Sunday, 7 July 2024

மக்சீம் கார்க்கியின் மீசை

 

மக்சீம் கார்க்கியின் மீசை

 உதயசங்கர்




எனக்கு மக்சிம் கார்க்கியின் தாய் நாவலை தோழர்.பாலு தான் கொடுத்துப் படிக்கச்சொன்னார்.. முதன் முதலாக கார்க்கியைப் பார்த்தபோது வார்வாரான மீசை, கலைந்த கோரை கோரையான தலைமுடி, அகன்று விரிந்த மூக்கு என்று அப்படியே எங்கள் தெருவிலிருந்த சாமியாடி காசிக்கொத்தனாரைப் போலவேயிருந்தார். இப்போதும் கார்க்கியை யோசிக்கும்போதெல்லாம் காசித்தாத்தாவின் ஞாபகம் தான் வருகிறது

 

கடுமையான உழைப்பாளியான காசித்தாத்தா மாதாங்கோவில் என்றழைக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி கோவிலின் தலைமைச் சாமியாடி. எல்லாச்சாமிகளும் அவர் மீது வந்து இறங்கிவிடுவார்கள். இல்லையென்றால் நாக்கைத்துருத்தி, சிவந்த கண்களையுருட்டிஅவர்களை மிரட்டி விடுவார். அவருக்குப் பயந்து அவர்களும் அவரிடம் தஞ்சமடைந்து விடுவார்கள்.

 

நாக்கைத்துருத்தி ஆடினால் ஒரு சாமி. பல்லைக்கடித்தால் ஒருசாமி, மூச்சுவாங்கினால் ஒருசாமி, ஒரு காலால் நொண்டியடித்தால் ஒருசாமி என்று சாமிகளை ஒரு கை பார்த்து விடுவார். புதிய இளஞ்சாமியாடிகளுக்கு அவரே வழிகாட்டியாக இருந்தார். அதனால் அவருடைய இளவல்களுக்கு எப்படியோ ஒருவிதத்தில் அவருடைய ஆட்டத்தின் சாயல் வந்து விடும்.

 

 சன்னதத்தின் உச்சத்தில் அவர் வேறொருவராக மாறி ஏழை எளிய மக்களுக்கு வரமும், பரிகாரமும், யோசனைகளையும், ஆற்றுப்படுத்தல்களையும் செய்வார். அவர்தான் கார்க்கியாக ஞாபகத்துக்கு வருவார்

 

கோவில்பட்டியில் என்றில்லை உலகம் முழுவதும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இடதுசாரி இயக்கங்களை நோக்கி வந்துவிட்டால் அவர்களிடம் அனைத்துத் தோழர்களும்  பரிந்துரைக்கக் கூடிய ஒரு புத்தகம். தவறாமல் கேட்கக்கூடிய கேள்வி.

 

" தாய் படிச்சிட்டீங்களா தோழா"  . 

 

உலக மொழிகளனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டதும், இன்றும் தொழிலாளிவர்க்கத்தின் ஆவேசமான உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பிரதிபலிப்பதும், சோசலிச இலக்கியத்தின் கலங்கரை விளக்காகமாகவும் தாய் நாவல் திகழ்கிறது. சுரண்டல் இருக்கும்வரை தாய் நாவலும் தன்னிகரில்லா ஒளிவீசி உணர்வூட்டும்.

 

ஆனால் கார்க்கி என்றாலே தாய் என்ற  அரசியல் நாவல் மட்டும்தான் என்று  புரிந்து கொண்டார்களோ  என்று தோன்றுகிறது.

 

அவருடைய மகத்தான மற்ற படைப்புகளைப் பற்றி  அறியவில்லையோ என்று அஞ்சுகிறேன்

 

 கார்க்கி  எனும் மகத்தான மேதையின் பல படைப்புகள் புதிதாக எழுதுகிறவர்களுக்கான கலங்கரை வெளிச்சம் என்று சொல்லலாம்

 

 எதார்த்த வாதம் விமர்சன யதார்த்த வாதம் சோசலிச யதார்த்த வாதம் என்று அனைத்து வகைகளிலும் உச்சம் தொட்டவர் மாக்சீம் கார்க்கி.

 

என்னிடம் இந்தப் புத்தகம் எப்படி வந்ததென்று தெரியவில்லை. மக்ஸீம் கார்க்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் 3 என்று போட்டிருப்பதால் ஏற்கனவே இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றைப் படித்த ஞாபகமில்லை.

 

 கார்க்கி மற்ற ருஷ்ய, சோவியத் எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அவர் இழப்பதற்கு எதுவுமில்லாத பாட்டாளிவர்க்கத்திலிருந்து புறப்பட்ட சம்மட்டியென்று கூடச் சொல்லலாம். டால்ஸ்டாய், துர்கனேவ், தாஸ்தயேவ்ஸ்கி, செகாவ் போன்ற மேதைகளின் கதைகளும் சரி, கதை மாந்தர்களும் சரி பெரும்பாலும் மேல் தட்டு, மேல்  மத்தியதர, மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் கார்க்கியின் கதைகளில் அச்சு அசல் பாட்டாளிவர்க்க மாந்தர்களைச் சந்திக்கமுடியும். அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? எப்படிச் சிந்திக்கிறார்கள்? எப்படி பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

கார்க்கியின் இருபத்தியாறுபேரும் ஒரு பெண்ணும் கதை ருஷ்யாவில் வெளிவந்தபோது டால்ஸ்டாய் அவரிடம் 

" பார் கார்க்கி உன்னுடைய தானியா முதல் முறை தரையில் நடக்கிறாள் அடுத்த முறை அடுப்பின் மீது நடந்து போகிறாள்.." என்று சொல்லிச் சிரித்தாராம். அதாவது முதல் முறை இடதுபுறம் இருப்பதாக வர்ணிக்கப்பட்ட  அடுப்பு இருந்த இடது பக்கமாக தானியா நடந்து வருவதாக எழுதிவிட்டார் கார்க்கி. அது உலகப்புகழ் பெற்ற கதை

பிஸ்கோத்து தயாரிக்கும் இருபத்தியாறு தொழிலாளர்களுக்கான ஒரே ஆறுதல் தானியா தான். ஆனால் அவர்களுடைய விபரீதம் என்ன மாதிரியான விளைவை தானியாவிடம் ஏற்படுத்தி விடுகிறது தெரியுமா?

" மனிதன் தன் அன்பை யார் மீதாவது செலுத்த எப்போதும் விரும்புகிறான். ஆனால் இந்த அன்பினால் சில வேளைகளில் அவன் நசுக்குகிறான், சில வேளைகளில் கறைப்படுத்துகிறான், தனது அன்பினால் வாழ்க்கையை நஞ்சாக்குகிறான். ஏனெனில் அன்பு செய்கையில் அன்புக்குரியதை அவன் மதிப்பதில்லை..."

தானியா என்ற அந்தச் சின்னஞ்சிறுபறவை வெக்கையால் அவிந்து புழுங்கி கோபமும் ஆவேசமும் பொங்கும் நிலவறையில் பிஸ்கோத்து தொழிலாளர்களின் வாழ்வில் ஆறுதலைத் தந்தது

இந்தக் கதை ஏன் உலகக்கதையாகப் போற்றப்பட்டது என்று வாசித்தால் தெரியும். மறக்க முடியாத கள்ளம் கபடில்லாத, சுதந்திரமான தானியாவின் கீச்சுக்குரல் உங்களுக்குன் ஆறுதல் தரும்.

 

பனிக்கட்டி நகர்கிறது கதையில் ஈஸ்டர் பண்டிகைக்காக ஆற்றைக்கடக்கும் மரம் வெட்டும் தொழிலாளர்களைப் பற்றியது. உயிரைப் பணயம் வைத்து அப்படிப் போவானேன் என்று கேட்கும் மத்தியதர வர்க்க மனநிலைக்கு அவர்களைப் புரிந்து கொள்வது கடினம் தான். வாழ்க்கை அவர்களுக்கு அவ்வளவு கொடுப்பினையாக இல்லை.

கதையை வாசிக்கும்போது நாமும் ஆற்றோடு போகிற உணர்வை ஏற்படுத்திவிடும்.

" வசந்தத்தை வரவேற்பதற்காக எத்தனை முறையும் நான் இங்கே இருப்பேன்.." 

ஓசிப் பெருமூச்சுடன் குறிப்பிட்டான்.

" ஆனா.. மனிதனிட ஆன்மா - ஆன்மாவுக்கு இறக்கைகள் உண்டு... அவன் தூங்குற போது ஆன்மா பறந்து போகுது.."

 

இறக்கைகள் உண்டா? எவ்வளவு அதிசயமானது?

 

அந்தத் தொழிலாளர்களுக்கு இறக்கைகள் முளைத்திருந்தன.

 

இருபத்தியாறுபேரும் ஒரு பெண்ணும் போலவே அற்புதமான கதை மனிதன் பிறந்தான்.

பஞ்சகாலத்தில் புலம்பெயர்ந்து கொண்டிருந்த கூட்டத்திலுள்ள பெண்ணுக்கு திருமணம் முடியாத ஒரு இளைஞன் நடத்தும் பேறுகாலம் தான் கதை.குழந்தை பிறந்ததும் மீண்டும் பயணம் தொடர்கிறது. மனிதன் மகத்தானவன் என்று ஏன் கார்க்கி சொன்னாரென்பதை இந்தக் கதை சொல்லும்.

 

அந்தத் தாய் சொல்கிறாள்

கடவுளே, என் ஆண்டவனே! எவ்வளவு நன்றாய் இருக்கிறது எங்கும், என்ன அழகு! இப்படியே எல்லாம் நடந்தேறினால் நல்லது, எல்லாம், உலகத்தின் எல்லை விளிம்புவரையில் நடந்தேறினால் நல்லது. இவன் என் மகன் வளரட்டும், கட்டில்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவன் ஆகட்டும். என் கண்ணின் கருமணி.."

கடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இடையறாது ஒலித்துக் கொண்டிருந்தது..

 

இது தான் கார்க்கி.

 

முதல் காதலைப் பற்றி எழுதாத ருஷ்ய சோவியத் எழுத்தாளர்களே கிடையாது போல. கார்க்கியும் முதல் காதலைப் பற்றி எழுதியிருக்கிறார். இளம்பருவக்காதலின் தூய்மையைத் தரிசிக்க முடியும்.

 

மனிதன் ஆற்றிய யாவற்றிலும் அறிவு மிக்க சாதனை நங்கையைக் காதலிக்கவும், அவளுடைய அழகை வழிபடவும், உள்ள திறமைதான். மாதின் மீது உண்டாகும் காதலிலிருந்தே உலகில் அழகியவை யாவும் தோன்றி உள்ளன..

 

என்று ஓரிடத்தில் சொல்வார் கார்க்கி. இதைவிட வேறென்ன வேண்டும்?

 

கார்க்கியெனும் மகத்தான படைப்பாளிக்கு எங்கள் முன்னோடிக்கு, புரட்சிக்கு உத்வேகமளித்த தாய் நாவலையெழுதிய புரட்சியின் சங்கநாதத்துக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்

 

கார்க்கி எங்கள் வழிகாட்டியே.. 





 

No comments:

Post a Comment