Showing posts with label வித்யாஷங்கர். Show all posts
Showing posts with label வித்யாஷங்கர். Show all posts

Sunday, 19 August 2012

முன்னொரு காலத்திலே

 

ஒரு நகரம், சில நண்பர்களைப் பற்றிய நினைவுக் குறிப்புகள்

நூல்மதிப்புரை

புத்தகன்

 

இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால், இப்படி ஒன்றை நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை துளிர்ப்பது நிச்சயம். ஒவ்வொருவரும் எங்கோ பிறந்து, இடம் பெயர்ந்து, என்னவோ மாறி, புதுப்புது நண்பர்களோடு தனது பயணத்தைத் தொடந்துகொண்டு இருந்தாலும்.. பிறந்த ஊர், நம்முடைய வீட்டுக்கு முதன்முதலாக வந்த நண்பன், ஓசியில் கிடைத்த முதல் புத்தகம், எழுதியதைப்பாராட்டிய முதல் ரசிகன் என்பதெல்லாம் மறக்கமுடியாது. அப்படி சில நினைவுகளின் தாழ்வாரம் இது.

பிறிதொரு மரணம் தொகுப்பின் மூலம் தமிழ்ச்சிறுகதை உலகில் தன்னை இணைத்துக் கொண்ட உதயசங்கர், வைக்கம் முகமது பஷீர் தொடங்கி சமகாலக் கதைகள் வரை மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தவர். அவரது சொந்த நகரமான கோவில்பட்டி தான் இந்தப் புத்தகத்தின் களம். அதை ஒரு சோவியத் ரஷ்யாவாக வர்ணித்து இருப்பது தான் இதன் அடித்தளம்.

தடுக்கி விழுந்தால் கோவில்பட்டியில் ஒரு எழுத்தாளனின் udhayasankar cover1[4]தலையில் தான் முட்ட வேண்டும் என்பார்கள். ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், கௌரிசங்கர், வித்யாஷங்கர், தேவதச்சன், நாறும்பூநாதன், அப்பாஸ், அப்பணசாமி, மாரீஸ், ஜோதிவிநாயகம், சிவசு, சாரதி, என்று எண்ணிக்கொண்டே போகலாம். கோவில்பட்டிக்கு அந்தப் பக்கம் கி.ராஜநாராயணனும் இந்தப் பக்கம் கந்தர்வனும் இருந்தார்கள்.

80 – களின் தொடக்க காலத்தில் கிளம்பியவர் உதயசங்கர். “ இத்தனை சிறிய நகரத்தில் இத்த்னை எழுத்தாளர்கள் ஒரே காலகட்டத்தில் எழுத வந்தது போல், தமிழ்நாட்டில் வேறெங்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் 20 எழுத்தாளர்கள் ஒரே இடத்தில் சிந்திக்கவும், பேசவும், விவாதிக்கவுமான சூழல் இருந்தது. படைப்புச் செயல்பாட்டில் ஆரோக்கியமான போட்டி நிலவியது.” என்கிறார் உதயசங்கர்.

இவான் துர்கனேவின் ’மூன்று காதல் கதைகள்’ படித்துக் காதலர்களாகி.. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசித்து தோழர்களாகி, ‘சிலந்தியும் ஈயும்’ படித்து வர்க்கங்களை உணர்ந்து டி.எஸ்.எலியட் படித்து கவிஞர்களாகித் திரிந்த ஓர் இளைஞர் கூட்டத்தையே புத்தகங்கள் ஒன்று சேர்த்துள்ளது. இலக்கியம், அரசியல், சாளரங்களைத் திறந்துவிட எல்லா ஊர்களிலும் பாலு, பால்வண்ணன் போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்குள் முத்துசாமி என்பவர் வருகிறார். எதுவுமே எழுதவில்லை அவர். எல்லா விவாதங்களிலும் இருக்கிறார். யோசித்துப் பாருங்கள். எல்லாஊர்களிலும் முத்துசாமிகளும் இருப்பார்கள்.

“ வாழ்க்கை தன் கொடூரமான பற்களால் பல கலைஞர்களைக் கிழித்து எறிந்திருக்கிறது. வாழ்க்கைக்குச் சவால் விட்டுக் கொண்டே, கலைஞன் ஜெயித்துக் கொண்டு இருக்கிறான். அந்த வெற்றிக்காகத் தன்னை பலியிட்டேனும்..” என்று சொல்லும் உதய்சங்கர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வருகிறார். இந்த ஊர் அவருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் முன்னொரு காலத்தில் பார்த்த ஊர் நிச்சயம் பிடிக்கும்!

வெளியீடு- வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை ரூ 70/

நன்றி- ஜூனியர் விகடன் 22-8-12

Saturday, 18 August 2012

மனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்

 

உதயசங்கர்

Vannadasan

ஒருவருடன் பார்க்காமல் பேசாமல் பழகாமல் அவரை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணரமுடியுமா?, நம் குடும்பத்தில் சொந்த அண்ணாச்சி போலவோ, நீண்ட நாட்கள் ஒரே தெருவில் அருகருகே குடியிருந்து பிரிந்த, எப்போது சந்தித்தாலும் தோளில் கை போட்டு பிரியத்துடன் கைகளைப் பிடித்துக் கொண்டு ஈரம் ததும்பும் விழிகளோடு விட மறுக்கும் பாலிய சிநேகிதன் போலவோ, உரிமையுடன் அடுக்களைக்குள் சென்று குளிர்ச்சியாய் ஒரு சொம்புத் தண்ணீர் குடித்து விடும் சொந்தம் போலவோ தாமிரபரணி ஆற்றில் குளித்து வரும்போது ஈரக்கால்களில் ஒட்டிய மணல் தெருவெங்கும் பரவி ஆற்றின் மணத்தை ஊருக்கே அளிப்பதைப் போலவோ, அதிகாலைக்குளிரில் இசக்கியம்மன் படித்துறையில் உடலும் மனமும் குளிர குளிர போடும் முங்காச்சி போலவோ சந்திக்காத போதும் சந்தித்துக் கொண்டேயிருப்பதைப் போலவோ, ஏக்கம் தரும் ஒரு ஆளுமை அவர்.. தன் கலையாளுமை மூலம் எல்லோரையும் அணுக்கமாக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த வண்ணதாசன்.

80 – களில் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, லா.ச.ரா, கி.ரா, சுந்தரராமசாமி, பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், என்று தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடுவதான பாவனையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கோவில்பட்டியில் பெரும் இளைஞர்குழாம் இலக்கியவேள்வி நடத்திக் கொண்டிருந்தது. வாசிப்பு அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ புத்தகங்கள் கொண்டு வந்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு வாசித்தோம். இருபத்திநாலுமணி நேரமும் புத்தகங்கள் ஓய்வில்லாமல் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. புத்தகங்களுக்காகச் சண்டைகள் நடந்தன. புத்தகங்களுக்காக பழமும் விட்டனர். அப்படி மாறிக் கொண்டே வந்த புத்தகங்களில் அந்தப் புத்தகம் வித்தியாசமாக இருந்தது. அந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு எங்களுக்கு அற்புத உணர்வைத் தந்தது. அப்படி ஒரு புத்தகத்தை நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. கலைக்கமுடியாத ஒப்பனைகள் என்ற அந்த வண்ணதாசனின் சிறுகதை நூல் எங்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அஃக் பரந்தாமன் அதை வடிவமைத்திருந்தார். சிறுகதைகளை வாசிக்க வாசிக்க வேறொரு புதிய உலகத்துக்குள் நுழைந்த மாதிரி இருந்தது. ஆனால் நாங்கள் பார்த்த அதே பழைய உலகம் தான். வண்ணதாசன் என்ற கலைஞனின் மொழியில் புத்தம்புதிதாய் வேறொன்றாய் இந்த உலகம் தெரிந்ததே. எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த மனிதர்கள் இப்போது புதிதாகத் தெரிந்தார்கள். வண்ணதாசன் இந்த உலகத்தை மாற்றி விட்டார். இந்த மனிதர்களை மாற்றி விட்டார். எங்கள் மனதை மாற்றி விட்டார்.. வண்ணதாசனின் கதைகள் இந்த ரசவாதத்தை எல்லோரிடமும் ஏற்படுத்தும். நாங்கள் வண்ணதாசனின் கதைகளைக் கொண்டாடினோம்.

குறிப்பாக எனக்கு நான் வெகுநாட்களாக மறந்திருந்த புதையலின் ரகசியம் ஒன்று ஞாபகத்துக்கு வந்ததைப் போல இருந்தது. என் பாலியகாலம் முழுவதும் என் கண்ணில் ஆடியது. என் மனதில் அந்த நாட்களின் இனிமை மீண்டும் தேனாய் இனித்தது. என் பள்ளிவிடுமுறை நாட்களை கழித்த என்னுடைய ஆச்சியும் தாத்தாவும், திருநெல்வேலி மீனாட்சிபுரமும், புளியந்தோப்புத்தெருவும், சியாமளாதேவி கோவிலும், உலகம்மன் கோவிலும், சிக்கிலிங்கிராமமும், குறுக்குத்துறையும், சுப்பிரமணியன் கோவிலும், பாப்புலர் தியேட்டரும், வயக்காட்டு வழியே நடந்து போய் சினிமா பார்த்த ரத்னா தியேட்டரும், தட்டாக்குடித் தெருவும், கொக்கிரகுளமும், சுலோச்சன முதலியார் பாலமும், தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டே நடந்து போன பாளையங்கோட்டை ஊரும், வழியில் வந்த ஊசிக்கோபுரமும், பாளையங்கோட்டை அசோக் தியேட்டரும், பாளையங்கோட்டை வாய்க்காலும், வழியெங்கும் பெரிய பெரிய மருத மரங்களும் எல்லாம் என் மனதை அலைக்கழித்தன.

காய்ந்து வெப்பம் உமிழும் தண்ணீர்ப்பஞ்சம் மிக்க கரிசல் பூமியான கோவில்பட்டி என் வாழ்விடமாக இருந்தது. புரண்டோடும் தாமிரபரணியின் கரைகளில் செழித்து எங்கும் பச்சைபசேலென்று வயக்காடுகள் நிறைந்த, தெருக்கள் தோறும் அவித்த பச்சை நெல்லின் வாசம் பொங்கிய, திருநெல்வேலி என் மனதின் கனவாக இருந்தது. வண்ணதாசனின் கதைகளைப் படித்தவுடன் என் மனதின் அடியாழத்தில் புதைந்து கிடந்த இனிய நினைவுகள் தன் சிறகுகள் விரித்து பறந்தன. நான் அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை பலமுறை வாசித்தேன்.

ஏற்கனவே கோவில்பட்டியில் தர்சனா என்ற வீதி நாடகக்குழு ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற பல நண்பர்கள் மனோகர், வித்யாஷங்கர், கௌரிஷங்கர், போன்றவர்கள் வேலை கிடைத்தும், வேலை தேடியும் வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு நாங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிருஷ்டி என்ற நாடகக்குழுவை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது வத்திராயிருப்பில் பொன்.தனசேகரன், புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சி ஆகியோர் ஏற்பாட்டில் பேரா.ராமானுஜம், மு.ராமசாமி, ராஜு, ஆகியோர் நடத்திய ஐந்து நாள் நாடகப்பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டேன். நாடகப்பயிற்சியின் போது இரண்டு முறை பெண்ணாக நடிக்க வேண்டி வந்த போது என்னுடைய பெயரை தனலட்சுமி என்றே சொன்னேன். அதைக் கேட்ட புதுப்பட்டி நடராஜன் அண்ணாச்சியும், வைகை குமாரசாமி அண்ணாச்சியும் என்ன தனுமை தனலட்சுமியா? என்று கேலி செய்தார்கள். வண்ணதாசன் அந்த அளவுக்கு என்னைப் பாதித்திருந்தார்.

நான் ஒன்றிரண்டாய் கதைகளை எழுதத் துணிந்தபோது வண்ணதாசனின் பாதிப்பில் அவருடைய நடையை ஈயடிச்சான் காப்பி பண்ணி கான மயிலாட அதைக் கண்ட கோழி ஆடியதைப் போல எழுதிப் பார்த்தேன். எதுவும் தேறவில்லை. அவருடைய எழுத்தின் தனித்தன்மையை யாராலும் காப்பியடிக்க முடியாது. ஏனெனில் அது அவருடைய மனதில் எழுந்து வருகிற மனிதநேயமிக்க சுயம்புவான ராகம். அந்த ராகத்தை வேறொருவர் இசைக்க முடியாது. மனிதர்களை இத்தனை அழகாய் யாராவது வர்ணித்திருக்க முடியுமாவென்று தெரியவில்லை. நாம் அன்றாடம் பார்க்கிற உலகநாதனும், பிரமநாயகமும், ஆச்சியும், பாட்டையாவும், எப்படி இவ்வளவு அழகானவர்களாக மாறினார்கள்? சண்டையும் சல்லியமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களா இவர்கள்? இந்த உலகம் எப்படி இவ்வளவு அழகாக மாறிப் போனது? முருங்கைப்பூக்களும், ஒரு நிமிடமும் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் பாய்ந்து கொண்டேயிருக்கும் அணிலும், அந்தியின் வர்ணஜாலமும், காலையில் எழுந்தவுடன் உதடுகளில் ஒட்டிக் கொள்கிற பழைய பாடலும், என்று உலகம் மாறித் தெரிவதை எப்படிக் கவனிக்கத் தவறினோம்? காட்சிச் சித்தரிப்புகளின் மூலம் மனிதர்களின் மனதை வெளிப்படுத்திய மனச்சித்திரக்காரன் வண்ணதாசன். ஒற்றைவரித் தீட்டலில் ஒரு மகத்தான மானுடநாடகத்தை உணர்த்திச் செல்லும் மகாகலைஞன். வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் யாவரும் வசியப்படுத்தப் பட்டவர்களைப் போல மாறி விட நேர்வதும், அதன் பிறகு அவர்களுக்கு இந்த உலகம் அழகாகவும் அன்பாகவும் தெரிவதும் நடக்கும். அதன் பிறகான அவர்களுடைய வார்த்தைகளில் பிரியம் பொங்கும்.

82- ஆக இருக்கலாம். கோவில்பட்டி பேருந்து நிலைய வணிகவளாகத்தில் கிராஜூவேட் பரமன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட வண்ணதாசனின் அருமை நண்பர் பரமசிவன் ஒரு டீக்கடை திறந்தார். அங்கே அவரைச் சந்திக்க அடிக்கடி வண்ணதாசன் வருவதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அந்தச் சமயத்தில் அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் வெளிவந்திருந்தது. நான் என்னுடைய கதை வெளியாகியிருந்த செம்மலரை கையில் வைத்திருந்தேன். நெடிதுயர்ந்த, உருவமும் சாந்தமான முகமும், பாந்தமான குரலும் அணுக்கமான உடல்மொழியும் அவரோடு நீண்ட நாள் பழகிய உணர்வைத் தந்தது. என் கதையைப் படித்து விட்டு “ ஷங்கர், எழுதுங்க.. யார் என்ன சொன்னாலும் கவலைப்படாம நீங்க பாட்டுக்கு எழுதுங்க..” என்று சொன்னார். உண்மையில் அந்த வார்த்தைகள் என் ஆழ்மனதில் தங்கி விட்டது. இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறேன்.

வேலை கிடைத்து வடமாவட்டங்களில் ஒரு பதினான்கு வருடங்கள் சுற்றியலைந்த பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு வந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு வண்ணதாசனை நேரில் சந்தித்த போதும் கால இடைவெளி சிறிதுமின்றி அதே அந்நியோன்யத்துடன் அவர் உரையாடினார். அவருடைய கதைகள், கவிதைகள், கடிதங்கள், ஓவியம், பேச்சு, உரையாடல், எல்லாமும் ஒரு கலைநேர்த்தியோடு இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அது பலருக்கு மெனெக்கிடலாக இருக்கிறபோது அவருக்கு இயல்பாக இருக்கிறது. மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள பேரன்பைப் போல.

நான் ஆறாங்கிளாஸ் அல்லது ஏழாங்கிளாஸ் படித்துக் கொண்டிருந்த சமயம் தாத்தாவுடன் பாளையங்கோட்டையிலிருந்த மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது எங்கே சென்றாலும் நடை தான். மீனாட்சிபுரத்திலிருந்து ஆத்துக்குள் இறங்கி ( இறங்கும் முன்பு டவுசர், சட்டையைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டு ) குறுக்கே புகுந்து கொக்கிரகுளத்தில் கரையேறி அப்படியே பொடி நடையாய் பாளையங்கோட்டைக்குப் போய்விட்டு திரும்புகிற சமயத்தில் அபூர்வமாய் ஒரு டவுண் பஸ் வந்தது. அந்த பஸ்ஸை விட்டால் பிறகு ஒரு மணி நேரம் கழித்துத் தான் அடுத்த பஸ் வரும். பஸ் வந்து நின்றதும் எல்லோரும் ஏறுகிறார்கள். நான் கீழே குனிந்து பார்க்கிறேன். புழுதி மணலில் சில்லரைக் காசுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாம் ஐந்து பைசா, பத்து பைசா, நாலணா, எட்டணா, காசுகளாகக் கிடக்கின்றன. நான் அந்தக் காசுகளை புழுதியுடன் அள்ளி டவுசர் பையில் போடுகிறேன். என் தாத்தா என்னை பஸ்ஸில் ஏறச் சொல்லிக் கத்துகிறார். இன்னும் புழுதியில் தெரிந்தும், தெரியாமலும் காசுகள் கிடக்கின்றன. எனக்கு அதை விட்டு விட்டு வர மனசில்லை. ஆனால் தாத்தா கூப்பாடு போடுகிறார். அந்தக் காசுகள் எல்லாம் அந்தக் காலத்தில் அலட்சியம் செய்யக்கூடியக் காசுகளும் இல்லை. எனக்கு அந்தக் காசுகள் ஆரஞ்சு மிட்டாய்களாக, சேவு, மிக்சராக, ஐஸ், சவ்வுமிட்டாயாகத் தெரிகிறது தாத்தாவின் சத்தத்தில் நான் பஸ் ஏறி விட்டேன். மிகப் பெரிய புதையலை விட்டு விட்ட மாதிரி ஏமாற்றமடைந்தேன். பொறுக்கிய சில்லரைகள் ஐந்தாறு ரூபாய் தேறியது என்றாலும் பொறுக்காமல் விட்ட காசுகளைப் பற்றியே கவலைப்பட்டேன். இப்போதும் கைகளில் அந்த நாணயங்களின் குளிர்ச்சி எனக்குக் கிளர்ச்சியூட்டுகிறது. அந்தக் குளிர்ச்சியை வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் போது உணர்கிறேன்.

எப்போதெல்லாம் வண்ணதாசனை வாசிக்கிறேனோ, எப்போதெல்லாம் அவரைப் பற்றிப் பேசவோ, எழுதவோ செய்கிறேனோ அப்போதெல்லாம் திருநெல்வேலியின் ஸ்பரிசம் என் மனதை வருடும். தாமிரபரணியின் தாமிரவாசம் என் உடலில் தோன்றும். மீண்டும் என் பாலியகாலம் தன் வண்ணங்களின் விகசிப்பை எனக்குள் ஏற்படுத்தும். என் அபூர்வக்கனவுகளை மீண்டும் நான் காண்பேன். அதற்காகவே  மீண்டும் மீண்டும் வண்ணதாசனை வாசிப்பேன். மகத்தான கலைஞன் எங்கள் வண்ணதாசன்!

Monday, 16 July 2012

கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி

 

உதயசங்கர்

poomani2_thumb[4]

எண்பதுகளில் கோவில்பட்டியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். டீக்கடைகளுக்குப் போனால் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் தாஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையைப் பற்றியோ, நட் ஹாம்சனின் நிலவளம் பற்றியோ, செல்மா லாகர் லவ்வின் தேவமலரைப் பற்றியோ, நதானியல் ஹாத்தனின் அவமானச்சின்னம் பற்றியோ, கார்க்கியின் தாய் பற்றியோ, ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பற்றியோ, தால்ஸ்தோயின் அன்னாகரீனினாவைப் பற்றியோ, அனடோல் ஃப்ரான்ஸின் தாசியும் தபசியும் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். வாசிப்பின் தீவிரமும், விவாதங்களின் உக்கிரமும் கூடி நின்ற காலமாக அது இருந்தது.

கடுமையான வெயிலின் பொழிவு மாலை நெருங்க நெருங்க மெல்லத் தணியும். பகலில் புழுதி பறந்த தெருக்கள் அமைதியடையும். கசகசத்த வியர்வைப் புழுக்கத்தில் முகத்தைச் சுழித்தபடி அலைந்த மக்கள் தங்கள் முகங்களில் புன்னகையைச் சூடிக் கொண்டு உலாத்துகிற வேளை. பகலில் பார்த்த மனிதர்களா இவர்கள் என்று மாலைச் சூரியன் வியந்தபடியே மேற்கில் மறையத் தொடங்குவான். எப்போது சூரியன் மயங்குவான் என்று காத்திருந்தது போல மெல்லிய காற்று நகரமெங்கும் தன் சிறகுகளால் வருடத் தொடங்கும். அது வரை எங்கிருந்தார்கள் என்று வியக்கும்படி யுவன்களும் யுவதிகளும் வீதிகளில் உலா வருவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகள் வழக்கமாக வருகிற இடங்களில் நிலை கொண்டு காத்திருப்பார்கள். பகல் முழுவதும் நிழல் கிடைத்த இடங்களில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் காந்தி மைதானத்தை நோக்கி மெல்ல நடை பயிலுவார்கள். ஒவ்வொருவராக வந்து சேர்ந்து ஒரு பெரிய வட்டம் போட்டு மைதானத்தின் நடுவே உட்கார ஆரம்பிக்கும் கோவில்பட்டியின் இலக்கியக்கூட்டம். யாரும் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. ஆனால் தினமும் கூடிப் பேசுவது என்பது ஒரு நாளும் நின்றதில்லை.

பேசும் பொருளோ, பேச்சின் திசையோ, யாருடைய தீர்மானத்திலும் இல்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் துவங்கி முன்னோட விவாதம் துவங்கும். அன்றைய அரசியல், தத்துவம், பெரும்பாலும் இலக்கியம் என்று பேச்சின் வெள்ளம் காந்திமைதானத்தை மூழ்கடிக்கும். பெரும் சண்டையோவென மற்றவர்கள் பயப்பட விவாதம் பகலின் வெம்மையை மிஞ்சும். அப்படியே ஒரே கணத்தில் பேச்சு சிரிப்பாகும். கிசுகிசுப்பாகும். சிகரெட்டுகளின் கனல் பொங்கும் நுனிகள் இருளில் துலங்கும். அன்று நாவல் பற்றிய உரையாடலாக இருக்கலாம். தமிழ்ச்சிறுகதைகள் பற்றியதாக இருக்கலாம். தான் எழுதிக் கொண்டு வந்த கவிதையை ஒருவர் வாசிக்கலாம். அப்போது தான் புத்தம் புதிதாய் வந்த புத்தகம் குறித்து இருக்கலாம். அன்று வெளியூரிலிருந்து வந்த எழுத்தாளரைப் பேட்டி காணலாம். நவீன நாடகங்களைப் பற்றிய கலந்துரையாடலாக இருக்கலாம். கலைப்படங்களைக் குறித்து விவாதமாக இருக்கலாம். இசங்கள் குறித்த பார்வைகளை பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். இப்படி எதைக் குறித்தும் பேசுகின்ற இடமாக அந்த இலக்கியக் கூட்டம் இருந்தது.

இலக்கியவாசகனாக. புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி, கி.ரா.என்ற வரிசைக்குப் பின் வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், பூமணி என்ற வரிசையில் வாசிக்க நேர்ந்தது. என் பாலிய காலத்தின் நினைவுச் சுவடுகளென திருநெல்வேலி வயற்காட்டு வாசமும் தாமிரபரணித் தண்ணீரும் இருந்ததனால் வண்ணநிலவனும், வண்ணதாசனும் என் அன்புக்குரியவர்களாக ஆகி விட்டார்கள். அவர்களுடைய மொழியும் நடையும் என் மனதில் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டன. எத்தனை முறை கலைக்க முடியாத ஒப்பனைகளையும், எஸ்தரையும் வாசித்திருப்பேன் என்று சொல்லமுடியாது. அவர்களைப் போலவே எழுதவும் துணிந்தேன். ஆனால் கரிசல் மண்ணின் விருவுகள் விட்ட பெருமூச்சைக் குடித்தபடியே வளர்ந்த கோவில்பட்டியில் கி.ரா. என்ற முன்னத்தி ஏருக்குப் பின்னால் புத்தம் புதிதாய் உழவுசால் போட்ட பூமணியின் எழுத்து எனக்குப் பிரமிப்பூட்டியது.

வயிறுகள், ரீதி, என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு பூமணி என்ற ஆகிருதி என் மனதில் பிரமாண்டமாக எழுந்து நின்றார். கரிசல் மண்ணின் மக்களை ரத்தமும் சதையுமாக தன் எழுத்தில் பதிவு செய்திருந்தார். கரிசல் மண்ணின் ருசியை கி.ரா. எல்லோரும் சுவைக்கக் கொடுத்தாரென்றால் அந்த மண்ணின் வெக்கையை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே நிறுத்தினார். கி.ரா. ஒரு அற்புதமான கதைசொல்லியென்றால் பூமணி கதை நடக்கும் இடத்தில் நம்மைப் பார்வையாளனாக இருத்தி வைக்கிறார். நம் கண் முன்னே நடக்கின்ற கதையை நடத்துகிற பூமணியைக் காணமுடிவதில்லை. அவர் நாம் எதைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தாரோ அதைப் பார்க்கும் விதமாக தன் கலையின் வசீகரத்தால் நம்மை வசப்படுத்துகிறார். கதையின் நிகழ்வு துவங்கும் போது நாம் பூமணியை மறந்து விடுகிறோம். அவரும் தன்னடக்கத்தோடு தன்னை மறைத்துக் கொள்கிறார். வாசித்து முடியும்போது தான் தெரிகிறது பூமணி என்ற மகத்தான கலைஞனின் கலையாளுமை. தன் கலையின்கோணத்தில் தன் முற்போக்குப் பார்வையை தெளிவு படுத்துகிறார். இடையில் ஒரு சொல் சொல்வதில்லை. ஆனால் கதை நம்மை கோபம் கொள்ள வைக்கிறது. ஆவேசப்பட வைக்கிறது. சமூகவிமர்சனத்தைக் கூராக்குகிறது. சமூக மாற்றத்தைக் கோருகிறது.

கரிசலின் அந்திவானம் வர்ணங்களால் குழம்பியிருந்தது. அந்த இரவில் கோவில்பட்டி இலக்கியக்கூட்டத்தில் புதிதாய் ஒருவர் வந்து சேர்ந்திருந்தார். நான் சற்று தாமதமாகப் போய் வட்டத்தில் இணைந்திருந்தேன். மெலிந்து உயரமாக குட்டையான தலைமுடியுடன்,சிவந்த நிறத்துடன் ஒரு போலீஸ்காரரைப் போலவே தோற்றமளித்தார் அவர். மெல்லிய குரலில் அவர் பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் அருகிலிருந்த கவிஞர் தேவதச்சனிடம் யார்? என்று கிசுகிசுத்தேன். அவர் பூமணி என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. எழுத்தின் வழியே நான் உருவகித்திருந்த பூமணி இல்லை இவர். சற்றே ஏமாற்றத்துடன் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் அவர் மார்க்சிய அழகியல் கோட்பாடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவருடைய விவாதப்பாங்கு, கருத்துகளின் கூர்மை, என்னை மிகவும் ஈர்த்தது. கூட்டம் முடிவடையும் தருணம் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது உற்சாகத்துடன் என்னுடன் உரையாடினார். அவருடைய கதைகள் குறித்துப் பேசிய போது கவனமாகக் கேட்டார். அதுவரை நான் எழுதிய கதைகளை அவரிடம் படிக்கக் கொடுக்கலாமா என்று தயங்கியபடியே கேட்டேன். அவர் உடனே கொடுக்கும்படி சொன்னார். அதற்கடுத்த மாதத்தில் த.மு.எ.ச. வின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அங்கு பார்வையாளராக வந்திருந்தார். அப்போது நான் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டுபோய் படித்து விட்டு மிக விரிவாக ஒரு கடிதம் எழுதினார் பூமணி. எழுத்தின் சூட்சுமங்கள் குறித்து நான் விளங்கிக் கொள்ள பல குறிப்புகள் அந்தக் கடிதத்தில் இருந்தன.

தமிழிலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகை மாதிரி உருவாவதற்கு முன்னரே பிறகு, வெக்கை,போன்ற தமிழிலக்கியத்தின் முக்கியமான நாவல்களை எழுதியிருந்தார் பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியுடன் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். நாசர், ராதிகா, சார்லி, போன்ற திரைக்கலைஞர்கள் பங்கு பெற்ற அந்தத் திரைப்படமும் கரிசல்வாழ்வின் அவலத்தைக் கூறும் படமாகவே வெளிவந்தது. பல திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

யதார்த்தவாதத்தின் மகத்தான நாவல்களாக பூமணியின் ’ பிறகு ‘ ‘ ’வெக்கை’ நாவல்கள் திகழ்கின்றன. பிறகு நாவல் சுதந்திரம் பெறும்போது துவங்குகிறது.அழகிரிப்பகடையைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கரிசல் கிராமத்தின் மாற்றம், தீப்பெட்டியாபீஸ் வருகிற போது மனித உறவுகளில் ஏற்படும் மாற்றம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தின் வரலாறாக விரிகிறது. தமிழில் எக்காலத்தும் சிறந்த நாவல்களில் ஒன்றாக பிறகு இருக்கும். அதே போல நிலத்தை அபகரிக்க நினைக்கும் வடக்கூரானை வெட்டிச் சாய்த்து விட்டு தலைமறைவாகத் திரிந்து நீதிமன்றத்தில் சரணடையும் வரையிலான நிகழ்வுகளை விறுவிறுப்புடன் சொல்லுகிற நாவல் வெக்கை. இப்போது வெளிவந்திருக்கும் அஞ்ஞாடி என்ற பெரும்படைப்பு இருநூறு ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது. கரிசல் கிராமத்தில் ஒரு அஞ்ஞாடிப்பள்ளருக்கும், ஏகாலிக்கும் இடையில் உருவாகும் நட்பாகத் துவங்கும் நாவல் எட்டையபுரம் வரலாறு, கட்டபொம்மன் வரலாறு, ஊமைத்துரை வரலாறு, கழுகுமலை கலவரம், சிவகாசிக் கொள்ளை என்று வரலாற்றின் பக்கங்களை விரித்துக் கொண்டே செல்கிறது. மனித விகாரங்களின் வழியே வரலாறு அதன் பொருண்மையான தளத்திலிருந்து நகர்ந்து மானுட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது அஞ்ஞாடி..

எப்போதும் கரிசல் பூமியில் அழியும் விவசாயத்தைப் பற்றியும், தீப்பெட்டியாபீஸுகளில் வதைபடும் குழந்தைகளைப் பற்றியும், ஒடுக்கப்படும் சாமானியர்களைப் பற்றியும் கவலையே பூமணியின். படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது.

கோவில்பட்டிக்கருகிலுள்ள கரிசல் கிராமமான ஆண்டிபட்டியில் பிறந்து கல்லூரிப்படிப்பு முடித்து கூட்டுறவுத்துறையில் பதிவாளராக ஓய்வு பெற்று இப்போது கோவில்பட்டியில் வசித்து வரும் பூமணி கோவில்பட்டிக்கு வந்த புதிதில் மறுபடியும் எண்பதுகளில் சந்தித்த மாதிரி நண்பர்களைச் சந்திக்க ஆவல் கொண்டார். இப்போதும் காந்திமைதானத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் கவிஞர் தேவதச்சன் இல்லை, எழுத்தாளர் கௌரிஷங்கர் இல்லை, கவிஞர் அப்பாஸ் இல்லை, எழுத்தாளர் கோணங்கி இல்லை, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இல்லை, வித்யாஷங்கர் இல்லை, எழுத்தாளர் நாறும்பூநாதன் இல்லை, எழுத்தாளர் அப்பணசாமி இல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பூமணி இல்லை. ஆனால் அவருடைய மெல்லிய உறுதியான குரல் எனக்குக் கேட்கிறது. அந்தக் குரலின் தனித்துவம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இலக்கியத்தின் நுட்பங்கள் குறித்தும், மார்சிய அழகியல் குறித்தும், மானுட அவலம் குறித்தும் சமூகமாற்றம் குறித்தும் அமைதியாக, அதே நேரம் அழுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் எங்கள் அன்புக்குரிய பூமணி.