ஸி.வி.பாலகிருஷ்ணன்
தமிழில்- உதயசங்கர்
ஆயிரத்தொரு இரவுகளில் விறகு வெட்டியின் மந்திரச் சொற்களால் திறந்த மலைக்குகைக்குள் அவன் நுழைந்த போது உண்டான ஒளிவெள்ளம் தான் என்னுடைய இளம் பிராயத்தில் என்றோ ஒரு நாள் கதைகளின் உலகத்திற்குள் பிரயாணம் செய்தபோது எனக்கும் தோன்றியது. எங்கே திரும்பினாலும் கதைகள்! கதைகள்!
கதைகளில் சில கண்ணீரால் நனைந்திருந்தன. மற்றும் சிலவற்றில் ரத்தத்தின் வாடை இருந்தது. சில கதைகளிலிருந்து செத்துப் போனவர்கள் முறைத்துப் பார்க்கிறார்கள். சில கதைகளில் அவர்கள் பேயாட்டம் போடுகிறார்கள். சில கதைகளினூடே போராளிகள் பயமின்றி நடந்து போகிறார்கள். வேறு சில கதைகளில் கடல் இரைச்சலும், புயற்காற்றும் வீசுகிறது. இன்னும் சில கதைகளில் பூரண சௌந்தரியமாய் தீச்சுவாலைகள்.
அந்தக் காலத்தில் அந்தர்யாத்ம ராமாயணமும், கிருஷ்ணகாதையும், தவிர வேறு எந்தப் புத்தகங்களும் வீட்டிலிருந்ததாக ஞாபகமில்லை. பக்கத்து வீட்டுப் பெரியவர் சாயங்கால வேளைகளில் மகாபாரதத்திலுள்ள பாடல் வரிகளைச் சத்தமாய் வாசிப்பார். பொதுவாக கிராமங்களில் காவியங்களின் மீது மிகுந்த பிரியம் இருந்தது. வள்ளத்தோல் கவிதைகளை எங்கு வேண்டுமானாலும் கேட்கலாம். அந்தந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த துரதிருஷ்டமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுகிற கல்யாணிக்குட்டியின் கஞ்சத்தனம் என்பது போன்ற காவியங்களை ரசித்து அருகிலுள்ள அச்சகத்தில் அச்சடித்து சந்தைகளிலும், வீடுகளிலும், விற்பனை செய்து கொண்டிருந்த கிராமத்துக்கவிகள் ஏராளம். ஆனாலும் என்ன காரணமோ கவிதை என்னை ஈர்க்கவில்லை. வாசித்து உணர்ந்து கொள்ள என்பதல்ல காரணம். மனசில் தங்கியது கவிஞர் இடசேரியின் கவிதை மட்டும் தான். அதற்கு இடசேரி தன் கவிதைகளினூடே நிறைய கதைகள் சொல்லியிருப்பதும் காரணமாக இருக்கலாம்.
வாசிக்கத் தொடங்கிய நாட்களில் என்னை மிகவும் பாதித்தவர் எஸ்.கே.பொற்றேகாட். ஜனரஞ்சகமான விவரணையும், மிகவும் சூட்சுமமான அநுபவங்களைக் கூட எளிதாக எழுதுகிற வாழ்க்கைப் பார்வையும் வாசகர்களிடம் ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் எப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற கதையோட்டமும், ஏறத்தாழ இறுதிவரை ஆர்வத்தை ஏற்படுத்துகிற விறுவிறுப்பும் அவரை மற்ற கதாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. பொற்றேகாடினுடைய கதைகளை வாசிக்கும்போது அவர் நமக்கு முன்னால் நின்று கொண்டு உற்சாகமாய் கதை சொல்லிக் கொண்டிருப்பதான சித்திரம் தோன்றும். கதை எழுதுதலின் பயிற்சிமுறை ரகசியங்களை வெளிப்படுத்துகிற எளிதான, மிகவும் சரளமான கதை சொல்லலாக இருந்தன பொற்றேகாடின் கதைகள். அன்று பொற்றேகாடின் கூடவே தகழியும், உரூபும், பஷீரும், காரூர் நீலகண்ட பிள்ளையும், தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தனர். டி.பத்மநாபனையும், எம்.டி. வாசுதேவன் நாயரையும் பின்னும் சிறிது காலம் கழித்தே வாசித்து அறிந்து கொண்டேன். சுற்றிலுமுள்ள மிகச் சாதாரணமான மனித வாழ்விலிருந்து அவர்கள் உருவாக்கிய கதைச் சித்திரங்கள் ஒளி வீசின. அவர்களைப் பின் தொடர்ந்தே நான் வாழ்க்கையை நேருக்கு நேர் பார்க்கத் தொடங்கினேன். அப்போது முன்பு பார்க்காத பல விஷயங்கள் வெற்றிலையில் மை தடவிப் பார்ப்பதைப் போல எனக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்த விஷயங்களே பின்னர் கதைகளாக மாறின.
சிறு வயதில் என்னுடைய ஒரே ஆசை எழுத்தாளன் ஆக வேண்டும் என்பது தான். இதை நான் வாய் விட்டுச் சொன்னபோது, கேட்ட கேலியும், கிண்டலும் இப்போதும் என்னுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அன்று கேலி செய்த என் தாய்மாமன் பல வருடங்களுக்குப் பிறகு புற்று நோய் பீடித்து இறக்கும் தருவாயில் என்னிடம், “ நீ எழுதியது அத்தனையும் நான் வாசித்திருக்கிறேன்..” என்று சொன்னார். அதைக் கேட்டபோது என் கண்களில் நீர் தளும்பியது. தொண்டையில் ஒரு விம்மல் எழுந்து வந்தது.
தாய்மாமனைப் பற்றித் தான் முதலில் ஒரு கதை எழுதியிருந்தேன். மருமக்கள் தாயம் வழியிலுள்ள ஒரு வீட்டில் அன்பும், சிநேகமும் கிடைக்காமல் வளர்கிற ஒரு குழந்தை தான் அதில் நாயகன். நான் அந்தக் கதையை என்னுடைய இரும்புப் பெட்டியில் ஒளித்து வைத்திருந்தேன். ஆனால் தாய்மாமன் அதைக் கண்டு பிடித்து விட்டார். கதையைப் படித்து விட்டு அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்த அம்மாவும், ஆச்சியும், நான் பெரிய தவறைச் செய்து விட்டதாக நினைத்தார்கள். பின்பு விஷயம் தெரிந்த பிறகு, ஒரு கதை எழுதியதற்குத் தானா? என்று அடுக்களையில் நின்று கேட்டனர்.
சொல்ல ஆரம்பித்தது ஆயிரத்தொரு இரவுகளில் வரும் விறகு வெட்டியைப் பற்றியல்லவா? மலைக்குகையிலிருந்து ஏராளமாக தங்கநாணயங்களையும் ரத்தினக்கற்களையும் வாரிக் கொண்டு விறகுவெட்டி வெளியேறினார்.
நான் உள்ளே சென்ற கதைக்குகையின் வாசல் அடைத்தே கிடந்தது. அதைத் திறப்பதற்கு உச்சரிக்க வேண்டிய மந்திரச் சொற்களை நான் மறந்து போய் விட்டேன். தன்னுள்ளே நிறையக் கதைகளைக் கொண்டுள்ள இந்தக் குகையிலிருந்து எனக்கு வெளியேற வேண்டும் என்று தோன்றவேயில்லை.
நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் ஜூன் 2001
No comments:
Post a Comment