Sunday, 14 July 2024

தொடக்கங்களின் தொடக்கமாக பூஷ்கின் இருக்கிறார்

 

தொடக்கங்களின் தொடக்கமாக பூஷ்கின் இருக்கிறார்

 

உதயசங்கர்

 

 



 

Love is the combination of minds. It should be the secret between two souls 

 

கேப்டன் மகள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் பேனாவால் அகாலத்தில் மறைந்து போன என் அன்பு நண்பன் சிவசு எழுதி வைத்திருக்கிறான். அவனிடமிருந்து நான் ஆட்டையைப் போட்ட புத்தகம். ஆனால் அந்தப் பக்கத்தின் உயரே வலது மூலையில் R.Sridar Palayamkottai என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆக சிவசுவும் ஸ்ரீதரிடமிருந்து ஆட்டைப் போட்டிருக்கிறான்

 

ஆகா! மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது. புத்தகம் திருடும் கூட்டமாக அல்லது திருப்பித்தராத கூட்டமாக இருந்திருக்கிறோம்

 

3 Aug 1987 

விலை - ரூ.2.50

பக்கங்கள் 324

 

எப்பேர்ப்பட்ட பொற்காலம்!

 

கேப்டன் மகள் நாவல் பூஷ்கின் எழுதிய கடைசி நாவல். 1836 ஆம் ஆண்டு எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 188 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நாவல். வாசகர்களின் உள்ளத்தை உருக்குகின்ற உன்னதமான காதல்கதை என்று பின்னட்டைக் குறிப்பின் கடைசிவரி சொல்கிறது.

 

 காதலைப் பேசுகிற உலக இலக்கியங்களில் தலைசிறந்த இடத்தில் ருஷ்ய இலக்கியப் படைப்புகள் திகழ்கின்றன. ருஷ்ய எழுத்தாளர்கள் மகத்தான காதலர்களாக இருந்திருக்கிறார்கள். எப்படியென்று யோசித்தால் நம் கண்முன்னே பூஷ்கின் நிற்கிறார்

 

கோகோலின் மேல் கோட்டு கதையிலிருந்து தான் ருஷ்ய எழுத்தாளர்கள் பிறந்தார்களென்று செகாவ் சொல்வார். கோவில்பட்டியிலும் கோகோல் எங்களைப் பாதித்தார். மேல்கோட்டு கதையின் விளைவினால் நாங்களும் குமாஸ்தாக்களைப் பற்றிக் கதைகளையெழுதினோம். கோணங்கி நகல் கதையும், தமிழ்ச்செல்வனின் உபரி கதையும் இப்போது நினைவிலில்லாத பல கதைகளை எழுதிப்பார்த்தோம்

 

கோகோல் கோவில்பட்டிக்கும் வந்தார். அதைப்போல ருஷ்ய இலக்கியத்தின் அனைத்து இலக்கிய வகைமைகளுக்கும் தொடக்கமாக பூஷ்கின் இருந்திருக்கிறார். தன்னுடைய பதினைந்து வயதில் முதல் கவிதையின் வழியே புகழ் பெற்ற பூஷ்கின் காவியம், கவிதைபயணக்கட்டுரை, நாடகம், சிறுகதை, நாவல், வரலாற்றுச்சித்திரங்கள், மாயக்கதைகள்கதைப்பாடல், என்று எல்லாவகையான இலக்கிய வகைமைகளின் விதைக்கலயமாக இருந்திருக்கிறார்நம் பாரதியைப் போல.

 

தனது 38 ஆவது வயதில் பூஷ்கின் துவந்த யுத்தத்தில் இறக்கும்போது அவருடைய படைப்பாற்றலின் உச்சத்திலிருந்திருக்கிறார்

 

பிரெஞ்சு அறிவொளி இயக்கத்தாலும், வால்டேரின் கருத்துகளாலும், கிரேக்கப்புரட்சியாலும் தாக்கம் பெற்ற பூஷ்கின் முதலிலிருந்தே ஆட்சியாளர்களின் கண்காணிப்பிலிருக்க வேண்டிய படைப்பாளியாகவே தான் இருந்திருக்கிறார்.

 

கேப்டன் மகள் நாவல் உண்மை வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு.  .யெமல்யான் புகச்சோவ் ( 1744 - 1775 ) என்ற விவசாயி ஜார் ஆட்சியின் சர்வாதிகாரத்துக்கெதிராக கிராமப்புற விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரும் எழுச்சியை நடத்தினார். உண்மையில் அவர்தான் இந்தக் கதையின் கதாநாயகர்.  

 

அவருடைய எழுச்சியும் வீழ்ச்சியும் தான் கதையின் சம்பவங்கள். எதிர்மறை வெளிச்சத்தில் புகச்சோவ் காட்டப்பட்டிருந்தாலும், புகைமூட்டத்தின் நடுவே தெரியும் கலங்கலான காட்சிகளாகத் தெரிந்தாலும் பூஷ்கினின் மனம் புகச்சோவிடமே இருக்கிறது. அவனைப் பற்றி எழுதும்போதெல்லாம் அவனுடைய வீரம், பெருமை, கருணை, நட்பு, என்று குணாதிசயங்களின் வழியே கட்டியெழுப்புகிறார்

 

கர்னலின் மகனாக வரும் பியோத்தரும், கேப்டனின் மகளான மாஷாவும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். விவசாயிகள் எழுச்சி நடைபெற்ற அந்த கிராமங்களின் வழியே அவர்கள் மாட்டிக்கொள்வதும், தப்பிப்பதுமாக கதையைப் பின்னியிருப்பார். ஸ்வேலிச் என்ற வயதான வேலைக்காரர் கதையின் திருப்புமுனைகளை ஏற்படுத்துவார்

 

நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கேயுரிய தனித்துவத்துடன் படைக்கப்பட்டிருப்பது பூஷ்கின் கலைமேதைமையைக் காட்டுகிறது.

 

வரலாற்றை எப்படிப் புனைவாக, மாற்ற முடியுமென்பதற்கான பாடம் கேப்டன் மகள்

 

அதுவும் விறுவிறுப்பான புனைவாகஅடுத்து என்ன என்ற தவிப்பை உருவாக்கும் பிரதியாகஅற்புதமான உரைநடையில் எழுதியிருக்கும் கேப்டன் மகளை அழகாக நா.தர்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார்.

 

கேப்டன் மகளை வாசிக்கும்போது ருஷ்ய இலக்கியத்தின் முதல்வரைத் தரிசிக்க முடியும். பிரம்மாண்டமான உருவமாக பூஷ்கின் நிற்கிறார்.

தொடக்கங்களின் தொடக்கமாக பூஷ்கின் இருக்கிறார் - மாக்சிம் கார்க்கி

 

மகத்தான ருஷ்ய இலக்கியங்களின் மூல ஊற்றே

பூஷ்கின் உங்களை வணங்குகிறோம்.

 

No comments:

Post a Comment