சுளித்தோடும் வாழ்வின் கரைகளில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிறோம். எத்தனையோ மனிதர்களோடு பழகுகிறோம். எத்தனையோ பேர்கள் நண்பர்களாக மாறுகிறார்கள். சிலர் ரயில் சிநேகத்தைப் போல அவர்களது ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் போய் விடுகிறார்கள். அதன்பின்பு தொடர்பே இருப்பதில்லை. அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே நம் மனதில் இருந்து கொண்டிருக்கும். அதுவும்கூட காலக்கரையான்களின் அரிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து காலாவதியான சித்திரம் போல மெலிதாய் தன் பூர்வவாசனையைக் கொண்டிருக்கும். சிலர் நம் வாழ்வில் மிகமுக்கியமானவர்களாக என்றும் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அவர்களுடைய வாழ்வின் பாதையில் நாம் முக்கியமற்றவர்களாகி விடுவோம். என்னுடைய பால்யகாலநண்பர்கள் எவ்வளவோ பேர் இப்போது காணாமல் போயிருக்கிறார்கள். சிலரைக் காலம் தன் முடிவிலிக்குள் அழைத்துக் கொண்டு விட்டது. அப்போது அத்யந்தமாய் இருந்தவர்கள் இப்போது சிறுபுன்னகைக்கு மட்டுமே பெறுமதியாக மாறிவிட்டதும் உண்டு. பத்திருபது வருடங்கள் வரை மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட சட்டென முன்பின் தெரியாதவர்களாகி விடுகிற முரணும் இந்த வாழ்வில் நடப்பதும் உண்டு. வாழ்க்கை விசித்திரமானது. அதன் புதிர் வழிகளை யாரும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் தான் வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்கிறது.
ஆனால் இந்த வாழ்க்கையின் சாராம்சமே மனித உறவுகள் தானே. மனிதன் இந்தப் பிரபஞ்சத்தோடு, சகல ஜீவராசிகளோடு, சகமனிதர்களோடு ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளே மனிதவாழ்வின் அர்த்தம். இந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாததினால் தான் இத்தனை வேறுபாடுகளும், மாறுபாடுகளும், துன்பங்களும், துயரங்களும், என்று தோன்றுகிறது. மனிதவாழ்வு முடியும் போது மீதமாக இருப்பது மனிதன் சமூகத்தோடும், சகமனிதர்களோடும் கொண்ட உறவு தான். இந்த உறவைப் பேணுவதிலும் போற்றுவதிலும் தான் நம்முடைய வாழ்வின் சீர்மை இருக்கிறது. சிலரைப் பார்த்தவுடனேயே பிடித்து விடுகிறது. சிலரிடம் பழகியபிறகு பிடிக்கிறது. சிலரின் அன்பு பிடிக்கிறது. சிலரின் அக்கறை பிடிக்கிறது. சிலரின் அறிவு பிடிக்கிறது. சிலரின் தன்னம்பிக்கை பிடிக்கிறது. சிலரின் தைரியம் பிடிக்கிறது. இவையெல்லாம் இருக்கிற நண்பர்கள் நிறையப் பேர் எனக்கு இருக்கிறார்கள் என்பதே எனக்குப் பெருமை. இன்னமும் அப்படியான நண்பர்களைச் சந்தித்துக் கொண்டே இருப்பதும் வாழ்வின் வரம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான ‘ யாவர் வீட்டிலும்’ 1988-ல் திருவண்ணாமலையில் வெளியிடப்பட்டது. அதை வாசித்த காலஞ்சென்ற இலக்கிய விமர்சகர் க.நா.சு. தினமணியில் என்னுடைய தொகுப்பு பற்றியும், என் அருமை நண்பர் எழுத்தாளர் கௌதமசித்தார்த்தனுடைய முதல் சிறுகதை நூலைப் பற்றியும் பாராட்டி எழுதியிருந்தார். அந்தச் சமயத்தில் வேலூர் சத்துவாச்சேரியில் என்னுடைய சிறுகதைப் புத்தகத்துக்கான நூல் அறிமுகக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் என்னுடைய நூலை அறிமுகம் செய்து பேசியவர் எழுத்தாளர் கமலாலயன். அந்த முதல் சந்திப்பிலேயே அவர் காட்டிய அன்பும், அக்கறையும், கனிவும், அது வரை நான் எதிர்கொள்ளாதது. போலியான வறட்டுத்தனமும், கூர்மையான விமரிசனக் கத்திகளோடும் யாரும் அண்ட முடியாத பூச்சாண்டிகளாக கோவில்பட்டி இலக்கியவாதிகள் இருந்தார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசி அவர்களுடைய படைப்புகளை கீறிப் பிளந்து அந்தப் படைப்பாளிக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை உருவாக்குவதில் கோவில்பட்டி இலக்கியவாதிகள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள். எனக்கும் அந்தச் செயற்கையான பூச்சாண்டி ஒப்பனை அப்போது உவப்பாகவேயிருந்தது. ஏனெனில் நானும் உள்ளுக்குள் பூனையைப் போல நடுங்கிக் கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம். இதனால் 80-களில் தமிழிலக்கியஉலகில் ஒரு சொல்வழக்கே உருவானது. யாராவது புதிதாய் புத்தகம் வெளியிட்டால் உடனே “ போய் கோவில்பட்டிக்குப் போய் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிட்டு வா..” என்று கேலி செய்யும் அளவுக்கு கோவில்பட்டித் திமிர் இருந்தது. அந்தச் சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு அவருடைய பாராட்டும் உற்சாகமும் மிகுந்த கூச்சத்தைக் கொடுத்தது. நான் முதல்முதலாக என்னை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்த தருணம் அது. அப்போதே அவர் நிறையக் கதைகள் நா.பா. வின் தீபத்தில் எழுதியிருந்தார். நுட்பமான விஷயங்களை மிகச் சன்னமான குரலில் அருகில் அமர்ந்து உரையாடுகிற மாதிரியான கதைகளுக்குச் சொந்தக்காரர். அப்போது அவர் வேலூரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் டெக்னீசியனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அன்றிலிருந்து துவங்கிய எங்களுடைய தோழமை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எழுபதுகளில் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையின் அடிவாரக்கிராமங்களில் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு இரவு நேர வகுப்புகளை நடத்தத் தொடங்கிய கமலாலயனை புத்தகங்களும்,இந்த உலகின் மீதான பேரன்பும் சமூகத்தின் அசமத்துவம் குறித்தான கேள்விகளூம் இயல்பாகவே இடதுசாரி இயக்கச் சிந்தனைகளுக்குக் கொண்டு வந்து சேர்த்தன. இடதுசாரி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு.வில் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக நிர்வாகத்தால் பழி வாங்கப்பட்டு வேலையைப் பறி கொடுத்தார். அதன் பிறகு த.மு.எ.ச. வின் சிந்தனைத் தளங்களில் ஒன்றாகத் தீவிரப் பணிபுரிந்தார். அவருடைய சிறுகதைகளில் உழைப்பாளி மக்களே பிரதான கதாபாத்திரங்கள். மெல்லிய உணர்வுகளின் துடிப்பைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் அவரது கதைகள் பெரும்பாலும் அவருடைய சொந்த அநுபவங்களே. கண்டக்டராக, தொழிலாளியாக, பண்பாட்டு ஊழியராக, அவர் வாழ்வை எதிர் கொண்ட விதமே அவருடைய படைப்புகள். வேலை பறிபோனதும், அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். அறிவொளிக்காலம் முடிந்த பிறகு கருத்துக்கூடத்தோடு இணைந்து இன்னமும் எழுதப்படாத மக்கள் இலக்கியத்தை, மக்களிடமிருந்து சேகரிக்கும் பணியில் இணைந்தார். எழுத்தின் அதிகாரம் செல்லுபடியாகாத சாதாரண மக்களின் சொல்கதைகள், நாட்டுப்புறக்கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறப்பாடல்கள், சொலவடைகள், விடுகதைகள், என மக்கள்மனதை தகவமைக்கிற மக்கள் இலக்கியத்தை சேகரிக்கும் பெரும்பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.
ஏற்கனவே எழுதப்பட்ட இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை எளிய வடிவத்தில் மிகக் குறைந்த விலையில் கொண்டு சென்றது கருத்துக்கூடம். அதில் தன்னலமற்ற உழைப்பை நல்கியவர்கள் பேரா.ச.மாடசாமி, தமிழ்ச்செல்வன், ரத்தினவிஜயன், கமலாலயன், போன்ற தோழர்கள் தான். மகத்தான ஒரு மாற்றம் உருவாகிவிடும் போலத் தான் தெரிந்தது. கருத்துக்கூடத்தின் காலம் முடிந்த பிறகு வளர்கல்வி இயக்கத்திலும், குழந்தைகள் நலத்திட்டத்திலும் இணைந்து தன் பங்களிப்பைச் செய்தார் கமலாலயன். இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் எனக்குக் கடிதம் எழுதத் தவறமாட்டார். என்னுடைய எழுத்துகளை, புத்தகங்களைப் படித்து விட்டு உடனுக்குடன் கடிதம் எழுதுவார். அப்போது தொலைபேசிகள், அலைபேசிகள், இல்லாத காலம். கடிதம் ஒன்று தான் தூரத்திலிருக்கும் இதயங்கள் பேசிக்கொள்ளும் தொடர்புசாதனமாக இருந்தது. வாரம் ஒரு கடிதம், சில சமயம் வாரத்துக்கு இரண்டு கடிதம் என்று நாங்கள் பரஸ்பரம் எழுதிக் கொள்வதுண்டு. சில சமயம் கடிதம் தொடர்கதை போல ஒன்று, இரண்டு, மூன்று எனத் தொடர்வதும் உண்டு. இன்று பெரும்பாலும் கடிதம் அலுவலக நடைமுறைகளுக்கான விஷயமாக மாறி விட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் மாற்றங்கள் வருவது இயற்கை. இப்போது எல்லாம் விரல்நுனியில். ஒரு சிறு யந்திரம் மூலமாக எத்தனை தூரத்தையும் கடந்து பேசி விடும் ஆற்றல் மனிதனுக்கு வந்து விட்டது. என்னால் மிகச்சிலரிடம் மட்டுமே மனம் விட்டு பேசிக் கொள்ள முடிந்ததென்றால் அவர்களில் கமலாலயனும் ஒருவர். என்னுடைய மகிழ்ச்சியை, வருத்தத்தை, ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொள்கிற ஆத்மார்த்தமான நண்பர் கமலாலயன். தோழமை என்பதின் முழு அர்த்தத்தை அவரிடமே நான் தெரிந்து கொண்டேன்.
வாழ்க்கையின் கொடிய பற்சக்கரங்களில் சிக்கிய கலைஞன் கமலாலயன். ஆனால் வாழ்க்கையோடு போராடிக் கொண்டே தன் கலையின்அடர்த்தியைக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர். அவருடைய வாழ்வின் போராட்டங்களை வேறொருவராக இருந்தால் இதற்குள் வாழ்வைச் சபித்து சரணாகதி அடைந்திருப்பார். கலையின் காற்றுகூட படாத இடத்துக்குத் தலைமறைவாகிப் போயிருப்பார். ஆனால் கமலாலயன் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார். தன் கலைக்காகவும், வாழ்க்கைக்காகவும். தொடர்ந்த இந்தத் துயர்மிகு பயணத்தில் அவருடைய துணைவியாரின், குழந்தைகளின், ஒத்துழைப்பு மகத்தானது. அவர்களுடைய ஊக்கத்தினாலேயே இன்னமும் நம்பிக்கை தளராமல் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.
எனக்கு மனம் சோர்வுறும் போது நல்ல புத்தகங்களை வாசிப்பேன் அல்லது கமலாலயனிடம் பேசுவேன். புத்தகங்களை வாசித்து முடித்ததும் அது வரை இருந்த சோர்வு மாயமாகிவிடும். வாழ்வின் மீது மகத்தான நம்பிக்கை ஊற்றெடுக்கும். இந்த வாழ்வோடு மல்லுக்கட்ட ஆவேசம் பொங்கியெழும். மனம் உற்சாகமாகி விடும். இதுவெல்லாம் கமலாலயனிடம் பேசும்போதும் நேரும். நான் உளறுகிற அத்தனை விஷயங்களையும் பொறுமையாகக் கேட்பார். என் கோபம், வருத்தம், எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டு அவருடைய மென்மையான குரலில் என்னை ஆற்றுப்படுத்துவார். அந்தக் குரல் அதிலிருக்கும் கனிவு, வறண்ட என் மனதில் அன்பைப் பொழியும். ஈரமான இதயம் அவருக்கு நன்றி சொல்லும்.
தமிழில் மிகமுக்கியமான மொழிபெயர்ப்பாளர். அவருடைய மொழிபெயர்ப்பில் மிகச் சமீபமாக வெளிவந்த ’ புவி முழுமைக்குமான நீதி- சே குவேரா ‘, ‘ மனிதர்கள் விழிப்படையும்போது – கோதாவரி பருலேக்கர் ‘ ‘ யதார்த்தத்தை வாசித்தல் – பாவ்லோ பிரேயர்’ புத்தகங்கள் தமிழ்ச் சிந்தனையில் ஒரு கொதிப்பை ஏற்படுத்தியவை. அதேபோல அவர் எழுதிய மேரி மெக்லியோட் பெத்யூன் என்ற கறுப்பினப் பெண்ணின் சுயசரிதை நூல் அற்புதமான புத்தகம். அந்தப் புத்தகத்தைத் தொடாதே உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வார்த்தைகளின் வலியை தன் நெஞ்சில் சுமந்த மேரியே கறுப்பினக்குழந்தைகளுக்கான முதல் பள்ளிக்கூடத்தை உருவாக்கியவர். வாசிக்க வாசிக்க உத்வேகமூட்டும் கதை மேரி மெக்லியோட் பெத்யூனின் கதை. உணர்ச்சி பொங்கும் நடையில் அதை எழுதியிருப்பதன் மூலம் கமலாலயன் தமிழுக்குத் தன் கொடையை அளித்துள்ளார். அவருடைய பார்வைகள் மாறும் என்ற சிறுகதைத் தொகுப்பு முக்கியமான கதைகளைக் கொண்டது. மானுடவீதி, நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி, போன்ற நூல்கள் தமிழில் கவனம் பெறவேண்டியவை.
சமகால இலக்கிய உலகம் போட்டிகளாலும், பொறாமைகளாலும், குழுஅரசியலாலும் தன்முனைப்புகளாலும் தன்னைப் போர்த்திக் கொண்டுள்ளது. உண்மையான மதிப்பீடுகளை விட சிபாரிசுகள், முக்கியமானவை. எழுத்தின் தரத்தை விட விளம்பரம் செய்யும் புரோமோஷன்கள் அவசியமானவை. இப்படிப்பட்ட காலகட்டத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன் பங்களிப்பை செய்து கொண்டிருக்கும் கமலாலயன் போன்றவர்கள் கவனிக்கப்படாமல் போவதில் ஆச்சரியமில்லை. உரிய அங்கீகாரம் கிடைக்காமல் ஓரங்கட்டப் படுவதில் வியப்பதற்கு எதுவுமில்லை. கமலாலயன் இதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. நான் பல நேரங்களில் வருத்தப்பட்டு பேசும் போது தன்னுடைய கனிவின் சிகரத்திலிருந்து மிக மெதுவான குரலில் கமலாலயன் சொல்லுவார்.
“ எதுக்கு உதயசங்கர் கவலைப்படறீங்க.. நாம செய்றத செய்ஞ்சுகிட்டே இருப்பம்.. எல்லாத்தையும் காலம் பாத்துக்கிடும்….”
அது தான் கமலாலயன். என் அருமைத் தோழர் கமலாலயன்!.
நன்றி – மீடியா வாய்ஸ்
"மனிதர்கள் விழிதெழும் போது" என்ர மராட்டிய நூலுக்கு கோதவர் பருலேகருக்கு சாகித்திய அகாதமி விருது அளிக்கப்பட்டது. 1975ம் ஆண்டு த.மு.எ.ச மாநாடில் தலைமை உரை ஆற்றினார்.அவருடைய நுளீளீருந்து ஒரு சிறுபகுதி செம்மலரில் முத்து மீனாட்சி அவர்களால் மொழிபெயர்கப்பட்டு வெளியாகியது .ஆர்ப்பாட்டமில்லாத silent worker கமலாலயன்.அவர் குடும்பமோ மௌனமாக தியாகம் செய்தவர்கள். அவர்களை நினத்துத் தான் "மௌனிகள்" என்ற சிறுகதையை எழுதினென்..நினைக்கும் போதேல்லாம் நெஞ்சம் நிரயும் மனிதர்களில் கமலாலயனும் ஒருவர்---காஸ்யபன்
ReplyDeleteஉண்மை தான் தோழர், கமலாலயனை நினைக்கும்போது நெஞ்சமிளகும் உணர்வு தோன்றும். நன்றி.
Delete