நவீனத்துவத்தின் மாயாநகரம் – கோவில்பட்டி

 

நவீனத்துவத்தின் மாயாநகரம் – கோவில்பட்டி

உதயசங்கர்



ஒரு நூற்றம்பைது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் வரைபடத்திலேயே இல்லாத  ஒரு கரிசல் குக்கிராமம் கோவில்பட்டி. காலதேவதையின் கண்ணில்பட்டு மாயாஜாலம் செய்தது போல ஒரு வியாபார நகரமாக, தொழில்நகரமாக, கலை இலக்கிய நகரமாக, பண்பாட்டு நகரமாக மாறிவிட்டது. யாரும் விரும்பாத ஒரு ஊர் இப்போது எல்லோரும் விரும்பும் ஊராகிப் போனது எப்படி? 

வரலாற்றைத் துப்பறிந்தால் கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு முன்னால் பிற்காலப்பாண்டிய மன்னன் இங்கே குறுகிய காலத்துக்கு படைமுகாம் அமைத்திருந்ததாகத் தகவல் இருக்கிறது. ஆறலைக் கள்வர்கள் நடமாடும் பகுதியாக் குறிப்பிடப்படுகிறது. கட்டபொம்மன் தொடங்கி பாளையக்காரர்களின் படைகள் கயத்தாறு செல்வதற்கான வழிப்பாதையாக இருந்திருக்கிறது.

1689-1704 வரை மதுரையின் அரசியாக ஆட்சி செய்த ராணி மங்கம்மாள் மதுரை – கன்னியாகுமரி  சாலை அமைக்கும் போது கோவில்பட்டி குக்கிராமத்தை ஊடறுத்துச் சென்றிருக்கிறது. இதைத் தவிர கோவில்பட்டியைப் பற்றிய குறிப்புகளெதுவும் வரலாற்றில் இல்லை. 1890- வரை மூப்பன்பட்டி என்ற கிராமத்தையே தாய்க்கிராமமாகக் கொண்டிருந்தது.  1910- வரை சாத்தூர் தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமம். பிறகு 1929- வரை ஓட்டப்பிடாரம் தாலுகாவில் இருந்தது. அதன் பிறகே தனித்தாலுகாவாக மாறியது.

மானாவாரி கரிசல் மண். மழைபெய்தால் மட்டும் தான் விவசாயம் செய்யமுடியும். கோடை காலத்தில் கரிசல் மண் விருவோடி வெப்பப்பெருமூச்சை விடும். எப்போது மழை வரும் என்றுஓ மழை பொய்க்கும் என்றோ யாருக்கும் தெரியாது. பஞ்சம் எப்போதும் ஊரின் வாசலில் காத்துக் கொண்டிருக்கும். வெயில் மழையெனப் பொழியும் இந்தப் பகுதியில் ஊரே வியர்வையில் ஊறித்திளைக்கும். கந்தக பூமியென்பதால் தான் வெக்கை நோய்கள் அடிக்கடி வந்து பலரைச் சுருட்டிக் கொண்டு போகும். குடிக்கத்தண்ணீர் என்பது அபூர்வம். குறைந்தது இரண்டு மூன்று கிலோமீட்டர் நடந்து போய் கொண்டு வரவேண்டும். தண்ணீருக்காக் குத்துவெட்டு நடக்கும். ஒரு நாளின் சூரியோதயம் தண்ணீருக்கான போராட்டத்துடன் தான் தொடங்கும். கோவில்பட்டிக்கு யாரும் பெண் தரமாட்டார்கள். தண்ணீர் எடுத்தே இடுப்பொடிய வைத்துவிடும் ஊர் என்று பெயர் வாங்கியிருந்தது. எப்போதும் காரமாகவே மக்களின் குணாதிசயம் இருக்கும். அன்பைக் கூட வெறுப்பாகவே வெளிப்படுத்தும்விதமாக இந்தக் கடுமையான வாழ்க்கை அவர்களை மாற்றியிருந்தது.

 இவையெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை இப்படித் தான்  கோவில்பட்டி இருந்தது. வரலாற்றில் எந்த அரசர்களோ, ஜமீன் தார்களோ, பண்ணையார்களோ விரும்பாத ஒரு ஊர் எப்படி நவீன நகரமாக மாறியது? ஆங்கிலேயர்களின் கடைக்கண் இந்த ஊரின் மீது எப்போது விழுந்தது?  கோவில்பட்டியைச் சுற்றிலும் இருந்த ஜமீன்கள் எல்லாம் இன்றுவரை நிலவுடமைக் கட்டமைப்பிலிருந்து விடுதலையடையாமலிருக்க கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக மலர்ந்தது எப்படி?

அதற்கு மகாகவி பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் ஒரு முக்கியமான காரணமென்றால் ஆச்சரியமாக இருக்கும்.  1800- களின் பிற்பகுதியில் கரிசல் மண்ணில் விளைந்த கருங்கண்ணி என்ற பருத்திவகை மிகச் சிறந்ததாக இருந்தது. அப்போது எட்டையபுரம் துபாஷியாக, ஆலோசகராக வேலை பார்த்த சின்னச்சாமி ஐயர் கணிதம் அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தான் பெருமுயற்சி எடுத்து 1872- ல் ஒரு ஸ்பின்னிங் மில்லைத் தொடங்க திட்டமிடுகிறார். பங்குதாரகளை இணைத்து ஒரு  பப்ளிக் லிமிடெட் கம்பெனியாகத் தொடங்குகிறார். தென்னிந்தியாவின் முதல் சுதேசித்தொழில் முயற்சி என்றும் சொல்லாம். எட்டையபுரத்துக்கு அருகிலுள்ள பீதப்புரம் என்ற ஊரில் அதற்கான கட்டுமான வேலைகள் நடந்தன. அந்தக் கம்பெனியில் எட்டையபுரம் ஜமீன், நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த பாண்டித்துரைத்தேவர் உள்ளிட்டவர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். ஒரு சுதேசி தொழில் தொடங்கக்கூடாதென்ற ஆங்கிலேயேர்களின் சூழ்ச்சியால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதில் மனமொடிந்த சின்னச்சாமி ஐயரும் மரணமடைந்தார்.

ஆனால்  பீதப்புரம் மில் முயற்சி ஆங்கிலேயர்களின் மனதில் ஒரு பொறியைத் தூண்டி விட்து. 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டியில் ரயில்வே ஸ்டேஷன் தொடங்கப்பட்ட து. 1896- ஆம் ஆண்டு சர்.எட் சாஸ்ஸன் என்ற ஆங்கிலேயரால் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட செகண்ட் ஹேண்ட் இயந்திரங்களைக் கொண்டு ஸ்பின்னிங் மற்றும் வீவிங் மில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகிலேயே தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து ஊரின் முகம் மாறத் தொடங்கியது. ஒன்றாக இருந்த நெல்லை மாவட்டத்தின் அரசியல் விழிப்புணர்வு வ.உ.சி., பாரதி, சுப்ரமணிய சிவா, மாடசாமி, வாஞ்சிநாதன், போன்றோரின் தியாகத்தால் வளர்ந்தது. புதிய தொழிலாளிவர்க்கம் பிறந்து வளரும்போது தன்னுடனேயே புதிய நடுத்தர வர்க்கத்தையும் சேர்த்துக் கொண்டு வந்தது. வ.உ.சி. கப்பலோட்டி சுதேசித்தொழிலை இந்தியர்களால் செய்ய முடியுமென்று ஆங்கிலேயர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். தூத்துக்குடி கோரல் மில் வேலைநிறுத்தம் தொழிலாளிகளிடம் வர்க்க உணர்வை ஊட்டியது. உயிருக்கும் அஞ்ச மாட்டோமென்று வாஞ்சிநாதன் தென்னிந்தியாவில் முதல் அரசியல் தியாகியானார். முதலாவது நெல்லை சதி வழக்கு போடப்பட்டது.

உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்த அரசியல் மாற்றங்களை கோவில்பட்டியும் உள்வாங்கிப் பிரதிபலித்தது. சிந்தனை மாற்றங்களின் துவக்கப்புள்ளியாக இருந்த பாரதி ஆகாவென எழுந்த து பார் யுகப்புரட்சியென்று சோவியத் புரட்சியைப் பாடினான். 1925-ல் இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தியப்பொதுவுடைமை இயக்கம் மிக விரைவாக இந்திய நிலப்பரப்பெங்கும் பரவியது. கோவில்பட்டி கரிசல் மண்ணின் தனித்துவமான தன்மை இங்கிருக்கும் விவசாயிகளை சங்கமாக ஒன்றிணைத்தது. பெரிய விவசாயி, சிறிய விவசாயி என்ற பேதமில்லாமல் அனைவரையும் பாதித்த பஞ்சமும் பொய்க்கும் மழையும், வறுமையும் மக்களை பஞ்சம்பிழைக்க புலம்பெயரச் செய்தது. நூற்பாலையுடன் புதிய தொழிலாக தீப்பெட்டித் தொழில் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி என்று மெல்லத் தவழ்ந்து வந்தது.   இத்தனை வறுமையிலும் கலையில் குறிப்பாக சங்கீத த்தில் தலை சிறந்த மேதைகள் இருந்தார்கள். விளாத்திகுளம் நல்லப்பசுவாமிகள், நாதசுரம் பொன்னுச்சாமி, லட்சுமி அம்மாள், காருக்குறிச்சி அருணாசலம் என்று சங்கீத மேதைகள் இசையின் சுரங்களை கரிசலில் விழுந்த இருட்பள்ளங்களை இசையால் நிரப்ப முயற்சித்தார்கள்.  கோவில்பட்டியில் காருக்குறிச்சியாருக்குச் சிலை இருக்கிறது. இதற்கிடையில் இடைசெவல் என்ற குக்கிராமத்தில் அடுத்தடுத்த வீட்டில் பிறந்த கி.ராஜநாராயணனும், கு.அழகிரிசாமியும் பொதுவுடமைக் கொள்கைகளாலும் கலை இலக்கிய ஆர்வத்தாலும் எட்டக்காபட்டி முத்துச்சாமியைச் சென்று சந்திக்கிறார்கள் அவர் கொடுத்த சோவியத் புத்தகங்களை வாசித்து புதிய எழுச்சியுடன் பொதுவுடமைக்கட்சியின் கிளையை இடைசெவலில் தொடங்குகிறார்கள். சில காலம் கு.அழகிரிசாமி பொதுவுடமைக்கட்சியின் கிளைச் செயலாளராக இருக்கிறார். கி.ராஜநாராயணன் விவசாயிகள் சங்கச்செயலாளராக இருக்கிறார். நெல்லையில் சண்முகம் அண்ணாச்சியின் ஒருங்கிணைப்பில் பொதுவுடமைக்கட்சியில் தி.க.சி. தொமுசி போன்ற இளைஞர்கள் அணிதிரண்டு கலை இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் இரண்டாவது சதிவழக்கையும் சந்தித்தது. கோவில்பட்டி சதி வழக்கு, விவசாயிகள் போராட்டம், என்று எப்போதுமே போராட்டக்களமாக இருந்த து கோவில்பட்டி. அதனால் தான் தொடர்ந்து ஐந்து முறை இந்தியப்பொதுவுடைமைக்கட்சியைச் சேர்ந்த சோ.அழகிரிசாமி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் விழிப்புணர்வின் காரணமாகவும் கி.ரா. கு.அழகிரிசாமி போன்ற முன்னோடிகளின் கலை இலக்கியச் செயல்பாடுகள் காரணமாகவும், எப்போதும் இளைஞர்களின் கூட்டம் கோவில்பட்டித் தெருக்களில் அரசியலும் இலக்கியமும் பேசித் திரிந்தார்கள். கலைச் செயல்பாடுகளாக வில்லிசை பிச்சைக்குட்டியின் வில்லிசை வளர்ந்த து. சிவகாசி பிரிண்டிங் தொழில் வளர்ச்சியில் ஓவிய மேதை கொண்டைய ராஜுவின் புராணக் கடவுளரின் ஓவியங்கள் இந்தியா முழுமையிலும் கோலோச்சியது. பின்னர் அவருடைய மாணவர்களான சுப்பையா, ராமலிங்கம் இரண்டுபேரும் பல காலம் காலண்டர் ஓவியங்களின் முன்னணி ஓவியர்களாக இருந்தனர். கோடையில் வணிகரீதியிலான நாடகத்திருவிழாக்கள் நடந்தன. இப்படி மக்களுக்கான கலை இலக்கியச் செயல்பாடுகளும் மிகுதியாக நடக்கும் ஊராக கோவில்பட்டி மாறியது.

புதிய இளைஞரகளுக்கு தமிழிலக்கியத்தில் பேரலையென உருவான சிறுபத்திரிகைகள் நவீனத்துவப்பார்வையையும் அதன் இலக்கியப்போக்குகளையும் அறிமுகப்படுத்தியது. கி.ராஜநாராயணீயத்தின் பின்புலத்துடன் புதிய எழுத்தாளர்கள் பல்வேறு இலக்கியப்போக்குகளுடன் எழுதினர். நவீன வீதி நாடகம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமான காலத்திலேயே அதன் களமாக் கோவில்பட்டி மாறியது. பிறந்த நாள் நூற்றாண்டு கண்ட பிகாஸோ அஃக் பரந்தாமன் தலைமையில் கோவில்பட்டியில் கண்காட்சி நடத்தினார். கார்ட்டூன் கண்காட்சியும், யுத்த எதிர்ப்புக் கண்காட்சியும், உலகசமாதானக் கண்காட்சியும் தமிழ்நாட்டில் கண்காட்சிக்கலைவடிவத்துக்கு ஒரு அரசியல் சமூகமுகத்தைக் கொடுத்தது. இந்தக் கலை இலக்கியச்செயல்பாடுகளுக்கு மையமாகவும் அறிவிக்கப்படாத ஒருங்கிணைப்பாளராகவும் ஓவியர். சுப்பையா அவர்களின் மகன் ஓவியர்.மாரீஸ் இருந்தார். சிறுபத்திரிகைகள் நீலக்குயில், எண்ணங்கள், தேடல், த்வனி போன்ற பத்திரிகைகளும் வெளிவந்தன. ஊரின் மையத்திலிருந்த காந்தி மைதானம் எப்போதும் அனல் பறக்கும் கலை இலக்கிய அரசியல், தத்துவ விவாதங்களினாலும், உரையாடல்களினாலும் இரவிலும் கொதிநிலையுடன் இருக்கும். அந்த மைதானத்துக்கு வந்து போகாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லாம். உல்க எழுத்தாளர்கள் செகாவ், டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, லெர்மன்தேவ், கார்க்கி, குப்ரின், ஷோலகோவ், பரீஸ் பொலேயேவ் சிங்கிஸ் ஐத்மாத்தவ் தொடங்கி தாமஸ் மான், நட்தாம்சன்,  ஜார்ஜ் ஆர்வெல், ஹெச்.ஜி.வெல்ஸ், செல்மா லாகர்லவ், வெர்ஜீனியா உல்ஃப், என்று உலக எழுத்தாளர்களனைவரும் கோவில்பட்டியில் அலைந்தார்கள். ஏனென்னில் உலக, இந்திய இலக்கியத்தின் எழுத்தாளர்களின் படைப்புகளை அல்லும் பகலும் வாசிக்கிற பேரியக்கமாக கோவில்பட்டி இளைஞர்கள் இருந்தார்கள். அந்த வாசிப்பின் வழியே தமிழிலக்கியத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் புரிந்து கொண்டார்கள். விரிவான விமரிசனங்கள், மதிப்புரைகள் படைப்புகள், கலைச்செயல்பாடுகளென்று கோவில்பட்டி அனுகணமும் அயராமல் இயங்கிக் கொண்டேயிருந்தது.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஒளிவீசும் சூரியனைப் போல கி.ராஜநாராயணன் தமிழ்ப்பண்பாட்டுக்கு வட்டார இலக்கியமென்ற புதிய வகைமையை கொடையாகக் கொடுத்தார். 1957-ல் இந்தியப்பொதுவுடமைக்கட்சி எடுத்த முடிவினடிப்படையிலேயே நாட்டார் இலக்கியம், வட்டார இலக்கியம், மக்கள் இலக்கியம் என்ற கிராமப்புற இலக்கியம் எழுத்தில் பதிவாகத் தொடங்கியது. கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியம், வட்டார வழக்குச் சொல்லகராதி, கரிசல் எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் அதை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார். அந்த இயக்கம் மற்ற வட்டார இலக்கியப்போக்குகள் உருவாக் காரணமாக இருந்த து மட்டுமல்ல, ஒரே மொழியின் பன்மைத்துவத்தைப் பறை சாற்றுவதாகவும் இருந்தது.

அப்போது நாட்டார் இலக்கியம் என்ற துறையே கல்விப்புலத்தில் உருவாகவில்லை.

இவையெல்லாம் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்த கோவில்பட்டியில் நடந்த நிகழ்வுகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போதே கோவில்பட்டி தமிழ்நாட்டின் முக்கிய இலக்கிய நகரமாக மாறிவிட்டது. பல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களுக்கான எதிர்வினையை முதலில் கோவில்பட்டியிலிருந்தே எதிர்பார்த்தார்கள். கோவில்பட்டி என்ன சொல்கிறது? என்று கேட்டார்கள்.

இத்தகைய வரலாற்று பாரம்பரியத்துடன் தொடரும் கோவில்பட்டியில் தொழில்ரீதியில் கடலைமிட்டாய் புவிசார் குறீயீடு பெற்று இந்திய அளவில் புகழ்பெற்றிருப்பதைப் போல இன்னொரு பெருமையையும் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஒரே நகரத்தில் ஏழுபேர்  சாகித்யா அகாதமி விருது பெற்றவர்களாக இருப்பது கோவில்பட்டியில் மட்டும் தான். அதே போல சாகித்ய அகாடமியின் அனைத்து வகைமையிலும் விருது பெற்றவர்கள் இருக்கும் ஊரும் கோவில்பட்டி தான்.

இப்போதும் எங்கு போனாலும் கேட்கிற முதல் கேள்வி?

கோவில்பட்டியில் மட்டும் எப்படி இத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்?. அத்தனை விருதுகளை எப்படி வாங்கினார்கள்?

அதற்கான பதிலைத் தெரிந்து கொள்ள மீண்டும் முதலிலிருந்து வாசியுங்கள்.

Post a Comment

0 Comments