Sunday 19 May 2019

பெண்களும் மதங்களும்

பெண்களும் மதங்களும்..

பெரும்பாலான வீடுகளில் குடும்பத்தாரின் ஆன்மீக நடவடிக்கைகளை வீட்டுப்பெண்களே தீர்மானிக்கிறார்கள்.

அஷ்டமி, நவமி, ராகு, குளிகை, எமகண்டம், சூலம், பரிகாரம், ஜாதகம், ஜோசியம் ராசி, லக்கினம், நட்சத்திரம், நாள், கிழமை, நட்சத்திரம், பூஜை, புனஸ்காரங்கள், நைவேத்தியங்கள், நேர்த்திக்கடன்கள், மற்றும் விரதங்கள், அமாவாசை, பௌணர்மி, ஏகாதசி, துவாதசி, சஷ்டி சதுர்த்தி, கார்த்திகை, சிவராத்திரி, மஹாசிவராத்திரி, என்று நாள் தவறாமல் விரதங்களையும் பெண்கள் தங்களுடைய குடும்பத்தாரை முழுமையாகவோ, பகுதியாகவோ கடைப்பிடிக்கச் செய்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தினசரி வீட்டு வாசலில் கோலம் போடுவது, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வீட்டை மொழுகிச் சுத்தம் செய்வது, மாலையில் குத்துவிளக்கை ஏற்றி மாலை சூடி, பூஜை செய்வது, என்று பக்தி மணம் கமழ வீட்டை மாற்றி விடுகிறார்கள். இதோடு பெயர்ச்சிகள் வேறு. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி, கிரகணங்கள், என்று பெயர்ச்சிகளின் போது குடும்பத்தாரின் யோகங்களைப் பற்றிய கவலைகள். அதற்குப்பரிகாரங்கள் என்று அனுகணமும் மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள் பெண்கள்.

ஏற்கனவே வீட்டு நிர்வாகத்தை இருபத்திநாலு மணி நேரமும் செய்துகொண்டேயிருக்கும் பெண்களின் தலையில் குடும்பநலன்களின் மொத்தக்குத்தகையையும் ஏற்றி, சாஸ்திர சம்பிரதாய சடங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.. கணவர், குழந்தைகள், வீடு, என்று எப்போதும் சிலந்தி வலையில் மாட்டிய ஈயைப் போல உழன்று கொண்டேயிருக்கிறார்கள்.

பெரும்பாலான ஆண்கள் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை அல்லது கவலைப்படாத மாதிரி நடந்து கொள்கிறார்கள். “ அதெல்லாம் அவுக டிபார்ட்மெண்ட்..” என்று மேம்போக்காய் சொல்லி விட்டு ஒரு சடங்கு விடாமல் எல்லாவற்றையும் கிரமமாய் செய்வார்கள்

ஆண்கள். இதில் மதங்களுக்கேற்றவாறு சாதிகளுக்கேற்றவாறு சடங்குகள் சாஸ்திரங்கள் மாறலாம். அவ்வளவு தான்.

சரி. மதத்தின் சாஸ்திர சம்பிரதாயங்களை இவ்வளவு கர்மசிரத்தையோடு, செய்கிற பெண்களைப் பற்றி இந்த சடங்கு, சாஸ்திரங்களைச் செய்யச்சொல்கிற மனு தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?

“ வேதங்களைப் படிப்பதற்குப் பெண்களுக்கு உரிமையில்லை அத னால் அவர்களின் சடங்குகள் வேதமந்திரங்கள் இல்லாமல் நடத்தப்படவேண்டும். மதத்தைப் பற்றி பெண்களுக்கு எந்த ஞானமும் கிடையாது. ஏனெனில் வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமையில்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங்களை உச்சரிப்பது பயனுள்ளதாகும். பெண்களால் வேதமந்திரங்களை உச்சரிக்க முடியாததாகையால் அவர்கள் பொய்யைப் போன்றவர்கள். “
( 18. ஒன்பதாம் அத்தியாயம் மனுதர்ம சாஸ்திரம் அம்பேத்கார் நூல்தொகுப்பு 36 )

அறிவு பெறும் உரிமையை மறுத்துவிட்டு அவர்களுக்கு எந்த ஞானமும் கிடையாது என்றும்  அவர்கள் பொய்யைப் போன்றவர்கள் என்றும் இழிவு படுத்துகிறது மனுதர்ம சாஸ்திரம்.

இப்படி பெண்களின் ஆன்மீகஅறிவுரிமையை புறந்தள்ளுவது மட்டுமல்லாமல் அவர்களுடைய இருத்தலையே இழிவானதாகச் சித்தரிக்கின்றன கீழ்க்கண்ட விதிகள்.

“ இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத்தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்த காரணத்திற்காகவே விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது உஷாராயில்லாமல் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். “ ( 213, அத்தியாயம் 2 மனுதர்மசாஸ்திரம் )

“ ஏனெனில் இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி ஒரு கல்விமானையும் பாதை தவறிச் செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உடையவர்கள். “ ( 214. அத்தியாயம் 2. மனுதர்மசாஸ்திரம் )

“ அவர்களை உருவாக்கும்போது கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள், ஆகியவற்றின் மீது பிரேமையையும், மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள் ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை, ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார். “
( 17. அத்தியாயம் 9 மனுதர்மசாஸ்திரம்)

பெண்களை இழிவு படுத்தும் மனு,  புத்தருக்குப் பின் வந்தவர்.
புத்த மதம் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரத்தை பறிக்கவும், இழிவுபடுத்தவும் கல்வியுரிமையை அழிக்கவும் இத்தகைய விதிகளை எழுதியுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதோடு அவர்களின் அறிவுச்சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி கல்வியை மறுத்தார்கள். வீட்டிலும் கூட பெண் சுதந்திரமானவளாக இருக்க அநுமதிக்கப்படவில்லை.

“ ஒரு சிறு பெண்ணோ, ஓரு இளம் பெண்ணோ, அல்லது வயதான பெண்ணும் கூட - தனது சொந்த வீட்டிலும் கூட - எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. “ ( 147. அத்தியாயம் 5 மனுதர்மசாஸ்திரம் )

“ குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் தனது தகப்பனாருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இளமைப்பருவத்தில் தனது கணவருக்கும், கணவர் இறந்ததற்குப் பின்னர் தனது மகன்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது.”
( 148. அத்தியாயம் 5. மனுதர்மசாஸ்திரம் )

ஏன் பெண் சுதந்திரமாக இருக்கக்கூடாது?

 பெண்ணின் புழங்குவெளியைச் சுருக்குவதன் மூலம் அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவே இந்த இழிமொழிகள். எனவே வீடு, வீட்டின் மூலையில் சமையலறை, இரவானால் படுக்கையறை, தன் கணவன், மக்கள் நலனைத் தவிர சமூகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படமுடியாத அளவுக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், என்று தன்னை இழிவு படுத்துகிற மதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் இருக்கிறாள்.

வரலாற்றின் மிகப்பெரிய முரண், யாரெல்லாம் சுத்தம் செய்யும் வேலையைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் தீண்டத்தகாதவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

சில நாட்களாவது, சிலமணி நேரங்களாவது எல்லோரும் தீட்டுப்பட்டு விலக்கி வைக்கப் படுகிறார்கள். வீட்டிலும் பௌதீகரீதியாக சுத்தம் செய்யும் வேலை பெண்களுக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் பாத்திரம் துலக்குவது, அழுக்குத்துணிகளைத் துவைப்பது, வீடு கழுவி விடுவது, ஒட்டடை அடிப்பது, கக்கூஸ் கழுவுவது என்று எல்லாவிதமான சுத்தம் செய்யும் வேலைகளையும் பெண்கள் தலையிலேயே சுமத்தி விட்டதுமல்லாமல் அவர்களை வீட்டிலும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது மனுவும் ஆணாதிக்கமும்.

அவர்கள் அனைத்துச் சடங்குகளிலும் கலந்து கொள்ள முடியாது. சில சடங்குகளில் விதவைகள் கலந்து கொள்ள முடியாது. சில சடங்குகளில் கன்னிப்பெண்கள் கலந்து கொள்ள முடியாது. அனைத்துக் கோவில்களிலும் தீட்டான பெண்கள் நுழைந்து விட முடியாது. மரணத்தில் கூட தெரு முக்கு வரை தான் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி எல்லாவித விலக்குகளுக்கும் தீட்டுக்கும் தீண்டாமைக்கும் ஆட்படுகிறார்கள் பெண்கள்.

கொடுமை என்னவென்றால் எந்த அநீதியான இழிவான கற்பிதமான நெறிகளைச் சொல்லி பெண்ணின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினார்களோ அந்த நெறிகளை பெண்களே மனமுவந்து ஏற்றுக் கொள்ள வைத்திருப்பதில் தான் சநாதனத்தின் சாமர்த்தியம்.

எந்த சாஸ்திர சம்பிரதாய சடங்குகளிலும் பெண்களை முன்னிறுத்துவதில்லை. ஆனால் பெண்கள் அதைப்பற்றி எந்த எதிர்ப்புமின்றி அந்த சடங்குகளையும் சாஸ்திரங்களையும் கறாராகக் கடைப்பிடிக்க நினைக்கின்றனர். அப்படி கடைப்பிடிக்கவில்லையென்றால் தன்னுடைய குடும்பநலன் பாதிக்கப்படும் என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்ணுக்குச் சொத்தில்லை என்று மனுதர்மசாஸ்திரம் அத்தியாயம் 9-ல் 416 ஆம் விதி கூறுகிறது. பெண்களை அடிக்கலாம் என்று அத்தியாயம் 8-ல் 299 ஆம் விதி கூறுகிறது.

இதெல்லாவற்றையும் விட கொடிய விதி அத்தியாயம் 11-ல் 67-ஆம் விதி கூறுகிறது.
“ குடிகாரர்கள், ஸ்திரிகள், சூத்திரர்கள், வைசியர்கள், அல்லது ஷத்திரியர்கள், மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய யாவும் சிறிய குற்றங்களேயாகும். “

பிராமணர்களைக் கொல்வது மட்டுமே பெரும்பாதகம். மற்றவர்களையெல்லாம் கொல்வது சிறிய பாவம் என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

இந்து மதம்மட்டுமல்ல. கிறித்துவம், இஸ்லாம் போன்ற நிறுவனமயமாக்கப்பட்ட அனைத்து மதங்களிலும் இதுதான் நிலைமை.

. எப்படி பிறப்பின் வழியாக உடல்களின் மீது சாதி என்னும் ஏற்றதாழ்வுமிக்க அமைப்பு மனிதர்களைப் பிரித்தாள்கிறதோ தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறதோ, அதே போல பெண் உடல் என்ற ஒரே காரணத்துக்காக அந்த உடலின் மீது தீண்டாமையையும், வன்முறையையும், சுரண்டலையும் நிகழ்த்துகிறது ஆணாதிக்கம்.

சாதிகள் ஒழிய வேண்டுமென்றால்( மனிதகுலத்தில் சரிபாதியாக இருக்கிற பெண்களின் )
பெண்சமத்துவம் பெண்விடுதலை ஆகியவை ஒரு முக்கிய முன்நிபந்தனைகளாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்..

No comments:

Post a Comment