குட்டி இளவரசனின் குட்டிப்பூ
குட்டி இளவரசனின் குட்டிக்கிரகத்தில் குட்டி இளவரசனும் அவனுடைய குட்டிப்பூவும் மட்டுமே இருந்தார்கள். அங்கே வேறு யாருமே கிடையாது. ஒரு புல் பூண்டு கூடக் கிடையாது. ஒரு புழு பூச்சி கூடக் கிடையாது. நண்பர்களோ, உறவினர்களோ கிடையாது. அங்கே இருந்ததெல்லாம் குட்டி இளவரசனும் இன்னும் சில நாட்களில் வாடி உதிரப்போகும் அந்தப்பூவும் மட்டும் தான்.
அந்தப்பூ ஒன்றும் அவ்வளவு அழகானதில்லை.
அந்தப்பூ ஒன்றும் அவ்வளவு மணமில்லை
அந்தப்பூவிதழ்கள் நல்ல நிறத்துடனுமில்லை
அந்தப்பூ அவ்வளவு பெரியதாகவும் இல்லை
இன்னும் சில நாட்களில் வாடி உதிர்ந்து விடப்போகும் அந்தப்பூவில் அந்த வாடல்ருசி தெரிந்தது.
குட்டி இளவரசனும் அவனுடைய பெயரைத் தவிர இளவரசனில்லை. இளவரசன் என்றால் அப்படி அழைப்பதற்கு இன்னொருவர் வேண்டுமில்லையா? குறைந்தபட்சம் இப்போது அந்தப்பூ அப்படி அவனை அழைக்காது. இரண்டுபேருக்கும் சண்டை. குட்டி இளவரசன் என்று அழைப்பதற்கு யாருமற்ற குட்டி இளவரசன் ஒரு சாதாரணப்பையன் தான். இன்னும் ஒவ்வொருவேளையும் பசிக்கும்போது உணவு தேடி அந்தக்கிரகம் முழுதும் சுற்றித்திரியும் சாதாரணப்பையன். அவனுடைய உடைகளும் சாதாரணம் தான். குட்டி இளவரசன் எங்கே சுற்றினாலும் இரவில் அந்தப்பூவுக்கருகில் வந்து படுத்துக்கொள்வான். அந்தப்பூ அவனிடம் பேசாவிட்டாலும்கூட. அவன் அந்தப்பூவையே பார்த்துக் கொண்டிருப்பான். அவன் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும் அந்தப்பூ அவனைப்பார்க்காமல் இருக்கும் இரண்டே திசையில் குட்டி இளவரசன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையை நோக்கி கர்வத்துடன் திரும்பிக்கொள்ளும். அதற்குத்தெரியும் குட்டி இளவரசனுக்கு யாருமே கிடையாது. ஒரு காலத்தில் அவர்கள் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். முதன் முதல் காதல் வயப்பட்ட இளம் காதலர்களைப் போல அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தார்கள். உலகிலுள்ள அத்தனை வார்த்தைகளும் செலவழியும் வரை பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது குட்டி இளவரசன் அந்தப்பூ இல்லையென்றால் அவனால் உயிருடன் இருக்க முடியாதென்று நினைத்தான். அந்தப்பூவும் அவனில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது. ஆனால் சலிப்பின் சிலந்திவலை அவர்களைச் சுற்றிப் பின்னியபோது அவர்கள் மனதில் வெறுப்பின் உப்பு பூக்க ஆரம்பித்தது.
எடுத்ததெற்கெல்லாம் குட்டி இளவரசனும் அந்தப்பூவும் சண்டையிட்டனர். முன்பு எதெல்லாம் பிடித்திருந்ததோ அதெல்லாம் இப்போது பிடிக்காமல் போயிற்று. இரண்டுபேரும் ஆண்டுக்கணக்கில் பேசாமலிருந்தார்கள். குட்டி இளவரசனின் குட்டிக்கிரகத்தில் சூரியன் ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் உதிப்பான்.
குட்டி இளவரசனுக்கு இன்னொரு மலரோ, தளிரோ, மரமோ, செடியோ, இருந்தால் தன்னிடம் இவ்வளவு வெறுப்பு தோன்றிருக்காது என்று நினைத்தான். குட்டிப்பூவும் குட்டி இளவரசனைப்போல இன்னொரு ஆணோ பெண்ணோ இருந்திருந்தால் இவ்வளவு கசப்பு தோன்றியிருக்காது என்று நினைத்தது. அந்தப்பூ இருப்பதினால் தானே தினம் அதற்குத் தண்ணீர் ஊற்றவும், பராமரிக்கவும் வேண்டியதிருக்கிறது. அதை இல்லாமலாக்கிவிட்டால்.. என்று குட்டி இளவரசனின் நெஞ்சில் பாம்பின் விஷம் ஊறியது. அவன் ஒரு பென்சிலை எடுத்து ஒரு ஆட்டினை வரைந்தான்.
குட்டி இளவரசன் இருப்பதினால் தானே அவனுக்காக தினம் பூத்து மணம் வீசி மகிழச்செய்ய வேண்டியதிருக்கிறது. அவன் இல்லையென்றால் இந்தக் கிரகத்தின் ஒரே அதிசயப்பூவாக இருக்கலாமென்ற எண்ணம் அந்தப்பூவைச் சுற்றி கொடும் விஷமுட்களை வளர்த்தது.
குட்டிக்கிரகத்தில் சூரியன் உதித்தபோது குட்டி இளவரசன் வரைந்த ஆடு அந்தப்பூவை நோக்கிப் பாய்ந்தது.
விஷமுட்களோடு ஆடு அந்தப்பூவை விழுங்கி மறைந்தது.
குட்டி இளவரசன் இப்போது தனிமையில் இருந்தான். நடந்தால் இருபதடி தூரமே இருக்கும் குட்டிக்கிரகம் இப்போது தொலையாத தூரமாக, நடக்க முடியாத கொடும்பாலையாக மாறியது. குட்டி இளவரசனுக்கு குட்டிப்பூவின் ஞாபகங்கள் பெருகின். நினைவின் ஊற்றுப் பொங்கி குட்டிப்பூவைத் தேடியது.
ஆனால் மனதில் ஊறிய பாம்பின் விஷம் குட்டி இளவரசனின் உடல் முழுவதும் பரவியது. அப்படியே எந்த சத்தமுமில்லாமல் சரிந்து கீழே விழுந்த குட்டி இளவரசனின் உதடுகள் முணுமுணுத்தன.
என் குட்டிப்பூவே!
No comments:
Post a Comment