Saturday 9 October 2021

காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் – சிறார் கிராமியக்கதை

 

காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் –


சிறார் கிராமியக்கதை

உதயசங்கர்

அந்த ஊரிலேயே வசதியான சம்சாரிக்கு ரொம்ப நாளா குழந்தையில்லை. அந்தம்மா வயித்தில ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை. இவ்வளவு சொத்துபத்து இருந்தும் ஆண்டு அனுபவிக்க ஒரு பிள்ளை இல்லியேன்னு அந்தம்மாவுக்கு ஒரே வெசனம். நாம செத்தா கொள்ளிபோட ஒரு பிள்ளையில்லியேன்னு அந்த சம்சாரிக்கு கவலை. பிள்ளைக்காக அவுக போகாத கோயிலில்ல. வேண்டாத தெய்வமில்ல. செய்யாத வயணமில்ல. அக்னிச்சட்டி எடுத்தாக. கூழு காச்சி ஊத்துனாக. அங்கபிரதட்சணம் பண்ணுனாக. சோசியர்களைப் போய்க் கேட்டாக. சாமியார்களைப் போய்ப்பார்த்தாக. வைத்தியர்கள்கிட்ட போனாங்க. பத்தியம் இருந்தாக. ஆனா எதுவும் நடக்கல. ரெண்டுபேருக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சி கிட்டே வந்தது.

கடசியில ஒரு டவுணுக்கு புதுசா வந்திருந்த ஒரு டாக்டரம்மாவப் போய்ப்பார்த்தாக. அந்தம்மா என்னெல்லாமோ டெஸ்டுகளை எடுக்கச்சொல்லிப்பாத்தது. எல்லாம் நல்லாத்தானே இருக்கு.. என்ன காரணம்னு மண்டைய போட்டு உடைச்சிக்கிட்டருந்தது… .சும்மானாச்சுக்கும் அது நீங்க ரெண்டுபேரும் தனியா குத்தாலம் போய் மூணு நாள் இருந்துட்டு வாங்க. அப்ப இன்னின்ன பதார்த்தங்களைச் சாப்பிடுங்க. இது வெளிநாட்டு வைத்தியமுறை. அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாக.

அவுகளும் குத்தாலம் போய் மூணுநாள் தங்கி நல்லாகுளிக்க, திங்க, தூங்க, இருந்துட்டு ஊருக்கு வந்தாக. மாயம் போல அடுத்த பத்துமாசத்துல ஒரு ஆம்பிளப்பிள்ளய பெத்துட்டா அந்தப்பொண்ணு. பிள்ளய தங்கத்தட்டுல வச்சித் தான் பாத்துகிட்டாக. அப்படித்தான் தாங்கு தாங்குன்னு தாங்கினாக. பிள்ளை என்ன கேட்டாலும் உடனே கிடைச்சிரும்.  அதவிட வேற வேலை! பயல் பள்ளிக்கூடம் போனான். அந்த ஊரில் பள்ளிக்கூடம் சரியில்லன்னு பக்கத்து டவுனுக்கு அனுப்புனாக. பத்திரமாக கூட்டிட்டுப் போய் கூட்டிட்டு வர்ரதுக்குன்னு ஒரு ஆளயும் அமத்துனாக.

அப்படிப் போய்க்கிட்டிருக்கும் போது பயல் ஒரு நாள் அவனுடைய சிநேகிதனுடைய வீட்டுக்குப் போனான். சிநேகிதனுடைய அம்மா டவுனு வழக்கப்படி பயலுக்கு காப்பித்தண்ணியைப் போட்டுக் கொடுத்துச்சி. சீனி போட்ட அந்த செவலை நிறத்தண்ணியைக் குடிச்சதும் பயல் அப்படியே கிறங்கிப்போனான். அப்படி அமிர்தமா இருந்துச்சி அவனுக்கு. உடனே இனிமே நாமளும் நெதமும் இந்தக்காப்பித்தண்ணியை வீட்டுல காய்ச்சித்தரச் சொல்லணும்னு மனசுக்குள் நெனச்சிக்கிட்டான். அம்மாகிட்ட சொல்றதுக்காக காப்பித்தண்ணி காப்பித்தண்ணி காப்பித்தண்ணின்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டே வந்தான். அப்போ அந்த சிநேகிதன் வீட்டுக்கு வந்த பால்க்காரர் பாலைக்கொடுத்துட்டு அம்மா கழனித்தண்ணி இருக்கான்னு கேட்டாரு. அவரு கேட்டதும் பயலுக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியா மாறிட்டது. கழனித்தண்ணி கழனித்தண்ணி கழனித்தண்ணின்னு சொல்லிகிட்டே ஊருக்கு வந்தான்.

நேரே அம்மாகிட்டே போய் “ யெம்மா நாளைக்கி காலைல குடிக்கிறதுக்கு எனக்கு கழனித்தண்ணி வேணும்..னு சொன்னான். அம்மா அதைக் கேட்டுட்டு தமாசுன்னு நெனச்சிகிட்டு சிரிச்சிக்கிட்டே அதுக்கென்ன ராசா தாராளமா குடின்னு சொல்லிட்டா. மறுநாள் காலைல எந்திச்சதும் மொதவேலையா குடிக்க கழனித்தண்ணியக் கேட்டான் பயல்.

மாடு குடிக்கிறதப்போய் கேக்கிறியே ராசா..ன்னு அவனோட அய்யா சொன்னாரு. அவன் சடச்சிக்கிட்டு மூஞ்சியத் தூக்கி வைச்சிகிட்டான். அப்ப டவுனில எல்லாரும் குடிக்காகன்னு சொல்லி அழுதான். இதென்னடா பாதரவாப்போச்சி. இதுவரை பிள்ளை கண்ணில கண்ணீரே பாத்ததில்லை. இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கானேன்னு அம்மாவுக்கு வருத்தம். காத்துக்கருப்பு எதுவும் பிடிச்சிருச்சான்னு தெரியலயே. ஆனா பயல் அழுது அடம்பிடிக்கான். யாராலயும் அவன சமாதானப்படுத்த முடியல.

சரி அவன் இஷ்டப்படியே செய்வோம்னு பெரிய கல்தொட்டியில இருந்த கழனித்தண்ணிய மேலால மோந்து அதுல கொஞ்சம் கருப்பட்டியைப் போட்டு கலக்கி பயந்துகிட்டே கொண்டு வந்து கழனித்தண்ணிய அவங்கிட்ட கொடுத்தா அம்மாக்காரி.

அதப்பாத்ததும் ஆவலா வாங்கிக் குடிச்ச பயல் முகத்தைச் சுளிச்சான்.

 டவுனில நல்லாச்சூடா கொடுத்தாக அதான் அம்புட்டு ருசியா இருந்துச்சி.. உனக்கு கழனித்தண்ணியே போடத்தெரியலன்னு சொல்லி அதைக் கீழே கொட்டிட்டான். மறுநாள் டவுனிலிருந்து வந்த சீலை வியாபாரி பேச்சோடு பேச்சாக காப்பித்தண்ணியைப் பத்தி சொல்லவும் தான் அம்மாக்காரிக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியான கத தெரிஞ்சது. எல்லாருக்கும் சிரிப்பாணி பொங்கி வந்தாலும் யாரும் சிரிக்கல. பயல் கோவிச்சிகிட்டான்னா என்னசெய்ய?

தவமாய் தவமிருந்து வெளிநாட்டு பத்தியத்துல பெத்தபிள்ளையில்லையா?

 

நன்றி – புக் டே இணைய இதழ்.

No comments:

Post a Comment