைச் சொன்னால் எப்படி இருக்கும்? கட்டெறும்புகள் தங்கள் வாயில் முட்டைகளோடு ஏன் வெயிலில் காய்கின்றன? கடி எறும்புகள் ஏன் படையெடுத்து மரத்தின் வேரை நோக்கி ஓடுகின்றன? குழிபறித்து தவறி விழும் எறும்புகளைத் தின்னும் குழியானை வளர்ந்து கொம்பன் யானையாகுமா? குயில்கள் ஏன் கூடு கட்டுவது கிடையாது? காக்கைக் கூட்டில் மட்டும் குயில்கள் முட்டையிடுவதின் ரகசியம் என்ன? காக்கைகளும், கழுகுகளும், மைனாக்களும் கழிவுகளைத் தின்று சுத்தப்படுத்த யார் சொல்லிக் கொடுத்தார்கள்?
எத்தனை விதவிதமான உயிர்கள்! எத்தனை விதவிதமான செடிகள்! எத்தனை விதவிதமான கொடிகள்? பறவைகள்! பூச்சிகள்! விலங்குகள்! மனிதர்கள்! எல்லோருக்கும் தனித்தனியான குணங்கள்! தனித்தனியான நிறங்கள்! வடிவங்கள்! ஆகா! என்ன அற்புதம்! அனைத்தும் இயற்கையின் மாபெரும் கலைப்படைப்புகள்! குட்டிப்பாப்பா எல்லாவற்றையும் பார்க்கிறாள். உற்று நோக்குகிறாள். ஆராய்கிறாள். உண்மையைத் தெரிந்து கொள்கிறாள். எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறாள். இது தான் குட்டிப்பாப்பாவின் கதை.
நீங்கள் வாசிக்கும்போது குட்டிப்பாப்பாவோடு கூட இருப்பீர்கள். குட்டிப்பாப்பா உங்களை உடன் அழைத்துச் செல்வாள். உங்களுக்கு இயற்கையின் அற்புதங்களைக் காட்டுவாள். வாசித்து முடிக்கும் போது பெரியவர்களானாலும் சரி குழந்தைகளானாலும் சரி சுற்றும் முற்றும் பார்ப்பீர்கள். எறும்புகளுக்கும், புழுக்களுக்கும் காக்கைகளுக்கும் குயில்களுக்கும் செடி கொடிகளுக்கும் கூட வணக்கம் சொல்வீர்கள். இயற்கையின் மீது அன்பு பொங்கும். அனைத்து உயிர்களைகளையும் நேசிக்கத் தொடங்கிவிடுவோம்.  நாம் வாழும் இந்தப்பூமி நமக்கானது மட்டுமில்லை என்ற எண்ணம் உறுதிப்படும். அனைத்து உயிர்களின் மீதும் நேசம் ததும்பும்.
மலையாள சிறுவர் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாளியான பேரா.எஸ்.சிவதாஸின் மற்றுமொரு உன்னதமான படைப்பு. ஏற்கனவே தமிழில் இவருடைய வாசித்தாலும் வாசித்தாலும் தீராது என்ற புத்தகம் அறிவியல் இயக்க வெளியீடாகவும், மாத்தன் மண்புழு வழக்கு புக் ஃபார் சில்ட்ரன் வெளியீடாகவும் வந்துள்ளது. இந்தப்புத்தகத்தை வெளியிடும் வானம் பதிப்பக உரிமையாளர் அன்புத்தம்பி மணிகண்டனுக்கு அன்பும் நன்றியும். இந்நூலுக்கு அழகிய ஓவியங்களை வரைந்து கொடுத்த ஓவியர். ராஜனுக்கும் நன்றி.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போதே  குழந்தைகள் மனதில் ஒரு மாற்றம் உருவாகும் என்பது உறுதி.
வெளியீடு- வானம் பதிப்பகம்