Thursday 2 April 2020

குட்டிப்பாப்பா பார்த்த குட்டிப்பாம்பு


. குட்டிப்பாப்பா பார்த்த குட்டிப்பாம்பு

உதயசங்கர்

அன்று குட்டிப்பாப்பாவுக்கு நல்ல கோபம். அவள் கோபமாக இருந்தால் நெற்றியைச் சுருக்கி புருவங்களை தூக்கிக் கொள்வாள். உதடுகளை இறுக்கி மூடிக் கொண்டு வேண்டுமென்றே அம்மாவின் முன்னால் அலைந்து திரிவாள். அவள் கோபமாக இருப்பது அம்மாவுக்குத் தெரியணுமில்லே. எதாவது சாமான்களை சத்தமாக எடுக்கவோ வைக்கவோ செய்வாள். ஆனால் அம்மா இவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவசர அவசரமாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. என்பதால் யாராவது விருந்தினர்கள் வருவார்களாக இருக்கும். யார் அதையெல்லாம் குட்டிப்பாப்பாவிடம் சொல்லப்போகிறார்கள். சமயத்தில் அப்பா நல்லமூடில் இருந்தால் குட்டிப்பாப்பாவைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு போய் நிறையச் சொல்லுவார்.
ம்ம்ம் இது என்ன வாசனை! நெய்வாசனை! ஐய்! அம்மா கேசரி கிண்டுகிறாள். குட்டிப்பாப்பாவுக்குக் கேசரி என்றால் அவ்வளவு பிடிக்கும். லபக்.. லபக்கென்று முழுங்கி விடுவாள். ஒரு துணுக்கு கூட இல்லாமல் சாப்பிட்டு விடுவாள். ஆனால் இன்று அவள் கோபமாக இருக்கிறாளே. கேசரி அவளுடைய கோபத்துக்குச் சவால் விட்டது. குட்டிப்பாப்பாவுக்கு ஏன் கோபம் வந்தது தெரியுமா?
அவளுடன் படிக்கும் விஜி அவளோட அம்மாகூடச் சேர்ந்து நிறைய தொலைக்காட்சித்தொடர் பார்ப்பாளாம். ஐயே! யாராவது பெரியவங்க அழுவுணி நாடகங்களைப் பார்ப்பாங்களா? அப்படி அவள் பார்த்த நாகமோகினி தொடர்ல பாம்பு பொம்பிளையா மாறுதாம். பால் குடிக்கிதாம்.. முட்டை சாப்பிடுதாம். ஞாபகம் வைச்சிருந்து பழிவாங்குதாம்.. கும்பிடுறவங்களை ஆசீர்வாதம் பண்ணுதாம்.. இப்படி நிறையச் சொன்னாள். அப்படிச் சொல்லும்போது அவளுக்கு ரொம்பத் தெரிஞ்சமாதிரி பெருமை வேற. குட்டிப்பாப்பா எதையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டாள். அவளுக்குத்தான் நிறையக் கேள்விகள் வருமே. அந்தக் கேள்விகளை அவள் அம்மாவிடம் கேட்டாள்.
“ கதைக்கு கண்ணுமூக்கு காலு கை கிடையாதும்மா.. அது எப்படி வேணுமின்னாலும் போகும்..” என்று அம்மா ரொம்ப சிம்பிளாகச் சொல்லி முடித்துவிட்டாள். மறுபடியும் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டபோது,
“ கொஞ்சம் சும்மாஇரி! அம்மாவுக்கு இப்ப நிறைய வேலை இருக்கு..அப்புறம் சொல்றேன்..”
என்று சொல்லிவிட்டு போய் விட்டாள். அதான் குட்டிப்பாப்பாவுக்குக் கோபம். கேசரியின் மணம் அவளுடைய கோபத்தை ஜெயிச்சிரும்னு தோன்றியதும் குட்டிப்பாப்பா எழுந்து தோட்டத்துக்குப் போய் விட்டாள்,
நேரே எலுமிச்சை மரம் இருந்த இடத்துக்குப் போனாள். எலுமிச்சை மரம் குடை மாதிரி விரிந்து கவிழ்ந்திருந்தது. தொடக்கூடாது. முள்ளு குத்திரும். வளைஞ்சி கொக்கி மாதிரி இருக்கும். இப்போது பூ பூத்திருக்கிறது. இத்தினியூண்டு பூ. வெள்ளைப்பூ. பூ, இலை, எல்லாமே எலுமிச்சை வாசனை அடிக்கும். குடை மாதிரி அதற்குக்கீழ் சாயங்கால நிழல். குட்டிப்பாப்பா. அதன்கீழ்   உட்கார்ந்தாள். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து வளைஞ்சி வளைஞ்சி ஒரு கோடு போட்டாள். என்ன செய்யலாம்? அம்மா இப்போது கூப்பிட்டு கேசரி கொடுப்பாளா? கேசரியை நினைத்ததும் நாக்கில் எச்சில் ஊறியது.
மறுபடியும் குச்சியால் கோடு போடக் குனிந்தபோது பார்த்தால் அவள் போட்டிருந்த கோடு நெளிந்து கொண்டிருந்தது. ஒரு புழு மாதிரி. அவள் நன்றாக உற்றுக் கவனித்தாள். மஞ்சள் நிறத்தில் குறுக்கே கருப்பு நிறக்கோடுகளுடன் வளவளப்பாக இருந்தது. அழகு! அழகு! அவ்வளவு அழகு! அவள் போட்டிருந்த கோட்டிலிருந்து வெளியேற முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது. குட்டிப்பாப்பா கையிலிருந்த குச்சியால் அதைத் தூக்க முயற்சித்தாள். சடக்கென்று தலையைத் தூக்கி,
“ ஏ.. குட்டிப்பாப்பா நில்லு என்ன செய்றே? கொஞ்சங்கூட பயமில்லே..”
கத்தியது. குட்டிப்பாப்பா கொஞ்சம் பயந்து தான் போனாள். ஆனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
“ ஏ புழுவே நீ பள்ளத்திலேருந்து ஏற முடியாம கஷ்டப்படறியேன்னு உதவி செய்ய நெனச்சேன்பாரு.. என்னயவே மிரட்டறியா? “
“ யாரைப்பார்த்து புழுன்னு சொன்னே! நான் பாம்பு. மஞ்சள் கட்டுவிரியன் குட்டி..”
“ ஆ.. பாம்பா.. அடிச்சிக்கொல்லணுமே..” என்று சுற்றுமுற்றும் கல் கிடக்கிறதா என்று பார்த்தாள் குட்டிப்பாப்பா. பாம்பு பள்ளத்தில் பதுங்கிக் கொண்டு,
“ நான் ஏதாச்சும் உன்னையத் தொந்திரவு செய்ஞ்சேனா.. ஏன் என்னைய கொல்லணும்கிற..” என்று பரிதாபமாகக் கேட்டது குட்டிப்பாம்பு.
“ நீ சொல்றது சரிதான்… சாரி சாரி.குட்டிப்பாம்பே! .நீ ரொம்ப அழகா இருக்கே..”
“ ஓ.. தேங்க் யூ.. நீயும் தான் ” என்றது குட்டிப்பாம்பு. வெட்கத்துடன் குட்டிப்பாப்பா குனிந்து அதைப் பார்த்து,
“ நீ பாம்பு தானே! உங்கிட்டே கேக்கிறேன்.. உன்னால பாலைக்குடிக்கமுடியுமா? முட்டையை உடைச்சுத் திங்க முடியுமா?.. பாம்புகள் பழிவாங்குமா? பாம்புக்கு நாகரத்தினம் இருக்கா? பாம்பால உருவத்தை மாத்தமுடியுமா? ம்ம்ம்..”
“ நிறுத்து நிறுத்து குட்டிப்பாப்பா.. வரிசையாக் கேட்டுக்கிட்டே போறே. என்னால ஒரு கேள்விக்கு மேலே ஞாபகம் வச்சுக்க முடியாது .” என்று தலையை உலுக்கிய குட்டிப்பாம்பு,
“ பாம்புகளோட தொண்டை அமைப்பு அப்படியே விழுங்கற அமைப்பு தான்.. உறிஞ்சி கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிற மாதிரியான தசைகள் எங்களுக்குக் கிடையாது.. எதுனாலும் நாங்க அப்படியே முழுங்கிருவோம்…”
“ எங்களுக்கு மிகவும் குறைந்த அறிவே உண்டு.. காது கேட்காது.. தரையில் உள்ள அதிர்வை வைச்சுத்தான் நாங்க கேட்போம்… நாக்கை நீட்டி காற்றில் முகர்ந்து தான் உணவைக் கண்டுபிடிக்கிறோம்.. எங்களுக்கு எப்படி ஞாபகசக்தி இருக்கும்? அப்புறம் பழிவாங்கறது மனுசங்களோட குணம்.. எங்களுக்கு சாப்பிட உணவு, தங்க வீடு, கூடி வாழத்துணை, அவ்வளவு தான் வேணும் “
குட்டிப்பாப்பா ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். குட்டிப்பாம்பு சொல்லி நிறுத்தியதும்,
 எல்லோரையும் பாம்பு கடிக்கும்னு ஏன் சொல்றாங்க.? “
குட்டிபாம்பு சிரித்தது. “ எங்களை யாரும் தொந்திரவு பண்ணாதவரைக்கும் நாங்களும் யாரையும் தொந்திரவு பண்ன மாட்டோம்.. எங்க உயிருக்கு ஆபத்துன்னா மட்டும் தான் கடிப்போம்.. எல்லாப்பாம்புக்கும் விஷம் கிடையாது தெரியுமா? குட்டிப்பாப்பா..”
” அப்புறம் ஏன் சினிமா, தொலைக்காட்சியில உங்களக் கொடூரமா காட்டுறாங்க..? “
” எனக்கும் அந்த சந்தேகம் தான் குட்டிப்பாப்பா.. நானும் எங்க தாத்தாகிட்ட கேட்டேன்.. அவருக்கும் தெரியல. இயற்கையோட சங்கிலியில நாங்க ரொம்ப முக்கியமானவங்க.. எலி, தவளை, ஓணான், மாதிரி சின்ன உயிர்கள் அதிகமாகாமல் இருக்க நாங்க உதவுறோம்.. இந்த உலகம் மனுசங்களுக்கு மட்டுமானதில்ல...”
” ஆமா இல்லை.. மனுசங்க விசித்திரமானவங்க.. எல்லாத்தையும் நம்பிருவாங்க..” என்று குட்டிப்பாப்பா ஞானியைப் போலப் பேசினாள். அப்போது அம்மாவின் குரல் கேட்டது.
“ குட்டிப்பாப்பா.. குட்டிப்பாப்பா.. இங்க வா யாரு வந்திருக்கான்னு பாரு..”
குரல் வந்த திசையை நோக்கி, தலையைத் திருப்பி “ இதோ வர்ரேன்..” என்று சொல்லிவிட்டு குனிந்து குட்டிப்பாம்பைப் பார்த்தாள்.
அங்கே குட்டிப்பாம்பு இல்லை. அவள் வளைஞ்சி வளைஞ்சி போட்டிருந்த கோடு மட்டும்தான் இருந்தது. அவள் எழுந்து திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குள் போனாள். அந்த அழகான மஞ்சள் கட்டுவிரியன் அவள் கண்ணுக்குள்ளேயே இருந்தது.



No comments:

Post a Comment