Monday, 28 July 2025

இந்திய நாடோடிக்கதை 1

 

இந்திய நாடோடிக்கதை 1

நியாயமான தீர்ப்பு..

ஆங்கிலம் வழி தமிழில்- உதயசங்கர்



ஒரு ஊரில் ஒரு நாயும் பூனையும் இருந்தன. அது ஒரு மழைநாள் வீட்டுக்குள் மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வீட்டுக்குள் உட்கார்ந்து பூனை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. நாய் வாசலில் உட்கார்ந்திருந்தது. பூனை நாயிடம்,

நான் உயர்ந்தவன்.. அதனால் எனக்கு வீட்டுக்குள் உணவு வைக்கிறார்கள்.. நீ சாதாரணமானவன் அதனால் தான் உன்னை வெளியே நிற்க வைத்திருக்கிறார்கள்..”

என்றது. உடனே நாய்,

இல்லவே இல்லை.. நான் தான் உயர்ந்தவன்.. நீ தான் மோசமானவன்.. மனிதர்களின் கையிலிருப்பதைப் பிடுங்கித் தின்கிறாய்.. பிறகு அவர்களிடம் அடி வாங்குகிறாய்.. நான் பாரு அவர்களிடம் இருந்து தூரமாய் இருக்கிறேன்.. அதனால் அவர்கள் என்னை அடிக்க முடியாது.. அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுவேன்.. இல்லை என்றாலும் கவலைப்பட மாட்டேன்..”

என்று சொன்னது. உடனே பூனை,

இல்லை.. நான் சுத்தமான உணவைச் சாப்பிடுகிறேன்.. நீ சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுகிறாய்.. நான் தான் உயர்ந்தவன்..”

என்று கத்தியது. இரண்டுக்கும் வாக்குவாதம் முற்றியது. கடைசியில், இரண்டுபேரும் புத்திசாலி குள்ளநரியிடம் போய் கேட்போம் என்று முடிவு செய்தன. நாயும் பூனையும் புத்திசாலி குள்ளநரியைத் தேடிப்போயின.

குள்ள நரியைப் பார்த்ததும் தங்களுடைய வழக்கைச் சொல்லி தீர்ப்பைக் கேட்டன.  நாய்க்குத் தூரத்துச் சொந்தம் குள்ளநரி. அதனால் குள்ளநரி,

இதில் என்ன சந்தேகம்? நாய் தான் உயர்ந்ததுஅதனுடைய ஓட்டம், உயரம், குரல், கம்பீரம், காவல் என்று எப்படிப் பார்த்தாலும் நாய் தான் உயர்ந்தது

என்றது. பூனையால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே அது,

சரி.. வாங்க.. பெரிய புத்திசாலிகிட்டே போய்க் கேட்போம்.. “

என்றது. அதற்கு குள்ளநரி,

என்னை விட பெரிய புத்திசாலி யார் இந்தக் காட்டில் இருக்கா? “

என்று கேட்டது.

வாங்க காட்டறேன்..” என்று சொல்லிக் கொண்டே காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனது பூனை.

ஒரு பெரிய குகைக்கு முன்னால் போய் நின்றது.

மியாவ்.. மியாவ்.. அத்தை வெளியில் வா.. வந்து நான் உயர்ந்தவனா? இல்லை.. நாய் உயர்ந்ததா ன்னு சொல்லிட்டுப் போ..”

என்று கத்தியது. எந்தச் சத்தமுமில்லை. நாயும் பூனையும் குள்ளநரியும் காத்திருந்தன. சில நிமிடம் கழித்து இருட்டுக்குள்ளிருந்து இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தன. நெருப்புக் கோளங்களைப் போல் இருந்தன. நாயும் குள்ளநரியும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தன.

க்ஹ்ர்ர்ர்ர்

என்று உறுமலுடன் புலி குகை வாசலுக்கு வந்தது. அவ்வளவு தான்.

நாயும் குள்ளநரியும் தலைகால் தெரியாமல் பாய்ந்தோடின. பின்னாலேயே ஓடிச் சென்ற பூனை கேட்ட்து,

இப்பச் சொல்லுங்க.. யார் உயர்ந்தவன்? “

நீ தான் நீ தான்..” என்று சொல்லிக் கொண்டே இரண்டும் பின்னங்கால் பிடதியில் பட ஓடின. 

எப்போதும் தீர்ப்பு நியாயமா இருக்கணும்.. தெரிஞ்சிதா..”

என்று சொல்லியபடி பூனை திரும்பி வீட்டுக்குப் போனது. நாயும் குள்ளநரியும் ஓடியே போய் விட்டன.

( 1876 – ஆம் ஆண்டு சிம்லாவில் கேட்ட கதை )

 

No comments:

Post a Comment