Tuesday, 2 June 2015

கேட்கப்படாத இரங்கற்பா

கேட்கப்படாத இரங்கற்பா

 உதயசங்கர்

இரவென்றும் பாராமல்
பகலென்றும் பாராமல்
பூமியின் விரல்களாய்
காற்றை வருடும் மரங்கள்
அரசியலோ தத்துவமோ
தந்திரங்களோ தெரியாது.
பறவைகளையும் பூச்சிகளையும்
மனிதர்களையும்
இலைக்கண்களால்
பார்க்கின்றன ஒன்றுபோலவே
குழந்தைகள் ஏறும்போதும்
முணுமுணுப்பதில்லை.
எறும்புகள் ஊரும்போதும்
கசந்ததில்லை
பறவைகளின் கூடுகளை
வெறுத்ததில்லை
காற்றோ மழையோ பனியோ புயலோ
கவலை கொள்வதில்லை
ஒருபோதும் சலிப்பதில்லை
வாழும்கணந்தோறும்
அருந்துகின்றன அமுதத்தை
தன்நிழலில் கண்ணயர்ந்து
தன்னை வெட்ட வந்த மனிதர்களின் மீதும்
நிழலையே பொழிகின்றன மரங்கள்
மரணத்தையும் மௌனமாகவே
எதிர்கொள்ளும் மரங்கள்
இறந்தும் வருந்துவதில்லை
வாழ்வைச் சபிப்பதில்லை




2 comments:

  1. மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. யாரும் யாரையும் பார்த்து மரம் மாதிரி நிற்கிறாயே என்று சொல்ல முடியாது.!
    அருமை

    ReplyDelete