Friday, 22 May 2020

கால்களில் ஒரு காடு


கால்களில் ஒரு காடு
உதயசங்கர்
பதினைந்து நாட்கள் முடிந்து விட்டன. கூட்டுப்புழு இன்னமும் கூட்டுக்குள்ளேயே இருந்தது. அதன் உடம்பு மாறிவிட்டது. கூட்டுப்புழுவாக மாறும் முன்னால் இருந்த உருவம் இப்போது இல்லை. இந்த ஒரு மாதத்துக்குள் எவ்வளவு மாற்றங்கள் ? முட்டையிலிருந்து வெளியே வரும்போது குட்டியூண்டாய் இருந்தது. அவ்வளவு குட்டியாய் இருந்தால் சித்தெறும்பே கடித்து இழுத்துக் கொண்டு போய் விடும். ஆனால் எப்படித்தான் வந்ததோ குட்டியூண்டுப் புழுவுக்கு அவ்வளவு பசி. புழு சாப்பிட்டது. சாப்பிட்டது. சாப்பிட்டுக்கொண்டேயிருந்தது. அது கறிவேப்பிலை மரமோ, எலுமிச்சை மரமோ, எருக்கம்செடியோ, எதுவாக இருந்தாலும் அந்த இலைகளைச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தது. சாப்பிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகி விட்டது. இப்போது மெதுவாகத்தான் அசைய முடிந்தது. உடல் பருத்து மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது புழு. அப்படியே ஒரு இலையின் கீழ் கூட்டை உருவாக்கி உள்ளே இருந்துகொண்டு கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டது. அவ்வளவு தான் தெரியும். அப்புறம் நன்றாக உறங்கி விட்டது. தூக்கமென்றால் தூக்கம் அப்படியொரு தூக்கம்.
தனக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியாத தூக்கம். அதன் கனவுகளில் எல்லாம் பச்சை இலைகள். சின்னச்சின்ன நரம்புகள் ஓடுகிற இலைகள். அந்த இலைகளின் ஓரங்கள் தான் என்ன ருசி! அதை விட இலைத்தளிர்கள் அப்படியே அல்வாவைச் சாப்பிடுவதைப்போல அத்தனை ருசி! அதைச் சாப்பிடும்போதே பச்சைச்சாறு வாயிலிருந்து வெளியே வழியும். சப்புக்கொட்டி சப்புக்கொட்டி சாப்பிட்ட ஞாபகங்கள் தான் வண்ணக்கனவுகளாய் கூட்டுப்புழுவின் கனவுகளில் வந்தன. எல்லாம் சுகமாக இருந்தது. அப்படியே உறங்கிக் கொண்டேயிருக்கலாம் என்று நினைத்தது கூட்டுப்புழு.
அதற்குச் சிறகுகள் முளைத்தது தெரியவில்லை. அந்தச் சிறகுகளில் வண்ணங்களால் ஓவியங்கள் இருப்பது தெரியவில்லை. உணர்கொம்பு வந்திருப்பது தெரியவில்லை. பெரியதாய் இரண்டு கூட்டுக்கண்கள் உருவானது தெரியவில்லை. கூட்டுப்புழுவாய் இருந்தபோது இருந்த தாத்தாவாய் இப்போது அழகான வாயாக மாறியது தெரியவில்லை. மொத்தமாய் உருண்டையாய், குண்டாய், அழகேயில்லாமல் சதைத்துண்டு மாதிரி இருந்த உடல், இப்போது கட்டழகாக, தலை, உடல், வயிறு, வெவ்வேறு வடிவத்தில் மாறி அழகாகி விட்டது தெரியவில்லை. உடலில் மெல்லிய ரோமங்கள் முளைத்தது தெரியவில்லை. அழகான நீண்ட ஆறுகால்கள் நிற்பதற்குத் தயாராய் இருப்பதை அறியவில்லை.
எதுவும் தெரியாமல் கூட்டுப்புழு உறங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் பச்சை இலை கனவுகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. கண்களைத் திறக்க விருப்பமில்லாமல் இருந்த கூட்டுப்புழு அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. கூட்டுக்குள் இருந்த ஈரம் உலரத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்சநேரத்தில் எறும்புகளோ குளவிகளோ வந்துவிட்டால் அப்படியே கூட்டுக்கு இழுத்துக் கொண்டு போய் விடும். மரப்பல்லிகளோ, ஓணான்களோ மோப்பம் பிடித்து வந்து விட்டால் ஒரே வாயில் லபக்கென்று முழுங்கிவிடும். உறக்கத்திலேயே கூட்டுப்புழு செத்து விடும். அதோ ஒரு கட்டெறும்பு மோப்பம்பிடித்து கீழேயிருந்து மேலே வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஓணானும் ஒரு பக்கக்கண்ணைச் சுழட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இரையைப் பார்த்த மகிழ்ச்சியில் மெல்ல முதுகைத் தூக்கி ஆடுகிறது. நாக்கைச் சுழட்டுகிறது. கூட்டுப்புழு இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறது. வரப்போகும் ஆபத்து தெரியாமல் பொய்க்கனவு கண்டு கொண்டிருக்கிறது.
யார் அதை எழுப்பப்போகிறார்கள்?
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த கூட்டுப்புழுவின் காதுகளுக்கருகில் ஒரு இனிமையான குரல் கேட்டது.
“ எழுந்திரு.. எழுந்திரு.. சீக்கிரம் எழுந்திரு..”
கூட்டுப்புழு கண்களைத் திறக்காமல்,
“ ம்ஹூம்.. மாட்டேன்.. எனக்குத் தூக்கம் வருது..” என்று சொன்னது.
“ உன்னுடைய தூக்கம் முடிந்து விட்டது.. இனி நீ எழுந்திரிக்கவேண்டிய நேரம்..”
“ இல்லை.. இன்னும் கொஞ்சநாள் தூங்கறேனே..”
“ கண்களைத் திறந்து பார்! உலகம் எவ்வளவு வெளிச்சமாக இருக்கிறது. வானம் எவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த வானம் முழுவதும் உனக்குத் தான்.. பார் எத்தனை விதமான பூக்கள்! எத்தனை விதமான நிறங்கள்! எத்தனை வடிவங்களில் பூக்கள்! எத்தனை விதமான நறுமணங்கள்! அத்தனை பூக்களும் உன்னை அழைப்பது கேட்கவில்லையா? அத்தனை பூக்களும் உனக்காகத்தான் காத்திருக்கின்றன. அத்தனை பூக்களின் மடிகளும் நீ உட்கார்ந்துகொள்ளத் தயாராக இருக்கின்றன. எத்தனை விதமான சுவைமிக்கத் தேன்துளிகள்! நீ சாப்பிடுவதற்காகத் தயாராக மகரந்தத்தூள்கள்! “
“ எனக்குப் பயமாக இருக்கிறது..” கூட்டுப்புழு முணுமுணுத்தது. எறும்பும் ஓணானும் நெருங்கிக் கொண்டிருந்தன. இன்னும் சற்றுதூரம்தான். கூட்டுப்புழுவின் இருபத்தியொரு நாள் தவம் முடிந்து விடும். அத்தனை உழைப்பும் வீணாகிவிடும். ஓணானின் நடையில் உற்சாகம் தெரிந்தது. கட்டெறும்பும் பரபரவென முன்னேறிக் கொண்டிருந்தது.
அப்போது மெல்ல ஒரு இறகு தடவுவதைப் போல கூட்டுப்புழுவின் உடலில் ஒரு சிலிர்ப்பு. அதைத் தொடர்ந்து,
“ பயமா? எதற்கு? இந்த உலகமே உனக்குத் தான். உனக்காகத் தான் காத்திருக்கிறது இந்த உலகம். நீயில்லாமல் இந்த உலகம் முழுமையடையாது.. உன் கால்களில் நீ ஒரு காட்டைச் சுமக்கப்போகிறாய்? இயற்கை அதற்காகவே உன்னைப் படைத்திருக்கிறது.. ஒரு காட்டையே உருவாக்கும் வல்லமை உனக்கு இருக்கிறது.. இனியும் காத்திருப்பது கூடாது. இப்போது இல்லையெனில் இனி ஒருபோதும் நீ விழிக்க முடியாது.. விழித்திடு..எழுந்திரு..முன்னேறு..”
அந்தக்குரலின் கம்பீரம் கூட்டுப்புழுவின் சோம்பலைத் துரத்தியது. உறக்கம் போன இடம் தெரியவில்லை. மெல்ல கண்விழித்தது. உடலை முறித்துக் கொடுத்தது. கூடு உடையத் தொடங்கியது. உடலோடு ஒட்டிக்கிடந்த சிறகுகள் காற்றில் உலர்ந்து விரியத் தொடங்கின. எழுந்து நின்றன கால்கள். உருண்ட கண்களுக்கெதிரே ஒளிச்சிறகுகளோடு வண்ணத்துப்பூச்சிதேவதை நின்றாள். அவள் முகத்தில் சிரிப்பு. சிவப்பும் கருப்பும் நீலமும் வரைந்திருந்த பெரிய சிறகுகளை விரித்து மூடிக்கொண்டு அந்த வண்ணத்துப்பூச்சி கம்பீரமாய் நடந்து காற்றில் பறக்கத் தயாரானது.
நெருங்கி வந்த ஓணான் வாயைத் திறந்தது. இன்னொரு திசையிலிருந்து வந்த கட்டெறும்பும் வண்ணத்துப்பூச்சியின் கால்களுக்கு அருகில் வந்து விட்டது.
வண்ணத்துப்பூச்சி தனக்கு முன்னால் விரிந்த வானத்தைப் பார்த்தது. ஒரு கணம் தான். கால்களை உந்தி சிறகுகளை அடித்து வானில் பறந்தது. வண்ணத்துப்பூச்சிதேவதை சிரித்தாள்.
இனி வண்ணத்துப்பூச்சியின் கால்களில் ஒரு காடு உருவாகும்.

நன்றி - கவிஞர். தேவதச்சன் - தலைப்புக்காக.







1 comment:

  1. Arputhamaana kathai.kadai varikku munthaiya variyudan mudiththaalum arumaiyaana.super narrative

    ReplyDelete