Thursday, 18 July 2024

என் ருஷ்ய மூதாதையர்களே உங்களைத் தொழுகிறேன்....

 

என் ருஷ்ய மூதாதையர்களே   உங்களைத் தொழுகிறேன்....

உதயசங்கர்


 

இந்தப் புத்தகம் இதுவரையில் கண்ணில் படவில்லை. இப்படியொரு புத்தகம் என்னிடம் இருப்பதாக ஞாபகமுமில்லை. ஆனால் திடீரென்று என் கண்களுக்கு முன்னால் இதோ இங்கேயிருக்கிறேன்எங்கே தேடிக் கொண்டிருக்கிறாயென்று இளமை பொங்கும் பூஷ்கினின் குரலில் முணுமுணுத்தது

 

கையிலெடுத்துப் புரட்டினேன். காலம் பூப்போல என்னைத்  தன் பொன்னூஞ்சலில் உட்காரவைத்து ஆட்டியது.

 

1980 - களில் திருநெல்வேலியிலிருந்து வேலை நிமித்தமாக விளாத்திகுளத்துக்கு வந்திருந்த சிறுகதை எழுத்தாளர் ஜோதிவிநாயகத்தைச் சந்தித்திராவிட்டால் உலக இலக்கியத்தின் பல பக்கங்களை நாங்கள் அறியாமலேயே போயிருப்போம். பல எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கின்ற வாய்ப்பே கிடைத்திருக்காது. பரந்து விரிந்த வாசிப்பும், திறந்த மனதுடனான அவருடைய விவாதங்களும், உரையாடல்களும் என்னை மட்டுமல்ல, எல்லாத்தரப்பு எழுத்தாளர்களையும் அவர்பால் ஈர்த்தது.

 

அவர் மார்க்சியவாதியாக இருந்தார். உலக அளவிலான மார்க்சிய அழகியல் கோட்பாடுகள், விமரிசனங்களை வாசித்து, பட்டைபோட்ட குதிரை மாதிரி ஒரே பாதையில் வரட்டுத்தனமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த எங்களுக்கு லூனாச்சாவ்ஸ்கி, டிராட்ஸ்கி, கிராம்ஷி, டெர்ரி ஈகிள்டன், எர்னஸ்ட் பிஷர், யூஜின் அயனஸ்கோ போன்றவர்களை அறிமுகப்படுத்தினார். நுட்பமும் ஆழமும் நிறைந்த அவருடைய உரையாடல்களில் நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம்

 

அவர்தான் லெர்மன் தவ் , குப்ரின், செகாவ், பாஸூ அலீயேவ், , போன்ற படைப்பாளிகளின் கலை மேதைமையைக் காட்டியவர். அப்படி அவர் வியந்து வியந்து பேசிய கதைகளும் படைப்பாளிகளும் ருஷ்யச்சிறுகதைகள் பகுதி -1 ல் இருக்கின்றன. இந்தப் புத்தகம் 1971 -ல் உயர்நிலைப்பள்ளி மாணவி வெங்கடலட்சுமி என்பவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் எப்படி என்னிடம் வந்ததென்று தெரியவில்லை. இதன் இரண்டாவது பகுதியும் என்னிடமில்லை.

 

ருஷ்யாவின் நவீன இலக்கியம் பூஷ்கினிலிருந்து தொடங்குகிறது. பூஷ்கினின் அஞ்சல் நிலைய அதிகாரியில் ( 1831 ) அஞ்சல் நிலைய அதிகாரிக்கும் அங்கு வந்த ராணுவ அதிகாரியுடன் ஓடிப்போன மகளுக்குமிடையிலான பாசப்போராட்டம் தான். மகளைத் தேடி நகரில் அஞ்சல் நிலைய அதிகாரியான கிழவன் தன்னுடைய ஒரே நம்பிக்கையான தூன்யாவைத் தேடியலைவது தான் கதை. வாசிக்கும்போது மனதையுருக்கும் கதை.

 

கோகோலின் மேல்கோட்டு என்ன கதை! எவ்வளவு கலைநேர்த்தியுடன் எழுதட்டிருக்கிறதென்பதை வாசித்துப் பார்த்தால் மட்டுமே தெரியும். நகலெடுக்கும் வேலை செய்யும் ஒரு மத்தியதர வர்க்கக்குமாஸ்தாவின் மனநிலையை இன்றும் பொருந்துகிற அவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கிற கோகோலின் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன். நகலெடுக்கும் வேலையிலிருந்து பதவி உயர்வு கொடுத்தாலும் வேண்டாமென்று மீண்டும் நகலெடுக்கும் வேலைக்கே திரும்பும் பச்மாச்கின் அல்லது அக்காக்கிய் அக்காக்கியெவிச்சைப் படிக்கும்போது நீங்கள் மனிதனின் படைப்பாற்றலை எப்படி ஒரு அமைப்பு சிதைக்க முடியுமென்று தெரிந்து கொள்ளலாம். மேல் கோட்டைப் பறிகொடுத்துவிட்டு இறந்து போகிற குமாஸ்தா ஆவியாக அலைந்து மேல்கோட்டுகளை வழிப்பறி செயவதெல்லாம் வேற லெவல்.

 

 கோகோல் உங்கள் மேல்கோட்டில் ருஷ்ய எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்.

 

கர்வமும் கொஞ்சம் ஆணவமுமிக்க இவான் துர்கனேவின் முமூ உலகச்சிறுகதை வரிசையில் வைத்து என்றும் போற்றத்தக்க கதை. ருஷ்யாவில் பண்ணையடிமை முறையை விளங்கிக் கொள்வதற்கும், அன்பின் ஆழத்தைப் புரிந்து கொள்வதற்குமான கதை.

 

பிறவியிலேயே காது கேட்காத, வாய்பேச முடியாத, முரடனான கெராஸிமின் காதல் எஜமானியின் ஒற்றைச்சொல் உத்தரவினால் அழிந்தே போகிறது. ஆனால் அந்த அன்பை ஒரு நாயிடம் மடைமாற்றுகிறான். அவர்களுடைய ஆத்மார்த்தமான உறவை அவ்வளவு அழகாக எழுதியிருப்பார் துர்கனேவ். எஜமானியம்மாளுக்கு முமூவைப் பிடிக்காமல் போனதால் அதைக் கொன்று விடும்படி உத்தரவிடுகிறாள். அதற்குப் பின்னால் வருகிற காட்சிகளெல்லாம் கண்ணில் நீர் ததும்பவைக்கும்.

 

. இவான் துர்கனேவ் உண்மையிலேயே நீங்கள் ஒரு மேதை.

 

ஜோதிவிநாயகத்துக்கு மிகவும் பிடித்த கதை அலெக்சாந்தர் குப்ரின் எழுதிய மாணிக்கக்கங்கணம். இதை வாசித்த நாளிலிருந்து இந்தக் கதையை அவர் பேசாத நாளில்லை.

உலக இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்த கதை ஒன்றைத் தேர்ந்தெடுங்களென்று சொன்னால் அவர் மாணிக்கக்கங்கணத்தைத் தான் தேர்ந்தெப்பார்

தூய அன்பின் தூய ஒளி வீசும் கதை. நீங்கள் இதை வாசிக்கும்போது வேராவையும் ஷெராத்கோகோவையும், வஸீலியேவையும் மறக்கவே முடியாது. ஒரே கதையில் காதலின் உன்னதத்தை உணர வைத்தவர் குப்ரின். இந்த ஒருகதைக்காகவே அவர் என்றென்றும் போற்றப்படுவார்.

 

" அமைதியுறுவாயாக  அன்பே  அமைதியுறுவாயாக அமைதியுறுவாயாக

 

 நீ என்னைப் பற்றி நினைக்கிறாயா நினைக்கிறாயா. நினைக்கிறாயா.

 

 இறுதிவரை எனது ஒரே காதலி நீயே

 

அமைதியுறுவாயாக நான் உன்னுடன் இருக்கிறேன்

 

நீ என்னை பற்றி நினைத்ததுமே நான் உன்னுடன் இருப்பேன் 

 

ஏனெனில் நானும் நீயும் ஒருவரை ஒருவர் கணப்போதே ஆயினும் சாஸ்வதமாக காதலித்தோம் 

 

நீ என்னை பற்றி நினைக்கிறாயா? நினைக்கிறாயா நினைக்கிறாயா 

 

இதோ உன் கண்ணீரை ஸ்பரிசிக்கிறேன் அமைதியறுவாயாக...

 

உறங்குவது எனக்கு எவ்வளவோ இனிமை இனிமை இனிமை

 

ஷெராத்கோவ் வேராவிடம் பீத்தோவனின் லார்கோ அப்பாசினோட்டோ ( Largo Appassionato ) வை கேட்குமாறு சொல்கிறான்

 

நான் கதையை வாசித்தபிறகு பீத்தோவனின் லார்கோ அப்பாசினோட்டோவைக் கேட்டேன். அமைதியும் பொங்கும் அலைகடலுமாக மனதில் நம் வாழ்வின் உன்னதத்தருணங்களை நினைவு படுத்தியது

 

குப்ரின் என் அன்புக்குரியவரே உங்களுக்கு என் வாழ்த்துகள்.

 

உலகச்சிறுகதைகளின் ஒரே தலைவன் எங்கள் செகாவ் தான். வாழ்க்கை விசித்திரமானது. விந்தைகள் நிறைந்தது. சில சமயம் இப்படி நடக்குமாவென்று ஆச்சரியப்படுத்தும். சில சமயம் இப்படியும் நடக்குமென்று சாதாரணப்படுத்தும். செகாவின் கதைகளிலுள்ள சிறப்பம்சமே இது தான். சாதாரண வாழ்க்கை அனுபவங்களிலிருந்து அசாதாரணத்தை இழையிழையாகப் பிரித்து நம் கண் முன்னால் ஜாலம் காட்டும் கலைமேன்மை அறிந்தவர் செகாவ்.

 

அவருடைய நாய்க்காரச்சீமாட்டி கதை உண்மைக்காதல் எங்கிருந்து எப்படி எப்போது பிறக்குமென்றோ, பிறக்கும்போதே அது அவ்வளவு ஆழமும் அர்த்தமும் கொண்டிருக்குமென்பதை யாராலும் உணரமுடியாது

 

எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராமல் கணப்போதில் மின்னலெனப் பளிச்சிடும் அந்த உணர்வைத் தான் எழுத்தில் வடித்திருக்கிறார் செகாவ்.

 

வாசித்தால் நாய்க்காரச்சீமாட்டி நம் மனதுக்குள் வந்து நாற்காலி போட்டு உட்கார்ந்து விடுவாள்.

 

" இன்னும் சற்று சிந்திக்க வேண்டியது தான்

பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம். அப்புறம் புதிய வனப்பு வாய்ந்த வாழ்வு தொடங்கலாம் என்று தோன்றியது.

 அதே சமயம் முடிவு இன்னும் நெடுந்தொலைவில் இருக்கிறது என்பதும் மிக மிக சிக்கலான மிக மிக கடினமான பகுதி இனிமேல் தான் தொடங்குகிறது என்பதும் தெளிவாய் தெரிந்தது"

 

வாசித்து முடித்த கையுடன் அப்படியே அமைதியாக உட்கார்ந்திருந்தேன்

 

மகத்தான ருஷ்ய இலக்கிய மாமேதைகளுக்கு என் வாழ்த்துகளையும் வணக்கங்களையும் வேறெப்படி நான் தெரிவிப்பது!

 

1 comment:

  1. உங்களுக்கு எழுத்தாளர் ஜோதி விநாயகம் போல் எங்களுக்கு நீங்கள் அண்ணா

    ReplyDelete