Wednesday 20 May 2020

இயற்கை வழி


இயற்கை வழி

உதயசங்கர்

அம்மா காத்திருந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து இன்னும் மதியழகன் வரவில்லை. இப்போது கொஞ்சநாட்களாக தாமதமாகவே வருகிறான். ஏன் என்று தெரியவில்லை. பள்ளிக்கூடம் புலிகுத்தியில் இருந்தது. அவர்களுடைய வீட்டிலிருந்து பள்ளி ரொம்பதூரமில்லை. ஒரு கிலோ மீட்டருக்குள் தான் இருக்கும். குறுக்குவழியில் நடந்தால் இன்னும் பக்கம். பள்ளிக்கூடத்தில் தாமதமாக விடுகிறார்களா? ஒருவேளை அவன் வேறு எங்காவது சுற்றிக்கொண்டிருந்து வருகிறானோ, இல்லை எங்காவது விளையாடி விட்டு வருகிறானோ அம்மா யோசித்தாள். கேட்டால் அதெல்லாம் இல்லை என்கிறான். நேரே பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குத் தான் வருகிறேன் என்கிறான். அரை மணிநேரத்தில் வரவேண்டியவன் இரண்டு மணிநேரம் கழித்து வருகிறான். சிலசமயம் இருட்டியபிறகு வந்து சேர்கிறான். என்ன காரணமாக இருக்கும்? அம்மாவுக்குப் புரியவில்லை.
அம்மா ஒரு முடிவு செய்தாள். நாளை பள்ளிக்கூடம் விடும் நேரம் அங்கே போய் அவன்கூடவே வரவேண்டும் என்று நினைத்தாள். மறுநாள் பள்ளிக்கூடம் விட்டு மதியழகன் வெளியே வரும்போது அம்மா வாசலில் நிற்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அம்மா புலிகுத்தியில் உள்ள அவரது உறவினரைப் பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னாள். சரி என்று இருவரும் நடந்தார்கள்.
சாலை வழியே போகாமல் மதியழகன் குறுக்குவழியில் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போனான். அது வண்டிப்பாதை. பாதையின் இரண்டு பக்கங்களிலும் சமவெளிக்காடு விரிந்திருந்தது. தும்பை, காட்டாமணக்கு, ஆவரம்பூச்செடி, இலந்தை, கொளுஞ்சி, குப்பைமேனி, ஓரிதழ் தாமரை, கண்டங்கத்தரி, காட்டுத்துளசி, எருக்கஞ்செடி, ஊமத்தைச்செடி, நொச்சி, போன்ற  புதர்ச்செடிகளும், ந முசுமுசுக்கை, தூதுவளை, போன்ற கொடிகளும் மஞ்சணத்தி, கருவை மரம், உடைமரம், வேலிக்கருவை, நுணா
போன்ற சிறிய மரங்களும் அடர்ந்திருந்தன. கீழே அருகம்புல் மெத்து மெத்து என்று விரிந்திருந்தது.
நடந்து கொண்டிருந்த மதியழகன் அப்படியே நின்றான். அம்மாவின் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தான்.
“ அங்கே பாரு கௌதாரிக்குஞ்சு! “
அம்மாவின் கண்ணுக்குத் தெரியவில்லை. அவன் கை காட்டிய திசையில் கூர்ந்து பார்த்தாள். புற்களுக்கு நடுவில் ஒரு சிறிய கௌதாரிக்குஞ்சு உட்கார்ந்திருந்தது. அம்மா இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறாள். அப்படியே அம்மாவின் கைபிடித்து அருகில் இருந்த மஞ்சணத்தி செடியின் அருகில் கூட்டிக்கொண்டு போனான். அதன் இலைகளின் அடியில் வண்ணத்திப்பூச்சிகளின் கூடுகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கூட்டை உடைத்துக் கொண்டு மஞ்சள் நிறத்தில் கருப்புக்கோடுகள் போட்ட வண்ணத்துப்பூச்சி வந்து நின்றது. ஈரம் உலர்வதற்காக சில நிமிடங்கள் நின்ற வண்ணத்துப்பூச்சி சிறகுகளை விரித்துப் பறந்து போனது.
பாதையின் இடதுபுறத்திலிருந்து திடீரென இரண்டு காட்டுப்புறா விர்ரென பறந்தன. மாலைச்சூரியனின் ஒளியில் அவை மின்னி மறைந்தன. அப்போது கருவை மரத்திலிருந்து குக்கூகூக்கூ குக்கூக்க்கூகூகூ என்ற சத்தம் கேட்டது. இலைகளில் மறைந்துகொண்டு கருங்குயில் கத்திக் கொண்டிருந்தது. மதியழகன் அம்மாவிடம்,
“ அம்மா இங்கே எங்கேயோ பக்கத்தில இருக்கிற புதர்ல தவிட்டுக்குருவியோட கூடு இருக்கு.. அதில முட்டையிடத்தான் குயில் காத்துக்கிட்டிருக்கு…” என்று சொன்னான். அம்மாவுக்கு எல்லாமே புதிதாக இருந்தது. உடை மரத்தின் கிளையில் ஏறிய பச்சோந்தி உடனே கருஞ்சாம்பலாய் தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப் பார்த்து கண்களை உருட்டி முதுகைத் தூக்கித் தூக்கி ஆடியது.
அடுத்த அடி எடுத்துவைக்கும்போது அம்மாவின் முன்னால் ஒரு பத்தடி தூரத்தில் இரண்டு சாம்பலும் மஞ்சளும் கலந்த இரண்டு காட்டு முயல்கள் பாய்ந்து சென்றன. அம்மா திடுக்கிட்டு நின்று விட்டாள். மதியழகன் சிரித்தான். பொழுது இருட்டத்தொடங்கியது. தூரத்தில் குள்ளநரியின் ஊளைச்சத்தம் கேட்டது. அடுத்த கணம் அவர்களுக்குப் பின்னால் அந்தச் சத்தம் கேட்டது. அம்மா பயந்து போய் விட்டாள். மதியழகன் அப்படியே அம்மாவை நிறுத்தினான். அவர்களுக்கு முன்னால் ஏழடி நீளத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு சாரைப்பாம்பு வாயில் கவ்விய காட்டு எலியுடன் பாதையைக் கடந்து கொண்டிருந்தது.
அவன் மேலே கை நீட்டினான். படைகுருவிகள் கூட்டமாகப் பறந்து போய்க்கொண்டிருந்தன. அதன் பின்னால் மூன்று நாரைகள் போய்க்கொண்டிருந்தன. புதர்க்காட்டில் ஒரே சத்தமாக இருந்தது. வண்டுகளின் ரீங்காரம், பூச்சிகளின் கீச்சொலி, பறவைகளின் கெச்சட்டம், ஆந்தையின் கேவல், உயரமான விளா மரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த ஆண்மயிலின் அகவல், குள்ளநரிகளின் ஊளை என்று கலவையான சத்தத்தில் காடு சிரித்துக் கொண்டிருந்தது. மதியழகன்,
“ அம்மா தினந்தினம் இந்த வழியில வரும்போது நிறையப் பார்ப்பேன்..நிறையக் கேட்பேன்.. நிறையத் தெரிஞ்சிக்கிடுவேன்..” என்று சொன்னான்.
இப்போது அம்மாவுக்குப் புரிந்து விட்டது. அவருக்கே இப்போது தான் நிறைய விஷயங்கள் தெரிந்தன. அவர் மதியழகனின் தலையைக் கோதி பாராட்டினாள். மதியழகன் சிரித்தான். இப்போது அவர்களுடைய வீடு தெரியத் தொடங்கியது.

1 comment:

  1. மதியழகன் அம்மாவைப் போல நானும் அச்சோலை வனத்தை தங்களின் எழுத்தின் மூலம் ரசித்தேன். நன்றி !!!

    ReplyDelete