Sunday 15 July 2012

பாஞ்சானின் சிரிப்பு

உதயசங்கர்

an_untitled_portrait_modern_art

என்னுடைய பாலியகால நண்பர்களில் பலருடன் இப்போது எனக்குத் தொடர்பே இல்லை. அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. இப்போது யோசிக்கும் போது எத்தனையெத்தனை நண்பர்கள்! எங்கள் கன்னிவிநாயகர் கோவில் தெருவில் நாங்கள் ஆடிய ஆட்டங்கள், விளையாட்டுகள், நாடகங்கள், இருளப்பசாமி கோவிலில் தும்பைச் செடிகளைக் கொத்தாகப் பறித்துக் கொண்டு வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்தது, அசங்காமல் அப்படியே தரையில் படுத்தபடியே போய் தட்டான்களைப் பிடித்தது, மழைக்காலத்தில் எப்படியோ உருவாகி அருகம்புல்லில் ஊர்ந்து கொண்டிருக்கும் பாப்பாத்திப்பூச்சியைப் பிடித்து தீப்பெட்டியில் அடைத்து வளர்ப்பது, பொன்வண்டுகளைப் பிடித்து அதற்கென்று ஒரு சிறு பெட்டி செய்து அதில் அவற்றை விட்டு, காலை, மதியம், இரவு, என்று அதைக் கவனித்துக்கொண்டிருப்பது, எருக்கம்செடிகளில் இலைகளுக்குப் பின்னால் கூட்டுப்புழுவாக இருக்கும் வண்ணத்துப்பூச்சியின் கூட்டை அப்படியே இலையோடு பிய்த்து வீட்டில் வைத்து வண்ணத்துப்பூச்சி கூட்டை உடைப்பதை, ஒரு மொட்டு மலர்வதைப் போல அதன் சிறகுகள் மெல்ல விரிவதை, பார்ப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். புழுதியில் இருக்கும் இரண்டு கொம்புகள் மாதிரி அமைப்பு இருப்பதினால் மாட்டுப்பூச்சியெனப் பெயர் பெற்ற சின்னஞ்சிறு பூச்சியினை உள்ளங்கையில் சுழலவிட்டு அது ஏற்படுத்தும் கூச்ச உணர்வினால் சிரித்து மகிழ்வது, என்று எவ்வளவு ரம்மியமாக இருந்திருக்கிறது பாலியகாலம்!

எங்கள் தெருவில் இருந்த பெரியவீட்டில் குடியிருந்த அம்பலவாணன் முதலில் சிங்கம்புணரிக்கு மாற்றலாகிப் போனான். பின்னர் அசோக், உமாசங்கர், சின்னத்தம்பி, ராக்கையா, நெல்லையப்பன், கண்ணாயிரம், மந்திரமூர்த்தி, இன்னும் ஞாபகத்தின் இடுக்குகளில் மறைந்து போன எத்தனையோ நண்பர்கள். பள்ளிப்பிராயத்தில் மிகுந்த பக்திமானாக இருந்தேன். அநேகமாக செண்பகவல்லியம்மன் கோவிலின் அத்தனை விசேஷங்களுக்கும் போய்விடுவேன். இன்று என்ன அலங்காரம், என்ன வாகனத்தில் உற்சவம், யார் மண்டகப்படி, என்று தகவல்களை விரல்நுனியில் வைத்திருந்தேன். அது மட்டுமல்ல உற்சவத்துக்கு முன்னால் தெருக்களில் முரசறைந்து கொண்டு போகும் என் வயதொத்தவர்களோடு நானும் முரசறைந்திருக்கிறேன். என்ன சாமியாடுகிற கோவில்களைக் கண்டால் மட்டும் கொஞ்சம் பயமாக இருக்கும். அதுவும் அந்தக் கோவில்களில் கொடை நடக்கும்போது பசங்க எல்லோரும் அங்கேயே கிடப்பாங்க. ஆனால் நான் கொஞ்சம் தூரமாகவே இருப்பேன். அந்த ரெண்டாங்கு மேளமும், சாமியாடுகிறவர்கள் போடுகிற சத்தங்களும், எனக்கு வயிற்றைப் பிசையும். சாமிகள் வேறு துடியானவர்களா! நான் அந்தச் சாமிகளை நேருக்கு நேர் முகம் கொடுத்து பார்ப்பதையே தவிர்ப்பேன்.

நான் சுமாராகப் படிக்கிற கோஷ்டி. ஆனால் எங்கள் தெருவிலிருந்த மந்திரமூர்த்தி ரெம்ப நல்லா படிக்கிறவன். வகுப்பில் எப்போதும் அவன் தான் ஃபர்ஸ்ட். அவன் ரெம்ப டீசெண்டாக இருப்பான். எங்களை மாதிரி புழுதிக்காட்டில் புரளமாட்டான். குண்டியில் கிழியாத டவுசர் போட்டிருப்பான். மேலே சட்டையோ, முண்டா பனியனோ இல்லாமல் அவனை வெளியே பார்க்க முடியாது. பள்ளிக்கூடம் போகும்போதும் வரும்போதும் மட்டும் தான் எங்கள் மேலில் சட்டையிருக்கும். மற்ற நேரங்களில் புழுதி தான். அதோடு மந்திரமூர்த்தியின் பேச்சும் அவன் செய்கைகளும் பெரியவர்கள் பேசுவதைப் போல செய்வதைப் போல மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கும். யாரிடமும் தயக்கமின்றிப் பேசுவான். பேசும்போது கொஞ்சம் கர்வம் கூட இருக்கும். பேச்சுப்போட்டிகளில் பரிசு வாங்குவான். கட்டுரைப்போட்டிகளில் பரிசு வாங்குவான். எனவே எங்கள் பொறாமைக்குரியவனாக ஆகிவிட்டான். சதா நேரமும் அவனைப்பற்றிப் பேசுவதும், கருவுவதுமாக இருப்போம். அவனை மாதிரி முதல் ரேங்க் எடுக்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள் கொழுந்து விட்டெரிந்தது. அதற்காக எல்லாக் கோவில்களுக்கும் போய் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன். எங்களுடைய தெருவுக்கு இரண்டு தெரு தள்ளியிருந்த பாஞ்சான் என்கூடத் தான் படித்துக் கொண்டிருந்தான். அவனும் என்னுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டான்.

பரமசிவன் என்ற அவன் பெயர் எப்படி பாஞ்சானாகியது என்று தெரியவில்லை. அவன் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருந்தான். சிரிப்பென்றால் புன்னகையல்ல. பல் தெரிகிற சிரிப்பு. வகுப்பில் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிக்கும்போது சிரித்துக் கொண்டிருப்பான். அவர் அவன் சிரிப்பதைப் பார்த்து எழுப்பிக் கேள்வி கேட்கும்போதும் சிரிப்பான். அவர் அவனுடைய சிரிப்பினால் எரிச்சலுற்று அவனைப் பிரம்பினால் அடிப்பார். அப்போதும் சிரிப்பான். உடனே இன்னும் வெளம் அதிகமாகி அவன் அழும்வரை அடிப்பார். அவர் போய் மற்ற வாத்தியார்களிடம் சொல்லி வருகிற வாத்தியார்கள் எல்லாம் வகுப்புக்கு வந்ததிலிருந்து அவனையே கண் வைத்து அடிப்பதும் நடக்கும். இத்தனைக்கும் அவன் படிப்பில் மோசமில்லை. என்னைப் போல சுமாராகப் படிக்கிற பையன் தான்.. அந்தச் சிரிப்பு தான் அவனுக்கு எதிரியாக இருந்தது. எப்போதும் சிரிப்பு. எதற்கெடுத்தாலும் சிரிப்பு. விழுந்தாலும் சிரிப்பு. எழுந்தாலும் சிரிப்பு. என்ன பேசினாலும் சிரிப்பான். எதற்காகச் சிரிக்கிறான் என்று கேட்டால் அதற்கும் சிரிப்பான். சிரிக்காமல் இருக்கும் கணங்களே இல்லை என்று சொல்லி விடலாம். எல்லோரும் தன்னைக் கேலி செய்கிறான் என்றே நினைத்தார்கள். இதனால் எல்லோரும் அவன் மீது எரிச்சல் பட்டார்கள். கோபப்பட்டார்கள். அவன் கைகளினால் வாயை மூடிச் சிரிப்பை மறைக்க முயற்சி செய்வான். ஆனால் சிரிப்பு மறையாது. அந்தச் சிரிப்பு அவன் இந்த உலகத்தையே கேலி செய்கிற மாதிரியான சிரிப்பு. நிரந்தரமாக அவனுடைய முகத்தில் சிரிப்பை ஒட்டவைத்த மாதிரி இருக்கும்.

நான் கூட பலமுறை கேட்டிருக்கிறேன்.

“ எதுக்குடா எப்ப பாத்தாலும் சிரிச்சிகிட்டே இருக்கே..”

அதற்கு அவன், “ தெரியலடா..நானும் சிரிக்கக் கூடாதுன்னு தான் நெனைக்கேன்.. ஆனா தானா சிரிப்பு வருது…” என்று சிரித்துக் கொண்டே சொல்வான்.

நானும் அவனும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். சேர்ந்து சுற்ற ஆரம்பித்தோம். அவன் படிக்கும்போதும் அவனுடைய வழக்கமான சிரிப்புடன் நெஞ்சில் தட்டிக் கொண்டே தான் மனப்பாடம் செய்வான். அவனுடைய கையெழுத்து ஊசி ஊசியாய் இருக்கும். அவன் கையில் பேனாவை எழுத்தாணியைப் பிடித்திருப்பதைப் போலவே பிடித்து எழுதுவான். அதனால் தானோ என்னவோ பரீட்சையில் எப்போதும் ஏதாவது கேள்விகளை எழுதமுடியாமல் விட்டு விட்டு வந்து விடுவான். எழுத நேரம் போதவில்லை என்று சொல்லுவான். நான் பதில் தெரியாமல் கேள்விகளை விட்டு விட்டு வருவேன். அவன் பதில் தெரிந்தும் எழுதமுடியாமல் விட்டு விட்டு வருவான். பரீட்சை முடிந்ததும் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வோம்.

ஊரில் உள்ள ஒரு கோவில் விடமாட்டான் பாஞ்சான். எத்தனை சிறிய கோவிலாக இருந்தாலும் சரி பார்த்து விட்டால் போதும் நின்று நெற்றியிலும் நெஞ்சிலும் மாறி மாறி கைகளை வைத்து வாயில் ஏதோ முணுமுணுப்பான். நெற்றியில் எப்போதும் திருநீறு பூசியிருப்பான். ஆனால் அது ஒரு நவீன ஓவியம் போலவே இருக்கும். எனக்கு அவனைப் பார்த்து ஆசை வந்து விட்டது. இயல்பாகவே எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் அத்தனை பக்தியோ, சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிற பழக்கமோ கிடையாது. கோவிலுக்கும் வழக்கமாகப் போகிற பழக்கமும் கிடையாது. ஏதோ நல்லநாள், பொல்லநாளுக்குத் தான் கோவில் பக்கம் எட்டிப் பார்ப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த நானும் பாஞ்சான் அளவுக்கு பக்திமானாக இல்லாததில் வியப்பொன்றுமில்லை. பாஞ்சான் கூடப் பழக ஆரம்பித்ததிலிருந்து நானும் அவனுடன் சேர்ந்து கோவில் கோவிலாகச் சுற்ற ஆரம்பித்தேன். அதுவரை மார்கழி மாதத்தில் காலை ஏழு மணிக்கு முன்னால் எழுந்ததே கிடையாது. அந்த வருடம் பாஞ்சான் விடியற்காலை மூன்று மணிக்குப் பச்சைத் தண்ணீரில் குளித்துத் தயாராகி என் வீட்டுக்கு வந்து என்னை எழுப்புவான். நான் எழுந்து அந்தக் குளிருக்குப் பயந்து மரப்பொடி அடுப்பை அடைத்து விறகைத் திணித்து வெந்நீர் போட்டு குளித்து விட்டு செண்பகவல்லியம்மன் கோவிலுக்கு ஓடுவோம்.

சீர்காழிகோவிந்தராஜனின் கணீர்க் குரலில் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் அகவல் எங்களுக்கு மனப்பாடம். ” சீதக்களப செந்தாமரைப்பூம் பாதச்சிலம்பும் பல இசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்,” என்று சத்தமாய் பாடிக் கொண்டே தினமும் நூற்றியெட்டு முறை கோவிலைச் சுற்றி விட்டு ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், சரமாரியம்மன் கோவில், கன்னி விநாயகர் கோவில், பழனியாண்டவர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோவில், தட்சிணாமூர்த்தி கோவில், காளியம்மன் கோவில் மற்றும் போகும் வரும் வழியில் உள்ள குட்டிக் குட்டிச் சாமிகள் எல்லோரையும் கும்பிட்டுப் பிரசாதம் வாங்கித் தின்று விட்டு ஏழுமணி வாக்கில் வீட்டுக்கு வந்து சேருவோம். எல்லாச்சாமிகளிடமும் எங்களின் ஒரே வேண்டுகோள், விண்ணப்பம், சிபாரிசு, கோரிக்கை,பிரார்த்தனை என்னவென்றால் நாங்கள் மந்திரமூர்த்தியை விட மதிப்பெண்கள் அதிகம் வாங்க வேண்டும் என்பது தான். என்ன காரணத்தினாலோ எந்தச் சாமியும் எங்கள் விண்ணப்பத்தை நமது அரசு அலுவலகங்களைப் போல படித்தே பார்க்கவில்லை. அதனால் பள்ளியிறுதி வகுப்பு முடியும் வரை நாங்கள் ஒரு முறை கூட மந்திரமூர்த்தியை விட அதிக மதிப்பெண் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல அவன் எடுத்த மதிப்பெண்களின் அருகில் கூட போக முடியவில்லை.

பாஞ்சானுடைய நட்பு வேறு சில அநுபவங்களையும் தந்தது. அந்தக் காலத்தில் கோவில்பட்டி சிவகாசிக்கு அடுத்த தீப்பெட்டி நகரமாக இருந்தது. ஊரெங்கும் தீப்பெட்டியாபீஸுகள். அனைத்து வீடுகளிலும் தீப்பெட்டி சம்பந்தமாக ஏதாவது ஒரு வேலை நடந்து கொண்டிருக்கும். தீப்பெட்டியின் மேல்பெட்டி, அடிப்பெட்டி, குச்சி அடுக்குதல், என்று வீட்டில் நடந்தால், தீப்பெட்டியாபீஸிலும் குச்சி அடுக்குதல், பெட்டி ஒட்டுதல், குச்சி உருவுதல், லேபிள் ஒட்டுதல், பெட்டி அடைத்தல், என்று வேலைகள் நடந்து கொண்டேயிருக்கும். காலையில் கூட்டம் கூட்டமாக பெண்களும் ஆண்களும் கையில் தூக்குவாளிகளுடன் தீப்பெட்டியாபீஸ் வேலைகளுக்குப் போவார்கள். வாரக்கடைசி சனிக்கிழமை வந்து விட்டால் கோவில்பட்டி பஜாருக்கே ஒரு தனிக்களை வந்து விடும். ஏனெனில் அன்று தான் தீப்பெட்டியாபிஸில் சம்பளநாள். சாயந்திரம் பஜாரே ஜே ஜேன்னு இருக்கும். எங்கள் வீட்டிலும் தீப்பெட்டிக் கட்டு, தீப்பெட்டிக்குச்சி அடுக்குதல் வேலை நடந்தது. குச்சி அடுக்கிய கட்டைகளை தலையில் சும்மாடு கட்டி தூக்கிக் கொண்டு போய் தீப்பெட்டிக் கம்பெனியில் கொடுத்து கணக்குப் புத்தகத்தில் வரவு வைத்து விட்டு வெறும் கட்டைகளை வாங்கிக் கொண்டு வரவேண்டும். அங்கே கணக்குப் பிள்ளைகளின் ராஜ்ஜியம் தான்.

பாஞ்சான் வேகவேகவேகமாகக் குச்சி அடுக்குவான். அந்த வேகம் இந்த வேகம் இல்லை ஜெட் வேகத்தில் அடுக்குவான். நான் ஒரு கட்டையிலுள்ள ஐம்பது சக்கைகளில் குச்சி அடுக்கி முடிக்கும் போது அவன் மூன்று கட்டைகளை முடித்திருப்பான். பாஞ்சான் குச்சிகளை சக்கைகளில் வேகமாகப் பரத்தி விட்டு ஒரு உலுப்பு உலுப்பினால் போதும் குச்சிகள் எல்லாம் எஞ்சிவனேன்னு சக்கைகளில் உள்ள பள்ளங்களில் போய் உட்கார்ந்து கொள்ளும். எனக்கு பாஞ்சான் ஏதோ மாயாஜாலம் செய்வதைப் போல இருக்கும். அவனுடைய வீடு என்னுடைய வீட்டை விட மிகவும் சிறியது. ஒரு பத்தி கொண்ட குச்சு. எப்போது போனாலும் அவனும் அவனுடைய அம்மாவும் மட்டும் தான் இருந்தார்கள். அவனுடைய அப்பாவை நான் பார்த்ததேயில்லை. அவனும் எப்போதும் அவனுடைய அம்மாவைப் பற்றித்தான் பேசுவான். அப்பாவைப் பற்றிப் பேசியதேயில்லை.

ஒருநாள் வெள்ளிக்கிழமை என்று ஞாபகம். கணக்கு வாத்தியார் பழனிமுத்து கொடுத்த வீட்டுக் கணக்குகளைப் போடாததற்காக பாஞ்சான் தலையில் குட்டு வாங்கிக் கொண்டிருந்தான். ஏண்டா போடல என்று கேட்டதுக்கு அவனுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பதில் சொன்னான். அம்மா உடம்பு சரியில்லாததற்கும் கணக்குக்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்டு காதைத் திருகி தலையில் கொட்டிக் கொண்டிருந்தார். அப்போதும் பாஞ்சான் சிரித்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் பள்ளிக்கூட உதவியாளர் வந்து பழனிமுத்து சாரைக் கூப்பிட்டு ஏதோ சொல்ல பழனிமுத்து சாரின் முகம் மாறிவிட்டது. அவர் திரும்பி வகுப்புக்குள் வந்து பாஞ்சானின் தலையைத் தடவிக் கொடுத்தார். பின்பு

“ டேய் நீ வீட்டுக்குப் போ.. வீட்டிலேருந்து கூப்பிட ஆளு வந்திருக்காம்.. பையை எடுத்துட்டுப் போ…” என்று சொன்னார்.

பாஞ்சான் பைக்குள் புத்தகங்களை வைக்கும் போதும் சிரித்துக் கொண்டிருந்தான். பையை எடுத்து தோள்பட்டையில் போட்டுக் கொண்டு என்னைப் பார்த்து சிரித்தபடியே சாயந்திரம் பார்க்கலாம் என்று சைகை செய்தான். பின்னர் வகுப்பை விட்டு வெளியேறி விட்டான். அது வரை வகுப்பு அமைதியாகவே இருந்தது. பழனிமுத்து சாரும் எதுவும் பேசாமல் பாஞ்சானின் நடவடிக்கைகளையேக் கவனித்துக் கொண்டிருந்தார். அவன் வகுப்பை விட்டு வேளியே போனபிறகும் சில நிமிடங்கள் பேசாமலிருந்தார் பழனிமுத்து சார். அவர் முகம் துயருற்றிருந்தது. பின்பு அமைதியாகச் சொன்னார்.

“ பரமசிவன் அம்மா இறந்துட்டாங்க..”

கடைசியாய் பையைத் தூக்கும்போது என்னைப் பார்த்து சிரித்தானே அது தான் பாஞ்சானின் கடைசிச் சிரிப்பு.

அதன் பிறகு அவன் சிரிக்கவில்லை.

2 comments:

  1. அருமை. நெஞ்சை நெகிழ வைக்கிறது.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  2. கனமான சிறுகதையின் உணர்வைத் தருகிறது.பஞ்சான் கடைசிவரை சிரிக்கவில்லை என்பது கஷ்டமான பாரத்தை தருகிறது.அம்மா எல்லா அறிவுஜீவித்தனங்களையும் தாண்டிய உணர்வுப்பூர்வமான ஜீவன்.

    ReplyDelete