Thursday, 15 January 2015

குறும்புக்கார எறும்பு

மலையாளத்தில்- வைசாகன்ant_2_2278439g

தமிழில் – உதயசங்கர்

 

எறும்புகள் குறும்புக்காரர்களா? இல்லை. இல்லவே இல்லை. அவர்கள் நல்ல ஒற்றுமையுடன் வாழும் ஒழுக்க சீலர்கள் ஆவார்கள். ஆனால் அவர்களிடையே குறும்பன் என்ற பெயர் கொண்ட ஒரு எறும்பும் இருந்தது. அவனுடைய கதையைச் சொல்கிறேன்.

இயற்கை ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அவர் அவர்களுக்கே உரிய வாழ்க்கை முறையும், வசிப்பிடமும் பிரித்துக் கொடுத்திருக்கிறதல்லவா? ஆமாம். எறும்புகள் எத்தனை சிறிய உயிரினங்கள்? அவர்களுக்கு புற்றுகள் தான் இருப்பிடங்கள். அவர்கள் சேர்ந்து தங்களை விட பெரியதான இரையைப் பிடித்து புற்றுக்குள் கொண்டுவந்து சேர்க்கும். சிறியவர்களானதால் அவர்களுடைய சக்தி என்பது அவர்களுடைய ஒற்றுமையில் தான் இருக்கிறது. பரிபூரணமான ஒத்துழைப்பு.

ஆனால் குறும்பன் மாத்திரம் ஒத்துழைப்பதில்லை. எறும்புகள் வரிசை வரிசையாக செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு போகும்போது குறும்பன் ஏதாவது ஒரு கல்லின் மீது ஏறி சும்மா உட்கார்ந்திருக்கும். அவருக்கு எப்போதும் யோசனை தான். மற்றவர்கள் புற்றுக்குள் ஏதாவது நல்ல தீனியைக் கொண்டு வந்தால் குறும்பன் கொஞ்சம் உதவி செய்யும். எதற்கு? அதைத் தின்பதற்கு. தின்று முடித்ததும் மறுபடியும் யோசனையில் ஆழ்ந்து விடும். நாட்கள் இப்படிப் போய்க் கொண்டிருந்தன.

குறும்பனை மற்றவர்கள் கண்டுகொள்வதில்லை. மற்றவர்களின் உழைப்பினால் தன் வயிறு வளர்க்கிற ஒரு அற்பஜீவி என்று மற்றவர்கள் நினைத்தார்கள். குறும்பன் ஒருபோதும் வரிசையில் நடப்பதில்லை. மற்ற எறும்புகள் ஒருவருக்கொருவர் அவர்களுடைய சங்கேதமொழியில் சொல்லிக் கொண்டார்கள்,

“ வெட்கம் கெட்டவன்..”

தெரியுமல்லவா? எறும்புகளின் மொழி ஒருவகையான சங்கேதமொழி. ஒவ்வொரு விசயத்துக்கும் தனித்தனியான சங்கேதவார்த்தைகளைஅவர்களுக்குள் பரிமாறிக் கொள்வது வழக்கம். குறும்பனால் அவதிக்குள்ளான மற்றவர்கள் அவனை புற்றிலிருந்து வெளியே தள்ளி விட்டார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வந்து புற்றின் வாசலை அடைத்து விட்டார்கள். தனியாக வெளியே நின்று கொண்டிருந்த குறும்பன் ஒரு கர்ச்சனையைக் கேட்டு நடுங்கினான்.

ஒற்றை யானை. அவன் காட்டினை மிதித்துக் கொண்டு போகிறான். குறும்பனின் மனசில் ஒரு ஆசை. தான் ஒரு யானையாக இருந்தால் எப்படி இருக்கும்? தன்னுடைய சக்தியை இந்த கர்வம்பிடித்த உயிர்களிடம் காண்பிக்கணும்.எறும்புக்கூட்டம் எப்பவாச்சும் புற்றை விட்டு வெளியில் வருமில்லையா? அப்போது ஒரே மிதி. ஒரு தேய்ப்பு. ஆயிரம் எறும்புகளாவது சட்னியாக வேண்டும்.

குறும்பனின் மனசு பொங்கியது. யானையாக வேண்டுமே! அவனுடைய வாழ்க்கையில் ஒரு உறுதியான தீர்மானம் எடுத்தான். தீனி கிடைக்காதல்லவா? அதனால் பட்டினியுடன் கடும் தவம் செய்ய வேண்டும். அப்படி இயற்கையன்னையை சந்தோசப்படுத்தி வரம் கேட்க வேண்டும்.

குறும்பன் தவமிருந்தான். இரவும் பகலும் இருந்தான். மழையிலும் வெயிலிலும் பனியிலும் இருந்தான். தவமான தவம். குறும்பன் மெலிந்து துரும்பாகி விட்டான். அவனுடைய பக்தியைக் கண்டு மனமிரங்கிய இயற்கையன்னை அங்கே தோன்றினாள்.

குறும்பன் ஒரே ஒரு வரம் தான் கேட்டான். ஒரு யானையாக மாற வேண்டும். இயற்கையன்னை சிரித்தாள். பௌர்ணமி நிலவைப் போல பனியைப்போல அருளும் வழங்கினாள். குறும்பன் யானையாகி விட்டான். அவன் பிளிறினான். காடு சிலிர்த்தது. தன்னுடைய கூட்டாளிகள் குடியிருக்கிற பாறைகளுக்கு அருகில் சென்று கர்ச்சனை செய்தான். பாறையினைப் போல அவனுடைய மொழி இறுகிப் போயிருந்தது. ஒரே ஒரு எறும்பு மட்டுமே வெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அதை மிதித்துத் தேய்த்துக் கொல்ல முயற்சித்தது.உற்றுக் கவனித்த அந்த எறும்பு புற்றுக்குள் இறங்கி மறைந்தது.

குறும்பன் யோசித்தது. ஒரு பிரச்னை இருக்கிறதே. யானைக்கு எறும்பின் புற்றுக்குள் இறங்க முடியாது. இறங்கினால் தானே எறும்புக்கூட்டத்துக்கு தன்னுடைய சக்தியைப் பற்றித் தெரியும். அதற்கு என்ன செய்ய? ம். அதற்கும் வழி உண்டு. என்ன வழி? தவம் தான்.

மறுபடியும் கடுமையான தவம். இயற்கையன்னையின் நிம்மதி போச்சு. மறுபடியும் தோன்றினாள். குறும்பன் சொன்னான்.

“ அன்னையே.. யானையாக இருக்கும்போதே எனக்கு எறும்புப்புற்றுக்குள் நுழையவும் வேணும்..”

இயற்கையன்னையின் கண்கள் சிவந்தன. சேட்டைக்கார இந்தச் சிறிய எறும்பின் தன்னுடைய தவறை உணர்ந்து கொள்ள என்ன வழி? அன்னை சிரித்தாள். மழைக்கால இடி மின்னலைப்போல. பின்பு அன்னை சொன்னாள்.

“ குறும்பா..ஒவ்வொரு உயிருக்கும் அதற்குரித்தான தகுதியும் வாழ்க்கை முறைகளும் இருக்கிறது. ஆனால் உனக்கு அது புரியவில்லை. உனக்கு ஒரே சமயத்தில் யானையாகவும் எறும்பாகவும் ஆனால் தான் திருப்தி. இல்லையா? அது பேராசை. பேராசைக்காரனுக்கு ஒருபோதும் திருப்தி வராது…நீ இன்று முதல் மணலில் குழி பறித்து குடியிருக்கிற குழிநரியாகக் கடவது!..”

அன்னை ஒரு சாரல் மழையின் துல்லியமான சத்தத்தில் மறுபடியும் சிரித்தாள், பின்பு மறைந்து விட்டாள். குறும்பன் மணலில் வட்டம் சுற்றிச் சுற்றிக் கீழே இறங்கினான். மணலுக்குள் குடியிருந்தான். பாவம் எறும்புகளையே இரையாகப் பிடிப்பதற்கு சபிக்கப்பட்ட ஒரு குழிநரியாக வாழ்ந்தான்.

குறும்பன் என்ற எறும்பு தான் இப்போது நாம் காண்கிற குழிநரி.

 

நன்றி- மாயாபஜார் தமிழ் இந்து 

1 comment: