Sunday 21 June 2015

கேள்விகளில்லா பொதுவெளி

கேள்விகளில்லா பொதுவெளி
உதயசங்கர்

உலகமயமாக்கலுக்குப் பின்னர் இந்திய சமூகம் தன்னுடைய உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வெகுவாக மாறி விட்டது. தாராளவாத பொருளாதாரக்கொள்கைகளின் விளைவாக சமூகம் முழுவதும் ஒருவித பாதுகாப்பின்மை உணர்வு எல்லோரையும் பீடித்துள்ளது. சமூக உணர்வுநிலை குறைந்து தனிமனித நலன் முன்னெப்போதையும் விட இப்போது முன்னுக்கு வந்துள்ளது. எல்லையில்லா நுகர்வியம் ஒவ்வொருவரையும் சுயநலமிக்கதனித்தீவுகளாக மாற்றியுள்ளது. முன்பு இருந்த சமூக மனிதன் காணாமல் போய்விட்டான். அந்த சமூக மனிதனுக்கு இந்த சமூகத்தின் அனைத்து விஷயங்களையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று உலகமயமாக்கல் அவனை நுகர்வுமனிதனாக மாற்றிவிட்டது. இந்த நுகர்வு மனிதனுக்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகம் பற்றிய அக்கறையில்லை. யாரையும் எதற்கும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய நுகர்வுவெறி எப்படி உருக்கொண்டது?
  இன்றுசமூகப்பொதுவெளி சர்வதேச மற்றும் தேசிய முதலாளிகளால் கட்டமைக்கப்படுகிறது. இருதுருவ உலகம் சோசலிச நாடுகளின் தகர்வோடு முடிவுக்கு வந்தபிறகு உலக முதலாளித்துவம் தன்னை மாறிய சூழலுக்கு ஏற்ப உருமாற்றிக் கொண்டுள்ளது. முன்பு இருந்த தேசிய அரசு சார்ந்த நிதி மூலதனத்தினால் ஏகாதிபத்தியங்களுக்கிடையில் உட்பகை விளைந்தது. சந்தைக்காக உலகத்தை தங்களுக்குள் கூறு போடுவதில் சண்டையிட்டன. ஆனால் உலகமயமாக்கலின் விளைவாக இதுவரை தேசிய அரசு சார்ந்திருந்த தேசிய நிதி மூலதனம் சர்வதேச நிதிமூலதனமாக உருமாறியது. இந்த உருமாற்றத்தினால் தேசிய அரசைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. உலகம் முழுவதும் சென்று கொள்ளை லாபம் ஈட்டிட எல்லைகளை அழித்து நீர்மையாக உலகம் முழுவதும் பாய்ந்து செல்கின்றன. அப்படிப் பாய்ந்து சென்று ஊகவாணிபம் மூலம் உடனடி லாபத்தை அடைவது என்பது அதன் இலக்காக மாறுகிறது.அதனால் தான் உலக நாடுகளில் உற்பத்தியாகும் அனைத்து நுகர்பொருட்களும் நம்மை வந்தடைகின்றன. இப்போது தேசிய அரசு இந்த அந்நிய முதலீட்டை வரைமுறையற்று அநுமதிக்க வேண்டியது மட்டும். அதற்கு சாதகமான அரசைத் தேர்ந்தெடுக்க தேசிய,மற்றும் சர்வதேசிய முதலாளித்துவம் செயல்படும். இப்படி உலகம் முழுவதும் சுதந்திரமாக லாபமீட்ட ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய உட்பகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். ஏகாதிபத்திய உட்பகை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளரை ஏகாதிபத்தியங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றன. அந்த சர்வதேச கண்காணிப்பாளர் அல்லது சர்வதேச சண்டியர் தான் அமெரிக்கா.
அமெரிக்கா உலகநாடுகள் அனைத்தையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி, ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொருளாதார அடியாட்களை உருவாக்கி அனுப்புவதும், ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யத் தடையாக இருக்கும் நாடுகளின் அரசுகளை எப்படியாவது தூக்கி எறிவதையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளது. அந்த நாடுகளில் முற்போக்கான இடதுசாரி அமைப்புகளை பலவீனப்படுத்துவது, பிற்போக்கான வலதுசாரி அமைப்புகளை முன்னுக்குக் கொண்டு வருவது, மதஅடிப்படைவாதத்தை வளர்ப்பது, சின்ன நாடாக இருந்தால் அந்த நாட்டின் ஜனாதிபதியையே கஞ்சா கேசில் உள்ளே தள்ளுவது, ( உதாரணம் பனாமா.,) எதிர்ப்புகளை தனிநபர் கொலைகள் மூலம் அடக்குவது,, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொருளாதாரத் தடைகள் விதிப்பது, ஊடகங்களை விலைக்கு வாங்கி உலகமுதலாளித்துவத்துக்குச் சாதகமான கருத்துக்களை உற்பத்தி செய்து பிரசாரம் செய்வது போன்ற எண்ணிக்கையிலடங்கா காரியங்களின் மூலம் உலகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திருப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது. உலகமயச்சுரண்டலுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போது நிதி மூலதனம் முரட்டுத்தனமாக மாறும். கொடிய கோரைப்பற்களோடு அது பாசிசப்பேயாக மாறும். அதற்கு வசதியாக மக்களிடம் ஏற்கனவே இருக்கும் சநாதன பழமைவாதமான பண்பாடு, கலாச்சாரம் புனிதம், ஆகியவற்றை தீ மூட்டி வளர்க்கும்.
உலகமயமாக்கலின் விளைவாக மக்களிடையே அதிகரித்து வரும் மேடுபள்ளங்கள். மேட்டில் மிகச்சிலரும் பள்ளங்களில் ஏராளமான சாமானிய மக்களும் வீழ்ந்து தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும் நிலை.  மக்களின் வாழ்க்கை நெருக்கடிகள், அவர்களை முதலாளித்துவத்துக்கு எதிராக போராடத்தூண்டும். அப்போதே வலது சாரி பிற்போக்குத்தனம் மதவாத, சாதிவெறிச் சக்திகள் காலம் காலமாக தங்களுடைய கையில் வைத்திருக்கும் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கும். அவர்களுக்குள்ளேயே கற்பிதமான வில்லன்களை உருவாக்கும். மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதன் வழியாக தன்னுடைய சுரண்டல் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்து கொள்ளும்.
இத்தாலியில் பாசிசம் தோற்றம் கொள்ள இடது சாரி ஜனநாயக சக்திகள் செய்யத்தவறியதாக இரண்டு விஷயங்களைச் சொல்கிறார் கிராம்ஷி. கத்தோலிக்கத்திருச்சபையின் மேலாண்மையைத் தகர்க்கத் தவறியதும் மதசார்பற்ற ஜனநாயக அறிவியல் கலாச்சாரத்தை உருவாக்கத் தவறியதும் தான் என்று சொல்கிறார்.
நீண்டகாலத்திட்டங்களோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய வலதுசாரி சக்திகள் தன்னுடைய பாசிச செயல்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் மதவெறியர்களையும் மதப்பற்றாளர்களையும் பிரித்தறிய முடியாதபடி எல்லோருடைய ஆன்மீக நிகழ்ச்சிநிரல்களையும் தங்களுடைய கையில் எடுத்தது. பெண்களை விளக்குபூஜை, காமாட்சிபூஜை, மாங்கலியபூஜை, சர்ஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை, என்று ஒன்று திரட்டியது. அதற்கு வீடுகளில் உள்ள ஆண்களும் மன இசைவைத் தருகிற நெருக்கடியைத் தருவது, குழந்தைகளை திரட்டி ஆன்மீக பஜனைகள் செய்வது, யோகாசனம், மருத்துவ முகாம்கள் மூலம் பொது மக்களைத் திரட்டி அவர்கள் மத்தியில் ஆன்மீகத்தின் பெயரால் மதவெறி விதைகளைத் தூவி வளர்ப்பது, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி என்ற பெயரில் காகாவில் சேர்த்து அவர்களிடம் வன்முறை வெறியைத் தூண்டுவது, இது போதாதென்று பிரதோஷம், அஷ்டமி, நவமி, என்று காலாவதியான மூடநம்பிக்கைகளுக்கு புத்துயிரளித்து தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் கோவில் மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை இன்றியமையாதாதாக மாற்றுவது என்று செயல்படுகின்றன. தொடர்ந்து அவர்கள் செய்த இந்த நடவடிக்கைகளின் பலனை அதிகாரத்தைக் கைப்பற்றியதன் வழியாக இன்று அநுபவிக்கிறார்கள்.
தங்களுடைய மேலாதிக்கத்துக்கு எதிராக கிளம்பும் எதிர்க்குரல்கள், மாற்றுக்கருத்துக்கள், பொதுவெளி விவாதங்கள் அடக்கப்படுகின்றன. அதிகாரம் தன் கொடுங்கரங்களால் பொதுவெளிஜனநாயகத்தின் குரல்வளையை இறுக்கிக் கொண்டிருக்கிறது. முதலில் சமூகத்தின் மனசாட்சிகளாக மாற்றத்திற்கான காரணிகளாக, விரிந்து பரந்த விவாதங்களை உருவாக்குபவர்களாக விமரிசனங்களை தங்கள் நுண்மான்நுழைபுலம் கொண்டு முன்வைப்பவர்களாக, இருக்கிற அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும் வன்முறை மூலமாகவும் சட்டபூர்வமாகவும் கூட முடக்குகிறது. டோனி வெண்டிகர், பெருமாள் முருகன், முதலியவர்களின் நூல்களை முடக்குவதில் தொடங்கி நரேந்திர தபோல்கர், பன்சாரே, அபிஜித், போன்றோரைக் கொலை செய்வதன் வழியாக ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது. தன் வழியில் குறுக்கிடுபவர்களை எவ்வகையிலும் அகற்றத் தயாராக இருக்கிற செய்தி தான் அது.
ஐ.ஐடியில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டிருப்பது மற்றுமொரு எச்சரிக்கை. கல்விக்கூடங்களிலும் தங்களுடைய கண்காணிப்பை உறுதிப்படுத்துகிறது. ஒட்டு மொத்த சமூக வெளியையும் தன்னுடைய கண்காணிப்பின் கொடும்பரப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறது. எல்லாம் சட்டப்படியே நடக்கிறது.
இந்தியாவின் விடுதலைப் போராட்டகாலத்தில் முன்னுக்கு வந்த காலனியாதிக்க எதிர்ப்பு, மதச்சார்பின்மை, இந்திய தேசிய வாதம், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி, தேசிய முதலாளித்துவம் தன்னுடைய வளர்ச்சிக்காக நிலை நிறுத்திய தாராள ஜனநாயக உணர்வு, சுதந்திரமான ஊடகங்களின் எழுச்சி, லட்சியவாதத்தின் எழுச்சி, இடதுசாரிகளின் எழுச்சிமிக்க தலையீடு, எல்லாம் சேர்ந்து இந்திய சமூகத்தின் பொதுவெளியில் மிகக் காத்திரமான ஜனநாயக எழுச்சியையும், சமூகத்தின் உள்ளடக்கத்தில் முற்போக்கான வளர்ச்சியையும் ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் இந்துத்துவாவும் செய்த சூழ்ச்சிகளின் விளைவாக உலகவரலாறு காணாத மதக்கலவரம் நடந்த போதும் அதிலிருந்து மீளும் வல்லமை பொதுவெளி சமூகத்துக்கு இருந்தது. இந்திய அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் முன்வைத்த மாற்றுக்கருத்துகளையும், விமரிசனங்களையும் விவாதங்களையும் ஏற்றுக் கொண்டு முன்னேறியது. மதச்சார்பற்ற சக்திகளின் கை ஓங்கியிருந்த சமயம் அது. எனவே மதவெறிச்சக்திகள் பதுங்கியிருந்தன பாய்வதற்கான தருணம் நோக்கி. எப்படி சோவியத்தில் கத்தோலிக்க திருச்சபை சோசலிசத்துக்கு எதிராக தன் பிரச்சாரத்தைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்ததோ அப்படியே தங்களுடைய இந்துத்வா நிகழ்ச்சி நிரலைக் கைவிடாமல் தொடர்ந்து பண்பாட்டு தளத்தில் நடத்திக் கொண்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வராதபடிக்கு விதவிதமான அமைப்புகள் உருவாகி கோவில்களை ஆக்கிரமித்தன. இந்து மதத்தின் எந்தவகைமைக்குள்ளும் வராத பெரும்பான்மை மக்களை பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்துத்வா சக்திகளும் கோவில்களில் ஒன்றிணைத்தன .மதசார்பற்ற சக்திகளின் நிகழ்ச்சிநிரலில் ஏற்பட்ட பண்பாட்டு வெற்றிடத்தை மிகச் சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டன
இன்றைக்கு இந்திய சமுகத்தின் பொதுவெளி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய கையில் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர்களூம் அறிவுஜீவிகளும், அறிவியலாளர்களும் அச்சுறுத்தப்பட்டு அமைதியாக்கப் பட்டுவிட்டால் பின் கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். கேள்விகளில்லா அந்தப் பொதுவெளியில் உலகமுதலாளித்துவமும் மதவெறியும் தங்களுடைய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கி விடும். முன்னெப்போதையும் விட இப்போது தான் இந்திய அறிவுஜீவிகள், மதசார்பற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், இடதுசாரிகள் சமூகநீதி விழைவோர், சமத்துவச்சிந்தனையாளர்கள், ஆகியோரின் ஒன்றிணைந்த ஒரே குரல் மிக மிக அவசியமாயிருக்கிறது. வரலாற்றில் மனித மாண்புகளை உயர்த்திப்பிடிக்க வேண்டிய தருணம் இது.!
நன்றி - வண்ணக்கதிர்


No comments:

Post a Comment