குட்டிப்பாப்பாவும் பச்சோந்தியும்
உதயசங்கர்
குட்டிப்பாப்பாவுக்குத் தலையே
வெடித்து விடும் போல இருந்தது. அவள் மண்டைக்குள் ஏராளமான கேள்விகள் முளைத்துக் கொண்டேயிருந்தன.
ஒரு கேள்விக்கு விடை தெரிவதற்குள் பத்து கேள்விகள் எட்டி எட்டிப் பார்த்தன. பாவம் குட்டிப்பாப்பா!
என்ன செய்வாள்? ஒவ்வொன்றாகத் தானே தெரிந்து கொள்ள முடியும்?
அவளுடைய கேள்விகளுக்கு அம்மாவும்
அப்பாவும் மட்டும் தான் பொறுமையாகப் பதில் சொன்னார்கள். பள்ளிக்கூடத்தில் டீச்சரிடம்
எந்தக் கேள்வி கேட்டாலும்
“ ஷட் அப்! சைலன்ஸ்! “ தான். குட்டிப்பாப்பாவுக்கு
டீச்சரைப் பிடித்திருந்தாலும் ஷட் அப்பையும், சைலன்ஸையும் பிடிக்கவில்லை. சாப்பிடாமல்
கூட இருந்து விடுவாள். ஆனால் அவளால் பேசாமல் இருக்கமுடியாது. எப்படி முடியும்? அவள்
வாயை மூட நினைத்தாலும் வார்த்தைகள் அவள் வாயை முட்டிக் கொண்டு அருவி மாதிரி கொட்டுகிறதே!
அம்மா கூட சமயங்களில் “ வாய் வலிக்கலையா குட்டிப்பாப்பா? கொஞ்சநேரம் பேசாம இரியேன்..”
என்பார். சரி என்று வாயை மூடுவாள் குட்டிப்பாப்பா. அதற்குள் நூறு கேள்விகள் குட்டிப்பாப்பாவின்
வாயிலிருந்து குதித்து ஓடத் தயாராக இருக்கும். அவளுக்கு தோன்றுகிற கேள்விகளை எல்லாம்
உடனே கேட்டு விடவேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்.
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு
வீட்டுக்கு வந்ததும் அம்மா கொடுத்த பாலைக் குடித்தாள். வாயின் இரண்டு பக்கத்திலும்
பால் கோடாய் வழிந்தது. அம்மா அவளுடைய வாய் ரொம்பப்பெரிசு, அவளுடைய ஆச்சி மாதிரி என்று
செல்லமாய் சொல்லுவாள். குட்டிப்பாப்பாவுக்கு ஆச்சியை ரொம்பப்பிடிக்கும். யாருக்காவது
ஆச்சியைப் பிடிக்காமல் இருக்குமா? அதனால் வாயின் ஓரமாக வழிந்த பால்கோடுகளை துடைக்காமல்
பின்னால் தோட்டத்துக்கு ஓடினாள்.
அப்பாவும் அம்மாவும் தோட்டத்தில்
ஏராளமான செடி, கொடி, மரங்களை, வளர்த்தார்கள். அங்கே போனதும் குட்டிப்பாப்பா துப்பறியும்
நிபுணராகி விடுவாள். ஒவ்வொரு அங்குலமாக ஆராய்ச்சி செய்வாள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய
விஷயங்களைக் கண்டு பிடிப்பாள். மெல்ல வெயில் குறைய ஆரம்பித்தது. மாமரத்தின் கீழே போய்
நின்றாள் குட்டிப்பாப்பா. அப்போது எங்கிருந்தோ வேகமாக ஓடி வந்த பச்சோந்தி அவளைப் பார்த்து
திகைத்து நின்று விட்டது. முதுகைத்தூக்கி ஆட்டியது. தலையிலிருந்து வால்வரை நீண்ட செதில்களை
சிலிர்த்தது. இரண்டு முட்டைக்கண்களை உருட்டி முழித்தது. அது மட்டுமில்லாமல் சிவப்பு
நிறத்துக்கு மாறிவிட்டது. குட்டிப்பாப்பாவா பயப்படுவாள்? அவள் தைரியசாலியில்லையா? அவளுடைய
அப்பா அடிக்கடி அப்படித்தான் குட்டிப்பாப்பாவைப் பாராட்டுவார். குட்டிப்பாப்பா பச்சோந்தியைப்
பார்த்து,
“ ஐய்.. சிவப்பாயிட்டே.. “ என்று
கைதட்டியவள் பச்சோந்தி அசையாமலிருக்கவே, “ ஏய்.. பச்சோந்தித்தம்பி! என்ன விஷயம்? ஏன்
முறைக்கிறே? “ என்று இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்டாள். முதுகைத்தூக்கி ஆடிக்கொண்டிருந்த
பச்சோந்தி மெல்ல தரையோடு பதுங்கி,
“ ஒண்ணுமில்லை.. மாமரத்துல நாலைஞ்சு
கட்டெறும்பு போறதைப் பார்த்தேன்.. நாக்கை நீட்டி சுழட்டி உள்ளே வீசுனா ராத்திரி பசியில்லாம
தூங்கலாம்.. அதுக்குத் தான் வேகமா ஓடி வந்தேன்..” என்று சொல்லி முடித்ததும் அப்படியே
மஞ்சள் நிறமாகி விட்டது. குட்டிப்பாப்பாவுக்கு ஆச்சரியம்!
“ ஐய் மஞ்சள்! நீ எப்படி கலர்
கலரா மாறுறே? நீ ஏன் எறும்பு, பூச்சி,ன்னு சாப்பிடுறே.. இலை, தழைன்னு சாப்பிடாம?..”
என்று பச்சோந்தியிடம் கேள்வி கேட்டாள் குட்டிப்பாப்பா. பச்சோந்தி சற்றே நிமிர்ந்து,
“ உனக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல..குட்டிப்பாப்பா..
நான் என் நிறத்தை மாத்திக்கிறதுக்குக் காரணம் என் தோலுக்கடியில் இருக்கிற நிறமிகளால
தான்.. மத்தவுங்களுக்கு சில செய்திகளைச் சொல்றதுக்காக நான் நிறம் மாறிக்கிட்டேயிருப்பேன்..
அப்புறம்.. நான் ஏன் எறும்புகளைச்
சாப்பிடுறேன்.. அதானே குட்டிப்பாப்பா.. எறும்பு, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலன்னா அவ்வளவு
தான் உலகமே எறும்பு புத்தாயிரும்.. அதான்.. இயற்கையன்னை எங்களுக்கு இந்த வேலையைக் கொடுத்திருக்காங்க..
அடடா கட்டெறும்பு என்ன ருசி தெரியுமா? வேணுமின்னா நீ ரெண்டு சாப்பிட்டுப்பார்க்கிறியா?
“
என்று சொன்னது. அப்படிச் சொல்லிக்கொண்டே
பிங்க் நிறத்தில் மாறிவிட்டது. ஆச்சரியத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே குட்டிப்பாப்பா
யோசித்தாள். அவளுக்கு அப்போதுதான் எறும்புகள் பெருகினால் என்னாகும்? என்ற எண்ணம் தோன்றியது.
வீட்டில் தினசரி ஆயிரக்கணக்கான சித்தெறும்பு, கருப்பெறும்பு, கட்டெறும்பு, கடுத்தவாலி
எறும்பு, என்று நிறைய அலைந்து கொண்டிருக்கும். சமயங்களில் குட்டிப்பாப்பாவையும் கடித்து
விடும். அப்போது குட்டிப்பாப்பா அந்த எறும்புகளை நசுக்கி விடுவாள். ஆனால் ஓணான்கள்
சாப்பிடுவதற்கு இதுதான் காரணம் என்று இன்று தான் தெரிந்து கொண்டாள். இப்போது பச்சை
நிறத்தில் நின்ற பச்சோந்தியிடம்,
“ ஓ அப்படியா? சரி.. எனக்கு இன்னொரு
சந்தேகம் இருக்கு.. அதுக்குப் பதில் சொல்லிட்டு நீ மாமரத்தில ஏறிக்கோ..” என்றாள் குட்டிப்பாப்பா.
குட்டிப்பாப்பா என்ன கேட்கப்போகிறாளோ
என்று அவளையே இரண்டு கண்களாலும் பார்த்தது அப்போது கருப்பு நிறத்தில் மாறிய பச்சோந்தி குட்டிப்பாப்பா,
“ ராமாயணத்துல நீ ராமருக்கு தண்ணித்தாகம்
தவிச்சப்ப மூத்திரத்தைக் குடிக்கக்கொடுத்தியாமே அதான் ராமர் சாபம் விட்டுட்டாரு… அதான்
பிள்ளைக எல்லாம் உன்னயப் பார்த்தவுடனே கல்லெடுத்து எறியிறாங்கன்னு விஜய் சொன்னானே..
அப்படியா? “
என்று கேட்டதும் பச்சோந்தி சோகமாக
அப்படியே உட்கார்ந்தது. சாம்பல் நிறத்தில் அதன் உடல் மாறிவிட்டது. பின்னர், மெல்லிய
குரலில்,
“ குட்டிப்பாப்பா.. ராமாயணமே பலபேர்
எழுதின கதை.. ராமரே ஒரு கற்பனையான மனிதர்.... எங்களப்பிடிக்காத யாரோ கட்டிவிட்ட கதைதான்
ராமருக்கு தாகம் எடுத்தபோது தண்ணிக்குப் பதில் மூத்திரம் கொடுத்தோம்னு சொல்றது…”
“ உண்மையாவா? “ என்று பாதி நம்பிக்கையுடனும்
பாதி சந்தேகத்துடனும் கேட்டாள் குட்டிப்பாப்பா.
“ நாங்க யார் வம்புக்கும் போகமாட்டோம்..பயந்தகுணம்
எங்களுக்கு டைனோசர் காலத்துலருந்தே நாங்க இந்த பூமியில வாழ்ந்துக்கிட்டுருக்கோம்..
பூச்சிகளைக் கட்டுப்படுத்த மரம் செடிகொடியில இருப்போம்.. தரையிலே பள்ளம் தோண்டி முட்டையிடுவோம்…
அதோட எங்களுக்கு மூத்திரமே வராது.. என்ன தான்
நாங்க நெறத்த மாத்துனாலும் பசங்க எங்களப் பிடிச்சு சித்திரவதை பண்றாங்க.. அதுக்கு இந்தக்
கதையைச் சொல்றாங்க.. என்ன தான் கதைன்னாலும் கொஞ்சம் இயற்கையைத் தெரிஞ்சிருக்க வேண்டாமா?
குட்டிப்பாப்பா..”
அழுகிற குரலில் ஆரஞ்சு நிறத்தில்
மாறிய ஓணான் சொன்னதைக் கேட்ட குட்டிப்பாப்பாவுக்கு வருத்தமாகி விட்டது.
“ இன்னிக்கு உங்கிட்டருந்து முக்கியமான
விஷயத்தைத் தெரிஞ்சிகிட்டேன்.. தம்பி. நான் என் ஃபிரண்ஸ்கிட்ட சொல்றேன்… சரி.. சரி..
உன்வேலையைப் பாரு.. நான் போய் படிக்கப்போறேன்..” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனாள்
குட்டிப்பாப்பா.
“ என்ன இன்னும் படிக்க ஆரம்பிக்கலையா?
“ என்று அம்மா கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து வந்தாள். ஹாலில் குட்டிப்பாப்பா
படித்துக் கொண்டிருந்தாள். அம்மாவைப் பார்த்ததும், “ அம்மா இன்னக்கி நான் இரண்டு விஷயங்களைத்
தெரிஞ்சிகிட்டேன்..” என்றாள்.
“ என்னடா செல்லம்? “
“ பச்சோந்தி ஏழு வண்ணத்திலேயும்
நிறம் மாறும்..”
” சரி.. அப்புறம்..” அம்மா நாடியில்
கையில் கைவைத்து ஆச்சரியப்படுகிறமாதிரி கேட்டாள்.
“ ராமாயணம் ஒரு கதை….ராமர் ஒரு
கற்பனை…”
“ யாரும்மா சொன்னா? “
“ பச்சோந்தித்தம்பி..”
“ ஓ.. அவனா “
நம்பியது மாதிரியும் நம்பாதது
மாதிரியும் அம்மா குட்டிப்பாப்பாவைப் பெருமையுடன் பார்த்துச் சிரித்தாள். குட்டிப்பாப்பாவின்
உதடுகளில் புன்னகை பூத்தது.
கதை அருமை நண்பரே. ஆனால் எங்க ஊரில் ஓணானைச் சொல்வாங்க. பச்சோந்தியும் ஓணான் வகைதானே. அப்பசரிதான்.
ReplyDelete