ஐந்து குறுங்கதைகள்

 


1.   மரணம்

 

நேற்று இறக்கவில்லை

பிறக்கும்போதே இறந்துவிட்டேன். 

எப்போது என்பது என் நினைவிலில்லை.

உங்களுக்கும் நினைவிருக்காது.

நீங்களும் என்றோ இறந்தவர் தானே. 

இப்போது ஒருவருக்கொருவர் அஞ்சலிக்குறிப்புகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் 

நண்பரே.

 

2.   புழுக்கள்

அம்மாவின் உடலிலிருந்து புழுக்கள் உதிர்ந்தன.

ஒவ்வொரு புழுவாக உதிர உதிர அம்மா தன் கொடிய வாதைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக  விடுதலையடையும் முகத்தையடைந்தாள்.

கடைசிப் புழுவும் உதிர்ந்தவுடன் அவள் முகம் மலரச் சிரித்தாள். . 

அவள் சிரிப்பு நிரந்தரமானது. 

இப்போது என் தோலுக்குக் கீழே ஏதோ ஊர்வதைப் போல இருந்தது.

 

3.   கழுமரம்

 

வாழ்க்கை முழுவதும் அவமானம், துரோகம், விரக்தியின் முட்களால் கிரீடமணிந்த அவன் தோளில் கழுமரத்தைச் சுமந்து கொண்டு மலையேறினான். மலையுச்சியில் கழுமரம் நட்டு அதில் குதத்தைச் செருகி ரத்தம் வழிய வழியத் தாகத்தினால் தவித்திறக்கச் செய்ய  அன்பும் கருணையும் காத்திருந்தன.

அவன் மரணத்தை மகிழ்வுடன் எதிர்நோக்கினான்.

 

4.   இறந்தவன்

 

இறந்தவனைத் தினமும் சந்திக்கிறேன். அவன் என் மூளையில் நிரந்தரமாய் குடியேறிவிட்டான். இரவில் மட்டுமே உலாவருகிறான். அவனுக்கு உகந்த கனவுகளைக் கொண்டு வருகிறான். அந்தக் கனவுகளில் இப்போது தான் புதிதாகச் சந்திப்பவனைப் போல என்னை எதிர்கொள்கிறான். 

என் திகைப்பை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

சில சமயம் என்னையும் அவனுடன் வந்து தங்கச் சொல்லி அழைக்கிறான். 

ஃபாரின் சரக்கு வைத்திருப்பதாகக் கள்ளப்புன்னகையுடன் சொல்கிறான். 

நான் எப்படி என் மூளைக்குள் போகமுடியும்?

நீ இருப்பதே என் மூளையில் தான் என்கிறான்.


5. புலரி

காலை ஒளியை இருளாய்க் காணும் மனப்பிறழ்வு நோய் வந்து விட்டது. அப்படியென்றால் இரவினிருளை ஒளியாய்க் காண்பானோ என்ற உங்கள் கேள்வியை அவனுக்கு முன்னால் வைத்துக் காத்திருக்கிறேன். 

அவன் பதிலிறுத்தாமல் இருளுக்குள் கரைந்தான். 

 


Post a Comment

0 Comments