விகடன் படிப்பறை
விஷ்ணுபுரம்
சரவணன்.
தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதை
எழுத்தாளர் உதயசங்கரின் சமீபத்திய நூல் துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர். தலைப்பைப் படித்ததும் நாம் அடையும் அதிர்ச்சியை
அக்கதையும் அளிக்கிறது. சமகாலத்தில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஆணவக்கொலை தான் மையம்.
ஆனால் அதனை இக்கதை சொல்லியிருக்கும் விதம் இப்பிரச்னையின் தீவிரத்தை மிக ஆழமாக வாசகர்
மனதில் இறக்குகிறது.
அன்றாடம் நாம் காணும் உரையாடும்
எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக உண்மையாகப் பேசும் கதைகள். மனித மனங்களின் விசித்திர
உணர்வுகளை நம்மால் பலநேரங்களில் புரிந்து கொள்ளவே முடியாது என்பதற்கு அழுத்தமான உதாரணம்
கிருஷ்ணனின் அம்மா கதை. நான்கு குழந்தைகள் உள்ள வீட்டில் அப்பா ஊரை விட்டு ஓடிவிடுகிறார்.
மூத்தபிள்ளை கிருஷ்ணன் குழந்தைத்தொழிலாளியாகி வீட்டைத் தாங்குகிறான். தம்பி தங்கைகளைப்
படிக்கவைத்து வேலைக்கு அனுப்புகிறான். அவர்களுக்கு முன்னின்று திருமணம் செய்து வைக்கும்
அம்மா கிருஷ்ணனின் திருமணம் குறித்து பேசக்கூடமாட்டார். அம்மாவின் சிறு பாராட்டுக்காக
ஓடி ஓடி உழைக்கும் கிருஷ்ணன் இறுதிவரை உடல் உபாதையோடு வாழ்நாளைக் கழிக்கிறான். அம்மா
என்றால் அன்பு, பாரபட்சமின்மை, கருணை என்று சொல்லப்பட்டு வருபவை மீதான முக்கியமான கேள்வியை
வீசிச்செல்கிறது இக்கதை.
நொண்டிநகரம் எனும் கதையில் குப்பைமேட்டில்
வசிக்கும் கிழவர் அளித்த புத்தகத்தின் வழியே ஒரு கதை கிடைக்கிறது. மலையாளத்தில் உள்ள
கதையை மொழிபெயர்க்க ஒருவரிடம் தருகிறார். அந்தக் கதையில் வரும் அகோர ஆதிமூலம் கதாபாத்திரம்
வாசிப்பவரை அதிரச்செய்யும் செயலைச் செய்கிறது. ஆனாலும் அதை விவரிக்கையில் லேசான எள்ளலைக்
கையாள்கிறார் உதயசங்கர்.
நேரடியாகக் கதைசொல்லும் முறையில்
எழுதப்பட்டிருக்கும் கதைகள் தான் என்றாலும் ஒவ்வொரு கதைக்கும் கதை செல்லும் பாதையை
விவரிக்கும் தன்மையில் பல வித்தியாசாங்களைக் கையாள்கிறார் உதயசங்கர். ரோஜாப்பூவின்
இதழ்கள் ஒரு பெண்ணின் முன்கதையைச் சொல்வது போலவும், பாட்டில்களுக்குள் வாழும் மனிதர்களைப்
பற்றியும், ஹேங் ஓவரில் ஒரே இடத்தில் சுற்றும் இளைஞனைப் பற்றியும், வெளிநாட்டு எழுத்தாளர்
தன் கதையை விவரிக்கும் விதம் என வாசகருக்கு சோர்வில்லாத தன்மையில் கதைகள் எழுதப்பட்டுள்ளன.
- துண்டிக்கப்பட்ட
தலையில் சூடிய ரோஜாமலர்
- சிறுகதைகள்
- வெளியீடு
– நூல்வனம்
- அலைபேசி
– 9176549991
- விலை.
200
- பக்கங்கள்
– 216.
நன்றி - ஆனந்தவிகடன்
No comments:
Post a Comment