உதயசங்கர்
கணந்தோறும் துடிதுடிப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைப் பேராற்றில் தான் கலைஞனும்
ஒரு கை நீரள்ளி அருந்துகிறான். அவன் அருந்துகிற ஒவ்வொரு துளியும் இந்த வாழ்வின் காட்சிகளை வேறு ஒரு கோணத்தில் அவனுக்குக் காட்டுகிறது. வாழ்வின் நுட்பங்களை அவனுடைய கலைமனம் ரசவாதம் செய்து கலையாக மாற்றுகிறது. படைப்பின் நுட்பங்களில் நாம் கவனம் கொள்கிற போது கலைஞனின் கலைத்துவத்தை நம்மால் உணரமுடிகிறது. யாரும் கவனிக்காத, எல்லோரும் அலட்சியப் படுத்துகிற எவருக்கும் ஒரு பொருட்டாக இல்லாத, அற்பமென, துச்சமென, நினைக்கிற எதுவும் கலைஞனின் மனதில் முக்கிய இடம் பிடிக்கிற விசித்திரத்தைப் பார்க்கிறோம். இந்த விசித்திரத்தின் வழியே தான் தன் ஊனை உருக்கி உயிரைக் கரைத்து கலையாகப் படைக்கிறான்.
மானுடத்தின் சாராம்சம் மனித உறவுகளே.மனித உறவுகளில் ஏற்படும் முடிவுறாத சிடுக்குகளைப் புரிந்து கொள்ளவே கலைஞன் முயற்சிக்கிறான். உறவுகளின் வழி வக்கிரங்களும்,குரூரங்களும், அலட்சியங்களும் விளைவதைக் கண்டு மனம் துயருற்ற கலைஞன் மீண்டும் மீண்டும் தன் படைப்பின் மூலம் விளங்கிக் கொள்ள விழைகிறான். அதையே மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்கிறான். ”கனவில் உதிர்ந்த பூ” என்ற தன்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பின் மூலம் குறிப்பிடத் தகுந்த சிறுகதைஎழுத்தாளராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட நாறும்பூநாதனின் இரண்டாவது தொகுப்பு இது.
எல்லோருடைய வாழ்விலும் அப்பாவுக்கென்று தனித்தஒரு இடம் உண்டு. நல்லதும் கெட்டதுமாக அப்பாவினால் பாதிப்படையாத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். பிஞ்சிளம் பருவத்தில் அப்பா என்கிற படிமம் மனதில் ஏற்படுத்திய ஆதர்சம்,அப்பாவின் விரல் பிடித்து அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடந்த பரவச உணர்வு, அப்பாவின் சட்டை, அப்பாவின் செருப்பு, அப்பாவின் பேனா, அப்பாவின் பேனா, அப்பாவின் புத்தகம், என்று அப்பாவின் உலகமே அற்புதமாகத் தோன்றும்.இளம் வயதில், சாகச நாயகனாக தெரியும் அப்பா, வளர வளர, மேக்கப் கலைந்த கோமாளியாகத் தோன்றுவதும், வில்லனாக மாறுவதும் நடக்கும். அப்பாவின் அலட்சியமும் கண்டிப்பும், அங்கீகரிக்க மறுக்கும் அப்பாத்தனமும், உலகிலேயே மிக மோசமான ஆள் தன்னுடைய அப்பாதான் என்று தோன்றும். விதிவிலக்குகள் இருக்கலாம்.ஆனால் அப்பாவாக தானே மாறும் போது, தன் அப்பாவின் குணாதிசயங்கள் வேறு ஒளியில் துலங்கும். கலைடாஸ்கோப்பின் ஒரு சிறுகோண மாற்றத்தில் வாழ்வு விசித்திரத் தோற்றங்களை உருவாக்குகிறதே. இந்தத் தொகுப்பிலும் அப்பா என்ற படிமத்தின் பன்முகத் தோற்றங்களை “கையெழுத்து, அப்பாவின் கடிதம், முகம்,” போன்ற கதைகளில் காண முடிகிறது. கடினசித்தம் கொண்ட அப்பாவாகத் தெரிகிற அந்த மனிதர் எழுதுகிற கடிதங்களில் அவருடைய பரிசுத்தமான- அது பத்தாம்பசலித்தனமாகக் கூட இருக்கலாம்- அன்பு ஒளி வீசுகிறதே. அதே போல’முகத்திலும், இலை உதிர்வதைப்போல’ கதைகளில் அம்மாவின் படிமம் எழுந்து உருக்கொள்கிறது.இயல்பான, பாந்தமான, பதவிசான, அம்மா.
இந்தத் தொகுப்பிலுள்ள மற்ற கதைகளில் ‘பிடிபடாத சூத்திரங்கள், யாருக்குத் தண்டனை, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ போன்ற கதைகளின் களன் வித்தியாசமாக அமைந்துள்ளதைக் குறிப்பிடவேண்டும். நாறும்பூநாதனிடம் இயல்பான ஒரு எள்ளல் தொனி கதைகளில் ஊடும் பாவுமாக நெய்யப் பட்டிருக்கிறது. அதே போல பிடிபடாதசூத்திரங்களில் வரும் கணக்கு வாத்தியாரும், யாருக்குத் தண்டனையில் வருகிற வேதநாயகமும் தமிழுக்குப் புதியவர்கள்.
கலைஅமைதி கூடி ஆழ்ந்த லயம் சேர்ந்த ஒரு சுருதியைப் போல, வெடித்துக் கிளம்பி மனசை உலுக்கும் ஒரு கிராமியப் பாடலைப் போல அபூர்வமாய் ‘ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்’ கதை உருவாகியுள்ளது. இதில் வருகிற சாமிக்கண்ணுவின் மனசு நாறும்பூநாதன் என்ற கலைஞனுக்கு பிடிபட்டிருக்கிறது.
நாறும்பூநாதனின் பெரும்பாலான கதைகளில் வீடும் குடும்பமும் முக்கியக் களன்களாக அமைந்திருக்கின்றன.பாலியத்தின் நினைவுச் சுவடுகளைப் பின்பற்றி எழுதிப் பார்த்திருக்கிற கதைகள். அதனால் அதன் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானது தான். சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் மறுபடியும் எழுதத் துவங்கியிருக்கிற நாறும்பூநாதனின் இந்தக் கதைகள் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளன் மீண்டும் தமிழ்ச் சிறுகதை வெளிக்குள் பிரவேசிக்கப் போவதைப் பிரகடனப் படுத்துவதாகவே இருக்கின்றன.
தமிழ்க் கதாவெளியின் பரிமாணங்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. உலகச் சிறுகதைகளை எழுதும் எழுத்தாளர்களை கொண்டிருப்பதில் கதாவெளி பெருமை கொள்கிறது. இந்த வெளியில் எல்லாப் பறவைகளும் பறந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பைப் பிடித்து உன்னி எழும்பி வெளியில் சிறகுகள் விரித்து பறக்க எத்தனிக்கிற நாறும்பூநாதன்! அதற்கான எல்லா முயற்சிகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.
அதோ கதாவெளியில் தன் சிறகுகளை விரித்து உயரே உயரே பறந்து கொண்டிருக்கிற ஒரு பறவை….என் இனிய நண்பன் நாறும்பூ!
ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்
நாறும்பூநாதன்
விலை – ரூ 70/
வெளியீடு – வம்சி புக்ஸ்
19. டி.எம். சாரோன்
திருவண்ணாமலை.
No comments:
Post a Comment