Thursday 19 July 2012

கம்யூனிஸ்ட் மாமுனிவர்

EMS-2 copy220px-Thakazhi_1

தகழி சிவசங்கரம்பிள்ளை

 

தமிழில் – உதயசங்கர்

 

எல்லாவிதங்களிலும் நான் ஆதரிக்கிற இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடினை முதலில் பார்த்தது எப்படி என்று நினைவுபடுத்தமுடியவில்லை. ஏனென்றால் நேரில் பார்ப்பதற்கு முன்பே என்னைக் கவரவும், பாதிக்கவும் செய்த ஆளுமை அவர்.

எனக்குச் சரியாக ஞாபகம் இருக்கிறது. கேஸரிசபையில் நடந்த விவாதங்களுக்கு ஊடே தான் இ.எம்.எஸ். என் வாழ்க்கையில் நுழைந்தார். நான் ப்ளீடர் பரீட்சைக்குத் திருவனந்தபுரத்தில் படித்துக் கொண்டிருந்த காலம். எங்களுக்குக் குரு கேஸரி பாலகிருஷ்ணபிள்ளை. அப்போது கேஸரிசபை புதிய சிந்தனைகளின் இலக்கியசர்ச்சைகளின் கேந்திரமாக இருந்தது. 1930 களில் என்று ஞாபகம். கேஸரி இ.எம்.எஸ்ஸினைக் குறித்து அடிக்கடிப் பேசுவார். சில நேரங்களில் விமரிசனமும் செய்வார். கேஸரியின் தலைமையில் எங்களுடைய சபையில் இ.எம்.எஸ். பல சமயம் சர்ச்சைக்குரிய விஷயமாகியிருந்தார். புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டவர் என்ற வகையில் புதிய சிந்தனைகளைத் தேடியடைய ஆசைப்பட்ட என்னுடைய மனசில் இ.எம்.எஸ். இடம் பிடித்தார்.

அப்போது தான் ‘ உண்ணி நம்பூதிரி ‘ பத்திரிகையைப் பற்றியும், நம்பூதிரி யுவஜன சங்கத்தைப் பற்றியும் அறிய நேர்ந்தது. புரட்சியின் சாராம்சம் பிடித்திருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு உண்ணி நம்பூதிரியில் பிரசுரமான கட்டுரைகள் உத்வேகமளித்தன. இந்தப் பத்திரிகையிலுள்ள பல கட்டுரைகளும் கேஸரியின் சபையில் சர்ச்சைக்குரிய விஷயமாயின. இத்தனைக்கும் பின்னால் இ.எம்.எஸ்ஸினுடைய அறிவார்ந்த தலைமை இருந்தது என்று தெரிந்தபோது, அவர் மீதுள்ள மதிப்பு பெருகியது. அன்று திருவிதாங்கூர்காரர்களாகிய எங்களுக்குக் கொச்சியோடும் மலபாரோடும் போதுமான அளவுக்குப் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். இ.எம்.எஸ்ஸினுடைய தலைமையிலும் வெளியீட்டிலும் ‘ முற்போக்கு ‘ என்ற பத்திரிகை வெளிவந்தது. உண்ணிநம்பூதிரியில் கிடைத்த உற்சாகத்தில் நான் ஒரு ஓரங்க நாடகம் எழுதினேன். பெயர் ஞாபகத்திலில்லை. ஆனால் உள்ளடக்கம் ஞாபகத்திலிருக்கிறது. நெருப்பை உமிழும் புரட்சி. அநாதை இல்லங்களை உருவாக்கக்கூடாது. இருப்பவைகளையும் சாம்பலாக்க வேண்டும். சமூகத்தை நேராக்க அநாதை இல்லங்களால் முடியாது. அவை மனிதனைச் சோம்பேறியாக்குகிறது. இன்றைய அத்தியாவசியத் தேவையான சமத்துவக்கொள்கைகளுக்கு அவை உபயோகப்படாது. இதே புரட்சிகர நோக்கத்தோடு தான் கேஸரியில் கதைகள் எழுதினேன். நான் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். இதற்கெல்லாம் ஒரு உந்துசக்தியாக அன்று நான் நேரில் கண்டிராத இ.எம்.எஸ். இருந்தார்.

மிகக் குறைந்த தடவைகளே நான் இ.எம்.எஸ்ஸை நேரில் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போது கொஞ்சம் நலம் விசாரிப்போம். தீர்க்கமான உரையாடலோ, விவாதமோ, கிடையாது. சில மீட்டிங்குகளில் வைத்துத் தான் இந்தச் சந்திப்புகளும் நிகழ்ந்தன. யதார்த்தமாய் நலம் விசாரித்துக் கொள்ளும்போதும் எனக்கு வெளிப்படையாகத் தெரியாத பாசமும் ஆதரவும் உறுதியாக இருந்தது.

முற்போக்கு இலக்கிய அமைப்போடு ஆரம்பம் முதலே நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஷொரனூர், திருச்சூர், கோட்டயம், கொல்லம், மாநாடுகளில் கலந்து கொண்டுமிருக்கிறேன். 1973 ல் ஷொரனூரில் நடந்த இலக்கிய மாநாட்டில் கேசவதேவோடு கலந்து கொண்ட அநுபவம் உண்டு. அன்று இளம் எழுத்தாளர்களுக்கு கதை கவிதை நாடகம் முதலான இலக்கியப்பிரிவுகளில் போட்டி நடத்தினோம். கேசவதேவும் நானும் சேர்ந்து தான் படைப்புகளைப் பரிசீலித்தோம். ஏராளமான படைப்புகள் கிடைத்தன. ஆனால் அவைகளில் இலக்கியம் இல்லை என்ற விமர்சனம் எங்களுக்கு இருந்தது. அதாவது முற்போக்கு இலக்கிய அமைப்பு உயர்த்திப் பிடித்த சில விஷயங்களோடு வேறுபாடு ஏற்பட்டது. அந்த நிலையில் இ.எம்.எஸ்ஸின் இலக்கியம் சம்பந்தமான நிலைபாடுகளோடு ஒத்துப்போக முடியவில்லை.

முண்டசேரியும் பொதுவாக எங்களோடு உடன்பட்டார். அதே நேரம் இ.எம்.எஸ்ஸினுடைய இலக்கியக் கட்டுரைகளை விருப்பத்தோடு வாசிக்கவும் செய்தோம். கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர் படைப்புகளின் புதுமையும், யதார்த்தமும், ஆத்மார்த்தமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. யோசித்துப் பார்க்கும்போது நெருக்கமாகவும் இருந்தது.

ஸி.வி.ராமன் பிள்ளையைப் பற்றி இ.எம்.எஸ். வெளியிட்ட கருத்துகளை அப்படியே என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஸி.வி. நாவல்களின் காலகட்டத்தைப் பரிசோதிக்கும் போது ராஜபக்தி தவறு என்று கருத முடியுமா? கொஞ்சம் தாமதமாக என்றாலும் இ.எம்.எஸ். சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தது. அது நல்ல விதமாகவே வெளிவந்தது சந்தோஷம்.

உலகப்புகழ் பெற்ற இரண்டு சங்கரன்கள் கேரளத்தில் பிறந்தார்கள் என்று நான் நம்புகிறேன். முதலாவது ஆதி சங்கரர் சங்கராச்சாரிய சுவாமிகள். இரண்டாவது இ.எம்.சங்கரன் நம்பூதிரிபாடு. ஆதி சங்கரன் ஆன்மீகவாதியாகவும், வேதாந்தியாகவும் இருந்தார். சமகாலச் சங்கரன் உன்னதமான அரசியல் சிந்தனையாளராக இருந்தார். மார்க்சிய அறிவிலிருந்து வெளிப்பட்ட புதிய வெளிச்சம் தான் இ.எம்.எஸ். பாரதத்திற்குக் கொடுத்த மகத்தான கொடை. எனக்கு அறிவார்ந்த தலைமையேற்ற இ.எம்.எஸ்ஸின் அறிவு சாதனை படைத்திருக்கிறது. மற்றவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட, தான் நம்புகிற கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்த வாழ்க்கை அவருடைய வாழ்க்கை. இந்த விஷயத்தில் அவருக்குச் சமமாக இன்னொரு ஆளுமையை என்னால் பார்க்க முடியவில்லை. பாரதத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்குத் தெளிவான உருவம் கொடுத்தது இ.எம்.எஸ். தான் என்று நான் நம்புகிறேன். இந்தச் சித்தாந்தத்தின் ஊடே வாழ்க்கைக்கு ஒரு புதிய முகம் தந்து கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்தியது தான் இ.எம்.எஸ்ஸினுடைய வெற்றிக்குக் காரணம். தீர்க்கதரிசனமும், உயிர்த்துடிப்பு மிக்க அறிவும் கொண்ட ஒருவருக்கே இந்த மாதிரியான தன் வயப்படுத்துதல் முடியும். இ.எம்.எஸ். ஒரு யதார்த்தவாதி. பாரதத்தின் ஆத்மாவின் உயிர்த்துடிப்பாக விளங்கியது யதார்த்தவாதம். அதனால் அவருடைய கருத்துகளை சமகால இந்தியா கவனமுடன் கேட்டது. ஏற்றுக்கொள்ளவோ, விமர்சிக்கவோ செய்தது. பாரத பாரம்பரியத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் திறந்த மனதுடன் நான் சொல்கிறேன். இந்தியாவைப் பொறுத்தவரையிலேனும் கம்யூனிஸ்ட் மாமுனிவர் அவர். லட்சக்கணக்கான இந்தியர்களுக்குப் போலவே எனக்கும் இன்று அவர் ஒரு மாபெரும் உந்துசக்தி.

நன்றி – மலையாளம் வாரிக

1 comment: