கி.ரா. என்னும் பன்முக ஆளுமை
இலக்கிய
வரலாற்றில் எழுத்து இலக்கியத்துக்கும்,
வாய்மொழி இலக்கியத்துக்கும் பாரதூரமான ஏற்றதாழ்வுகள் நீண்ட காலமாக இருந்தன. . இலக்கியப்பண்டிதர்களின்
பார்வையில் அழகோ, நளினமோ, ஒழுங்கோ, இலக்கணமோ, இல்லாமல் கொச்சைத்தனமானது வாய்மொழி இலக்கியம் என்ற நம்பிக்கைகள் உலவிக் கொண்டிருந்த காலத்தில் கி.ரா.
கரிசல் இலக்கியம் என்ற மண் சார்ந்த வட்டார இலக்கியத்துக்கு விதையூன்றுகிறார்.
1958-ல் வெளிவந்த அவருடைய மாயமான் என்ற சிறுகதையிலேயே அவருடைய எதிர்கால இலக்கியப்பாதையைத்
தொடங்கி விட்டார் என்று சொல்லலாம். மானாவரி விவசாயம் செய்யும் கரிசல் விவசாயியின் வாழ்க்கையில் இயற்கையும் அரசும் எப்படி கானல் நீரைப் போல ஏமாற்றுகிறார்களென்பதை அற்புதமாகச் சொல்லியிருப்பார். கிட்டத்தட்ட அவருடைய மொத்தக் கலையுமே இந்த அடிப்படையை மையமாகக் கொண்டே இயங்கியது. நவீன அரசுகள், கிராமங்களையும், விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து எல்லாவகைகளிலும் ஏமாற்றிக் கொண்டே வருகிறதென்ற கோபம் அவருடைய ஆழ்மனதில் எப்போதுமிருந்தது. அதனால் அவர் இடைசெவல் விவசாயிகள் சங்கத்தின் தலைவராக பல போராட்டங்களைக் களத்தில் நடத்தியவர்.
அவர்
செயல்பட்ட இந்தியப் பொதுவுடமைக்கட்சி கிராமங்களுக்குச் சென்று கிராமப்புற மக்களின்
இலக்கியத்தைச் சேகரித்து பதிவு செய்ய அறைகூவல் விடுத்தது. கி.ரா. அந்த அறைகூவலைச்
செவிமடுத்தார். அவருடைய காலடியில் செல்வம் குவிந்திருப்பதைக் கண்டார். பிறகு
கி.ரா. திரும்பிப்பார்க்கவில்லை. யாராவது தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று கவலைப்படவில்லை. உடல்நிலை காரணமாக முறை சார்ந்த கல்வியைக் கற்கமுடியாமல் ஏழாம் வகுப்பைத் தாண்டமுடியவில்லை என்றாலும் சுய கற்றலை அவர் விடவில்லை. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை அவரும் கு.அழகிரிசாமியும் வாசித்தார்கள். அதுவே அவருடைய காலடியிலேயே இருக்கும் மிகப்பெரிய பொக்கிஷத்தை அவருக்குக் காட்டிக்கொடுத்தது. கிராமப்புற வேளாண்மரபிலிருந்து வந்த கி.ரா.வுக்கு தன் மக்களின் தொன்மங்கள், வாழ்க்கை, பண்பாடு, மொழி, சடங்குகள்,
என்று எல்லாவற்றையும் கலையாக மாற்றுகிற ஆவேசத்தைக் கொடுத்தது.
அந்தக்
கலையின் வழியாகக் கரிசல் இலக்கியப்பிதாமகராக, நாட்டார்வழக்காற்றியல் அறிஞராக, மானுடவியல் வல்லுநராக, இயற்கையியலாளராக, நடைமுறை வாழ்க்கையில் பொருள்முதல்வாதச் சிந்தனை கொண்ட ஒரு இடதுசாரியாக தன்னைத் தகவமைத்து பேராளுமையாக எழுந்தார்.
நாட்டார்
இலக்கியப்பங்களிப்பு
நாட்டார்
வழக்காறு என்று ஒரு துறையே தமிழில் துளிர் விடாத காலத்தில் நா.வானமாமலை, கி.ரா. தொ.மு.சி. ரகுநாதன், ஆ.சிவசுப்பிரமணியன், ஆகியோர் நா.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி பத்திரிகையில் எழுதிய இளம் ஆய்வறிஞர்கள் நாட்டார் வழக்காற்றை, சேகரிக்கவும் ஆவணப்படுத்தவும் தொடங்கி விட்டார்கள்.
அப்போது
யாரும் செய்யத்துணியாத மாபெரும் வேலையை கி.ரா. செய்தார். வட்டாரவழக்குச்சொல்லகராதியைத் தொகுத்தார். தான் வாழ்ந்த, தான் அறிந்த மண்ணின் மக்கள் பேசும் மொழி மற்ற பகுதி மக்களின் மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதற்கான காரணங்களைத் தேடினார். மக்களின் வாழ்க்கையிலிருந்தே வட்டாரமொழியின் தனித்துவம் தோன்றுகிறது என்பதை
கண்டது மட்டுமல்ல அந்த
மொழியின் அலகுகளான வார்த்தைகளைத் தொகுக்கும்போது மற்ற வட்டாரங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கும் கரிசல் வட்டாரத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கும் உள்ள நுட்மான அர்த்தபேதங்களை பதிவு செய்தார். இந்தப்பகுதியில் உள்ள சடங்குகள், நம்பிக்கைகள், சொலவடைகள், பழமொழிகள், விளையாட்டுகள், இயற்கையைப் பற்றிய மக்களின் அனுபவக்கூறுகள், இந்தப்பகுதியில் இருந்த விலங்குகள், பறவைகள், அவற்றின் உடல் லட்சணங்கள், அந்த லட்சணங்களுக்கான பலன்கள், என்று அவர் பதிவு செய்திருக்கிற ஆவணம் எதிர்காலத் தலைமுறைக்கு மட்டுமல்ல, மொழியியல் துறைக்கு, மானுடவியல் துறைக்கு, இயற்கையியல் துறைக்கு மிகப்பெரிய கொடையாகும்.
நாட்டுப்புறக்கதைக்
களஞ்சியம், நாட்டுப்புற பெண்கதைகள், சிறுவர் நாடோடிக்கதைகள், பாலியல் கதைகள், என்று நாட்டார் வழக்காற்றின் எல்லாவகைமையிலும் முன்னத்தி ஏராக இருந்தார்.
1958 –ல் தான் அவருடைய முதல்கதை மாயமான் சரஸ்வதியில் வெளியானது. அன்று தொடங்கிய படைப்புப்பயணம் 2021 வரைத் தொடர்ந்தது. முதல்கதையான மாயமான் சரஸ்வதி பத்திரிகையில் வெளிவரும்போது கி.ராவுக்கு வயது முப்பத்தியைந்து. ஆரம்பத்தில் அவர் எழுதிய கதவு, வேட்டி, கரண்டு, ஜடாயு, தோழன் ரங்கசாமி, போன்ற கதைகளை கிராமப்புற மதிப்பீடுகள் யந்திரமயமான நவீன அரசின் மூர்க்கத்தனத்தை எதிர்கொண்டவை என்றே சொல்லலாம்.
வாய்மொழி
மரபில் கதை சொல்லலை அவர் தேர்ந்தெடுத்ததின் வழியாக நவீனத்துவத்துக்கு எதிராக தனித்துவமான பாதையை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால் அந்தத் தனித்துவமான வாய்மொழிமரபுக் கதைசொல்லலுக்கு நவீன வடிவத்தைக் கொடுத்தது தான் கி.ரா.வின் மிகப்பெரிய பங்களிப்பு.
அப்படி
செய்யும்போது அதில் ரசனையின் முலாமைப் பூசினார். அதன்மூலம் வாசகர்கள் நவீன வாழ்க்கையில் இழந்தவற்றை எழுத்தின்வழி ஈடு செய்தார். அதனால் தான் அவருடைய படைப்புகளை நவீன இலக்கியம் வாசிக்கும் வாசகர்களும் வாசிக்கிறார்கள். அத்துடன் கடந்த காலத்தின் கிராமப்புற வாழ்வின் அங்ககக்கூறுகளை உயிர்த்துடிப்பான மொழியில் கி.ரா. எழுதியதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய கடந்த கால கிராமப்புற வாழ்வின் நனவிலி மனதில் ஒளியேற்றி விடுகிறது.
கோபல்ல
கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர், பிஞ்சுகள் கிடை, அண்டரண்டா பட்சி என்று தமிழ்நாவல் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதி தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கிறார்.
அவருடைய
கதவு தொடங்கி பல கதைகளில் சிறார்கள் கதபாத்திரங்களாக வந்திருந்தாலும் சிறார்களுக்காகத் தனியாக பிஞ்சுகளை எழுதினார். அதில் பதின்பருவத்துச் சிறார்களின் மனநிலையை அவ்வளவு அழகாகச் சித்தரித்திருந்தார். அவருக்கு ஒருபோதும் கதாபாத்திரங்களுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை. என்னை எழுது என்னை எழுது என்று முண்டியடித்துக்கொண்டு அவருக்கு முன்னால் கூட்டமாக நின்றார்கள்.
கி.ரா. ஒரு கதைசொல்லியாகக் கதையை நிகழ்த்துகிறார். அப்படி நிகழ்த்தும்போது வாசகன் கவனம் திசை திரும்பாமலிருக்க ரசனையின் அழகியலை ஆங்காங்கே நறுமணத்தைலம் போல தெளிக்கிறார்.. கி.ரா.வின் கதைகளில் உள்ள கலை அமைதி அது திட்டமிடப்படாமலே இயல்பாக அமைந்தது போல தோன்றும். அதுதான் அவருடைய சிறப்பு. கலைநேர்த்திக்காக
பலமுறை எழுதிப்பார்க்கக்கூடிய கடுமையான உழைப்பாளியாக இருந்தார் கி.ரா. கூர்ந்து வாசிக்கும் வாகசர்களுக்கு அந்த நுட்பம் புரியும். அவருடைய கதைகளில் வரும் பெண்கதாபாத்திரங்கள் அத்தனைபேரும் சாதாரண உழைப்பாளிகள். வாழ்க்கையையே உழைப்பாகப் பார்க்கக்கூடிய மனம் கொண்டவர்கள். விசித்திரங்களின் துளிநேர மாயங்களில் தங்களை இழந்து மீள்பவர்கள். ஆண்கள் உண்மையிலேயே விசித்திரமான குணபாவங்களைக் கொண்டவர்களாக வருவார்கள். தமிழிலக்கியத்தில் வெகுமக்களை, கிராமிய மக்களைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வந்து சேர்த்த முன்னோடி கி.ரா.
மக்கள்
இலக்கியம் என்னும் வட்டாரமொழி இலக்கியம் எழுதவேண்டும்
என்று நினைக்கிற எல்லாருக்குமே கி.ரா. முன்னத்தி ஏராக இருந்து கொண்டேயிருப்பார்.
.
.நன்றி - தமிழ் இந்து தீபாவளி மலர்

0 Comments