Sunday, 5 April 2020

தவிட்டுக்குருவியின் ஆசை


தவிட்டுக்குருவியின் ஆசை

உதயசங்கர்

விடிந்தும் விடியாமல் சண்டை ஆரம்பித்து விட்டது. கூட்டமாய் தவிட்டுக்குருவிகள் கத்திக்கொண்டிருந்தன. அந்த இடமே ஒரே சத்தக்காடாக இருந்தது. ஒன்றை ஒன்று கொத்தவும் விரட்டவும், பறந்து சிறுவட்டம் அடித்துத் திரும்பி வந்து உட்காரவும் செய்தன. சில குருவிகள் தத்தித் தத்தி குதித்து வேடிக்கை பார்த்தன. இத்தனைக்கும் காரணம் காலையில் எழுந்ததும் ஒரு தவிட்டுக்குருவி பறந்து வந்த ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்தது. அருகிலிருந்த இன்னொரு தவிட்டுக்குருவி அதன் வாயிலிருந்து அந்த வெட்டுக்கிளியைப் பிடுங்கியது.
“ கீச் கீச் கீச் நான் தான் பிடிச்சேன்.. கீச் கீச் “
என்று வெட்டுக்கிளியை பிடித்த குருவி கத்தியது.
“ கீக்கீச் கிக்கீச் நான் தான் பார்த்தேன் கிக்கீச் “
என்று வெட்டுக்கிளியைப் பிடுங்கிய குருவி கத்தியது. இதற்குள் கீழே கிடந்த வெட்டுக்கிளி குதித்து புற்களுக்குள் மறைந்து விட்டது. இரண்டு தவிட்டுக்குருவிகளும் இறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு ஒன்றை ஒன்று கொத்தின.
“ கீச்ச் கீச்ச் அப்படித்தான் விடாதே போடு சண்டையை.. கீச்ச் “
என்று அருகில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தவிட்டுக்குருவி தூண்டி விட்டது. அதற்கு காலையில் நல்லபொழுதுபோக்கு கிடைத்து விட்டது என்று குஷி.
“ க்க்கீச் க்க்கீச் டேய் சண்டை போடாதீங்கடா இந்த சின்னப்பூச்சிக்காக அடிச்சிக்காதீங்கடா..”
என்று வயதில் மூத்த தவிட்டுக்குருவி சொல்லிக்கொண்டிருந்தது. அந்தக்குருவியின் பேச்சை யார் கேட்பார்கள்? எப்போதும் சண்டையும் சச்சரவும் கூப்பாடுமாக இருப்பார்கள் தவிட்டுக்குருவிகள். யாருக்காவது புழு, பூச்சி, பழம், கொட்டை, எது கிடைத்தாலும் சண்டை போடாமல் சாப்பிடமாட்டார்கள். இவ்வளவு சண்டை நடக்கிறதே என்று தனித்தனியே போகவும் மாட்டார்கள். எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். சேர்ந்தே இரை தேடுவார்கள்.
அந்தக்கூட்டத்தில் இருந்த மஞ்சள் கண்ணனுக்கு இப்படிச் சண்டைபோட்டு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடுவது பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்? என்று யோசித்தது. அப்போது அதனுடைய நண்பனான தேன்சிட்டின் ஞாபகம் வந்தது. பூக்களின் மீது பறந்து கொண்டே எவ்வளவு லாவகமாக பூக்களில் உள்ள தேனைக் குடிக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது. அதைப்போல தேன்குடிக்கத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இனிப்பான தேன். நினைத்தவுடன் நாக்கு சப்புக்கொட்டியது.
“ கீச் கீச் கீச் ஆகா! ஆகா! தேன்.. வண்ண வண்ணப்பூக்களிலிருந்து ருசியான தேன்.. “
என்று நினைத்தது. அன்று மாலை தேன்சிட்டைப் பார்த்தவுடன் மஞ்சள் கண்ணன் தன்னுடைய ஆசையைச் சொன்னது. தேன்சிட்டு சிறகுகளை அடித்துப் பறந்து கொண்டே,
“ நல்லது நண்பா! பூக்களிலிருந்து தேனை எடுக்கும்போதே நாங்கள் அந்தப்பூக்களின் மகரந்தச்சேர்க்கைக்கும் உதவுகிறோம்.. அதனால அது காயாகி கனியாகிறது… உன்னால் அந்தப்பூக்களைக் காயப்படுத்தாமல் தேனை எடுக்க முடியுமா? “
“ ஓ இது பெரிய விசயமா? எனக்கு ஒரு முறை சொல்லிக்கொடு..அப்புறம் பாரேன்.”
தேன்சிட்டுக்கு வேறு வழி தெரியவில்லை. அது மஞ்சள் கண்ணனிடம்,
“ சரி என் பின்னாலேயே வா..”
தேன்சிட்டு செம்பருத்திச்செடியில் பூத்திருந்த செக்கச்சிவந்த செம்பருத்திப்பூவுக்குள் தன் கூர்மையான அலகை நீட்டி அசங்காமல் தேனைக் குடித்தது. நான்கைந்து பூக்களில் குடித்து விட்டு,
“ நல்லா பாத்துக்கிட்டியா.. இப்ப நீ குடிச்சிப்பாரு..நண்பா..” என்று மஞ்சள் கண்ணனிடம் கூறியது. உடனே மஞ்சள் கண்ணன் செம்பருத்திப்பூவுக்கருகில் போய் அலகை நீட்டியது. குட்டையாகவும் பருமனாகவும் இருந்த அலகு பூவுக்குள்ளே போகவில்லை. வேகமாக தலையை நுழைக்க முயற்சி செய்தது மஞ்சள் கண்ணன். செம்பருத்திப்பூ கிழிந்து தொங்கியது. இன்னும் இரண்டு பூக்களையும் கிழித்து விட்டது அந்தத் தவிட்டுக்குருவி. தேன்சிட்டுக்கு வருத்தமாகி விட்டது.
“ பார்த்தியா.. நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்சு.. உனக்கு அதுக்கு வாகான அலகு இல்லை நண்பா..”
என்று சொன்னது. ஆனால் மஞ்சள் கண்ணனுக்கு ஆசை விடவில்லை.
“ இல்லையில்லை.. இது பெரிய பூ… அதான் இப்படி ஆயிருச்சி.. சின்னப்பூவைக் காட்டு..”
என்று சொன்னது. தேன்சிட்டு மறுபடியும் பறந்து அருகில் இருந்த மல்லிகைப்பூந்தோட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கேயும் முதலில் தேன்சிட்டு தேனைக் குடித்துக் காட்டியது. பின்னர் மஞ்சள் கண்ணன் பறந்து போய் அலகை நீட்டியது. அலகு உள்ளேயே போகவில்லை. பூவை விட அலகு பெரியதாக இருந்தது. வாயைத் திறந்து மூடியபோது பூவை முழுதும் கொத்தி எடுத்து விட்டது. பலமுறை முயற்சி செய்தும் ஏராளமான மல்லிகைப்பூக்களைக் கொத்தி எடுக்கத்தான் முடிந்தது. மஞ்சள் கண்ணன் பரிதாபமாக தேன்சிட்டைப் பார்த்தது.
அப்போது கீழே ஈரமான தரையில் ஒரு மண்புழு ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டது தவிட்டுக்குருவி. அவ்வளவு தான். பாய்ந்து சென்று அந்த மண்புழுவை தன்னுடைய உறுதியான அலகினால் கொத்தி எடுத்துக்கொண்டு பறந்து சென்றது.
தேன்சிட்டு ” ட்வீக் ட்வீக் ட்வீக் இயற்கையன்னை அவங்கவங்களுக்குன்னு தனித்தனித் திறமைகளைக் கொடுத்திருக்காங்க உனக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. நண்பா..” என்று கத்தியது.
தவிட்டுக்குருவியும், “ கிக்கீச் கிகீச்ச்.. எனக்குப் புரிஞ்சிரிச்சு.. “ என்று சொல்லி முடிக்கும் முன்னால் அதன் வாயிலிருந்த மண்புழுவை இன்னொரு தவிட்டுக்குருவி பிடுங்கியது.
“ கிக்கீக்கீ நான் தான் பார்த்தேன்..கிக்கீ “
“ நான் தான் பிடிச்சேன்.. கிக்கீ ..”
என்று கத்திச்சண்டை போட்டன. எல்லாத்தவிட்டுக்குருவிகளும் அங்கே கூடி சலம்பிக்கொண்டிருந்தன.
நன்றி - துளிர் ஏப்ரல் 20


1 comment:

  1. மிகவும் அருமையான கதை. தினம் ஒரு கதை பதிவு செய்யுங்கள். அன்புடன், சுகன்யா.

    ReplyDelete