Saturday 14 July 2012

குழந்தைகளின் ஆரோக்கியம்

 

உதயசங்கர்pictures2

 

குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிற நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. சரியான உணவின்றி, மருத்துவக்கவனிப்பின்றி, சரியான சத்துணவுக்கு வழியின்றி, நோய்த்தொற்றினால், பல குழந்தைகள் ஐந்து வயதுக்குள்ளாகவே இறந்து போகநேரிடுகிறது. அரசாங்கத்தின் பைத்தியக்காரத்தனமான அறிவிப்புகள் பெரும்பாலும் ஏழை,எளிய மக்களையே அதிகம் பாதிக்கின்றன. தற்போதைய வறுமைக்கோட்டு வருமான வரம்பு ரூ.32 என்ற அறிவிப்பு ஒன்றே போதும் நமது அரசாங்கம் பைத்தியக்காரத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இதன் விளைவு அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எட்டாக்கனியாகவே ஆகிவிட்டன. எதிர்கால சமுதாயத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத அரசின் மருத்துவக்கொள்கையும், மருந்துக்கொள்கையும், அரசின் சேவையாக இருக்க வேண்டிய மருத்துவத்தை வியாபாரமாக மாற்றி விட்டது. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் வேட்டைக்களமாக இந்தியமக்களின் உடல்,மன,நலமும் மெல்ல மெல்ல மாறி வருகின்றது. மருத்துவர்களும் மக்களின் உயிர் பற்றிக் கவலைப்படாத, மனிதாபிமானம் இல்லாத வியாபாரிகளாக மாறி வருகின்றனர். மக்களின் சுரணையின்மை, அலட்சியம், மந்தைபுத்தி, அரசின் கையாலாகாத்தனம், எல்லாம் சேர்ந்து சுற்றுச்சூழல், தண்ணீர், காற்று, உணவு எல்லாவற்றையும் மாசு படுத்தி உயிர்கள் வாழத் தகுதியில்லாததாக இந்தியாவை மாற்றி வருகின்றனர்.

முதலாளித்துவத்தின் உச்சபட்ச நுகர்வின் களமாக மாறியுள்ள இந்தியாவில் மக்கள் மனங்களை வசப்படுத்துவதற்கு ஊடகங்கள் பயன்படுகின்றன. எந்த விளம்பரத்தையும் பணம் கொடுத்தால் போடுவதற்கு தயாராக இருக்கின்ற ஊடகங்கள் அந்தப் பொருட்களின் உண்மைத்தன்மை பற்றிய அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளை வெளியிடத் தயங்குகின்றன. கோக், பெப்சியில் கலந்துள்ள வேதியல் பொருட்கள், டையரிமில்க் சாக்லேட்டில் கண்டெடுக்கப்பட்ட கம்பி, புழுக்கள் பற்றி, ஜங்க் புட் எனச் சொல்லப்படும் உணவுப்பொருட்களினால் ஏற்படும் உடல்நலக்கேடுகள் பற்றி, எதையும் பகிரங்கமாகச் சொல்வதில்லை அல்லது மேலோட்டமாகச் சொல்லிச் செல்கின்றன. ஏனெனில் அந்தக் கம்பெனிகளின் விளம்பரங்கள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தான். அத்துடன் இந்தியாவின் பெரும்பாலான ஊடகங்கள் இந்திய முதலாளிகளாலேயே நடத்தப்படுகின்றன. எனவே தங்களுடைய வர்க்கத்துக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கமாட்டார்கள். லஞ்சம், ஊழல், மலிந்துள்ள இந்திய அதிகார வர்க்கத்தின் சமூகப்பொறுப்பின்மையும் இதற்குத் துணைபோகின்றன. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 1500 ஆங்கில மருந்துகள் தாராளமாகப் புழக்கத்திலிருக்கின்றன. இந்த மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளின் தீவிரம் கருதியே மேலை நாடுகளில் இந்த மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் இந்திய மருத்துவக்கவுன்சில் உட்பட யாவரும் அறிந்த ரகசியம்.இப்படிப்பட்ட புறவயமான சூழலில் குழந்தைகளின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று நாமே யோசித்துக் கொள்ளலாம்.

நம்முடைய உயிரோட்டமில்லாத கல்விமுறையினால் படித்தவர்களுக்கும் கூட நோய் என்றால் என்ன? நலம் என்றால் என்ன? என்று சரியாகத் தெரிவதில்லை. நம்முடைய உடலை விட பெரிய மருத்துவர் வெளியில் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். உடலின் மொழியை நாம் தெரிந்து கொண்டோமானால் பெரும்பாலான சாதாரண உடல் உபாதைகளை நாம் நம்முடைய பழக்கவழக்கங்களின் மாற்றத்தினாலேயே சரி செய்து கொண்டு விடலாம். இதற்கு மிகப் பெரிய மருத்துவ அறிவோ மருந்துகளோ தேவையில்லை.

குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும் வரை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. தாயின் வலிமை மிக்க பாதுகாப்புப்படையணி வரிசை குழந்தையையும் பாதுகாக்கிறது. ஆனால் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பிறகு, புத்தம் புதிதாய், சின்னஞ்சிறுசாய், இந்த வெளியுலகை எதிர் கொள்கிறது. அதனுடைய உடலின் பாதுகாப்புப்படையணி இன்னும் தன் பிஞ்சுப் பருவத்திலேயே இருக்கிறது. அந்தப் படையணி இந்தப் புதிய உலகத்தில் ஒவ்வொரு பாடமாகக் கற்றுக் கொள்கிறது. அதிகக்குளிர், அதிக வெப்பம், தூசு, மாசு, இவற்றை எதிர்கொள்ளுதல், அது வரை தாயிடமிருந்தே உணவைப் பெற்றுக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்த பிறகு பருப்பொருளான திட மற்றும் திரவ உணவு, அதன் உடலின் செரிமானம், கழிவு வெளியேற்றம், என்று எல்லாவற்றையும் தானே நிர்வகித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போது குழந்தை தன் உடலின் தனித்துவத்துவத்தைப் புரிந்து கொள்கிறது. அதைக் கண்டுபிடிக்கச் சில பரிசோதனைகளை குழந்தையின் உடல் நடத்துகிறது. அதன் மூலம் அது தன் தனித்துவத்தைப் புரிந்து கொள்ளவும், அதை தன்னுடைய பாதுகாப்புப்படையணிக்கு உணர்த்தவும் நினைக்கிறது.

நோய் என்றால் என்ன? உடலில் ஏற்படும் மாறுமை. அல்லது மாறுபாடு. உடலில் ஏன் மாறுபாடு ஏற்படுகிறது? உடலின் இயக்கத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும் புறவயமான காரணிகள் ஒரு காரணம். உதாரணத்துக்கு கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட பிறகு அதன் விஷம் உடலில் கலந்து விடாதிருக்க உடலின் மருத்துவர் தன் பாதுகாப்புப்படையணியிடம் இடும் கட்டளைக்கேற்ப வயிற்றாலை என்ற மாறுமையை உருவாக்குகிறது. தொடர்ச்சியான மலக்கழிச்சலின் மூலம் உடலில் சேரவிருந்த விஷப்பொருட்கள் வெளியேற்றப்படுகிறது. இது இயற்கையான உடல் தனக்குத் தானே செய்து கொள்ளும் மருத்துவம். இதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. நீர்ச்சத்து உடலில் குறைந்து விடாமலிருக்க அதிக நீரும், எளிய உணவும், ஓய்வும் போதுமானது. உடலிலுள்ள விஷப்பொருட்கள் வெளியேறி விட்டதாக பாதுகாப்புப்படையணிக்குத் திருப்தி ஏற்பட்டதுமே அது வயிற்றாலையை நிறுத்தி விடும். ஆனால் இரண்டு முறைக்கு மேல் வெளியே போய் விட்டால் போதும் அவ்வளவு தான் உடனே மருத்துவமனைக்குச் சென்று மருந்துகளைக் கொடுத்து விஷப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேறவிடாமல் தடுத்து விடுகிறோம். அது மட்டுமல்ல கழிவு வெளியேற்ற செயல்பாட்டில் இடையூறு ஏற்படுத்தி விடுவதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மலம் வெளியேறாது. அது மட்டுமல்ல பசியிருக்காது. உடல் சோர்வாக இருக்கும். பின்னர் சில சமயம் மலம் வெளியேற மருந்து சாப்பிட வேண்டிய நிலைமைக்கு குழந்தைகளை ஆளாக்குகிறோம். 

இது மட்டுமல்ல பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அது ஏதோ அவர்களுக்கு கௌரவக்குறைச்சலாகி விடுகிறது. தூசு, மாசு, அதிகக் குளிர், அதிக வெப்பம் இவற்றால் நம்முடைய உடலிலுள்ள சளிச்சவ்வுகள் உடலின் பாதுகாப்புக் கருதி அதிகமான நீரை உற்பத்தி செய்து தூசிகளை வெளியேற்றுகின்றன, உடலின் சமநிலையைப் பாதுகாக்கின்றன. அதற்காகவே சளி உருவாக்கி நம் உடலின் இயக்கம் தடைபடாமலிருக்கவும், உடலின் முக்கிய உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாமலிருக்கவும் நமது உடல் மருத்துவர் உருவாக்குகிற முறைகளே, தும்மல், இருமல், மூக்கு ஒழுகுதல், ஆகியன. இதன் மூலம் நம் பாதுகாப்புப்படையணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது. காற்றில் பரவி நம் உடலில் நுழையும் கிருமி, வைரஸ், எல்லாவற்றையும் எதிர் கொள்கிற திறனைப் பெறுகிறது. இதற்கு எதிரியின் பலத்தை அறிந்து கொண்டு, அவனுடைய ஆயுதத்தின் திறனை அறிந்து கொண்டு அதற்கேற்ப எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டியதிருக்கிறது. ஒரு முறை ஒரு எதிரியின் தாக்குதல் முறைகளையும், ஆயுதபலத்தையும் அறிந்து கொண்டு விட்டால் உயிர் அழியும்வரை அதன் ஞாபகத்திலிருந்து மறையாது. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் ரெண்டு தும்மல் போட்டாலோ, மூக்கு ஒழுகினாலோ, லேசாக இருமி விட்டாலோ, போதும். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி அவர்கள் தருகிற ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளைக் கொடுத்து குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை முடமாக்கி விடுகிறார்கள்.

இப்படியெல்லாம் சொல்வதினால் குழந்தைகளை மருத்துவமனைக்கேக் கூட்டிக் கொண்டு போகக் கூடாதென்றில்லை. எதற்கெடுத்தாலும் மருத்துமனை என்ற மனோபாவம் மாறவேண்டும். நம் உடலின் மருத்துவரை நாம் முதலில் நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வாதது எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதை நீக்க முடியுமா அல்லது மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை உணர வேண்டும். அந்தந்தக் குழந்தையின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுக்க அதன் உடல்மொழியை, மனமொழியை அறிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பற்றி நிறையப் பெற்றோர்களின் புகார் என்னவென்றால் சரியாவே சாப்பிட மாட்டேங்குது என்பது தான். குழந்தை தனக்குத் தேவையானதை தேவையான அளவு சாப்பிடவே செய்யும். ஆனால் பெற்றோர்களுக்கு தான் கொடுப்பதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல குழந்தை தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் குழந்தைகளைப் போல கொழு கொழுவென்று இருக்க வேண்டும் என்ற ஆசையும் கூட. குழந்தையின் ஆரோக்கியம் என்பது அதன் உற்சாகமான செயல்பாடுகளே. அதே போல அதற்கு ஒவ்வாததை எதிர்க்கிற ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியே. அதை விடுத்து கொழு கொழுவென பார்ப்பதற்கு அழகாக பிராய்லர் கோழிக் குழந்தைகள் வேண்டாமே

1 comment:

  1. எதற்கெடுத்தாலும் மருத்துமனை என்ற மனோபாவம் மாறவேண்டும். நம் உடலின் மருத்துவரை நாம் முதலில் நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வாதது எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதை நீக்க முடியுமா அல்லது மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை உணர வேண்டும். அந்தந்தக் குழந்தையின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுக்க அதன் உடல்மொழியை, மனமொழியை அறிந்து கொள்ள வேண்டும். ///

    அற்புதமான வரிகள் இவை. இன்றைய மருத்துவர்களின் முன்னேற்றத்துக்கு (!) மக்களின் தன்பயம்தான் மூலதனம். பூமணி சொல்வார்-அப்போது வெயிலில் ஓடி விளையாடி ஆரோக்கியமாய் இருந்த குழந்தைகள் வேறு இப்போது வெயிலுக்குப் பயப்படுகிற குழந்தைகள் வேறு என்று(தோராயமாக சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.அவரின் கருத்து இதுதான்)இது தான் உண்மை.

    வெயிலுக்குப் பயப்படுகிறோம்.மழை வந்தால் ஒதுங்குகிறோம். மகிழ்ச்சி என்பது மனிதன் உருவாக்குகிற கேளிக்கைகளில் மட்டுமே என்றாகிவிட்டது.அதையே குழந்தைகளும் கற்கிறார்கள். 60% நோய்கள் மனதினால் வருவது.உடல் வெளிப்படுத்த மட்டுமே செய்கிறது.அமெரிக்காவில் பாதிக்கு மேல் அறுவை சிகிச்சைகள் தேவையே படுவதில்லையாம். அறுத்து தள்ளுகிறார்கள் வியாபார நோக்கில் மருத்துவர்கள்.

    நவீன மனிதன் மனஅளவில் பலவீனமானவன்தான் என்னதான் முன்னேறியிருந்தாலும்.

    ReplyDelete