நம் காலத்தை எழுதிய கலைஞன் பூமணி.

 

நம் காலத்தை எழுதிய கலைஞன் பூமணி.




70 – களில் தமிழிலக்கியத்தில் ஒருபுதிய மறுமலர்ச்சி தோன்றியது. நவீனத்துவத்துடன் வட்டார இலக்கியம் கலந்து புதிய படைப்புகளை கி.ராஜநாராயணன் தொடங்கினார். கரிசல் வட்டார இலக்கியத்தை முன்னெடுத்த கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏராகக் கொண்டு கரிசல் குக்கிராமங்களின் வெக்கையை அதன் சூடு ஆறாமல் இலக்கிய வாசகர்களின் கையில் கொடுத்து அவர்களை அதிர வைத்தவர் எழுத்தாளர் பூமணி. அதுவரை எழுதாத கிராமத்துவாழ்க்கையின் புழக்கடையை எழுதியவரென்று கூடச் செல்லலாம்.

 

எழுதத் தொடங்கும்போதே தனித்துவமான எழுத்தாளராக உருவானார் பூமணி. .கோவில்பட்டிக்கருகிலுள்ள கரிசல் கிராமமான ஆண்டிபட்டியில் பிறந்து கல்லூரிப்படிப்பு முடித்து கூட்டுறவுத்துறையில் பதிவாளராக ஓய்வு பெற்று கடைசிக்காலத்தில் கோவில்பட்டியில் வசித்து வந்தார் பூமணி.

வயிறுகள், ரீதி, அம்பாரம், சிறுகதை நூல்களும் நாவல் இலக்கியத்தில் பிறகு  வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், அஞ்ஞாடி போன்ற படைப்புகளின் வழியே தமிழ் இலக்கியத்தில் தனக்கென தனியிடம் பிடித்தவர் எழுத்தாளர் பூமணி

1971 இல் தாமரை  இதழில் வெளியான ‘அறுப்பு’ என்கிற சிறுகதை மூலம் தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய பூமணி தொடர்ந்து சிறுகதைகள் எழுதி 53 சிறுகதைகளுடன் தன்னைத் தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாளர்களில் ஒருவராக  நிலைநிறுத்திக் கொண்டவர். அவருடைய சிறுகதைகள் யாரையும் முன்மாதிரியாகக் கொண்டவையல்ல.

வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன ஆனால் கரிசல் மண்ணின் விருவுகள் விட்ட பெருமூச்சைக் குடித்தபடியே வளர்ந்த கோவில்பட்டியில் கி.ரா. என்ற முன்னத்தி ஏருக்குப் பின்னால் புத்தம் புதிதாய் உழவுசால் போட்ட பூமணியின் எழுத்து பிரமிப்பூட்டியது. வயிறுகள், ரீதி, என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு பூமணி என்ற ஆளுமை தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெற்றார்.  கரிசல் மண்ணின் ஒடுக்கப்பட்ட எளிய மக்களை ரத்தமும் சதையுமாக தன் எழுத்தில் பதிவு செய்தார். சாதியக்கொடுமைகளை விட வர்க்க முரண்களையே தன்னுடைய கதைகளில் முன்வைத்தார் பூமணி. கரிசல் மண்ணின் ருசியை கி.ரா. எல்லோரும் சுவைக்கக் கொடுத்தாரென்றால் அந்த மண்ணின் வெக்கையை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே நிறுத்தினார்.

 “ எலேய்.. சக்கிலியத் தாயோளி…” என்ற முதல்வரியுடன் இலக்கிய உலகைக் குலுக்கிய நாவலான ’ பிறகு ‘ ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.

 பூமணியின் வருகைக்கு முன்பே யதார்த்தவாதப்படைப்புகள் உருவாகியிருந்தன. எனறாலும் கு.அழகிரிசாமியும், கி.ரா.வும் காட்டிய உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகத்தைப் பூமணி தன்னுடைய படைப்புகளில் காட்டினார்

நவீனத்துவத்தின் அத்தனை சிந்தனைப்போக்குகளையும் மண்ணின் தனித்துவமான பண்பாட்டையும் உள்வாங்கி அவற்றிலிருந்து புதிய படைப்புகளை கோவில்பட்டி எழுத்தாளர்கள் உருவாக்கினார்கள். அதன் வழியே தமிழிலக்கியத்தில் புதிய போக்குகளை உருவாக்கினார்கள்.

 தலித் இலக்கியம் என்ற இலக்கியக்கோட்பாடு உருவாகுமுன்பே தெற்கில் டி.செல்வராஜ் மலரும் சருகும் எழுதியிருந்தார். பூமணி பிறகு நாவலை எழுதியிருந்தார். ஆனால் பூமணியின் நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி சாதியக்கொடுமைகளை அப்பட்டமாகப் பார்க்க முடியாது. அதற்கு மிக முக்கியமான காரணம், அவர் பிறந்து வளர்ந்த ஊர் முழுவதும் ஒரே சமூகம் இருந்த ஊரென்பதால் மற்ற சாதிகளிடமிருந்து எந்தவித நெருக்கடிகளையும் சந்திக்கவில்லை. எனவே தான் பூமணி தன்னுடைய கடைசிக்காலம் வரை தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று சொல்லக்கூடாது என்பதில் கறாராக இருந்தார்.

பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியுடன் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். நாசர், ராதிகா, சார்லி, போன்ற திரைக்கலைஞர்கள் பங்கு பெற்ற அந்தத் திரைப்படமும் கரிசல்வாழ்வின் அவலத்தைக் கூறும் படமாகவே வெளிவந்தது. பல திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

வரலாறு என்பது கடந்த காலத்தில் மானுடம் ரத்தமும், சதையுமாக வாழ்ந்து முடிந்த கதை. வாழ்வின் தகிக்கும் வெக்கையை மனிதர்கள் எதிர்கொண்ட விதம், ஒவ்வொரு அங்குலமாக மானுடம் முன்னேறியபோது அவர்கள் இழந்த உயிர்கள், உடமைகள், நிலம். ஏதிலிகளாக அலைந்து திரிந்து பற்றுக்கோடாக கிடைத்த ஒரு சிறு நூலைப்பற்றி வாழ்வின் துடிதுடிப்போடு அவர்கள் உயிர்த்தண்ணீரைப் பருகி உயிரை வளர்த்த விதம், இத்தனைக்கும் நடுவிலான அவர்களுடைய சந்தோஷம், துக்கம், மகிழ்ச்சி, கேலி, கிண்டல், நையாண்டி, குடும்பம், குழந்தைகள், என்று எல்லாம் நிறைந்து ததும்பி நிற்கிற முழுமையான சித்திரமல்லவா மக்கள் வரலாறு. பகுதியில் முழுமையையும், முழுமையில் பகுதியையும் தரிசிக்க வல்லவன் கலைஞன் மட்டும் தானே.

அஞ்ஞாடி என்ற பிரம்மாண்டமான நாவல் வாழ்வையும் வரலாற்றையும் ஊடறுத்துச் சென்று துடிதுடிக்கும் மானுடவாழ்வின் அவலங்களையும், உன்னதங்களையும், காட்சிப்படிமங்களாக முன் வைக்கிறது.

இருநூறு ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிற அஞ்ஞாடி. கரிசல் கிராமத்தில் ஒரு அஞ்ஞாடிப்பள்ளருக்கும், ஏகாலிக்கும் இடையில் உருவாகும் நட்பாகத் துவங்கி  எட்டையபுரம் வரலாறு, கட்டபொம்மன் வரலாறு, ஊமைத்துரை வரலாறு, கழுகுமலை கலவரம், சிவகாசிக் கொள்ளை என்று வரலாற்றின் பக்கங்களை விரித்துக் கொண்டே செல்கிறது.

எட்டையபுரம் சமஸ்தான வரலாறும், மதுரையை ஆண்ட நாயக்கர்களின் வரலாறும் இதுவரை சொல்லப்படாத கோணங்களில் சொல்லப்படுகிறது. பஞ்சகாலத்தைப் பற்றி ஒரு உணர்ச்சிகரமான சித்திரம் நம் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு இனம் வணிகத்தைக் கைப்பற்றி வாழ்வில் முன்னேறுகிறது. முன்னேற்றத்துக்கு சாதி ஒரு தடைக்கல்லாய் இருக்கும்போது மதம் மாறுகிறார்கள். வணிகத்தின் மூலம் தங்கள் நிலையை மாற்றப் போராடிக் கொண்டிருக்கும் அந்த இனத்தின் மீது ஆதிக்கசாதியினரின் பொறாமைத்தீ பற்றியெறிகிறது. கழுகுமலையில் கலவரம். சிவகாசிக் கொள்ளை, என்று அர்த்தமற்ற வன்முறை அர்த்தமுள்ள வாழ்வினை அழிக்கிறது. இந்த வன்முறைக்காட்சிகள் அப்படியே கண்முன்னே நடப்பதைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது

இந்து முஸ்லீம் கலவரங்களும், சுதந்திரப்போரின் இறுதி நாட்களும் காட்சிகளாய் விரிகிறது. ஒரு நூற்றாண்டு கால வரலாறு மிகத் துல்லியமாக புனைவின் விசித்திரமான பெருவெளியில் நம்மை நிறுத்தி சுற்றிலும் நடந்து கொண்டேயிருக்கிறது. காலத்தின் ஊடாக பயணம் செய்து அன்றைய மக்களின் பண்பாடு, கலாச்சாரம், உணவுப்பழக்கவழக்கங்கள், மரபுகளை, மொழியை, சொல்கதைகளை, நாட்டார் வழக்காற்றை கரிசல் பூமியின் வெப்பமிக்க வாழ்வை, உறவுகளை எல்லாம் நாவலின் வழியே வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பை பூமணி வழங்கியுள்ளார்.

மனித விகாரங்களின் வழியே வரலாறு அதன் பொருண்மையான தளத்திலிருந்து நகர்ந்து மானுட அவலத்தின் குரலாக ஒலிப்பதின் வழியே தனித்துவமான படைப்பாக ஒளிர்கிறது. அஞ்ஞாடி.

நம் காலத்தை எழுதிக்காட்டிய மகத்தான கலைஞன் பூமணி !

 

 நன்றி - தமிழ் இந்து தீபாவளி மலர்

 



Post a Comment

0 Comments