Showing posts with label செகாவ். Show all posts
Showing posts with label செகாவ். Show all posts

Friday, 10 July 2026

ஒரு ஊரும் சில மனிதர்களும்

 

 

ஒரு ஊரும் சில மனிதர்களும்

 பூங்கொடி பாலமுருகன்




 

 

வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு.. அந்த நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வது எழுத்துக்களால் மட்டுமே சாத்தியம். அப்படி ஒவ்வொரு மனிதனின் நினைவுகளிலும் பதிந்து இருப்பது தான் வாழ்ந்த ஊரும் , அந்த ஊரின் சில மனிதர்களும்.

அப்படி தான் வாழ்ந்த கோவில்பட்டி என்ற ஊரை பற்றியும், அந்த ஊரின் நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட நண்பர்களைப் பற்றியும் ஆவணப்படுத்தியுள்ள நூல்தான் முன்னொரு காலத்தில்.

 

எழுத்தாளர் உதயசங்கரின் மற்ற படைப்புகளை காட்டிலும் இந்தப் படைப்பு கொஞ்சம் நம் நுண் உணர்வுகளை கிள்ளி பார்க்கும். ஏனென்றால் இது அவரோடு இரத்தமும் சதையுமாய் பயணித்த நண்பர்களைப் பற்றியது அல்லவா? தன் வாழ்வியல் பக்கங்களை புரட்டிப் பார்ப்பதோடு ,அப்போது வாழ்ந்த நண்பர்கள் அவர்களுடனான அனுபவங்கள் இந்த நூலில் ஏராளமாய் பதியப்பட்டிருக்கிறது.

எழுத்தாளன் என்ற ஒரு ஆளுமை தன்னில் உருவாகிய விதத்தைப் பற்றியும், அதை விதைத்த மனிதர்களைப் பற்றியும் விவரித்த நூல் என்றும் சொல்லலாம்.

 

ஏனென்றால் ஒரு கலைஞன் என்பவன் சுயம்புவாக உருவாகிடுபவன் அல்ல. அந்தக் கலைஞனின் வளர்ச்சியில் தனித்த உழைப்பிற்கு ஈடாக புத்தகங்களும், உரையாடல்களும், மனிதர்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பங்கு இருக்கிறது என்பதை சொல்லும் புத்தகம் இது.

புத்தகங்களை மனதிற்குள் சுமந்த அலையும் மனிதர்களோடு, அவருடைய இளமைக்காலம் இருந்திருக்கிறது.. அவருக்கு மட்டுமல்ல கோவில்பட்டியை வாழ்விடமாகக் கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் அது சாத்தியமாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 20 எழுத்தாளர்களை பெற்ற பெருமை கரிசல் இலக்கியத்தின் தலைநகரமான கோவில்பட்டிக்கு இருக்கிறது..

 

அந்த வயதில் அவர்கள் வாசித்த நூல்களின் தாக்கம் கோவில்பட்டியை பாரிஸ் நகரத்து வீதியை போல கற்பனை செய்ய வைத்திருக்கிறது. அந்த நகரத்தில் இடதுசாரி சிந்தனைகளை ஊட்டி வளர்த்த ஞான குருவாக இருந்த தோழர் பாலுவைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி , அவர் கை பிடித்து இவர்களுக்கு அறிமுகப்படுத்திய, இவான் துர்கனேவ்

அவரின் மூன்று காதல் கதைகள் பற்றி நினைவலைகளை பகிர்ந்திருப்பதை வாசிக்கும் போது காதல் உன்னதமானது காதல் மகத்துவமானது என்று நாமும் உணர்வோம்.

 

வாழ்க்கையில் சில சந்திப்புகள் நம் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும் வல்லமை பெற்றவை. அப்படி எழுத்தாளரின் சிந்தனை போக்கை மாற்றியவர்... அவருடைய அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்குமான நண்பர் எழுத்தாளர் நாறும்பூநாதன்... குச்சு வீட்டில் ஒரு மில் தொழிலாளியின் மூத்த மகனாக பிறந்து உவப்பானதில்லாத இளம் பிராயத்தில் இருந்த அவருக்கு ஆத்மார்த்த தோழனாய் நாறும்பூநாதன் அவர்கள் கிடைத்ததை எண்ணி சிலாகிக்கிறார்.

இவருடைய வாசிப்பு ஆர்வத்திற்கு தீனி போட்டது நண்பர் கொடுத்த சோவியத் புத்தகங்கள். அதிலும் சிவப்பு நிறத்தில் சிலந்தியும் ஈயும் என்ற வில்ஹெமில் லீப்னெஹ்ட் என்ற எழுத்தாளர் எழுதிய நூல், இவருக்கு புதிய புதிய வெளிச்சங்களையும் பெரும் நம்பிக்கையை தருகின்ற புத்தகமாகவும் இன்றளவும் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள வர்க்க வேறுபாடை உணர வைத்தது இந்த நூல் தான்.

இவர்களுக்கு மார்க்சிய தத்துவத்திற்கு விவரங்கள் தந்த தோழர் பால் வண்ணம், சர்வதேச அரசியல் குறித்து தோழர் தேவப்பிரகாஷ், தேசிய அரசியல் குறித்து தோழர் பாலு, தொழிற்சங்க வரலாறு செயல்பாடுகள் குறித்து தோழர் மோகன்தாஸ், பள்ளித் தோழனாகவும் கல்லூரி தோழனாகவும் இலக்கியத் தோழனாகவும் பயணித்த தோழர் மாரீஸ், உயர்சாதி இலக்கியமாகவே இருந்து வந்த தமிழ் இலக்கியத்தில் கிராமத்தின் குரலை அழுத்தமாய் பதிவு செய்த கிரா என்கின்ற இவர்களின் நயினா, மானுடத்தின் மேன்மைக்காக எழுத்தின் மூலமாக தன்னை அர்ப்பணிக்கின்ற ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஆதர்ச நாயகனாயிருக்கும் கார்க்கியை கை குலுக்க வைத்த தோழர் சுவடி, போராட்டத்தின் மூலமே வாழ்வை அர்த்தமுள்ளதாக முடியும் என்று தன் கவிதைகளில் உணர்த்திய நெருதாவை எப்போதும் நினைவூட்டி கொண்டிருக்கும் வித்யா சங்கர் என்ற துரை, ஆந்தென் செகாவை நினைவூட்டும் அப்பண சாமி இப்படி பல தோழர்களின் நினைவுகள் அவர்கள் அறிமுகப்படுத்திய எழுத்தாளர்கள் என்று பல்வேறு நினைவலைகளை இந்த நூலில் பகிர்ந்து உள்ளார்.

 

குழந்தையோ முதியவரோ அங்கீகாரமும் பாராட்டும் அவர்களுக்கு மிக முக்கியமானது. அப்படி தன் ஆரம்பகட்டத்தில் தான் எழுதிய பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது கதையைப் படித்து கட்டியணைத்து கதகதப்புடன் பாராட்டிய கவிஞர் கந்தர்வன் இன்னும் தான் எழுதிக் கொண்டிருப்பதற்கான ஒரு உந்துதல் என்று மனமுவந்து கூறுகிறார்..

 

தான் எப்போதும் வியந்து நோக்கும் ஆதர்ச நாயகனாக எழுத்தாளர் தோழர் தமிழ்ச்செல்வனை இந்த நூலில் சிறப்பு படுத்தியிருக்கிறார்..

இந்தப் புத்தகம் நெடுகிலும் இருக்கக்கூடிய நினைவலைகள் தான் சிலாகித்த புத்தகங்களின் மூலமாகவும் படைப்பாளிகளின் வழியாகவும் விரிந்து செல்கிறது..

 

எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தில் எப்பொழுதும் பங்கேற்பாளனாக இருக்கும் ஒரு நண்பரைப் பற்றி இவர் எழுதி இருக்கும் கட்டுரை என்னை கொஞ்சம் அசைத்துப் பார்த்து அழ வைத்தது.. முத்துசாமி என்ற ஒரு தோழரை பற்றிய நினைவலைகள்..  புற்றுநோயின் கொடுமைக்கு தன் ஆருயிர் நண்பரை இழந்தது போல என் ஆருயிர் தோழியையும் இழந்திருக்கிறேன் நான்...

 

முன்னொரு காலத்தில் என்ற இந்த நூல், உதயசங்கர் என்ற ஒரு எழுத்தாளுமை உருவாகக் காரணமாய் இருந்த நபர்களும் ,நூல்களும் படைப்புகளும் இந்த நூல் நெடுக வந்து போகிறார்கள்.

 

ஞாபகங்களை மீட்டெடுத்திடும் சாத்தியம் எல்லோருக்கும் வாய்ப்பு இல்லை. அப்படி உதயசங்கர் அவர்களுக்கு வாய்த்த இந்த நூலை வாசிக்கும் போது நம் கண்களும் பனித்திட தான் செய்யும்.

 

 

 

நூல் : முன்னொரு காலத்தில்

ஆசிரியர் : உதயசங்கர்

பதிப்பகம் : நூல் வனம்

விலை : ₹90.00

தொடர்புக்கு - 9751549992

 

 

Thursday, 18 July 2024

என் ருஷ்ய மூதாதையர்களே உங்களைத் தொழுகிறேன்....

 

என் ருஷ்ய மூதாதையர்களே   உங்களைத் தொழுகிறேன்....

உதயசங்கர்


 

இந்தப் புத்தகம் இதுவரையில் கண்ணில் படவில்லை. இப்படியொரு புத்தகம் என்னிடம் இருப்பதாக ஞாபகமுமில்லை. ஆனால் திடீரென்று என் கண்களுக்கு முன்னால் இதோ இங்கேயிருக்கிறேன்,  எங்கே தேடிக் கொண்டிருக்கிறாயென்று இளமை பொங்கும் பூஷ்கினின் குரலில் முணுமுணுத்தது. 

 

கையிலெடுத்துப் புரட்டினேன். காலம் பூப்போல என்னைத்  தன் பொன்னூஞ்சலில் உட்காரவைத்து ஆட்டியது.

 

1980 - களில் திருநெல்வேலியிலிருந்து வேலை நிமித்தமாக விளாத்திகுளத்துக்கு வந்திருந்த சிறுகதை எழுத்தாளர் ஜோதிவிநாயகத்தைச் சந்தித்திராவிட்டால் உலக இலக்கியத்தின் பல பக்கங்களை நாங்கள் அறியாமலேயே போயிருப்போம். பல எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கின்ற வாய்ப்பே கிடைத்திருக்காது. பரந்து விரிந்த வாசிப்பும், திறந்த மனதுடனான அவருடைய விவாதங்களும், உரையாடல்களும் என்னை மட்டுமல்ல, எல்லாத்தரப்பு எழுத்தாளர்களையும் அவர்பால் ஈர்த்தது.

 

அவர் மார்க்சியவாதியாக இருந்தார். உலக அளவிலான மார்க்சிய அழகியல் கோட்பாடுகள், விமரிசனங்களை வாசித்து, பட்டைபோட்ட குதிரை மாதிரி ஒரே பாதையில் வரட்டுத்தனமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த எங்களுக்கு லூனாச்சாவ்ஸ்கி, டிராட்ஸ்கி, கிராம்ஷி, டெர்ரி ஈகிள்டன், எர்னஸ்ட் பிஷர், யூஜின் அயனஸ்கோ போன்றவர்களை அறிமுகப்படுத்தினார். நுட்பமும் ஆழமும் நிறைந்த அவருடைய உரையாடல்களில் நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம். 

 

அவர்தான் லெர்மன் தவ் , குப்ரின், செகாவ், பாஸூ அலீயேவ், , போன்ற படைப்பாளிகளின் கலை மேதைமையைக் காட்டியவர். அப்படி அவர் வியந்து வியந்து பேசிய கதைகளும் படைப்பாளிகளும் ருஷ்யச்சிறுகதைகள் பகுதி -1 ல் இருக்கின்றன. இந்தப் புத்தகம் 1971 -ல் உயர்நிலைப்பள்ளி மாணவி வெங்கடலட்சுமி என்பவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் எப்படி என்னிடம் வந்ததென்று தெரியவில்லை. இதன் இரண்டாவது பகுதியும் என்னிடமில்லை.

 

ருஷ்யாவின் நவீன இலக்கியம் பூஷ்கினிலிருந்து தொடங்குகிறது. பூஷ்கினின் அஞ்சல் நிலைய அதிகாரியில் ( 1831 ) அஞ்சல் நிலைய அதிகாரிக்கும் அங்கு வந்த ராணுவ அதிகாரியுடன் ஓடிப்போன மகளுக்குமிடையிலான பாசப்போராட்டம் தான். மகளைத் தேடி நகரில் அஞ்சல் நிலைய அதிகாரியான கிழவன் தன்னுடைய ஒரே நம்பிக்கையான தூன்யாவைத் தேடியலைவது தான் கதை. வாசிக்கும்போது மனதையுருக்கும் கதை.

 

கோகோலின் மேல்கோட்டு என்ன கதை! எவ்வளவு கலைநேர்த்தியுடன் எழுதட்டிருக்கிறதென்பதை வாசித்துப் பார்த்தால் மட்டுமே தெரியும். நகலெடுக்கும் வேலை செய்யும் ஒரு மத்தியதர வர்க்கக்குமாஸ்தாவின் மனநிலையை இன்றும் பொருந்துகிற அவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கிற கோகோலின் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன். நகலெடுக்கும் வேலையிலிருந்து பதவி உயர்வு கொடுத்தாலும் வேண்டாமென்று மீண்டும் நகலெடுக்கும் வேலைக்கே திரும்பும் பச்மாச்கின் அல்லது அக்காக்கிய் அக்காக்கியெவிச்சைப் படிக்கும்போது நீங்கள் மனிதனின் படைப்பாற்றலை எப்படி ஒரு அமைப்பு சிதைக்க முடியுமென்று தெரிந்து கொள்ளலாம். மேல் கோட்டைப் பறிகொடுத்துவிட்டு இறந்து போகிற குமாஸ்தா ஆவியாக அலைந்து மேல்கோட்டுகளை வழிப்பறி செயவதெல்லாம் வேற லெவல்.

 

 கோகோல் உங்கள் மேல்கோட்டில் ருஷ்ய எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்.

 

கர்வமும் கொஞ்சம் ஆணவமுமிக்க இவான் துர்கனேவின் முமூ உலகச்சிறுகதை வரிசையில் வைத்து என்றும் போற்றத்தக்க கதை. ருஷ்யாவில் பண்ணையடிமை முறையை விளங்கிக் கொள்வதற்கும், அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்வதற்குமான கதை.

 

பிறவியிலேயே காது கேட்காத, வாய்பேச முடியாத, முரடனான கெராஸிமின் காதல் எஜமானியின் ஒற்றைச்சொல் உத்தரவினால் அழிந்தே போகிறது. ஆனால் அந்த அன்பை ஒரு நாயிடம் மடைமாற்றுகிறான். அவர்களுடைய ஆத்மார்த்தமான உறவை அவ்வளவு அழகாக எழுதியிருப்பார் துர்கனேவ். எஜமானியம்மாளுக்கு முமூவைப் பிடிக்காமல் போனதால் அதைக் கொன்று விடும்படி உத்தரவிடுகிறாள். அதற்குப் பின்னால் வருகிற காட்சிகளெல்லாம் கண்ணில் நீர் ததும்பவைக்கும்.

 

. இவான் துர்கனேவ் உண்மையிலேயே நீங்கள் ஒரு மேதை.

 

ஜோதிவிநாயகத்துக்கு மிகவும் பிடித்த கதை அலெக்‌சாந்தர் குப்ரின் எழுதிய மாணிக்கக்கங்கணம். இதை வாசித்த நாளிலிருந்து இந்தக் கதையை அவர் பேசாத நாளில்லை.

உலக இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்த கதை ஒன்றைத் தேர்ந்தெடுங்களென்று சொன்னால் அவர் மாணிக்கக்கங்கணத்தைத் தான் தேர்ந்தெப்பார். 

தூய அன்பின் தூய ஒளி வீசும் கதை. நீங்கள் இதை வாசிக்கும்போது வேராவையும் ஷெராத்கோகோவையும், வஸீலியேவையும் மறக்கவே முடியாது. ஒரே கதையில் காதலின் உன்னதத்தை உணர வைத்தவர் குப்ரின். இந்த ஒருகதைக்காகவே அவர் என்றென்றும் போற்றப்படுவார்.

 

" அமைதியுறுவாயாக  அன்பே  அமைதியுறுவாயாக அமைதியுறுவாயாக. 

 

 நீ என்னைப் பற்றி நினைக்கிறாயா நினைக்கிறாயா. நினைக்கிறாயா.

 

 இறுதிவரை எனது ஒரே காதலி நீயே. 

 

அமைதியுறுவாயாக நான் உன்னுடன் இருக்கிறேன். 

 

நீ என்னை பற்றி நினைத்ததுமே நான் உன்னுடன் இருப்பேன் 

 

ஏனெனில் நானும் நீயும் ஒருவரை ஒருவர் கணப்போதே ஆயினும் சாஸ்வதமாக காதலித்தோம் 

 

நீ என்னை பற்றி நினைக்கிறாயா? நினைக்கிறாயா நினைக்கிறாயா 

 

இதோ உன் கண்ணீரை ஸ்பரிசிக்கிறேன் அமைதியறுவாயாக...

 

உறங்குவது எனக்கு எவ்வளவோ இனிமை இனிமை இனிமை

 

ஷெராத்கோவ் வேராவிடம் பீத்தோவனின் லார்கோ அப்பாசினோட்டோ ( Largo Appassionato ) வை கேட்குமாறு சொல்கிறான். 

 

நான் கதையை வாசித்தபிறகு பீத்தோவனின் லார்கோ அப்பாசினோட்டோவைக் கேட்டேன். அமைதியும் பொங்கும் அலைகடலுமாக மனதில் நம் வாழ்வின் உன்னதத்தருணங்களை நினைவு படுத்தியது. 

 

குப்ரின் என் அன்புக்குரியவரே உங்களுக்கு என் வாழ்த்துகள்.

 

உலகச்சிறுகதைகளின் ஒரே தலைவன் எங்கள் செகாவ் தான். வாழ்க்கை விசித்திரமானது. விந்தைகள் நிறைந்தது. சில சமயம் இப்படி நடக்குமாவென்று ஆச்சரியப்படுத்தும். சில சமயம் இப்படியும் நடக்குமென்று சாதாரணப்படுத்தும். செகாவின் கதைகளிலுள்ள சிறப்பம்சமே இது தான். சாதாரண வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அசாதாரணத்தை இழையிழையாகப் பிரித்து நம் கண் முன்னால் ஜாலம் காட்டும் கலைமேன்மை அறிந்தவர் செகாவ்.

 

அவருடைய நாய்க்காரச்சீமாட்டி கதை உண்மைக்காதல் எங்கிருந்து எப்படி எப்போது பிறக்குமென்றோ, பிறக்கும்போதே அது அவ்வளவு ஆழமும் அர்த்தமும் கொண்டிருக்குமென்பதை யாராலும் உணரமுடியாது. 

 

எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராமல் கணப்போதில் மின்னலெனப் பளிச்சிடும் அந்த உணர்வைத் தான் எழுத்தில் வடித்திருக்கிறார் செகாவ்.

 

வாசித்தால் நாய்க்காரச்சீமாட்டி நம் மனதுக்குள் வந்து நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுவாள்.

 

" இன்னும் சற்று சிந்திக்க வேண்டியது தான். 

பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம். அப்புறம் புதிய வனப்பு வாய்ந்த வாழ்வு தொடங்கலாம் என்று தோன்றியது.

 அதே சமயம் முடிவு இன்னும் நெடுந்தொலைவில் இருக்கிறது என்பதும் மிக மிக சிக்கலான மிக மிக கடினமான பகுதி இனிமேல் தான் தொடங்குகிறது என்பதும் தெளிவாய் தெரிந்தது"

 

வாசித்து முடித்த கையுடன் அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தேன். 

 

மகத்தான ருஷ்ய இலக்கிய மாமேதைகளுக்கு என் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் வேறெப்படி நான் தெரிவிப்பது!