Saturday, 5 May 2018

சூரியனின் கோபம்


சூரியனின் கோபம்

உதயசங்கர்

பூமியின் அந்தப்பக்கத்திலிருந்து இந்தப்பக்கத்துக்குச் சூரியன் வரும்போதே கோபத்துடன் வந்தான். மொட்டையூர் நாட்டு ராஜா மொட்டையன் அந்த நாட்டிலிருந்த மரங்களையெல்லாம் மொட்டை அடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டான். முன்னால் எல்லாம் காடும், வனமும், தோட்டமும், வயல்வெளிகளும் மொட்டையூர் நாட்டில் பரந்து விரிந்து கிடக்கும். சூரியனுக்கே பார்க்கும்போது ஆசையாக இருக்கும். மொட்டையூர் நாட்டை விட்டுப் போக மனசே வராது. இன்னுங்கொஞ்சநேரம், இன்னுங்கொஞ்சநேரம் என்று நேரத்தைக் கடத்திக் கொண்டிருப்பான். அப்படி ஆசை ஆசையாக இருக்கும். எங்கும் நீர் நிறைந்து தொப் தொப்புன்னு இருக்கும். ஆற்றில் வருடம் முழுவதும் நீர் ஓடும். குளம், கம்மாய், குட்டை, ஓடை, எல்லாம் நீர் எப்போதும் இருக்கும். மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள், புதர்கள், குத்துச்செடிகள், என்று எத்தனை எத்தனை!
நெல்லில் தான் எத்தனை வகை! மிளகுச்சம்பா, காட்டுச்சம்பா, கொட்டாரச்சம்பா, புழுதிச்சம்பா, சீரகச்சம்பா, மாப்பிள்ளைச்சம்பா, புல்லில் தான் எத்தனை வகை! அருகம்புல், கோரைப்புல், சுக்குநாறிப்புல், எலுமிச்சம்புல், சீமைப்புல்! மரங்கள் ஆல், வேல், அரசு, வேம்பு, மருதம், மலைவேம்பு, கருங்காலி, தேக்கு, சந்தனம்,, செம்மரம்,, மஞ்சணத்தி, மா, பலா, கொய்யா, நாவல், அத்தி, விளா, கிளா, என்று மரங்களும் நிறைந்து இருக்கும். வானத்திலிருந்து மேகங்கள் ஆசைப்பட்டு மரங்களின் உச்சியில் வந்து எட்டிப்பார்க்கும். மேலே இருந்து சூரியன் பார்க்கும்போது அப்படியே பச்சைப்போர்வை போர்த்திக் கண்ணைப்பறிக்கும். சூரியன் என்ன செய்தாலும் அந்தப்பச்சைப் போர்வையைத் தாண்டி உள்ளே நுழைய முடியாது.
நினைத்ததும் மழை பெய்யும். நான்கு மரங்கள் ஆடினால் போதும். உடனே அதன் உச்சியிலிருக்கும் மேகங்கள் பொல பொலன்னு தண்ணீரை ஊற்றி விடும். அதைப்பார்த்த மற்ற மரங்களும் வேகமாகத் தலையாட்ட பெரிய மழை பெய்யும். அப்படி இருந்த நாடு மொட்டையூர் நாடு. திடீரென என்ன ஆச்சு?
யாரோ சொன்னார்கள் என்று ராஜா மொட்டையன் மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்ப ஆரம்பித்தான். ராஜாவே மரங்களை வெட்டி அனுப்பும்போது மந்திரிகளால் சும்மா இருக்க முடியுமா? மந்திரிகள் வெட்டினார்கள். துணை மந்திரிகள் வெட்டினார்கள். தளபதிகள் வெட்டினார்கள். சிப்பாய்கள் வெட்டினார்கள். புலவர்கள் வெட்டினார்கள். கடைசியாக மக்களும் வெட்டினார்கள். இப்படி எல்லோரும் வெட்டி வெட்டி அந்த வனவனாந்திரம் ஒரு மரமோ, ஒரு செடியோ, ஒரு கொடியோ, ஒரு புதரோ, ஒரு புல்லோ, இல்லாமல் மொட்டைமொழுக்கட்டையாகி விட்டது.
இப்போது மொட்டையூரைப் பார்க்கச் சகிக்கவில்லை. பாலைவனம் போல எங்கும் மண்ணும் கல்லும் பாறையும் காரையும் இருந்தன. காய்ந்து வறண்ட பூமியில் குடிக்கக்கூடத் தண்ணீர் இல்லை. சூரியனுக்குக் கோபம். சூரியன் கோபப்பட்டால் என்ன ஆகும்? வெயில் கொளுத்து கொளுத்து என்று கொளுத்தியது. மொட்டையூர் ராஜா மொட்டையன் அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. பூமியில் பாதாள அறைக்குள் அடைந்து கிடந்தான். மந்திரிகள் மாளிகையை விட்டு வரவில்லை. தளபதிகள் பங்களாக்களை விட்டு வரவில்லை. காவலர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. மக்களும் தங்களுடைய குடிசைகளை விட்டு வரவில்லை. யாராவது வெளியில் வந்தால் அவர்களைச் சுட்டுப் பொசுக்கி விட வேண்டும் என்று சூரியன் நினைத்திருந்தான்.
அப்போது தெருவில் ஆனந்தன் என்ற சிறுவனும் அமுதா என்ற சிறுமியும் அடிக்கிற வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அமுதாவிடம் ஒரு சிறு குடம் இருந்தது. ஆனந்தன் கையில் எதையோ தாங்கியபடி மெல்ல நடந்து வந்தார்கள். அவர்களுடைய தலையிலிருந்து கால்வரை வியர்த்து ஒழுகியது. நாக்கு வறண்டது. சூரியன் விடவில்லை. ஆனாலும் அவர்கள் வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஊரின் எல்லையில் காய்ந்து கிடந்த கம்மாய்க்கரையில் உட்கார்ந்து வறண்ட நிலத்தைத் தோண்டினார்கள். ஐந்து குழிகளைத் தோண்டினார்கள். ஆனந்தன் அவனுடைய ஆச்சியிடம் இருந்து வாங்கி வந்திருந்த ஆல், வேல், வேம்பு, மருதம், அரசு, மரங்களின் கன்றுகளை அந்தக்குழிகளில் ஊன்றினான். அமுதா அந்தக்குழிகளில் தான் வெகுதூரம் சுமந்து வந்திருந்த தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக்குழிகளில் ஊற்றினாள்.
அவர்களுக்குப் பின்னால் வந்த சூரியன் வெட்கப்பட்டான். அடடா! இந்தக்குழந்தைகளைப் போய் சுட்டுப்பொசுக்க நினைத்தோமே என்று வருத்தப்பட்டான். வருத்தத்தில் அவன் கண்களை மூடினான். உடனே வெயில் மறைந்தது. மேகங்கள் கூடிப்பேசின. மின்னல் வெளிச்சம் போட்டது. இடி பின்னணி இசை இசைத்தது. ஆனந்தனுக்காகவும், அமுதாவுக்காகவும் மழை மொட்டையூர் நாட்டில் இறங்கியது. மழையைப் பார்த்த மக்கள் வெளியே வந்தனர்.
அப்புறம் என்ன?
மொட்டையூர் நாட்டில் இப்போது மரம் நடுவிழா மழையில் நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா?

No comments:

Post a Comment