உதயசங்கர்
எண்பதுகளில் கோவில்பட்டியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். டீக்கடைகளுக்குப் போனால் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் தாஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையைப் பற்றியோ, நட் ஹாம்சனின் நிலவளம் பற்றியோ, செல்மா லாகர் லவ்வின் தேவமலரைப் பற்றியோ, நதானியல் ஹாத்தனின் அவமானச்சின்னம் பற்றியோ, கார்க்கியின் தாய் பற்றியோ, ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பற்றியோ, தால்ஸ்தோயின் அன்னாகரீனினாவைப் பற்றியோ, அனடோல் ஃப்ரான்ஸின் தாசியும் தபசியும் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். வாசிப்பின் தீவிரமும், விவாதங்களின் உக்கிரமும் கூடி நின்ற காலமாக அது இருந்தது.
கடுமையான வெயிலின் பொழிவு மாலை நெருங்க நெருங்க மெல்லத் தணியும். பகலில் புழுதி பறந்த தெருக்கள் அமைதியடையும். கசகசத்த வியர்வைப் புழுக்கத்தில் முகத்தைச் சுழித்தபடி அலைந்த மக்கள் தங்கள் முகங்களில் புன்னகையைச் சூடிக் கொண்டு உலாத்துகிற வேளை. பகலில் பார்த்த மனிதர்களா இவர்கள் என்று மாலைச் சூரியன் வியந்தபடியே மேற்கில் மறையத் தொடங்குவான். எப்போது சூரியன் மயங்குவான் என்று காத்திருந்தது போல மெல்லிய காற்று நகரமெங்கும் தன் சிறகுகளால் வருடத் தொடங்கும். அது வரை எங்கிருந்தார்கள் என்று வியக்கும்படி யுவன்களும் யுவதிகளும் வீதிகளில் உலா வருவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகள் வழக்கமாக வருகிற இடங்களில் நிலை கொண்டு காத்திருப்பார்கள். பகல் முழுவதும் நிழல் கிடைத்த இடங்களில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் காந்தி மைதானத்தை நோக்கி மெல்ல நடை பயிலுவார்கள். ஒவ்வொருவராக வந்து சேர்ந்து ஒரு பெரிய வட்டம் போட்டு மைதானத்தின் நடுவே உட்கார ஆரம்பிக்கும் கோவில்பட்டியின் இலக்கியக்கூட்டம். யாரும் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. ஆனால் தினமும் கூடிப் பேசுவது என்பது ஒரு நாளும் நின்றதில்லை.
பேசும் பொருளோ, பேச்சின் திசையோ, யாருடைய தீர்மானத்திலும் இல்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் துவங்கி முன்னோட விவாதம் துவங்கும். அன்றைய அரசியல், தத்துவம், பெரும்பாலும் இலக்கியம் என்று பேச்சின் வெள்ளம் காந்திமைதானத்தை மூழ்கடிக்கும். பெரும் சண்டையோவென மற்றவர்கள் பயப்பட விவாதம் பகலின் வெம்மையை மிஞ்சும். அப்படியே ஒரே கணத்தில் பேச்சு சிரிப்பாகும். கிசுகிசுப்பாகும். சிகரெட்டுகளின் கனல் பொங்கும் நுனிகள் இருளில் துலங்கும். அன்று நாவல் பற்றிய உரையாடலாக இருக்கலாம். தமிழ்ச்சிறுகதைகள் பற்றியதாக இருக்கலாம். தான் எழுதிக் கொண்டு வந்த கவிதையை ஒருவர் வாசிக்கலாம். அப்போது தான் புத்தம் புதிதாய் வந்த புத்தகம் குறித்து இருக்கலாம். அன்று வெளியூரிலிருந்து வந்த எழுத்தாளரைப் பேட்டி காணலாம். நவீன நாடகங்களைப் பற்றிய கலந்துரையாடலாக இருக்கலாம். கலைப்படங்களைக் குறித்து விவாதமாக இருக்கலாம். இசங்கள் குறித்த பார்வைகளை பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். இப்படி எதைக் குறித்தும் பேசுகின்ற இடமாக அந்த இலக்கியக் கூட்டம் இருந்தது.
இலக்கியவாசகனாக. புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி, கி.ரா.என்ற வரிசைக்குப் பின் வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், பூமணி என்ற வரிசையில் வாசிக்க நேர்ந்தது. என் பாலிய காலத்தின் நினைவுச் சுவடுகளென திருநெல்வேலி வயற்காட்டு வாசமும் தாமிரபரணித் தண்ணீரும் இருந்ததனால் வண்ணநிலவனும், வண்ணதாசனும் என் அன்புக்குரியவர்களாக ஆகி விட்டார்கள். அவர்களுடைய மொழியும் நடையும் என் மனதில் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டன. எத்தனை முறை கலைக்க முடியாத ஒப்பனைகளையும், எஸ்தரையும் வாசித்திருப்பேன் என்று சொல்லமுடியாது. அவர்களைப் போலவே எழுதவும் துணிந்தேன். ஆனால் கரிசல் மண்ணின் விருவுகள் விட்ட பெருமூச்சைக் குடித்தபடியே வளர்ந்த கோவில்பட்டியில் கி.ரா. என்ற முன்னத்தி ஏருக்குப் பின்னால் புத்தம் புதிதாய் உழவுசால் போட்ட பூமணியின் எழுத்து எனக்குப் பிரமிப்பூட்டியது.
வயிறுகள், ரீதி, என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு பூமணி என்ற ஆகிருதி என் மனதில் பிரமாண்டமாக எழுந்து நின்றார். கரிசல் மண்ணின் மக்களை ரத்தமும் சதையுமாக தன் எழுத்தில் பதிவு செய்திருந்தார். கரிசல் மண்ணின் ருசியை கி.ரா. எல்லோரும் சுவைக்கக் கொடுத்தாரென்றால் அந்த மண்ணின் வெக்கையை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே நிறுத்தினார். கி.ரா. ஒரு அற்புதமான கதைசொல்லியென்றால் பூமணி கதை நடக்கும் இடத்தில் நம்மைப் பார்வையாளனாக இருத்தி வைக்கிறார். நம் கண் முன்னே நடக்கின்ற கதையை நடத்துகிற பூமணியைக் காணமுடிவதில்லை. அவர் நாம் எதைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தாரோ அதைப் பார்க்கும் விதமாக தன் கலையின் வசீகரத்தால் நம்மை வசப்படுத்துகிறார். கதையின் நிகழ்வு துவங்கும் போது நாம் பூமணியை மறந்து விடுகிறோம். அவரும் தன்னடக்கத்தோடு தன்னை மறைத்துக் கொள்கிறார். வாசித்து முடியும்போது தான் தெரிகிறது பூமணி என்ற மகத்தான கலைஞனின் கலையாளுமை. தன் கலையின்கோணத்தில் தன் முற்போக்குப் பார்வையை தெளிவு படுத்துகிறார். இடையில் ஒரு சொல் சொல்வதில்லை. ஆனால் கதை நம்மை கோபம் கொள்ள வைக்கிறது. ஆவேசப்பட வைக்கிறது. சமூகவிமர்சனத்தைக் கூராக்குகிறது. சமூக மாற்றத்தைக் கோருகிறது.
கரிசலின் அந்திவானம் வர்ணங்களால் குழம்பியிருந்தது. அந்த இரவில் கோவில்பட்டி இலக்கியக்கூட்டத்தில் புதிதாய் ஒருவர் வந்து சேர்ந்திருந்தார். நான் சற்று தாமதமாகப் போய் வட்டத்தில் இணைந்திருந்தேன். மெலிந்து உயரமாக குட்டையான தலைமுடியுடன்,சிவந்த நிறத்துடன் ஒரு போலீஸ்காரரைப் போலவே தோற்றமளித்தார் அவர். மெல்லிய குரலில் அவர் பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் அருகிலிருந்த கவிஞர் தேவதச்சனிடம் யார்? என்று கிசுகிசுத்தேன். அவர் பூமணி என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. எழுத்தின் வழியே நான் உருவகித்திருந்த பூமணி இல்லை இவர். சற்றே ஏமாற்றத்துடன் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் அவர் மார்க்சிய அழகியல் கோட்பாடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவருடைய விவாதப்பாங்கு, கருத்துகளின் கூர்மை, என்னை மிகவும் ஈர்த்தது. கூட்டம் முடிவடையும் தருணம் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது உற்சாகத்துடன் என்னுடன் உரையாடினார். அவருடைய கதைகள் குறித்துப் பேசிய போது கவனமாகக் கேட்டார். அதுவரை நான் எழுதிய கதைகளை அவரிடம் படிக்கக் கொடுக்கலாமா என்று தயங்கியபடியே கேட்டேன். அவர் உடனே கொடுக்கும்படி சொன்னார். அதற்கடுத்த மாதத்தில் த.மு.எ.ச. வின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அங்கு பார்வையாளராக வந்திருந்தார். அப்போது நான் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டுபோய் படித்து விட்டு மிக விரிவாக ஒரு கடிதம் எழுதினார் பூமணி. எழுத்தின் சூட்சுமங்கள் குறித்து நான் விளங்கிக் கொள்ள பல குறிப்புகள் அந்தக் கடிதத்தில் இருந்தன.
தமிழிலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகை மாதிரி உருவாவதற்கு முன்னரே பிறகு, வெக்கை,போன்ற தமிழிலக்கியத்தின் முக்கியமான நாவல்களை எழுதியிருந்தார் பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியுடன் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். நாசர், ராதிகா, சார்லி, போன்ற திரைக்கலைஞர்கள் பங்கு பெற்ற அந்தத் திரைப்படமும் கரிசல்வாழ்வின் அவலத்தைக் கூறும் படமாகவே வெளிவந்தது. பல திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.
யதார்த்தவாதத்தின் மகத்தான நாவல்களாக பூமணியின் ’ பிறகு ‘ ‘ ’வெக்கை’ நாவல்கள் திகழ்கின்றன. பிறகு நாவல் சுதந்திரம் பெறும்போது துவங்குகிறது.அழகிரிப்பகடையைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கரிசல் கிராமத்தின் மாற்றம், தீப்பெட்டியாபீஸ் வருகிற போது மனித உறவுகளில் ஏற்படும் மாற்றம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தின் வரலாறாக விரிகிறது. தமிழில் எக்காலத்தும் சிறந்த நாவல்களில் ஒன்றாக பிறகு இருக்கும். அதே போல நிலத்தை அபகரிக்க நினைக்கும் வடக்கூரானை வெட்டிச் சாய்த்து விட்டு தலைமறைவாகத் திரிந்து நீதிமன்றத்தில் சரணடையும் வரையிலான நிகழ்வுகளை விறுவிறுப்புடன் சொல்லுகிற நாவல் வெக்கை. இப்போது வெளிவந்திருக்கும் அஞ்ஞாடி என்ற பெரும்படைப்பு இருநூறு ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது. கரிசல் கிராமத்தில் ஒரு அஞ்ஞாடிப்பள்ளருக்கும், ஏகாலிக்கும் இடையில் உருவாகும் நட்பாகத் துவங்கும் நாவல் எட்டையபுரம் வரலாறு, கட்டபொம்மன் வரலாறு, ஊமைத்துரை வரலாறு, கழுகுமலை கலவரம், சிவகாசிக் கொள்ளை என்று வரலாற்றின் பக்கங்களை விரித்துக் கொண்டே செல்கிறது. மனித விகாரங்களின் வழியே வரலாறு அதன் பொருண்மையான தளத்திலிருந்து நகர்ந்து மானுட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது அஞ்ஞாடி..
எப்போதும் கரிசல் பூமியில் அழியும் விவசாயத்தைப் பற்றியும், தீப்பெட்டியாபீஸுகளில் வதைபடும் குழந்தைகளைப் பற்றியும், ஒடுக்கப்படும் சாமானியர்களைப் பற்றியும் கவலையே பூமணியின். படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது.
கோவில்பட்டிக்கருகிலுள்ள கரிசல் கிராமமான ஆண்டிபட்டியில் பிறந்து கல்லூரிப்படிப்பு முடித்து கூட்டுறவுத்துறையில் பதிவாளராக ஓய்வு பெற்று இப்போது கோவில்பட்டியில் வசித்து வரும் பூமணி கோவில்பட்டிக்கு வந்த புதிதில் மறுபடியும் எண்பதுகளில் சந்தித்த மாதிரி நண்பர்களைச் சந்திக்க ஆவல் கொண்டார். இப்போதும் காந்திமைதானத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் கவிஞர் தேவதச்சன் இல்லை, எழுத்தாளர் கௌரிஷங்கர் இல்லை, கவிஞர் அப்பாஸ் இல்லை, எழுத்தாளர் கோணங்கி இல்லை, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இல்லை, வித்யாஷங்கர் இல்லை, எழுத்தாளர் நாறும்பூநாதன் இல்லை, எழுத்தாளர் அப்பணசாமி இல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பூமணி இல்லை. ஆனால் அவருடைய மெல்லிய உறுதியான குரல் எனக்குக் கேட்கிறது. அந்தக் குரலின் தனித்துவம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இலக்கியத்தின் நுட்பங்கள் குறித்தும், மார்சிய அழகியல் குறித்தும், மானுட அவலம் குறித்தும் சமூகமாற்றம் குறித்தும் அமைதியாக, அதே நேரம் அழுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் எங்கள் அன்புக்குரிய பூமணி.
கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி - திரு உதயசங்கர் அவர்களின் அருமையான பதிவு. கோவில்பட்டியின் இலக்கிய சூழலை, எழுத்தாளர்கள் உருவானதை எழுதியிருக்கிறார்.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி.
கோவில்பட்டி என்ற சிறிய ஊர் மிரட்டுகிறது.80களில் தீப்பற்றி எரிந்த சோவியத் இலக்கியங்கள் இன்று எங்களுக்கு கிடைக்காத தூரத்திற்கு சென்று விட்டது.பெரிய அளவில் சோவியத் நாவல்கள் சிறுகதைகள் பற்றிய அறிமுகமோ புத்தகங்களோ கூட கிடைப்பதில்லை.கார்க்கியின் தாய்,தாஸ்கோவெஸ்கியின் கரமசேவ் சகோதரர்கள்,டால்ஸ்டாயின் போரும் அமைதியும்,ஆன்டன் செக்காவின் சில சிறுகதைகள்நாடகங்கள் (நீண்ட தேடுதலுக்குப்பின் தான் மதுரையிலேயே கிடைத்தன).இவை கிடைத்ததே ஆச்சர்யமாகத்தான் பார்த்தேன்.நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.சோவியத் இலக்கியங்கள் குறித்தும் அதில் பொதிந்திருக்கும் மார்க்சிய அழகியல் குறித்தும் தாங்கள் ஒரு கட்டுரை வடித்தால் எங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.தோழர் அருணன் எழுதிய மார்க்சிய அழகியல் எனக்கு சரியாகப் புரியவில்லை.சரியாக எழுத துவங்க ஆசைப்படும் என்னைப் போன்றோருக்குப் பயனுள்ளதாக கட்டுரை அமையட்டும்.நன்றி..
ReplyDelete