சேவல் முட்டை
உதயசங்கர்
வாயில் கவ்விய சேவலுடன் காட்டுக்குள்
ஓடியது குள்ளநரி.
இன்று முழுவதும் குள்ளநரிக்கு
சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. இரவாகி விட்டது. மலை அடிவாரத்தில் இருந்த காவூர் கிராமத்துக்குள்
நுழைந்தது. நல்ல நிலா வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்
குள்ளநரியின் கண்களுக்கு ஒரு சேவல் தெரிந்தது.
ஆகா! கிடைத்தது பெரும் பரிசு!
குள்ளநரியின் நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது. மெல்லப் பதுங்கிப் பதுங்கி சேவலுக்குப்
பின்னால் போய் லபக் என்று ஒரு கவ்வு. அவ்வளவுதான்.
சேவலுக்கு நரி கவ்வியதிலேயே பாதி
உயிர் போய் விட்டது. இரவில் எப்போதும் மரத்தின் மீது தான் உட்கார்ந்திருக்கும். இன்று
பௌர்ணமி. நல்ல வெளிச்சம். கீழே இரவுப்பூச்சிகள் ஊர்வதும் தாவுவதும் நன்றாகத் தெரிந்தது.
அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக மரத்திலிருந்து கீழே இறங்கியது. இரண்டு பூச்சிகளைத்
தின்பதற்குள் நரி கவ்வி விட்டது.
நடுக்காட்டில் கருவேலமரத்தின்
கீழே குள்ளநரியின் வீடு இருந்தது. அந்த முள்ப் புதருக்குள் நுழைந்து சேவலைக் கீழே போட்டது.
கீழே விழுந்த சேவல் மெல்ல எழுந்து நின்றது. சேவலின் கழுத்தைப் பார்த்தபடியே,
“ வண்ண வண்ணச் சேவலே
வலிமையான சேவலே..
எண்ணம் போலே தின்னுவேன்..
என் பசிக்கு உன்னையே..
ஊஊஊஊஊஊ… லாலாலல்லா “
என்று பாட்டுப் பாடியது.
அதைக் கேட்ட சேவலின் உடல் நடுங்கியது.
ஆனாலும் தைரியமாய் நிமிர்ந்து நின்று,
” குள்ள
நரியே குள்ளநரியே
கூறுகெட்ட குள்ளநரியே
இன்று மட்டும் போதுமா
என்றும் சாப்பிட வேண்டாமா
கொக்கரக்கோ கொக்கரக்கோ..”
என்று கூவியது. உடனே குள்ளநரி யோசித்தது.
“ என்ன சொல்கிறாய் நீ? “
என்று கேட்டது குள்ளநரி.
“ சேவல் முட்டை பார்த்திருக்கிறாயா?..” என்றது
சேவல்.
“ என்னது
சேவல் முட்டையா? கோழி முட்டை தானே உண்டு..”
“ அட அறிவுக்கொழுந்தே…உலகத்தை
இன்னும் அறியவில்லையே.. காலம் மாறி விட்டது. இப்போது சேவலும் முட்டையிடும்.. அந்த முட்டையிலிருந்து
முழுச்சேவலும் வெளியே வரும்..”
என்று சொன்ன சேவலைச் சந்தேகத்துடன்
பார்த்தது குள்ளநரி. ஆனால் சேவல் கொஞ்சமும் தயங்கவில்லை.
“ இன்று நீ என்னைச் சாப்பிட்டால்
இன்று மட்டும் தான் உன் பசி தீரும்.. ஆனால்
என்னை நீ வளர்த்தால் தினம் ஒரு முட்டை இடுவேன். தினம் ஒரு சேவலை நீ சாப்பிடலாம்.. எப்படி..வேண்டுமானால்
இதோ இப்போதே என்னைச் சாப்பிட்டு விடு..க்க்கொக்கொ..கொக்கரக்கோ… ”
என்று சொல்லியது சேவல். குள்ளநரிக்குக்
குழப்பமாக இருந்தது. ஒருவேளை சேவல் சொல்வது உண்மையாக இருந்தால்.. தினம் ஒரு சேவல் கிடைக்குமே.
உடனே,
“ சரி.. உன்னைச் சாப்பிடவில்லை..
இன்னும் ஒரு வாரத்துக்குள் நீ மூட்டை இடவில்லை என்றால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன்..தெரிந்ததா..ஊஊஊஊ”
அந்தப் புதரிலேயே சேவலை கட்டிப்
போட்டுவிட்டு வேறு உணவு தேடி வெளியில் போய் விட்டது குள்ளநரி.
அன்றிலிருந்து தினம் காலையில்
எழுந்ததும் குள்ளநரி சேவலிடம்,
“ முட்டையிட்டையா சேவலே..
முட்டையிட்டையா சேவலே
ஆறு நாள் தான் இருக்கு
முட்டையிட்டையா சேவலே..”
என்று கேட்கும். அதற்கு சேவல்,
“ குள்ளநரியே குள்ளநரியே
கூறுகெட்ட குள்ளநரியே
சேவல் முட்டை வேணும்னா
ஒரு வேளை குளிக்கணும்
இரண்டு வேளை கூவணும்
மூணு வேளை மேயணும்
நாலு வேளை பறக்கணும்
அஞ்சு வேளை தூங்கணும்
ஆறு வேளைச் சாப்பிடணும்..
ஏழு வேளை பேன் எடுக்கணும்
குள்ள நரியே குள்ளநரியே
கூறுகெட்ட குள்ளநரியே “
என்று பதிலுக்குப் பாடும்.
அதன் பிறகு சேவல் ஏவிய அத்தனை
வேலைகளையும் குள்ளநரி செய்தது. குள்ளநரி சேவலுக்கும் சேர்த்து வேட்டையாடிக் கொண்டு
வந்தது. சேவல் எந்த வேலையும் செய்யாமல் ஹாயாக இருந்தது.
மூன்று நாட்கள் கழிந்தது. காலையில்
எழுந்ததும் குள்ளநரி கேட்டது.
“ முட்டையிட்டையா சேவலே..
முட்டையிட்டையா சேவலே..
மூணு நாள் தான் இருக்கு..
முட்டையிட்டையா . சேவலே....”
என்று ஊளையிட்டது. அப்போது சேவல்,
” .. குள்ளநரியே
குள்ளநரியே
கூறுகெட்ட குள்ளநரியே
மூணுநாள் முடியட்டும்
முட்டை இடுவேன் நான்
குள்ளநரியே குள்ளநரியே
கூறுகெட்ட குள்ளநரியே “
கடைசியில் ஏழாவது நாளும் வந்தது.
இதுவரை ஏமாந்தது போதும் என்று நினைத்தது குள்ளநரி. இன்று சேவல் முட்டை இடவில்லை என்றால்
அதைக் கொன்று தின்று விட வேண்டியது தான் என்று நினைத்தது.
ஆனால் ஏழாவது நாள் காலையில் சூரியன்
உதித்ததும் சேவல்,
“ குள்ளநரியே குள்ளநரியே
கூறுகெட்ட குள்ளநரியே
முட்டையிடும் மந்திரம்
என் கூட்டிலே இருக்குதே
பறந்து போய் எடுத்து வர
அனுமதிக்க வேண்டுமே..
குள்ளநரியே.. குள்ளநரியே
கூறுகெட்ட குள்ளநரியே..”
என்று கண்ணீர் விட்டது. அதைப்
பார்த்த குள்ளநரி,
“ கொக்கரக்கோ சேவலே
முட்டையிடும் சேவலே
இப்போதே பறந்து போய்
மந்திரத்தைக் கொண்டு வா..
காத்திருப்பேன் சேவலே..”
என்று சொல்லிக் கட்டியிருந்த சேவலை
அவிழ்த்து விட்டது. அப்புறம் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தான் தெரியுமே. உடனே சேவல்
புதருக்குள்ளிருந்து ” தப்பித்தோம் பிழைத்தோம்” என்று
பறந்து போய் விட்டது.
அன்றிலிருந்து தினம்தினம் இரவாகி
விட்டால் குள்ளநரிக்கு சேவல் முட்டை ஞாபகம் வந்து விடும். அந்தச் சோகத்தில் தான் இன்னமும்,
ஊஊஊஊஉ ஊஊஊஊஉ என்று ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறது.
கேட்கிறதா உங்களுக்கு?
நன்றி - வண்ணக்கதிர்
👌💐
ReplyDelete