ஒரு கிரகம் ஒரு
ராஜா
உதயசங்கர்
குட்டி இளவரசன் ஒரு பஞ்சைப் போல
பறந்து போனான். அந்தப் பஞ்சை சுமந்து செல்ல ஒரு விண்கலத்தை செய்து கொடுத்தார் அந்துவான்.
அந்த விண்கலத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அதை இயக்குவதற்கு விசைகளும் கிடையாது.
அது குட்டி இளவரசனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதற்கும் குட்டி இளவரசனைப் பிடித்திருந்தது.
யாரும் யாரையும் அதிகாரம் செய்யக்கூடாது என்று நினைத்தான். கழுத்திலணிந்திருந்த அவனுடைய
மப்ளர் விண்கலத்தின் வேகத்தில் பறந்து விட்டது. மப்ளர் இல்லையென்றால் தன்னை யாரும்
அடையாளம் காணமுடியாதென்று குட்டி இளவரசன் நினைத்தான். எல்லோருக்கும் அடையாளம் முக்கியமில்லையா.
அடையாளங்களை வைத்துத்தானே ஒருவரை அறிந்து கொள்கிறார்கள்.. மப்ளர் பறந்து போய்விட்டதே
என்று கவலைப்பட்ட குட்டி இளவரசனின் மனதைப் புரிந்து கொண்டது விண்கலம். அப்படியே திரும்பி
மப்ளர் விழுந்த கிரகத்தை நோக்கிப் பறந்தது.
மிகப்பிரமாண்டமான கிரகம் அது.
ஆனால் யாருமே இல்லை. கீழே கிடந்த மப்ளரை எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்ட குட்டி இளவரசன்
அந்தக் கிரகத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான். அவன் நடக்க நடக்க எங்கிருந்தோ ஒரு
அசரீரி மாதிரி ஆணைகள் கேட்டுக் கொண்டேயிருந்தது. குனிந்து பார்த்தால் அந்தக் கிரகத்தின்
தரை முழுவதும் கணிணித்திரையாகத் தெரிந்தது. அதில் முடியில்லாத மொட்டைத் தலையில் உச்சியில்
மட்டும் ஒரே ஒரு மயிர் நின்று கொண்டிருக்க, நெற்றியில் மிகச்சிறிய கிரீடத்தை வைத்துக்
கொண்டு, உடலுக்குப் பொருத்தமில்லாத குட்டைச்சட்டையும் கால் சட்டையுமணிந்த கால்வரை தாடி
நீண்ட, முட்டைக்கண்களும், பருத்த உதடுகளும், உருண்டை மூக்கும் கொண்ட ஒரு உருவம் தோன்றியது.
“ வருக! வருக! கோ கிரகத்துக்கு
வருகை புரிந்த குட்டி இளவரசனே! உன்னை கோ கிரகத்தின் சக்கரவர்த்தியான கோரா வரவேற்கிறேன்.
குடிமகனில்லாத இந்தக்கிரகத்தில் தனியே என்னை நானே ஆட்சி செய்வது சலிப்பாக இருக்கிறது.
இந்தக்கிரகத்தில் எல்லாம் வலது
பக்கமாகவே இருக்கும். நீ வலது பக்கச்சாலையில் திரும்பி, வலது பக்கத்தெருவுக்குள் நுழைந்து
வலது பக்கமாக இருக்கும் ஒரே அரண்மனையின் வலது பக்கவாசல்க் கதவில் உள்ள வலது கைப்பிடியை
உன் வலது கையினால், தள்ளித் திறக்கவேண்டும். நினைவிருக்கட்டும். வலது காலை எடுத்து
வைக்கவேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வருகிற என்னுடைய முதல் குடிமகனை வரவேற்கக்
காத்திருக்கிறேன்.”
குட்டி இளவரசனுக்கு ஆச்சரியமாக
இருந்தது. குடிமக்களே இல்லாத இந்தக் கோ கிரகத்தில் தனியாக இந்த கோரா ராஜா யாரை ஆட்சி
செய்கிறான். யாருக்கு ஆணைகளிடுவான். யாரை வைத்து ஆணைகளை நிறைவேற்றுவான். குட்டி இளவரசனுக்கு
எதுவும் புரியவில்லை.
“ நீங்கள் எப்படி ராஜாவானீர்கள்?
“
“ நானே எனக்கு ராஜாவாக முடி சூட்டிக்
கொண்டேன்.. நானே எனக்குச் சட்டங்களைப் போட்டுக் கொண்டேன்.. என் சட்டங்களை நானே மீறினேன்.
சட்டங்களை மீறியதற்காக நானே எனக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டேன்.. பிறகு தண்டனை கொடுப்ப்பதும்
அதை நிறைவேற்றுவதும் நான் என்பதால் நானே என்னை மன்னித்துக் கொண்டேன்…”
“ எப்படி நீங்கள் தனியாக இருக்கிறீர்கள்?
உறவினர்களோ, நண்பர்களோ, எதிரிகளோ இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள் ராஜா? “
“ எனக்கு உறவினர்களோ, நண்பர்களோ
தேவையில்லை.. அவர்கள் இருந்தால் அன்பு, பாசம், நேசம், என்று என்னுடைய உணர்ச்சிகளைச்
செலவழிக்க வேண்டும்.. எனக்கு அதில் விருப்பமில்லை.. ஆனால் எதிரிகள் வேண்டும்.. எதிரிகள்
தான் நான் இருப்பதை எனக்கு உணர்த்துகிறார்கள்.. எனவே கற்பனையான எதிரிகளை உருவாக்குகிறேன்…”
“ எப்படி எதிரிகளை உருவாக்குகிறீர்கள்?
“
“ முட்டாள்! உனக்குப் புரியாது.
இதனால் தான் உன்னால் ராஜாவாக முடியவில்லை… தெரிந்ததா? நீ காலம் பூராவும் குடிமகனாகவே
இருக்கவேண்டியது தான்.. அதோ பார்! அங்கே என்னைப் போல குண்டாக இல்லாதவர்கள் எனக்கு எதிரிகள்..
என்னை விட நீளமான உடை உடுத்துபவர்கள் எதிரிகள். என்னை விட அதிகமான முடி இருப்பவர்கள்
எதிரிகள்.. என்னைவிட உயரமாக இருப்பவர்கள் எதிரிகள்.. என்னை விடக் குள்ளமாக இருப்பவர்கள்
எதிரிகள்.. என்னைப் போலில்லாத எல்லோரும் எனக்கு எதிரிகள்.. ஹாஹ்ஹா..”
“ அப்படின்னா நானும் உங்களுடைய
எதிரி தானா? “
என்று குட்டி இளவரசன் கேட்டான்.
கோரா ராஜா தன்னுடைய தலையில் இருந்த ஒற்றைமுடியைத் தடவிக்கொண்டே யோசித்தான். தலையை உலுக்கினான்.
“ இதுவரை இல்லை.. நீ என்னுடைய
எதிரியா இல்லையா என்று இனிமேல் தான் சொல்லமுடியும்..” என்றார் ராஜா.
குட்டி இளவரசனுக்குக் குழப்பமாக
இருந்தது. கோரா ராஜாவின் பேச்சு குட்டி இளவரசனுக்குப் பிடிக்கவில்லை. அன்புக்காகவும்
நேசத்துக்காகவும் அலைந்து கொண்டிருந்த குட்டி இளவரசனுக்கு கோரா ராஜாவின் கொள்கைகள்
பிடிக்கவில்லை.
“ நான் உங்களைப் போன்றவர்களுக்கு
குடிமகனாகவோ, நண்பனாகவோ இருக்கமுடியாது.. நான் உங்களுக்கு எதிரியாக இருப்பதிலேயே பெருமைப்படுகிறேன்..”
என்று அவனுடைய மேலங்கி காற்றில்
பறக்கச் சொன்னான் குட்டி இளவரசன். அதைக் கேட்ட ராஜாவின் தாடி துடித்தது. உச்சந்தலையில்
இருந்த ஒற்றைமுடி வேகமாக ஆடியது. அந்தக் கோ கிரகமே அதிர, கோரா ராஜா கத்தினான்.
“ நீ ஒரு கிருமி. என்னுடைய கோ
கிரகத்தை அழிக்கவந்த அந்நிய நாட்டுக்கிருமி. என் குடிமக்களைக் கொல்வதற்காக திருட்டுத்தனமாக
என் கிரகத்துக்குள் நுழைந்த உன்னை விரட்ட என் குடிமக்கள் அனைவரும் ஆயிரம் முறை கை தட்டும்படி
கேட்டுக் கொள்கிறேன்….”
உடனே அவனே ஆயிரம்முறை கைதட்டினான்.
சகிக்கமுடியவில்லை. குட்டி இளவரசன் அதைப் பார்த்துச் சிரித்தான். குட்டி இளவரசனின்
சிரிப்பைப் பார்த்ததும் கோரா ராஜாவின் உடம்பு நடுங்கியது.
“ குடிமக்களே! நம்முடைய எதிரியை
ஒழிக்க எல்லோரும் இருக்கும் மின்விளக்குகளை அணைத்து விட்டு இரவும் பகலும் அகல் விளக்குகளை
ஏற்றுங்கள்! குறைந்த அந்த ஒளியில் நம் எதிரி கண் தெரியாமல் ஓடி விடுவான்…”
என்று சொல்லிவிட்டு அவனே எரிந்து
கொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்கை ஏற்றினான். கோ கிரகம் இருளோ
இருளாகி விட்டது. குட்டி இளவரசன் நிமிர்ந்து பார்த்தான். கோரா ராஜாவின் முடியில்லாத
தலையில் தனிமையில் ஆடிக்கொண்டிருந்த ஒற்றை முடியில் அந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
” அதிகாரம் கோமாளித்தனத்தின் உச்சம்
“
என்று ஒலித்த குட்டி இளவரசனின்
குரலைத் தேடிய கோரா ராஜாவுக்கு விண்கலம் பாய்ந்து சென்றதை மட்டுமே பார்க்க முடிந்தது.
No comments:
Post a Comment