Showing posts with label தவளை. Show all posts
Showing posts with label தவளை. Show all posts

Thursday, 16 January 2025

தவளை மாமாவின் சந்தேகம்

 

1.        தவளை மாமாவின் சந்தேகம்

    உதயசங்கர்



லேசா இருட்டினால் போதுமே. உடனே  சுவர்க்கோழிகள்

” கீச் சகீச் கீச் கீச்ச்ச் கீச்ச்ச் “ என்று சத்தம் போட ஆரம்பித்து விடும்.

“ ச்சே நிம்மதியாகத் தூங்க முடியலை. ”

டினு தவளை மாமா முன்காலகளால் தன் கண்ணுக்குக் கீழேயுள்ள காதுகளைப் பொத்தினார்.

” கீச்ச்  கீச்ச்ச கீச் கீச்ச்ச் கீச் ”

டினு தவளை மாமா அப்படியும் இப்படியும் திரும்பினார். புரண்டு புரண்டு படுத்தார் மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க.

“ அய்யய்யோ இத்தூணூண்டு இருந்துகிட்டு என்ன சத்தம் போடறாங்க..என்னவோ இப்பதான் பீத்தோவன் இசைக்கச்சேரி மாதிரி.. ஒருத்தன் முடித்ததும் இன்னொருத்தன்.. இருங்க மழைக்காலம் வரட்டும் இந்த ஏரியாவையே அதிர வைக்கிறோம் “

டினு தவளை மாமாக்குத் தூக்கம் கலைந்து விட்டதே என்று கோபம். மெல்ல பொந்துக்கு வெளியே வந்தார். சுவர்க்கோழிகள் சத்தம் கேட்ட இடத்தை நோக்கித் தாவினார்.

அவர் தாவியதும் அப்படியே கீச் கீச் கீச் சத்தம் நின்று விட்டது. எங்கே இருந்து சத்தம் வந்தது என்று டினு தவளை மாமாவுக்குத் தெரியவில்லை.

என்னடா இது அதிசயமா இருக்கு.. இப்போது தானே சத்தம் கேட்டது என்று டினு தவளை மாமா நினைத்தார். மீண்டும் சத்தம் கேட்டது.

கீச்ச்ச் கீச்ச்ச் கீச்ச்ச்

மிக அருகில் கேட்டது. இன்னொரு தாவு தாவினார் டினு தவளை மாமா. மறுபடியும் சத்தம் நின்று விட்டது. அப்போது தான் டினு தவளை மாமாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது.

நாம் குதிக்கிற சத்தம் கேட்டுத்தான்.. சுவர்க்கோழி உஷாராகி சத்தம் போடறதில்லையோ.

மெல்ல ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடந்தது. டினு தவளை மாமாவின் அருகிலேயே ஒரு செடியின் இலையில் உட்கார்ந்திருந்தது ஒரு சுவர்க்கோழி. அது மீண்டும் கீச்ச கீச்ச என்று சத்தம் போடும்போது அப்படியே முன்காலால் பிடித்து விட்டது டினு தவளை மாமா.

சுவர்க்கோழி,

“ ஐயோ என்னை விட்டிரு.. டினு மாமா.கீச்ச்ச் கீச்ச்ச் .” என்று காதுகிழியக் கத்தியது.

“ ஏன் இப்படிக் கத்தறே? நாங்க தூங்க வேண்டாமா? “

என்று டினு தவளை மாமா கேட்டது.

“ மாமா அப்படிக் கத்தித்தான் எங்க நண்பர்களைக் கூப்பிட முடியும்..”

டினு தவளை மாமாவுக்கு தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டு விடலாம் என்று தோன்றியது.

“ நான் குதிக்கும் போது சத்தமில்லாமல் இருக்கிறீங்க.. அசையாம இருந்தா சத்தம் போடறீங்க..”

“ ஐய்யே மாமாவுக்கு இது கூடத் தெரியல.. எந்தச் சின்னச்சத்தமாயிருந்தாலும் எங்களுக்குக் கேட்கும்.. மாமா..”

“ உங்களுக்குக் காது கேட்குமா..  எங்கே இருக்கு உங்க காது? கண்ணுக்குப் பின்னாடியா? “

“ இல்லை.. மாமா.. எங்களுக்கு.. கரப்பான் தாத்தாவுக்கு..சிலந்தி அண்ணனுக்கு கால்களில் தான் காதுகள் இருக்கு.. எந்தச் சத்தம் கேட்டாலும் கால்ல இருக்கிற மெல்லிய முடிகள் கேட்டு எங்களுக்குச் சொல்லிரும்.. தெரிஞ்சிதா.. மாமா..”

“ ஓ அப்படியா! கால்ல காதுகளா? “ என்று டினு தவளை மாமா ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கும் போதே சுவர்க்கோழி ஒரு தாவு தாவியது. அருகில் இருந்த ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டது.

டினு தவளை மாமாவுக்கு நம்பவே முடியவில்லை.

 கால்களில் காது கால்களில் காது என்று சொல்லிக் கொண்டே தாவியது.


நன்றி - புலிக்குட்டியும் வண்ணத்துப்பூச்சியும்

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

Monday, 30 December 2024

குண்டான் தவளையும் சுண்டான் எலியும்

 

குண்டான் தவளையும் சுண்டான் எலியும்

உதயசங்கர்



ஒரு குளக்கரையில் சுண்டான் எலியும் குண்டான் தவளையும் நண்பர்களாக இருந்தனர். பகலில் சுண்டான் எலி தன்னுடைய வளைக்குள் தூங்கும். குண்டான் தவளை குளத்தின் ஆழத்தில் மூழ்கி பாசிகளைச் சாப்பிடும். , சிறு பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும்.

 இரவானதும்    சுண்டான் எலி வளையிலிருந்து வெளியில் வந்து அருகிலிருக்கும் வயலின் கதிர்களை பற்களால் வெட்டும். அதை வளைக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

நள்ளிரவுக்குப் பிறகு இரண்டு பேரும் ஓய்வாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். அருகில் இருந்த புளிய மரத்தில் ஒரு ஆந்தை உட்கார்ந்திருக்கும்.. எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்கும்.

அன்று இரண்டும் உட்கார்ந்து குசுகுசுன்னு ஊர்க்கதை பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மழைத்தூறல் விழுந்தது. உடனே சுண்டான் எலி,

“ என்னடா திடீரென்று மழை பெய்யுது..” என்று சொன்னது. 

உடனே குண்டான் தவளை “ நான் சத்தம் கொடுக்காமல் மழை வரக்கூடாதே.. எப்படி வந்தது..கொர்ர் கொர்ர் கொர்ர்ர் ” என்று கத்தியது. அது கத்தியதைக் கேட்ட மற்ற தவளைகளும் கொர் கொர் கொர் கொர் என்று கத்தின.

சுண்டான் எலி சிரித்தது.

“ இயற்கையை நீ எப்படி கட்டுப்படுத்தமுடியும்?.. மழைக்காலத்தில் குளம் குட்டை கிணறு ஆகியவற்றில் நீர் நிரம்பும்.. அது தான் உங்கள் இனம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலம் என்று உனக்குத் தெரியும்.. அப்போது ஆணும் பெண்ணும் மாறி மாறிக் கூப்பிடுவீர்கள்.. மற்றபடி நீ கத்தினால் மழை வரவேண்டும் என்பது கொஞ்சம் ஓவர்..”

என்றது சுண்டான் எலி. அதைக் கேட்ட குண்டான் தவளைக்குக் கோபம் வந்தது. சுண்டான் எலி மீது பாய்ந்தது. சுண்டான் எலியோ வளைக்குள் ஓடப் பாய்ந்தது. அப்போது விர்ரென்று பறந்து வந்த புளிய மரத்து ஆந்தை இரண்டு கால்களால் இரண்டு பேரையும் தூக்கிக் கொண்டு பறந்தது.

அப்போதும் குண்டான் தவளை சுண்டான் எலியைப் பார்த்து,

“ பாரு நான் உன்னை என்ன பண்றேன்னு..” என்று கத்தியது. 

சுண்டான் எலியும், “ போடா உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது..வெவ்வே வெவ்வே..” என்று வக்கணை காட்டியது.

ஆந்தை பசியுடன் காத்திருக்கும் தன் குஞ்சுகளை நினைத்து வேகமாகப் பறந்தது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

Wednesday, 6 October 2021

தவளை ராஜாவான கதை

 


தவளை ராஜாவான கதை

உதயசங்கர்

மண்டூர் நாட்டை ஆண்டு வந்த மன்னர் நோய்வாய்ப்பட்டுத் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு வாரிசு இல்லாததினால் மக்கள் என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உடனே அவர்கள் ராஜகுரு மாமண்டூவைச் சந்தித்தனர். ராஜகுரு ஏதோ புரியாத மொழியில் முணுமுணுத்தார். பரணிலிருந்து பெரிய பெரிய ஓலைச்சுவடிகளை எடுத்து புரட்டினார். பின்னர் கண்ணைமூடி இரண்டு நாட்கள் உட்கார்ந்து விட்டார். சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் மட்டும் கண்களைத் திறந்தார். மக்கள் அவரையே பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.

கூட்டம் அதிகமாக அதிகமாக அவரைப் பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்றால் ஒரு கட்டணம். அங்கேயே இருக்கவேண்டும் என்றால் அதிக கட்டணம். அவசர அவசரமாய் பார்க்கவேண்டுமென்றால் ஒரு கட்டணம் என்று விதவிதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மக்கள் வரிசை வரிசையாக நின்றனர்.

அவர் சொல்லும் வார்த்தைகளில் தான் தங்களுடைய எதிர்காலம் இருப்பதாக மக்கள் நினைத்தனர். ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று. மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறக்கவில்லை. ஒருவாரத்தை பேசவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார்கள். மாமண்டூ ராஜகுருவே அவருடைய சீடர்கள் மூலம் அவருடைய படங்களை அச்சடித்து விற்க ஏற்பாடு செய்தார். அத்துடன் டீக்கடைகள், ஹோட்டல்கள், சர்பத் கடைகள் எல்லாம் ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு ராட்டினம் கூட வந்து விட்டது.

எல்லாரும் எப்போது மாமண்டூ ராஜகுரு பேசுவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

“ என்ன பேசிட்டாரா? “

“ என்ன சொல்லிட்டாரா.?.”

“ என்ன  குறிப்பு கொடுத்தாரா? “

“ என்ன சைகை காட்டினாரா? “

என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டே திரிந்தனர். மக்கள், அவரவர் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து கிடந்தனர். விவசாயி உழவில்லை. நெசவாளி நெய்யவில்லை. தச்சர் தச்சுவேலை செய்யவில்லை. கொல்லர் நகை செய்யவில்லை. கொத்தனார் கல்லுடைக்கவில்லை. ஆட்டக்காரர்கள் ஆடவில்லை. பாட்டுக்காரர்கள் பாடவில்லை. தகவல் தொழில்நுட்பக்காரர்கள் தகவல் சொல்லவில்லை.

எல்லாரும் ராஜகுரு வாயைப் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.

மழைக்காலம் தொடங்கியது. மக்கள் எல்லாரும் கலைந்து போகத் தொடங்கினார்கள். உடனே மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறந்தார். மக்களை ஏற இறங்க பார்த்தார்.

உடனே தரையில் கட்டம் வரைந்து அதற்குள் குறுக்குமறுக்கும் கோடுகள் போட்டார். சோழியைக் குலுக்கிப் போட்டார். தாயக்கட்டையை உருட்டினார். நெற்றியில் கையை மடக்கி வைத்தார். எல்லாத்திசைகளிலும் கைகளை வீசினார். பின்னர் வாயைத் திறந்து,

“ ஏரி.. குளங்களுக்குப் போங்கள்.. அங்கே யார் சத்தமாகப் பேசுகிறார்களோ.. அவரை அழைத்து வாருங்கள்.. அவர் தான் மண்டூர் ராஜா.. “

என்று சொன்னார். அவ்வளவுதான். மக்கள் எல்லாரும் உடனே அந்த நாட்டில் இருந்த ஏரி, குளம், கண்மாய், குட்டை, என்று நீர்நிலைகளுக்குப் படையெடுத்தார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் தவளைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது. வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

“ கொர் கொர் கொர்ர்ர்ர்..” என்று மழைக்காலத்தை வரவேற்று தவளைகள் பாடிக்கொண்டிருந்தன. கூட்டமாகச் சத்தம் போட்டதால் யார் அதிகச் சத்தம் போடுகிறார்கள் என்று கணிக்கமுடியவில்லை. அதனால் எல்லாத்தவளைகளையும் பிடித்து பெட்டிகளில் அடைத்து அரண்மனைக்குக் கொண்டு போனார்கள். ராஜகுருவே தேர்ந்தெடுக்கட்டும்.

அரண்மனையில் ஆயிரக்கணக்கான தவளைகள் கொர்ர்கொர்ர் கொர்ர் கிர்ர்ர்க் கிர்ர்க் கிராக்க்.. என்று தவளைகளின் விதவிதமான சத்தங்களால் அரண்மனை ஆடியது. ராஜகுருவுக்குத் தெரியும் யார் ராஜாவாக வந்தாலும் அவருக்குப் பிரச்னையில்லை. அவருடைய பேச்சைக் கேட்டுத் தான் எல்லாரும் நடந்து கொள்வார்கள். அதனால் எல்லாத்தவளைகளையும் அரண்மனை அரச சபையில் விடச்சொன்னார்.

அப்படியே செய்தார்கள். தவளைகள் எல்லாம் கிராக் கிர்ர் கிர்ர்க் கிர்ர்ர் என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் தத்தித்தாவிக் குதித்தன. அப்போது சிம்மாசனத்தில் ஒரு பூச்சியைப் பார்த்தது ஒரு தவளை. அவ்வளவுதான். அந்தத்தவளை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க் கிர்ர்ர்ர்ர்ராரரரக் என்று கத்திக் கொண்டே பாய்ந்து சிம்மாசனத்தில் உட்கார்ந்து அந்தப் பூச்சியை தன்னுடைய நாக்கை நீட்டி லபக்கியது. உடனே மாமண்டூ ராஜகுரு ஒரு மாலையை எடுத்துக் கொண்டு வந்து அந்தத் தவளை ராஜாவுக்கு அணிவித்தார்.

மக்கள் எல்லாரும் ” தவளைராஜா வாழ்க! தவளைராஜா வாழ்க! “ என்று வாழ்த்தினார்கள். தவளைராஜாவுக்கு ஒன்றும்புரியவில்லை. பக்கத்தில் எங்காவது பூச்சிகள் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது.

ராஜகுரு மக்களின் அறியாமையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் அறிவு என்ற சிறுவன் இந்தக்கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ராஜகுருவின் தந்திரம் புரிந்தது. மழைக்காலம் முடிந்ததும் தவளை ராஜா பேசமாட்டார். அப்போது அவருடைய பெயரைச் சொல்லித் தானே ஆட்சி செய்யலாம் என்ற ராஜகுருவின் திட்டத்தை அவன் தெரிந்து கொண்டான்.

உடனே அவன் தவளைமொழி தனக்குத் தெரியும் என்றும் தவளைராஜா சொல்வதை மக்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதாகவும் சொன்னான். ராஜகுருவால் மறுப்பு சொல்லமுடியவில்லை.

அப்போது தவளைராஜா ஒரு பெண் தவளைக்காகப் பாட்டுப்பாடினார். கிர்ரக்கிர்ராக்கி கிர்ர்கி கீர்ராக்கி கிகிகிர்ர்ர்ர்ர்க்க்க்க்.. என்று பாட்டுப் படித்தார். மக்கள் எல்லாரும்

“ ராஜா என்ன சொல்கிறார்? “ என்று அறிவைப் பார்த்துக் கேட்டனர். அறிவு,

“ அய்யோ! அதை நான் எப்படிச் சொல்வேன்… நம்முடைய ராஜகுரு நாட்டின் அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கிறார்.. அவரைக் கைது செய்யும்படி.. உத்தரவு போடுகிறாரே ராஜா..”

மக்கள் திகைத்துப் போனார்கள். ஆனாலும் ராஜாவின் உத்தரவாயிற்றே. மீற முடியுமா? ராஜகுருவைக் கைது செய்தார்கள். இப்போது மறுபடியும் தவளைராஜா

 கிர்ர்ர்ர்ர்ராக் கிகிகிகிகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கத்தினார். அறிவு மக்களைப் பார்த்து,

“ ராஜா இனிமேல் மன்னராட்சி கிடையாது.. .. மக்கள் தங்களுக்குச் சேவை செய்ய சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கட்டும்..  அவர்கள் ஆளட்டும்… ”

உடனே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

கிராக் கிர்ரக் என்று மறுபடியும் தவளைராஜா கத்தினார்.

உடனே அறிவு,

“ என்னை என் குளத்திலேயே விட்டு விடுங்கள் என்று சொல்கிறார் தவளைராஜா..” என்று சொன்னான்.

அப்புறம் என்ன!

மண்டூர் அறிவூராக மாறியது. மக்களை மக்களே ஆட்சி செய்யும் நல்லாட்சி மலர்ந்தது.


நன்றி - பொம்மி சிறுவர் மாத இதழ்