Friday, 6 July 2012

எழுத்தாளனின் பிறப்பு

 

எஸ். கே. பொற்றேகாட்S._K._Pottekkatt

 

தமிழில்- உதயசங்கர்

 

நான் ஹைஸ்கூல் மாணவனாக இருந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சி தான் என்னைச் சிறுகதை எழுதும்படி தூண்டியது. தன்னுடைய மகனை நன்றாக வளர்க்கவும், அவனுக்குக் கல்வி தருவதற்காக தன்னுடைய கை முதலையெல்லாம் விற்றுச் செலவழித்து அதுவும் போதாமல் பக்கத்து வீடுகளில் வேலைகள் செய்து நிறைய்ய கஷ்டங்களை அநுபவித்த எழுத்தறிவில்லாத ஒரு வயதான அம்மாள் இருந்தாள். அவள் ஆசைப்பட்ட படியே அந்த மகன் ஒரு அரசாங்க உத்தியோகஸ்தன் ஆனான். பிறகு அவனுக்கு ஏற்ற அரசாங்க ஊழியையைத் திருமணம் முடித்து தூரமாய் ஓரிடத்தில் சுகமாய் வாழ்ந்தான். அவனுடைய அம்மாவைக் கவனிக்காமல் விட்டு விட்டான். தனிமையிலும் பசி பட்டினியிலும் கிடந்துழன்ற அந்தக் கிழவி தன்னுடைய மகனின் மனதைக் கரைப்பதற்காக நீண்ட கடிதங்கள் எழுத என்னைத் தேடி வருவாள். நான் ஸ்கூல் ஹோம்வொர்க் செய்து கொண்டிருப்பேன். பாவம் அந்த அதிர்ஷ்டம் கெட்ட கிழவி ஏதாவதொரு ஸ்டேஷனரிக் கடையில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய கோடிட்ட கடிதம் எழுதும் தாளும், முத்திரை உறையையும், ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் தடவித்தடவி படிகளேறி என் வீட்டு வராந்தாவிற்கு வருகிற காட்சி இப்போதும் என் கண்முன்னே தெரிகிறது. அவள் கடிதத் தாளையும் உறையையும் என் மேஜையினருகில் வைத்துத் தரையில் முழங்கால் மடித்து அமர்வாள்.

தன்னுடைய கஷ்டங்களையும், மகனுக்காக அவள் செய்த தியாகங்களையும் பொங்கி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டும், மூக்கைச் சிந்திக் கொண்டும் ஒவ்வொன்றாகச் சொல்லுவாள். அவன் வயிறு நிறைய சாப்பிடுவதற்காக நான் பட்டினி கிடந்தேன். அவனுக்கு ஸ்கூலில் உபகரணப்பெட்டி வாங்கப் பணமில்லாததால் என்னுடைய இடுப்பில் ரெம்ப காலமாய் கிடந்த ஒரு பொற்காசை விற்றேன். இதெல்லாம் அவனுக்கு ஞாபகமிருக்கிறதா என்று எழுதிக் கேள். இப்போது அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை. அவன் என்னைக் குஷ்டம் பிடித்த நாயை ஒதுக்குவது போல ஒதுக்கிவிட்டான். இதையெல்லாம் அவன் மனசு இரங்கும்படி எழுதி அனுப்ப வேண்டும் என் மகனே! ( இது என்னிடம்). தெய்வத்தை மறக்க வேண்டாம் என்றும் சொல்ல வேண்டும்.

மன்னிக்கவே முடியாத, நன்றி கெட்ட தன் மகன் மீது அந்தக் கிழவிக்கு எந்த வெறுப்பும் இல்லை. அவனை மயக்கிக் கொண்டு போன அந்தச் சிமிட்டியின் மீது தான் அவளுடைய வெறுப்பு முழுவதும் இருந்தது.

எனக்கு அந்த மூதாட்டியின் பரிதாபநிலையைப் பார்த்து அநுதாபம் தோன்றியது. அவள் கண்ணீரைக் கலந்து சொல்லிய கதைகள் என்னை உணர்ச்சிகரமாக்கியது. அவள் சொன்னதையெல்லாம் வரிசைப்படுத்திச் சொந்தமாய் சில சரஸ்வதி சமாச்சாரங்களையும் சேர்த்து அந்த மடையனான மகனுக்குத் தொடர்ந்து கடிதங்கள் எழுதி அனுப்பினேன். இரண்டு மூன்று மாதங்கள் கழிந்த பிறகு, அவன் மனைவிக்குத் தெரியாமல் அம்மாவுக்கு ரகசியமாய் கொஞ்சம் பணம் அனுப்பத் தொடங்கினான். அவன் மனம் மாறியது சொந்த புத்தியாலா அல்லது என்னுடைய கடிதங்களில் எழுதிய வாக்கியங்களினாலா என்று எனக்குத் தெரியாது. கடைசியில் சொன்னது தான் உண்மையென்று குழந்தைகளுக்கேயுரிய வழக்கத்தில் நான் நம்பினேன். அந்த மகன் ஒரு தடவை அம்மாவைப் பார்க்க வரவும் செய்தான். அப்போது அவன் அவளிடம் யார் இந்தக் கடிதங்களையெல்லாம் எழுதிக் கொடுத்தது என்று கேட்டதாகவும் ஒரு ஸ்கூல் மாணவன் என்று கிழவி பதில் சொன்னதாகவு நான் தெரிந்து கொண்டேன். உடனே எனக்குப் பெருமை தாங்கமுடியவில்லை.

ரெம்பநாள் மகனின் ஆதரவில் சுகமாய் வாழும் முன்பே அந்தக் கிழவி முடிவில்லாத அமைதியைத் தேடி மண்ணிற்குக் கீழே போய்ச் சேர்ந்தாள். ஏறத்தாழ முழுக்குருடியாக இருந்த அந்த மூதாட்டி தான் என்னை சிறுகதை எழுத வைத்த என்னுடைய முதல் குருநாதர். அவளுடைய மகனுக்கு அன்று நான் எழுதிய கடிதங்கள் தான் என்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகள் என்று சொல்லலாம். சிறுகதைகளினால் மற்றவர்கள் மனசைக் கரைய வைக்கும் திறமை எனக்கிருக்கிறதா என்று நான் சொல்ல முடியாது. ஆனால் எரிகிற நெஞ்சும், காய்ந்த வயிறுமாய் கஷ்டப்பட்ட ஒரு தரித்திரத்தாயின் அந்திமக்காலத்தைக் கொஞ்சம் நம்பிக்கைக்குரியதாக்கினேன். பாசமில்லாத ஒரு இளைஞனுக்கு ஹிருதய அன்பின் ஒரு சித்திரத்தை வரைந்து காண்பித்து அவன் மனதை இளகவைக்கவும் முடிந்தது என்று நான் பெருமையுடன் நம்புகிறேன்.

நன்றி- கிரந்த லோகம்

மார்ச் 1950

No comments:

Post a Comment