உதயசங்கர்
எப்போதும் கனவுகள் காண்பவன் நான். கனவுகளைச் சுவாசித்து, கனவுகளைத் தின்று, கனவுகளால் வளர்க்கப்படுபவன். கனவுகளின்றி ஒரு நாளும் நான் இருந்ததிலை. உறங்கியதில்லை. ஒரு ஐந்து நிமிடமே உறக்கம் என்றாலும் கனவுப்பூச்சி என்னைச் சுற்றி வலை பின்னத் தொடங்கி விடும். விழித்திருக்கும் போதும் கனவுகள் என்னை மொய்த்து விடும். என்ன உறங்கும்போது காணும் கனவுகளில் படைப்பூக்கத்தின் சக்தி நிரம்பி வழியும் என்றால் விழித்திருக்கும்போது அந்தப் படைப்பூக்கத்தின் செயல்பாடுகளாக முண்டியடிக்கும். நான் கனவுகள் காண்பதை விரும்புகிறேன். கனவுகளிலிருந்து என்னை யாரும் பிரித்து விடக் கூடாது என்று என்னைச் சுற்றி நானே அமைத்துக் கொண்ட ஒரு பிரத்யேகமான கூட்டில் இருப்பதையே பெரும்பாலும் விரும்புகிறவன். வாழ்க்கையே ஒரு கனவு தானோ என்று அவ்வப்போது வியந்து போகிறேன். பல சமயங்களில் நடந்து கொண்டிருப்பதெல்லாம் ஏற்கனவே கனவுகளில் நடந்து முடிந்ததான பிரமையும் வரும்.
நான் சந்தித்த மனிதர்களை ஏற்கனவே கனவுகளில் சந்தித்திருக்கிறேன். இனி சந்திக்கப் போகிறவர்கள் என் கனவுகளில் இப்போது உலவிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு அற்புதம். எத்தனை வண்ணங்கள்! எத்தனை பேதங்கள்! எத்தனை உருவங்கள்! எத்தனை குணங்கள்! வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ருசிக்கப் பேராவல் பொங்குகிறது. இத்தனை மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இருப்பதால் தானே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது. இயற்கை இனியது. மானுட வாழ்க்கை மகத்தானது. எத்தனை தத்துவங்கள்! எத்தனை படைப்புகள்! எத்தனை முரண்பாடுகள்! எத்தனை அதிசயங்கள்! எத்தனை அற்புதங்கள்! எத்தனை மர்மங்கள்! முடிவிலியான காலத்தின் எத்தனையோ ஜாலங்கள்! அந்த ஜாலத்தின் ஒரு கோலம் தானே இந்த பூமி, ஜீவராசிகள்,எல்லாம். நினைத்துப் பார்த்தால் காலப்பெருவெள்ளத்தின் ஒரு துளியின் துளியாக மனிதன். ஆனால் அவன் தான் காலத்தை அளக்கிறான். படைப்பே படைப்பாளியை விஞ்சும் முயற்சியை என்ன சொல்வது?
எனக்கு மனிதர்கள் மீது நம்பிக்கையிருக்கிறது. இந்தப் பூமியின் புத்திரர்கள் மானுடஅறத்தை பூமிப்பரப்பெங்கும் நிலைநிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. மீண்டும் மீண்டும் இந்த அறவுணர்வை வலியுறுத்தவே எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கிறார்கள். தங்களைப் பலி கொடுத்தேனும் மானுடத்தின் மகத்துவத்தை பிரேரணை செய்கிறார்கள். விகசிக்கும் வாழ்வின் கணங்களை, அந்தக் கணங்களில் வாழும் மனிதர்களைத் தங்கள் எழுத்தில் படைக்கிறார்கள். முரண்களையும், துயரத்தையும், அழுக்கையும், அவமானத்தையும், அவலத்தையும், படைக்கும் கலைஞன் தன் சக மனிதர்களின் மனதில் வாழ்க்கை குறித்த விசாரணையைத் துவக்கி வைக்கிறான். அதன் மூலம் அறவுணர்வைத் தூண்டி விடுகிறான். இதைச் செய்கிற படைப்புகள் உன்னதமான படைப்புகளாகின்றன.
என் கனவுகளில் உலவிய மனிதர்கள் எல்லாம் எங்கோ நினைவுகளின் ஆழத்தில் புதைமணலில் புதைந்து கிடந்தார்கள். என் வாழ்வின் கணங்கள் தோறும் என்னைச் செதுக்கிய அந்தச் சாதாரண மனிதர்கள் இன்னமும் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாங்கள் செய்ததைக் குறித்து அவர்களுக்குத் தெரியாது. மற்றவர்கள் அவர்களுக்குச் செய்ததைக் குறித்தும் தெரியாது. அதனால் அவர்கள் தன்முனைப்பின்றி, சுளித்தோடும் நதியின் சுழல்கள் எப்படியெல்லாம் சுழற்றுகிறதோ அப்படியெல்லாம் சுழன்று கொண்டே வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பலசமயங்களில் பெயரே கிடையாது. தங்கள் வாழ்வில் இப்படி எதிர்கொண்ட சாதாரணர்களைப் பற்றி பலரும் கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவர்கள் முக்கியப் பிரமுகர்கள் இல்லையே. ஆனால் அந்தச் சாதாரணர்கள் இல்லாமல் தாங்கள் உருவாகவில்லை என்று உணர்வதில்லை.
மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும், மறு புறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரணமக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்துக்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமாக விடிவுக்கானப் போராட்டமாக உருமாறுகிறது. அவர்கள் தான் இந்த பூமியின் கதாநாயகர்கள். வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே என்றும் விரும்புகிறேன்.
இரவின் அமைதியில் களக் களக் என்ற மெல்லிய சத்தத்துடன் இருளுக்குள் மினுக்கும் நீர்ப்பரப்பு, அவ்வப்போது நீருக்கு மேல் துள்ளிவிழும் மீன்கள், நீரின் உயிர்வாசனை, எல்லாம் என் நினைவு நதியில் பெரும் சலனங்களை ஏற்படுத்தின. மறதியின் புதைசேற்றில் ஆழ்ந்து கிடந்த அந்தச் சாதாரண மனிதர்கள் எழுந்து நதியின் நீர்ப்பரப்பில் வெள்ளிமீன்களென மின்னினார்கள். .என்றென்றும் பெருமைப்படும் என்னுடைய பிறந்த ஊரான கோவில்பட்டி என்னுடன் பேசியது. என்னுடைய பால்யகால நண்பர்கள் குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்த காட்சிகள் தெரிந்தன. என்னுடைய தோழர்கள் கையில் செங்கொடியுடன் கோஷமிட்டார்கள். புரட்சிக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். நான் கொண்டாடுகிற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளோடு பிரமாண்டமாய் விசுவரூபம் எடுத்து நின்றார்கள். இவர்கள் என்னோடு பேசியதை நான் புரிந்து கொண்ட விதத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்த ஆசையின் விளைவே நினைவு என்னும் நீள்நதி தொடர்.
இந்தத் தொடரைச் சாத்தியமாக்கிய இரண்டு பேரை என்றென்றும் மறவேன். என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட என் அருமைத் தோழன் எழுத்தாளர் பவா செல்லத்துரை நான் இந்தத் தொடர் எழுத முதல் காரணம். அடுத்தது மீடியா வாய்ஸ் பத்திரிகையின் சிறப்பாசிரியர் திரு. ராவ் அவர்கள். அலைபேசிப் பேச்சிலேயே நீண்ட நாள் பழகிய நெருக்கமான நண்பராக மாறியவர். தொடரின் ஒவ்வொருபகுதியையும் படித்தவுடன் என்னைத் அலைபேசியில் தொடர்பு கொண்டு அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டவர். சென்னையில் அவரை நேரில் சந்தித்த போது கண்ட அவருடைய எளிமை என்னை வியப்பிலாழ்த்தியது. அவரின்றி இந்தத் தொடர் சாத்தியமாயிருக்காது. என்னுடைய ஒவ்வொரு கட்டுரைக்கும் உயிர்த்துடிப்புடன் அற்புதமான ஓவியங்கள் வரைந்த ஓவியர் மனோகர் அவர்கள், அவ்வப்போது என்னிடம் தொடர் குறித்து உரையாடியதை மறக்க முடியாது. அவருடைய ஓவியங்கள் என்னுடைய கட்டுரைகளுக்கு மிகப் பெரிய பலம். அவருக்கு என் அன்பும் நன்றியும். ஒவ்வொரு வாரமும் தொடர் குறித்து நினைவுபடுத்தி அதை அனுப்பியவுடன் படித்து சந்தேகங்களைத் தெளிவுபடுத்திய நண்பர் பாலாவுக்கு நன்றி. இந்தத் தொடர் முழுவதும் அதன் வடிவமைப்பு குறித்து பெரிதும் பேசப்பட்டது. அழகாக வடிவமைத்த மீடியா வாய்ஸ் பத்திரிகை இதழ் வடிவமைப்புக் குழு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
மீடியா வாய்ஸ் இதழ் வந்ததும் வாங்கிப் படித்து விட்டு உடனே தங்களுடைய கருத்துகளைச் சொன்ன என் இனிய நண்பர் மீடியா வாய்ஸ் பத்திரிகையின் தலைமை நிருபர் திரு. பி.என்.எஸ்.பாண்டியன், சென்னையைச் சேர்ந்த நண்பர் சீனிவாசன், என்னுடைய எழுத்தாள நண்பர்கள் கமலாலயன், அப்பணசாமி, மாரீஸ், கவிஞர் லட்சுமிகாந்தன், நாறும்பூநாதன், கிருஷி, சு.வெங்கடேசன், பால்வண்ணம், எனது துணைவியார் திருமதி. மல்லிகா, மற்றும் மீடியா வாய்ஸ் வாசகர்கள் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.
எழுதித் தீராதது வாழ்க்கை வாழ்வெனும் பேராற்றில் ஒரு கை நீரையே அள்ளியிருக்கிறேன். இன்னும் மீதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அன்பின் ஊற்றாய் அருஞ்சுனையாய் எங்கும் மானுடம் நிறைந்திருக்கிறது.. வாழ்க மானுடம்!
நன்றி – மீடியா வாய்ஸ்
புகைப்படம் – மோகன் தாஸ் வடகரா
அருமை.
ReplyDeleteநன்றி.