Tuesday, 21 April 2020

குழந்தைகளைப் புரிந்துகொள்வது எப்படி?


குழந்தைகளைப் புரிந்துகொள்வது எப்படி?

உதயசங்கர்

1.குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவர் உயிரியல் ரீதியாக ஒரு விலங்கின் குட்டியாக இருந்தாலும், மனிதகுலத்தின் மரபணுத்தொடர்ச்சியின் சமீபத்திய கண்ணிகள். மரபணுவின் ஞாபக அடுக்குகளில் மானுட அநுபவங்களின் அத்தனை கூறுகளும் பொதிந்தே இருக்கும்.
2.குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது என்ற கோட்பாடு எவ்வளவு முட்டாள்தனமானதோ அதே போல அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதும் அறியாமையாகிவிடும். பெரும்பாலான பெற்றோர்கள் இந்த இரண்டு எதிர்துருவங்களில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார்கள்.
3. குழந்தைகள் இந்த உலகிற்கு வந்ததிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இடையறாது கற்கிறார்கள். விடாமுயற்சியுடன் கற்கிறார்கள். ஒவ்வொரு கணமும் கற்கிறார்கள். எல்லா உயிர்களுக்கும் இயற்கையாக உள்ள உயிரியல் பண்புநலன்கள் தான் காரணம்.
4.கற்றுக் கொள்வதை இரண்டு வழிகளில் குழந்தைகள் செய்கிறார்கள். தொடர்ந்து செய்தல், போலச்செய்தல்.
5. தொடர்ந்து செய்தல் - ஒரு காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதின் மூலமாக அந்த வேலையில் ஒரு நிபுணத்துவம் வருகிறதல்லவா. அப்படித்தான் குழந்தைகளும் ஒவ்வொரு காரியத்தையும் ஒரு ஆயிரம் தடவையாவது செய்து பார்க்கிறார்கள். அப்படிச் செய்கிற ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியில் துள்ளுகிறார்கள். பெற்றோர்கள் அவர்கள் செய்வதை அங்கீகரிக்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும்
6.போலச்செய்தல்- இதுவும் ஒரு உயிரியல் பண்புதான். ஒன்றைப் பார்த்து, ஒருவரைப்பார்த்து, ஒருவர் செய்யும் செயலைப் பார்த்து திரும்ப அதே மாதிரி செய்து பார்த்தல். குழந்தைகள் இப்படி செய்வதன் மூலம் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அதன் சாதகபாதகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது. எனவே குழந்தைகளின் முன்னால் பேசும்போதும் அன்றாட நடவடிக்கைகளின் போதும் கவனமாக இருக்கவேண்டும்.
7.குழந்தைகள் எதைக் கற்கும்போதும் மிகத்தீவிரமாகக் கற்கிறார்கள். அர்ப்பணிப்புணர்வோடு தங்கள் ஒவ்வொரு நாளையும் கற்றுக் கொள்வதில் செலவழிக்கிறார்கள். எனவே ஒரு விஷயத்தில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டால் அது சரி அல்லது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. எனவே சர்யான விஷயங்களில் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புகிறமாதிரி பெற்றோர்கள் நடந்து கொள்ளவேண்டும்
8. குழந்தைகள் விலங்குகளல்லர். எனவே அவர்களை பழக்கப்படுத்தவேண்டும் ( Training) என்ற கொள்கை பெரும்பாலான பெற்றொர்களிடம் இருக்கிறது. குழந்தைகளுக்கு முன்னால் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதையே குழந்தைகளும் கற்றுக் கொள்கிறார்கள். எனவே பழக்கப்படுத்தவேண்டியது அவர்களையல்ல. நாம் பழகவேண்டும்.
9.குழந்தைகள் பிடிவாதக்காரர்கள். ஒன்றைச் செய்வதில் பிடிவாதமாக இருப்பதினால் தான் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய பிடிவாதங்களை நல்ல விஷயங்களை நோக்கி மடைமாற்றவேண்டும்.
10.குழந்தைகளிடம் மறுக்கவேண்டியதுக்கு மறுக்கவேண்டும். இல்லையென்றால் குழந்தைகளுக்கு தான் கேட்பது, நினைப்பது எல்லாம் கிடைக்கும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகி வேர்கொண்டுவிடும். பின்னால் சிறு ஏமாற்றங்களையும் தாங்கமுடியாது.
11.குழந்தைகளின் மறுப்பை மதிக்கவேண்டும். நம்முடைய ஆசைகளை திணிக்கக்கூடாது. நிறவேறாத நம்முடைய கனவுகளை நிறைவேற்றக் கிடைத்த இன்னொரு உயிராக குழந்தைகளை நினைக்கக்கூடாது. இந்த உலகில் ஒவ்வொரு உயிரும் தனித்துவமானது. தனித்துவமான விருப்புவெறுப்புகள், தனித்துவமான ஆசைகள், தனித்துவமான லட்சியங்கள் கொண்டவை. அதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
12.எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரு காலத்தில் ஏதோ ஒன்றின் மீது கூடுதலான ஈடுபாடு ஏற்படும். அதைப் பெற்றோர் கவனிக்கவேண்டும். அந்த ஈடுபாட்டை உற்சாகப்படுத்தி வளர்த்தெடுக்கவேண்டும். அதுவே அவர்களுடைய தனித்துவமான மேதமையாக உருவாகலாம்.
13..குழந்தைகள் முதலில் தன்மைய நோக்கில் ( self centered ) தான் இருப்பார்கள். ஒவ்வொரு உயிரும் இருத்தலுக்காக பரிணாமவளர்ச்சியில் கற்றுக் கொண்ட பாடம் தான் அது.  குழந்தைகளிடம் இன்னமும் அது தூக்கலாகத் தெரியும். அதை சமூகமையமாக்குவது பெற்றோர்களின் கடமை.
14.ஆண், பெண் குழந்தைகளிடம் பேதம் காட்டுவது கூடாது. குழந்தைகள் அவர்களுடைய பச்சிளம்பருவத்திலேயே அதை உள்வாங்கிக்கொள்வார்கள். அதுவே அவர்களிடம் இயல்பான சமத்துவ உணர்வை அழித்துவிடும். குறிப்பாக பெண்குழந்தைகளிடம் காட்டப்படும் பேதம் அவர்களுடைய ஆளுமைத்திறனில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
15.குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களின்வழி வந்த இன்னொரு தனித்துவமான உயிர். எனவே பெற்றோர்களுக்கு மட்டும் சொந்தமானவர்களென்றோ, அவர்களுடைய சொத்து என்றோ நினைப்பதைவிட, குழந்தைகள் இந்த உலகைப் புரிந்துகொள்ள உதவி செய்யவேண்டும்., சக உயிர்களின் மீது அன்பு செலுத்தக் கற்றுக் கொடுக்கவேண்டும். எந்தக்காரணத்தினாலும் ஒருவர் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ கருதக்கூடாது. மானுட விடுதலை எல்லாவற்றையும் விட உயர்ந்தது. இவற்றுக்கான வழிகாட்டியாக மட்டுமே பெற்றோர்கள் இருக்கவேண்டும்.

9 comments:

  1. வாழ்த்துகள் தோழர்

    ReplyDelete
  2. நல்லா சொல்லி இருக்கீங்க தோழர். இடையே சிறு எழுத்து பிழைகள் இருக்கின் றன.

    ReplyDelete
  3. SUPER. YOUR THOUGHTS ARE BASED ON PSYCHOLOGY TOO. WOULD BE HIGHLY USEFUL FOR PARENTS... ALL D BEST!
    VENTRILOQUIST SHANTHAKUNAR

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு தோழர். குழந்தைகள் நம்மை தான் பின்பற்றுகின்றனர். நாம் தான் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நம் எண்ணபதிவுகளை அவர்களின் மேல் தினிக்க கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பங்கள் நிறைவேற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தங்களின் பதிவு உணர்த்துகிறது . கேட்பது எல்லாம் வாங்கி கொடுப்பது அன்பு அல்ல என்பதையும் உணர்த்துகிறது. சிறப்பு.

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு தோழர். குழந்தைகள் நம்மை தான் பின்பற்றுகின்றனர். நாம் தான் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நம் எண்ணபதிவுகளை அவர்களின் மேல் தினிக்க கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பங்கள் நிறைவேற நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை தங்களின் பதிவு உணர்த்துகிறது . கேட்பது எல்லாம் வாங்கி கொடுப்பது அன்பு அல்ல என்பதையும் உணர்த்துகிறது. சிறப்பு. சாந்தி சரவணன்

    ReplyDelete
  6. குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றி மிக அழகாகவும் எளிமையாகவும் விளக்கியிருக்கிறார் மேலும் குழந்தைகளின் உடைய மனநிலை யாருக்கும் புரியாது, அவர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள், சிந்திப்பார்கள், கற்றுக் கொள்வார்கள்என்று தெளிவாக விளக்குகிறார் குழந்தையை அனைவரும் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி தோழர்.
    இரா. கவியரசு
    சென்னை
    9884603005

    ReplyDelete
  7. மிகப்பயனுள்ள கருத்துகள் தோழர். மிக்க நன்றி.
    அடுத்த வீட்டு குழந்தைகளை பார்த்து பொருட்களுக்கு ஆசைப்பட்டு எங்கும் குழந்தைகளை எப்படி அணுகுவது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் தோழர். நன்றி..

    ReplyDelete
  8. குழந்தைகள் வளர்ப்பு மிகவும் அழகாக கூறியிறுக்கிறார் குழந்தைகளை புரிந்து கொள்வது ஒரு கலை அவர்களுடன் பயனிக்கும் முறையை நன்றாக புரிகிறது, மிகவும் பயனுள்தாக இருக்கிறது கருத்துகள். நன்றி தோழரே

    ReplyDelete
  9. குழந்தைகள் வளர்ப்பு மிகவும் அழகாக கூறியிறுக்கிறார் குழந்தைகளை புரிந்து கொள்வது ஒரு கலை அவர்களுடன் பயனிக்கும் முறையை நன்றாக புரிகிறது, மிகவும் பயனுள்தாக இருக்கிறது கருத்துகள். நன்றி தோழரே

    இரா.கமலக்கண்ணன்
    மேற்க்கு தாம்பரம்
    9566173765

    ReplyDelete