ஆனியின் மழைப்பயணம்
உதயசங்கர்
வெளியே துளித்துளியாக மழை பெய்து
கொண்டிருந்தது. ஆனி வாசல் அளிக்கதவு வழியாக மழை வானத்திலிருந்து சொய்ங்னு இறங்குவதை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனிக்கு மழை என்றால் ரெம்பப் பிடிக்கும். ஆனால்
அம்மா மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று பயமுறுத்துவாள். ஆனி இரும்புக் கதவு
வழியாக மழையைப் பிடிக்க கையை நீட்டினாள். மழையைத் தொட முடியவில்லை. மழைக்காத்து வீசியது.
அவள் உடம்பு அந்தக் குளிர் காற்றில் லேசாக நடுங்கியது. வெளியே சரம் சரமாய் விழுந்து
கொண்டிருந்த மழை அவளை வா..வா.. என்று அழைத்தது. ஆனி சத்தமில்லாமல் மெல்ல கதவின் தாழ்ப்பாளைத்
திறந்தாள்.
வாசலில் நின்று கொண்டு மழையைக்
கையில் பிடித்தாள் ஆனி. என்ன ஆச்சரியம்! அவள் பிடித்த மழைத்துளியின் வழியாக அவள் மேலே
ஏறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மழைத்துளியாகப் பிடித்துக் கொண்டு அவள் மேலே ஏறிக் கொண்டிருந்தாள்.
அப்படியே ஏறி ஏறி மழை பொழிந்து கொண்டிருக்கும் மேகத்துக்கே போய் விட்டாள். பெரிய பஞ்சு
மூட்டையை அவிழ்த்து பறக்க விட்ட மாதிரி மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மேகத்திலிருந்தும்,
பூ வாளியிலிருந்து தண்ணீர் ஊற்றுவதைப் போல மழைத்துளிகள் அடுக்கடுக்காய் விழுந்து கொண்டிருந்தன.
அவளுக்கு அங்கே குளிர் எடுத்தது.
அவள் அந்த பஞ்சுப்பொதி நடுவே உட்கார்ந்து கொண்டு மேகத்திடம் கேட்டாள். “ எப்படி மாமா
உங்க கிட்ட இவ்வளோ தண்ணீ வந்துச்சு ” என்று கேட்டாள்.
அதற்கு
“ எல்லாம் கடலம்மாவின் கருணை தான். கடலம்மா கடல் பரப்பில் வெப்பத்தினால் கடல்
நீர் ஆவியாக காற்றில் ஏறி வந்து இங்கே குளிர்ந்து விடும். அப்படிக் குளிர்ந்த அந்த
நீரைத் தான் நான் மழையாக அனுப்புகிறேன். அந்த மழைநீர் ஆறாக, ஓடும். ஓடையாக மாறும்.
அப்படியே எல்லாம் மறுபடியும் கடலில் போய்ச் சேரும். கடலிலிருந்து ஆவியாகி மேலே வரும்.
குளம், குட்டை நீரும் ஆவியாகி மேலே வரும். நாங்கள் அதை திரும்ப அனுப்புவோம். மழையால்
மண்ணும் மக்களும் செழிப்பார்கள். எப்படி ஆனி! “ என்றது மேகம்.
“ ஆகா பிரமாதம்! “ என்றாள் ஆனி.
மழை குறைய ஆரம்பித்தது. ஆனியைத் திரும்ப அனுப்ப வேண்டுமே. மேகம் உடனே ஆனியை ஒரு பெரிய
மழைத்துளிக்குள் வைத்து பத்திரமாகக் கீழே இறக்கியது. ஆனியும் மேகத்திடம் அடுத்த மழைக்கு மறுபடியும் வருவதாகச் சொன்னாள். மேகம் சரி
என்றது. ஆனி டாட்டா சொல்லிக் கொண்டே கீழே இறங்கினாள். அவளுடைய வீட்டுத் தோட்டத்தில்
உள்ள ஒரு புல்லின் நுனியில் பொதுக்குன்னு விழுந்தாள். அப்படியே புல்லின் நுனியைப் பிடித்துக்
கொண்டு ஊஞ்சலாடிக் கொண்டே தரையில் குதித்தாள். தரையில் கால் பட்டதும் ஆனி தன் சொந்த
உருவத்தை அடைந்தாள். உடனே அம்மாவின் ஞாபகம் வந்து விட்டது. ஓடிப்போய் கதவைத்திறந்து
வராந்தாவில் நின்றாள். தூங்கி எழுந்து வந்த அம்மாவும் வெளியே மழை பெய்திருப்பதைப் பார்த்து,
“ ஆனி மழையில நனைஞ்சியா..? “ என்று கேட்டாள்.
ஆனியும் முகத்தை அப்பாவியாய் வைத்துக் கொண்டு “ இல்லம்மா..” என்றாள். சொன்னால் திட்டு
விழும். அதோடு ஆனி சொல்வதை நம்பவா போகிறார்கள்! ஆனால் ஆனியின் உதடுகளில் இருக்கும்
நமுட்டுச் சிரிப்பைப் பார்த்த அம்மா ஆனி ஏதோ சேட்டை பண்ணியிருக்கிறாள் என்று தோன்றியது.
ஒருவேளை குளிர்பதனப்பெட்டியிலிருந்து சாக்லேட்டை எடுத்துத் தின்றிருப்பாளோ? அம்மா ஆனியை
மேலும் கீழும் பார்த்துக் கொண்டே அடுக்களைக்குச் சென்றாள்.
நல்லவேளை ஆனியின் கால்கள் நனைந்திருப்பதை அம்மா பார்க்கவில்லை.
புகைப்படம்- மோகன் தாஸ் வடகரா
No comments:
Post a Comment