கருப்பியின் வேண்டுதல் - மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கதை

 


மழை விடவில்லை. கருமலையின் உச்சியில் நின்று கொண்டிருந்த கருவை மரத்தில் கருப்பனும் கருப்பியும் கூடு கட்டியிருந்தார்கள். கூட்டில் இரண்டு குஞ்சுகள் சிவந்த வாயை வாயைத் திறந்தபடி ' கர்ரியா.. கர்ர்ரியா ' என்று கத்திக் கொண்டிருந்தன. கருப்பனும் கருப்பியும் குஞ்சுகளைப் பார்ப்பதும் வானத்தைப் பார்ப்பதுமாக இருந்தன.

மழை வெறிக்காதா?


கருமலையில் தொடர்ந்து மழை. மழையென்றால் மழை. அடைமழை. வானம் முழுவதும் திறந்து அப்படியே கொட்டோகொட்டென்று கொட்டியதுபோல மழை. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. ஒரு வாரமாக மழை. திடீர் திடிரென்று நீரோடைகள் தோன்றின. ஏற்கனவே இருந்த காட்டாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மலைச்சரிவுகளில் இருந்த சிறு சிறு செடிகள், மரங்கள், கிளைகள், இலைகள் எல்லாம் அடித்துக் கொண்டு வந்தன. மண்ணுக்கு மேலும் மண்ணுக்குள்ளேயும் இருந்த பூச்சிகள், புழுக்கள், பாம்புகள் தண்ணீரில் த த்தளித்துக் கொண்டிருந்தன. பறவைகள் மரங்களில் சிறகுகள் நனைந்து தொப்பலாகி நடுங்கிக் கொண்டிருந்தன. விலங்குகள் புதர்களுக்குள் பதுங்கியிருந்தன.

முதல் இரண்டு நாட்களில் கருப்பன் மரத்துக்குக் கீழேயே புழு பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டியது.  கருப்பி மரப்பட்டைகளிலிருந்து வெளியேறி பூச்சிகளையும் எறும்புகளையும் கூட பிடித்து குஞ்சுகளுக்கு ஊட்டியது. ஆனால் இப்போது மரத்தை விட்டு இறங்க முடியாதபடி மழைநீர் வெள்ளமாக ஓடியது. சிறகுகளும் நனைந்து தொப்பலாகிவிட்டதால், அசைக்கக்கூட முடியவில்லை. கிளைகளில் தத்தி நடப்பதே பெரும்பாடாகி விட்டது.

குஞ்சுகள் பரிதாபமாக் கத்தின. என்ன செய்வது?

கருப்பன் மேலே கருங்கும்மென்று இருட்டாக இருந்த வானத்தைப் பார்த்த து.

“ ப்ளீஸ்.. கொஞ்சம் நிறுத்திக்கோயேன்… கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிறோம்.. எங்க குஞ்சுகளுக்கு இரை கொடுத்த பிறகு பெய்ஞ்சுக்கோ..”

என்று கெஞ்சியது. வானம் கேட்கவில்லை. இன்னும் அதிகமாக மழை பெய்தது. அந்தச் சத்தம் வானம் கருப்பனைப் பார்த்துச் சிரிப்பதைப் போலிருந்தது. கருப்பன் தலை குனிந்தது. அதன் தலையில் விழுந்த மழை வழிந்து கண்ணீரைப் போல ஓடியது. மறுபடியும் தலையை உயர்த்தியது.

“ காலநிலை மாற்றத்துக்கு நாங்கள் யாராவது காரணமா? உன்னுடைய வழமையான பருவநிலைகளை மாற்றிய மனிதர்கள் வாழும் பகுதியில் உன் கோபத்தைக் காட்டு.. இயற்கையின் குழந்தைகளான நாங்கள் இயற்கையுடன் இணைந்தே வாழ்கிறோம்.. எங்கள் மீதும் உன் கோபத்தைக் காட்டலாமா? தயவுசெய்து கொஞ்சம் மழையை நிறுத்து.. ப்ளீஸ்..ப்ளீஸ்.. “

என்று இரைஞ்சியது கருப்பன். வானம் இன்னும் கோபமாக இடியுடன் கண்ணைப் பறிக்கும் மின்னலை அனுப்பியது.

குஞ்சுகளையே பார்த்துக் கொண்டிருந்த கருப்பி திடீரென்று தலையை உயர்த்தி,

“ நீ இப்போது மழையை நிறுத்தப் போறீயா இல்லையா? எங்கள் கண்முன்னால் என் குஞ்சுகள் சாவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது… நான் முதலில் சாகிறேன்..” என்று கரகரத்த குரலில் அழுதது.

மலையிலிருந்து பார்த்தால் பெரும் பள்ளத்தாக்கு. நன்றாகப் பறக்கும்போதே மேலே பறந்து வருவது அவ்வளவு சிரமமாக இருக்கும். இப்போது முற்றிலும் மழையில் நனைந்து உடலோடு ஒட்டிப் போன சிறகுகளை விரிக்க் கூட முடியாது. அப்படியே கீழேயிருக்கும் பாறைகளின் மோதிச் சாக வேண்டியது தான்.

ஆனால் கருப்பியின் கண்களில் உறுதி. மீண்டும் ஒரு தடவை வானத்தையும் குஞ்சுகளையும் மாறி மாறிப் பார்த்தது. வானம் இரங்கவில்லை. மழை கொஞ்சம் கூடக் குறையவில்லை.

கூடிருந்த கிளையிலிருந்து மெல்ல நடந்து நடந்து உச்சிக் கிளைக்கு வந்தது. அங்கிருந்து பார்த்தால் மலைக்குக் கீழே எதுவும் தெரியவில்லை. ஒரே இருட்டு.

இரைச்சல் மட்டுமே கேட்டது.

மழையின் இரைச்சல்.

காட்டாறின் இரைச்சல்.

அதைத் தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லை.

கருப்பி கடைசியாகத் திரும்பிக் குஞ்சுகளைப் பார்க்கலாமா என்று நினைத்தது. ஆனால் திரும்பவில்லை. அப்படியே தலைகீழாக மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் பாய்ந்தது.

இதோ! மோதப் போகிறேன்.. உணவின்றி கண்முன்னால் உயிர்விடும் குஞ்சுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட இறப்பது மேல் என்று அப்போதும் நினைத்த து.

ஆழம்.. இன்னும் ஆழமாகப் போய்க் கொண்டேயிருந்தது. மலை உச்சியிலிருந்து உருட்டி விடப்பட்ட ஒரு கல்லைப் போல போய்க் கொண்டிருந்தது.

இதோ! இதோ!

என்ன இது! மாயம் போல சட்டென்று மழை நின்றது. எங்கிருந்தோ ஒரு பெரும்காற்று வீசத் தொடங்கியது.

கீழே விழுந்து கொண்டிருந்த கருப்பியின் உடலில் அந்தக் காற்று பட்டபோது கண்களைத் திறந்தது கருப்பி. அதன் உடல் மேலே எழும்பியது போல இருந்தது. அதன் சிறகுகள் உலர்ந்து லேசாகி விட்ட து. சிறகுகள் உலர்ந்ததும் தானாகவே கருப்பி சிறகுகளை அசைக்கத் தொடங்கியது.

மெல்ல மேலே பறக்கத் தொடங்கியது கருப்பி. இப்போது மலை தெளிவாகத் தெரிந்தது. மரம் செடி கொடிகள் எல்லாம் தெரிந்தன. மலை உச்சியிலிருந்த அந்தக் கருவை மரமும் தெரிந்தது. அந்த மரத்தின் அடர்ந்த கிளையில் இருந்த கூடு கூடத் தெரிந்தது.

பறக்கும்போதே காற்றில் பறக்கத் தொடங்கிய மழைப்பூச்சிகளை அலகால் கவ்வியது. கூட்டில் பசியினால் வாடிப்போயிருந்த குஞ்சுகளின் வாய்க்குள் இரையைத் திணித்தது. குஞ்சுகள் மறுபடியும் உயிர்பெற்றன.

கருப்பன் கருப்பியின் அலகோடு அலகு உரசித் தன் அன்பைத் தெரிவித்தது. கருப்பி,

“ நன்றி நன்றி மழையே! உனக்குக் கோடி நன்றி.. மனிதர்களும் பாவம்.. அறியாமல் செய்கிறார்கள்.. அவர்களையும் மன்னித்து விடு..”

என்று வானத்தைப் பார்த்து வேண்டியது. கருப்பியின் வேண்டுதலைக் கேட்டுக் கொண்டதை ஒரு மின்னலின் மூலம் உணர்த்தியது வானம்.

அதைப் பார்த்த கருப்பனுக்கும் கருப்பிக்கும் குஞ்சுகளுக்கும் மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

நன்றி - மனசக்தி பால்குமார் மராத்தி தீபாவளிமலர் 

மானசி சிவக்குமார்.

 


Post a Comment

0 Comments