கரிசல் இலக்கியத்தின் கவித்துவ ஆளுமை பா.செயப்பிரகாசம்.
தமிழ் இலக்கியத்திற்கு புதிய திசைகளைக் காட்டிய பாரதி தொடங்கி, கரிசல்
இலக்கியம் என்ற புதிய வகைமையை உழுது விதைத்து வெள்ளாமை கண்ட கி.ராஜநாராயணன் வரை
தமிழ் இலக்கியத்துக்கு வளமையும் செழுமையும் சேர்த்துக் கொண்டிருக்கும்
படைப்பாளிகள் பட்டியலில் பா.செயப்பிரகாசத்துக்கு
மிக முக்கியமான இடமுண்டு. அதனால் தான் கி.ரா.,
“ என்னுடைய மனமெனும் ராஜசபையில் இவருக்குத் தனியிடம் உண்டு “ என்று பாராட்டியிருந்தார்.
பூகோளப்பரப்பில்
கரிசல் மண் விரிந்திருந்த அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சமூகத்தின் மனசாட்சியாக
எழுந்த எழுத்தாளர்களின் பெரும்படையே இருந்தது. அதுவரை சொல்லப்படாத பிரதேச த்தை, சொல்லப்படாத மனிதர்களை, அவர்களுடைய பாடுகளைச் சொன்னார்கள். விளாத்திகுளத்துக்கருகிலுள்ள ராமச்சந்திராபுரத்தில் 07-12-1941 ல் பிறந்த பா.செயப்பிரகாசம்
ஆரம்பகாலத்தில் தான் கண்ட எளிய மக்களின் வாழ்க்கையையே எழுதினார். அந்த வாழ்க்கையை
அப்படியே ரத்தமும் சதையுமாகக் காட்டினார். எந்தப் அன்புப்பூச்சோ, அறத்தின் முழக்கமோ இல்லாமல் உள்ளது உள்ளபடி எழுதினார்.
கல்லூரிக்காலத்தில் அவருக்கிருந்த தமிழ்ப்பற்று காரணமாக இந்தி எதிர்ப்புப்
போரின் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார். அதனால் கைது செய்யப்பட்டு சிறியிலும் மூன்று மாதங்களிருந்தார். அதனால் அவருடைய
கதைகளின் மொழிநடையில் அம்மணம் கூட கவித்துவ ஆடையுடுத்தியிருந்தது. அந்தக் கவித்துவ
மொழியே அவருடைய அடையாளமாகவுமிருந்தது.
1971-ல் மே மாதம் பா.செ.யின் முதல்
கதையான குற்றம் தாமரையில் வெளியான பிறகு அவர் மறைந்த 2022- ஆம் ஆண்டு வரை
தொடர்ந்த படைப்பியக்கத்தில் ஈடுபட்டிருந்தார். ஜி.நாகராஜனின்
அறிமுகம் அவருக்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதென்றால் தமிழ்நாடன், இன்குலாப்பின்
நட்பினால் மார்க்சியவாதியானார். சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக, கட்டுரையாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகையாளராக, அரசியல்
செயல்பாட்டாளராக, பரிணமித்த
பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தார் பா.செ.
141 சிறுகதைகளையும், 18
கட்டுரைத் தொகுப்புகளையும் 2 கவிதைத் தொகுப்புகளையும், 3 நாவல்களையும் 2 மொழிபெயர்ப்பு
நூல்களையும் தன்னுடைய கொடையாகத் தமிழ்ச்சமூகத்துக்கு அளித்திருக்கிறார்.
சுய அனுபவங்களைச் சமூக அனுபவமாக மாற்றுவதிலும் சமூக அனுபவங்களைச் சுய
அனுபவமாக மாற்றுகிற ரசவாதத்தைத் தன்னுடைய படைப்புகளில் மிக இலகுவாகச் செய்து காட்டினார்.
கரிசல் மனிதர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த பஞ்சத்தையும் பசி
பட்டினியையும் கு.அழகிரிசாமி
தொடங்கி அனைத்துக் கரிசல் எழுத்தாளர்களுமே எழுதியிருக்கிறார்கள். ஆனால் பா.செ. அளவுக்கு
துயரங்களின் அத்தனை ரேகைகளையும், அத்தனை மனிதர்களையும் விரிவாக யாரும் எழுதவில்லை. பொதுவாக கரிசல்
எழுத்தாளர்களின் சிறுகதைகளில் குழந்தைகள் திரும்பத் திரும்ப வந்து
கொண்டிருப்பார்கள். அதிலும்
குறிப்பாக பா.செ. யின் கதைகளில்
வரும் குழந்தைகள் இழப்புகளைத் தாங்கிக் கொண்டு வாழ்பவர்களாக விவரம் தெரிந்த
மறுநாளே வயக்காட்டிலோ, தீப்பெட்டியாபீசிலோ
போய் வேலை பார்ப்பவர்களாக, நடக்கும் அத்தனை
கொடுமைகளுக்கும் மௌன சாட்சியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
” அந்தக்
காலத்தில் கிராமப்புறங்களில் வெடிமருந்தைக் குழாயில் கிட்டித்து ஓங்கி அடித்து
வெடிக்க வைப்பார்கள். ’படாங்கு’ என்றும் டாம்
டாம் என்று சொல்லப்படும் அந்த வெடிக்கு மருந்து கிட்டிப்பதைப் போல ஒவ்வொரு
கதைக்குள்ளும் உணர்ச்சியைக் கிட்டித்து வைத்துள்ளார் ஜெ.பி. வாசகன் அதைத்
தொடும்போது வாசகமனதில் அது வெடித்துச்
சிதறுகிறது. பா.செ.யின் பல
கதைகளைக் கண்களில் கண்ணீர் திரையிடாமல் வாசிக்க முடியாது “
என்று எழுத்தாளர்.ச.தமிழ்ச்செல்வன்
கூறுவது முற்றிலும் சரியானது. பின்னால் அவரே சூரிய தீபன் என்ற பெயரில் எழுதிய கதைகளில் அரசியல்
தூக்கலாகவும் அழகியல் சற்றே மாற்றுக்குறைந்தும் காணப்பட்டது.
மிகமுக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையான ஆற்றுமணல் கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்ட மணல் நாவலில் வரலாறு முந்தினநாளுக்கும் இன்றைய நாளுக்கும் முந்திய வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும், அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னாலும் பின்னாலும் ஊஞ்சலாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த ஊஞ்சலில் இசைச்சாகரமான விளாத்திகுளம் சாமிகள் என்ற நல்லப்பசுவாமிகள் வருகிறார். அவருடைய காலத்திலேயே துறைவழியே போவோரை நின்று கேட்டுப்போகச்செய்யும் இசையைப் பாடிய துணிவெளுக்கும் தொழிலாளியான குருசாமியைப் பற்றியும் குறிப்பு வருகிறது. அந்த ஊஞ்சலில் தான் மாறன் பாண்டியம்மாவின் காதல் வளர்கிறது. மாறனின் போராட்டகுணத்தை அவனைக் கொல்வதின் மூலம் வீழ்த்துகிறார்கள் மணல்வியாபாரிகள். சிங்கிலிபட்டி மக்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து ஆற்றைப் பங்குபோடுகிற மணல் வியாபாரிகளும் ஊஞ்சலில் ஆடுகிறார்கள். நல்லது செய்ய நினைத்தாலும் அரசியல்நெருக்கடிகளால் இக்கட்டில் மாட்டிக்கொள்கிற கலெக்டர்களும்கூட முன்பின்னாடும் காலஊஞ்சலில் ஏறிவருகிறார்கள்..
நாவல்நெடுக
அசலான கரிசல் கிராமத்து மனிதர்களின் கரிசல் வழக்காறு, சொலவடைகள்,
கதை, கேலி, கிண்டல்,
ஏகடியம் கோபம், தாவரங்கள்,என்று வாழ்க்கையின் துடிதுடிப்பு மழைக்கால வைப்பாறாக ஓடுகிறது.. மக்கள்
போராட்டங்களின் வீச்சும் அதை அடக்க, திசைதிருப்ப,, மடைமாற்ற, அரசும், அதிகாரவர்க்கமும்
செய்கிற மாய்மாலங்களும் கூட விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பா.செயப்பிரகாசத்தின் தனித்துவமான பாதையில் வாசிப்பதற்கு சுவாரசியமாகவும், நிறைய அர்த்தங்களை உட்பொதிந்ததாகவும் நாவலின் மொழிநடை அமைந்திருப்பது தனித்துவமானது. .
மணல்
நாவல் பேசும் சுற்றுச்சூழல் அரசியல் மிக முக்கியமானது. அதைக் கலையாக மாற்றி
தமிழின் முக்கியமான நாவலாக எழுதியிருப்பதில் பா.செயப்பிரகாசம் வெற்றி
பெற்றிருக்கிறார். நாவலில் வரும் இன்னாசிக்கிழவரின் ரேகையின் குரலில் பா.செ.
சொல்கிறார்.
” பூமி மனிதர்களுக்குச் சொந்தமானதில்லை..
மனிதன்
தான் பூமிக்குச் சொந்தமானவன் “
நன்றி – தமிழ் இந்து தீபாவளி மலர்

0 Comments