தவளை ராஜாவான கதை
உதயசங்கர்
மண்டூர் நாட்டை ஆண்டு வந்த மன்னர்
நோய்வாய்ப்பட்டுத் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு வாரிசு இல்லாததினால் மக்கள்
என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உடனே அவர்கள்
ராஜகுரு மாமண்டூவைச் சந்தித்தனர். ராஜகுரு ஏதோ புரியாத மொழியில் முணுமுணுத்தார். பரணிலிருந்து
பெரிய பெரிய ஓலைச்சுவடிகளை எடுத்து புரட்டினார். பின்னர் கண்ணைமூடி இரண்டு நாட்கள்
உட்கார்ந்து விட்டார். சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் மட்டும் கண்களைத் திறந்தார்.
மக்கள் அவரையே பார்த்துக் கொண்டு காத்திருந்தனர்.
கூட்டம் அதிகமாக அதிகமாக அவரைப்
பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்றால் ஒரு
கட்டணம். அங்கேயே இருக்கவேண்டும் என்றால் அதிக கட்டணம். அவசர அவசரமாய் பார்க்கவேண்டுமென்றால்
ஒரு கட்டணம் என்று விதவிதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மக்கள் வரிசை வரிசையாக
நின்றனர்.
அவர் சொல்லும் வார்த்தைகளில் தான்
தங்களுடைய எதிர்காலம் இருப்பதாக மக்கள் நினைத்தனர். ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று.
மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறக்கவில்லை. ஒருவாரத்தை பேசவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார்கள். மாமண்டூ ராஜகுருவே அவருடைய
சீடர்கள் மூலம் அவருடைய படங்களை அச்சடித்து விற்க ஏற்பாடு செய்தார். அத்துடன் டீக்கடைகள்,
ஹோட்டல்கள், சர்பத் கடைகள் எல்லாம் ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு ராட்டினம் கூட வந்து
விட்டது.
எல்லாரும் எப்போது மாமண்டூ ராஜகுரு
பேசுவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.
“ என்ன பேசிட்டாரா? “
“ என்ன சொல்லிட்டாரா.?.”
“ என்ன குறிப்பு கொடுத்தாரா? “
“ என்ன சைகை காட்டினாரா? “
என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டே
திரிந்தனர். மக்கள், அவரவர் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து கிடந்தனர். விவசாயி உழவில்லை.
நெசவாளி நெய்யவில்லை. தச்சர் தச்சுவேலை செய்யவில்லை. கொல்லர் நகை செய்யவில்லை. கொத்தனார்
கல்லுடைக்கவில்லை. ஆட்டக்காரர்கள் ஆடவில்லை. பாட்டுக்காரர்கள் பாடவில்லை. தகவல் தொழில்நுட்பக்காரர்கள்
தகவல் சொல்லவில்லை.
எல்லாரும் ராஜகுரு வாயைப் பார்த்துக்
கொண்டேயிருந்தனர்.
மழைக்காலம் தொடங்கியது. மக்கள்
எல்லாரும் கலைந்து போகத் தொடங்கினார்கள். உடனே மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறந்தார்.
மக்களை ஏற இறங்க பார்த்தார்.
உடனே தரையில் கட்டம் வரைந்து அதற்குள்
குறுக்குமறுக்கும் கோடுகள் போட்டார். சோழியைக் குலுக்கிப் போட்டார். தாயக்கட்டையை உருட்டினார்.
நெற்றியில் கையை மடக்கி வைத்தார். எல்லாத்திசைகளிலும் கைகளை வீசினார். பின்னர் வாயைத்
திறந்து,
“ ஏரி.. குளங்களுக்குப் போங்கள்..
அங்கே யார் சத்தமாகப் பேசுகிறார்களோ.. அவரை அழைத்து வாருங்கள்.. அவர் தான் மண்டூர்
ராஜா.. “
என்று சொன்னார். அவ்வளவுதான்.
மக்கள் எல்லாரும் உடனே அந்த நாட்டில் இருந்த ஏரி, குளம், கண்மாய், குட்டை, என்று நீர்நிலைகளுக்குப்
படையெடுத்தார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் தவளைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது.
வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.
“ கொர் கொர் கொர்ர்ர்ர்..” என்று
மழைக்காலத்தை வரவேற்று தவளைகள் பாடிக்கொண்டிருந்தன. கூட்டமாகச் சத்தம் போட்டதால் யார்
அதிகச் சத்தம் போடுகிறார்கள் என்று கணிக்கமுடியவில்லை. அதனால் எல்லாத்தவளைகளையும் பிடித்து
பெட்டிகளில் அடைத்து அரண்மனைக்குக் கொண்டு போனார்கள். ராஜகுருவே தேர்ந்தெடுக்கட்டும்.
அரண்மனையில் ஆயிரக்கணக்கான தவளைகள்
கொர்ர்கொர்ர் கொர்ர் கிர்ர்ர்க் கிர்ர்க் கிராக்க்.. என்று தவளைகளின் விதவிதமான சத்தங்களால்
அரண்மனை ஆடியது. ராஜகுருவுக்குத் தெரியும் யார் ராஜாவாக வந்தாலும் அவருக்குப் பிரச்னையில்லை.
அவருடைய பேச்சைக் கேட்டுத் தான் எல்லாரும் நடந்து கொள்வார்கள். அதனால் எல்லாத்தவளைகளையும்
அரண்மனை அரச சபையில் விடச்சொன்னார்.
அப்படியே செய்தார்கள். தவளைகள்
எல்லாம் கிராக் கிர்ர் கிர்ர்க் கிர்ர்ர் என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் தத்தித்தாவிக்
குதித்தன. அப்போது சிம்மாசனத்தில் ஒரு பூச்சியைப் பார்த்தது ஒரு தவளை. அவ்வளவுதான்.
அந்தத்தவளை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க் கிர்ர்ர்ர்ர்ராரரரக் என்று கத்திக் கொண்டே பாய்ந்து
சிம்மாசனத்தில் உட்கார்ந்து அந்தப் பூச்சியை தன்னுடைய நாக்கை நீட்டி லபக்கியது. உடனே
மாமண்டூ ராஜகுரு ஒரு மாலையை எடுத்துக் கொண்டு வந்து அந்தத் தவளை ராஜாவுக்கு அணிவித்தார்.
மக்கள் எல்லாரும் ” தவளைராஜா வாழ்க!
தவளைராஜா வாழ்க! “ என்று வாழ்த்தினார்கள். தவளைராஜாவுக்கு ஒன்றும்புரியவில்லை. பக்கத்தில்
எங்காவது பூச்சிகள் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது.
ராஜகுரு மக்களின் அறியாமையைப்
பார்த்துச் சிரித்துக் கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் அறிவு என்ற
சிறுவன் இந்தக்கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ராஜகுருவின் தந்திரம்
புரிந்தது. மழைக்காலம் முடிந்ததும் தவளை ராஜா பேசமாட்டார். அப்போது அவருடைய பெயரைச்
சொல்லித் தானே ஆட்சி செய்யலாம் என்ற ராஜகுருவின் திட்டத்தை அவன் தெரிந்து கொண்டான்.
உடனே அவன் தவளைமொழி தனக்குத் தெரியும்
என்றும் தவளைராஜா சொல்வதை மக்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதாகவும் சொன்னான். ராஜகுருவால்
மறுப்பு சொல்லமுடியவில்லை.
அப்போது தவளைராஜா ஒரு பெண் தவளைக்காகப்
பாட்டுப்பாடினார். கிர்ரக்கிர்ராக்கி கிர்ர்கி கீர்ராக்கி கிகிகிர்ர்ர்ர்ர்க்க்க்க்..
என்று பாட்டுப் படித்தார். மக்கள் எல்லாரும்
“ ராஜா என்ன சொல்கிறார்? “ என்று
அறிவைப் பார்த்துக் கேட்டனர். அறிவு,
“ அய்யோ! அதை நான் எப்படிச் சொல்வேன்…
நம்முடைய ராஜகுரு நாட்டின் அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கிறார்..
அவரைக் கைது செய்யும்படி.. உத்தரவு போடுகிறாரே ராஜா..”
மக்கள் திகைத்துப் போனார்கள்.
ஆனாலும் ராஜாவின் உத்தரவாயிற்றே. மீற முடியுமா? ராஜகுருவைக் கைது செய்தார்கள். இப்போது
மறுபடியும் தவளைராஜா
கிர்ர்ர்ர்ர்ராக் கிகிகிகிகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என்று கத்தினார். அறிவு மக்களைப் பார்த்து,
“ ராஜா இனிமேல் மன்னராட்சி கிடையாது..
.. மக்கள் தங்களுக்குச் சேவை செய்ய சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கட்டும்.. அவர்கள் ஆளட்டும்… ”
உடனே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம்
செய்தனர்.
கிராக் கிர்ரக் என்று மறுபடியும்
தவளைராஜா கத்தினார்.
உடனே அறிவு,
“ என்னை என் குளத்திலேயே விட்டு
விடுங்கள் என்று சொல்கிறார் தவளைராஜா..” என்று
சொன்னான்.
அப்புறம் என்ன!
மண்டூர் அறிவூராக மாறியது. மக்களை
மக்களே ஆட்சி செய்யும் நல்லாட்சி மலர்ந்தது.
நன்றி - பொம்மி சிறுவர் மாத இதழ்
No comments:
Post a Comment