Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Friday, 8 May 2026

மரணமும், விடுதலையும்…

 

மரணமும், விடுதலையும்…

 ம..மணிமாறன்.



முன்வரும் எல்லா இலக்கிய வகைமைகளிலும் தன்னுடைய மொழியால் பரிட்சித்துப் பார்த்திடும் வழக்கும் கொண்டவர் எழுத்தாளர் உதயசங்கர். கவிதை, சிறுகதை, உரைநடை, இளையோர் இலக்கியம்,சிறார் படைப்புகள் என துறைகள் யாவற்றிலும் வெகுமதியான பங்களிப்பு அவருடையது. தமிழில் தற்கால இலக்கியத்தில் வாசக கவனம் பெற்றுவரும் இலக்கிய வகைமை  குறுங்கதைகள். ஏற்கனவே அசைவற்று மிதக்கும் நிழல் எனும் குறுங்கதைகள் தொகுப்பினை எழுதியிருக்கிறார்.  என்றுமுள இசை அவருடைய இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பு..

 

குறுங்கதை என்பதால் அது கால்பக்கத்திற்குள் துவங்கி முழுப்பக்கம்வரை இருக்கலாம் எனும் பொதுவான பார்வை இருக்கிறது. பக்க அளவு மட்டும் ஒரு தேர்ந்த குறுங்கதைக்கான இலக்கணமாகிட முடியாது. கைப்பிடி மணலுக்குள் ஒரு பெரும் வனத்தை அடைத்துவிட முடியும் குறுங்கதைகளால். . கைப்பிடிக்குள் அடங்கியிருக்கும் கடலுக்குள் பிரம்மாண்டத்தை வனைந்து கொண்டுவர முயல்கிற விந்தைகளை குறுங்கதைகள் செய்கின்றன. ஒரு காட்சி, ஒரு மின்னல் வெட்டித் தெறித்தது போலான சித்தரிப்பு. கவித்துவமான மொழிதல் இவையெல்லாம் குறுங்கதைகளுக்குள் நிகழ்கின்றன. சிறுகதைக்கும் கவிதைக்கும் இடையிலாடும் மலர்ஊஞ்சல் குறுங்கதைகள் என்றும் வாசக வசதிக்காக வைத்துக் கொள்ளலாம். தமிழில் குறுங்கதைகளுக்கு பெரும் தொடர்ச்சி இருக்கிறது. ஒரு ஊர்ல நரியாம் அதோட சரியாம் என்பதே தமிழில் எழுதப்பட்ட முதல் குறுங்கதை. பாரதியின் வசன கவிதைகளை தாண்டிச்செல்லவே சமகால குறுங்கதைகள் முயற்சி செய்கின்றன.  புதுமைப்பித்தன் குறுங்கதைகள் என்று பெயரிடாமலே கட்டில் பேசுகிறது போன்ற அபூர்வமான குறுங்கதைகளை எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியே என்றுமுள இசை எனும் எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைத் தொகுப்பு..

 

எட்டிப்பார்த்த மரணம் துவங்கி சந்தை வரையிலும் மொத்தமாக நாற்பத்தி ஒன்பது குறுங்கதைகளை என்றுமுள இசையாக்கித்தந்திருக்கிறார்

எழுத்தாளர்.ஐம்பாதவது கதையை இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நானோ அல்லாது இதனை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களோ எழுதி என்றுமுள இசைக்குள் சேர்க்கலாம்..  தொகுப்பு முழுவதும் விடுதலையின் குரல்கள் தேர்ந்த சொற்களால் தைத்துத் தரப்பட்டிருக்கின்றன.. அதற்குள் ஆளுமைகளின் மரண நொடிகள் காட்சிகளாகின்றன. விரும்பி ஏற்க மரணம் என்ன வசநந்தத்தையா கொண்டுவரப்போகிறது. ஆனாலும் நித்தமும் எல்லோர் வாழ்விலும் எட்டிப்பார்க்கவே செய்கிறது மரணத்தின் கண்கள். அது விசிறிடும் துக்க வாசம் நிறைந்திருக்காத நாள் எது இந்த இகவாழ்வில் என்பதையே என்றுமுள இசை வாசகருக்குள் கடத்துகிறது.

 

துப்பாக்கிக்குண்டு தான் துளைத்திடப் போகும் முதியவரின் கண்களை மிக அருகில் பார்த்தபோது தனக்குள் தடுமாறிப்போகிறது. அது நினைத்துக்கொள்கிறது. மனிதர்கள் பைத்தியக்காரர்கள்.தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள வித விதமான ஆயுதங்களை உருவாக்குகிறார்கள். கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டா தனக்குள் பேசிக்கொண்டே மகாத்மாவின் நெஞ்சை நோக்கிப் போகிறது. இந்த மனிதனை கருணை பொங்கிடும் இந்த ஆத்மாவை நிச்சயமாக அழிக்கக்கூடாது என்று முனங்கியபடியே பயணிக்கிறது. மகாத்மா மரணத்தின் கடைசிப்புள்ளியயைத் தொட்டபோது அவரின் குரல்வளையிலிருந்து வந்த ஹே ராம் எனும் ஒலியின் எதிரொலியைக் கேட்டிருக்கிறார் உதயசங்கர். அந்த எதிரொலி கோட்சேவின் சனாதன துப்பாக்கி வெளித்தள்ளிய தோட்டாவின் குரல் என்பதைக்கண்டறிய வரலாற்றுப் பிரக்ஞையும்  அதன்மீதான நீள்வாசிப்பும் வேண்டும். அது எழுத்தாளருக்கு இருப்பதை என்றுமுள இசையின் பல குறுங்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. தூக்குக் கயிற்றை முத்தமிட முன்நகர்ந்த நொடியில் உரத்து முழக்கமிட்ட தன் சொற்கள் காலமெனும் நீள் நதியில் மிதந்தலையும் வல்லமை கொண்டவை என்பது மாவீரன் பகத்சிங்கிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். லாகூர் சிறையில் இருந்து தெறித்து விழுந்த இன்குலாப் ஜிந்தாபாத் எனும் சொற்கள்  இன்றுவரையிலும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் மாற்றங்களை முன் உணர்ந்திருப்பார் பகத்சிங் என்பதை நுண்கதையொன்று வாசகனுக்கு கண்டுபிடித்துச் சொல்கிறது. பொலிவியாவில் தான் கிடத்தப்பட்ட பள்ளிக்கூட பெஞ்சில் உயிரைவிட்டுக் கொண்டிருந்த சே அய்யோ இந்தப் பள்ளிக்கூடத்தை குழந்தைகள் படிக்த்திடும் வகையில் திறக்க மாட்டார்களே எனத் துக்கப் பட்டிருக்கிறான் என்பதையும் கதைகள்தான் கண்டுபிடித்துச் சொல்கின்றன.  விடுதலையின் சொற்களை தன் கவிதைகளுக்குள் பொதிந்து வைத்திருந்த பாப்லோ நெருடாவின் மரண நொடி எது?  அந்த கொடூரமான பூஞ்சை மருந்து தன்னுடலுக்குள் இறங்கி கவிதைச் சொற்களையும் விஷமாக்கிடுமோ? என கவலை கொண்டிருப்பார் என எழுதுவதற்கான சாத்தியங்களை குறுங்கதைகளே எழுத்தாளருக்கு உருவிக்கித் தருகின்றன. இந்த உலக இலக்கிய வாசிப்பும் கவனமும்தான்

 ஆப்ரிக்க கவிஞன் பெஞ்சமின் மொலாய்சிக்கு அஞ்சலிக் கவிதை எழுத வைக்கிறது.அந்த அஞ்சலிக்கவிதையில் அவன் ஏறிய தூக்குமர இலையின் பசிய வாசம் படர்ந்திருக்கும். அதனை வாசகர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். வேறு எந்த இலக்கிய வகைமையையும்விட கூடுதலான வாசகர் பங்கேற்பிற்கான சாத்தியங்களை தனக்குள் பொதிந்து வைத்திருப்பவை குறுங்கதைகள்.

 

கலைகள் மனங்களுக்குள் எளிய தத்துவ விவாதங்களை நிச்சயமாக நடத்தும் வல்லமை கொண்டவை. கலையின் நுண்தன்மை வாய்க்கப்பெற்றவை குறுங்கதைகள், எனவே அவற்றின் ஊடாக தத்துவ விவாதங்கள் நடக்கவே செய்யும். என்றுமுள இசையில் மனம், மரணம்,விடுதலை, காதல்,காமம் என வாழ்வின் நுண்பகுதிகளைக் குறித்த தர்க்கங்கள் பல கதைகளில் நிகழ்கின்றன.  தேடல் என்பது கனவுச்சொல்லாக மனங்களில் சேகரமாகியிருக்கிறது. நிஜத்தில் தேடல் என்பது என்ன? மறதியின் நிழல் அழுந்தப்படிந்த மனிதர்களால் ஆனது இந்த உலகு. மறதியின் கொடும்பாதைக்குள் பதுங்கிக்கிடக்கும் ஊரை, உலகை ஏன் தன்னையே தேடி ஏமாந்து போகிறவன் என்றுமுள இசைக்குள் அலைந்து கொண்டேயிருக்கிறான். அவன்தான் கோதமன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நின்றபோது பன்றி இறைச்சியை உணவாகத் தந்தவன். உலகின் இயல்பில் தன்னைக் கரைத்துக் கொள்ளாத அந்த வேடுவன்தான் உழைப்பின் அழகை கோதமனுக்குப் போதித்தவன்.மனம் நிறையும் பயத்தைக் கொணடுவந்து சேர்க்கிறது இருள். இருளில் இருந்து யாரோ அல்லது எதுவோ தன்னை உற்றுக் கவனிப்பதாக நினைத்துவிட்டால் என்ன ஆகும். மனம் பிசகிப்போவதற்கானா  எல்லா சாத்தியங்களையும் தன்னுள் ரகஸியமாக்கி வைத்திருக்கிறது இருள். அதனால்தான் கோதமனுக்கே உழைப்பைக் கற்றுத்தந்த வேடவன் சமதளத்தின் ஒளிவெள்ளத்தில் தடுமாறி இருளைக்கண்டு அஞ்சுகிறான். கழிவறைச் சுவர்களை,அதுவும் பேருந்து நிலையங்களில் ஒதுங்கியிருக்கும் கழிவறைச் சுவர்களை பார்க்காமல் கடப்பது கடினம். அங்கு கிறுக்கப்பட்டிருக்கும் பாலியல் வசைகள். தன்னை அழைக்கச் சொல்லி பொறிக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்கள். இப்படி எது எதுவோ நிறைந்திருப்பதே கழிவறைச் சுவர்களின் இயல்பு. நுண்கதைகளின் நுட்பமே இயால்பைக் கலைத்து எழுதும் அதன் விசித்திரத் தன்மையில்தான் கவனம் பெறுகிறது. நறுமணம் வீசும் மலர்களின் தைல ஓவியத்தை எழுதிய கோட்டிக்காரன் யாராக இருக்கும்.ஒரே படித்தான கழிவறை வசைகளைக் கண்டு எரிச்சலுற்ற மனதின் வெளிப்பாடுதான் அந்த மலர்க்காடு. சுவரில் வளர்ந்திருக்கும் அந்த தோட்டச்செடிகளில் இருந்து நறுமணம் வீசட்டும். தவறு ஒன்றுமில்லை.

 

பசிதான் கடவுள் என்று கண்டறிவதற்கு ஒரு நெடுந்தூரப் பயணம் தேவைப்படுகிறது. போதையில் வீழ்த்தும் சொற்கள் இவையென சில சொற்களைக் கண்டறிந்து சொல்கிற ஆற்றல் பசிக்கு மட்டுமே இருப்பதை எழுத்தாளர் தன் வாழ்வின் ஏதோ ஒரு பக்கத்தில் கண்டுணர்ந்திருக்கிறார். அதனால் தான் அவரால் கடவுள், மதம், சாதி, ஆன்மீகம், ஞானம், யோகம் முக்தி, மோட்சம் எனும் சூது கவ்விய சொற்களை துரத்திடும் பேராற்றல் எரிந்த வயிற்றின் பசிக்குரலின் ஆவேசத்தில் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. அவன் கடவுளுக்காக இவன் கடவுளை அவன் இடிப்பதைக் கண்ட கடவுளர்கள் தெருவிலிறங்கி ஓடுகிறார்கள் என்பதைச் சொல்லும் வல்லமை குறுங்கதைகளுக்கு இருக்கிறது.

 

கவிதைகளுக்குள் அரசியல் செய்ய முடிந்திருக்கிறது எழுத்தாளர்களால். வானம்பாடி கவிஞர்களின் தொகுப்புகளில் அரசியல் சொல்லாடல்கள் நிறைந்திருந்தது. சிறுகதைகளும்கூட அதன் அரசியல் முகத்தை வெகு சில எழுத்தாளர்களின் வழியே கண்டடைந்திருக்கிறது. சிறுகதைக்கும், கவிதைக்கும் இடையே ஊஞ்சலாடும் குறுங்கதைகள் உணர்வுகளின் தொகுப்பாகவே எழுதிப் பார்க்கப்படுகிறது. தமிழில் நிகழும் சமகாலத்தையும் குறுங்கதையாக்க வேண்டும் என்பதை என்றுமுள இசையின் வழியாக எழுத்தாளர் உதயசங்கர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்கு நினைவூட்டுகிறார்.பின் நவீனத்துவ காலத்தில் மனிதர்களுக்கு சந்தையில் இருப்பது பொருட்களுக்கான மதிப்பு மட்டுமே. பன்னாட்டுக் கம்பெனிகள் கடை விரித்திருக்கும் விரிந்த சந்தையில் தற்கொலைக் கருவிகளுக்குக்கூட சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.காயமற்றோரே வாருங்கள்.உங்களுக்கு மட்டுமே எங்கள் கருவிகள் என சொல்வதற்கு பின் உள்ள அரசியலை உடைத்து உடைத்து ஒரு நூறு குறுங்கதைகளை எழுத்தாளர்கள் எழுத வேண்டும். அதனையே என்றுமுள இசையும் விரும்புகிறது.

 

யாரும் இதுவரையிலும் எழுதி இருக்க சாத்தியமேயில்லாத கதைகளைத்தான் எல்லோரும் எழுத முயற்சிக்கிறார்கள். எல்லோரும் எழுதிக் கொண்டிருப்பது அல்லது எழுதத் துவங்குவது அவரவர்களின் இரண்டாவது கதையைத்தான். ஏன் என்றால் உங்களின் முதல்கதையை ஏற்கனவே போர்ஹே எழுதிவிட்டார் எனும் சொல்வழக்கு லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகினில் இன்றுவரையிலும் இருந்து வருகிறது. என்றுமுள இசைக்குள் அசலான முதல் தமிழ்க்குறுங்கதையை எழுத்தாளர் உதயசங்கர் எழுதிவிட்டார்.

மரணத்தின் நற்செய்தி..

காலாதி காலததிற்குள் பரவித்தொடரப் போகும் குறுங்கதையிது.

தேடிப்படியுங்கள். மமரணத்தையே தற்கொலை நோக்கி திருப்பி அனுப்பும் விந்தையர்கள் குழந்தைகள் என்பதை கண்டுபிடித்துச் சொன்ன குறுங்கதையது….போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வன்முறையை எதிர்த்து நிற்க வேண்டிய உளத்தை வடிவமைக்கும் ஆற்றல் கொண்டவை என்றுமுள இசை எனும் எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைத் தொகுப்பு. இந்த தொகுப்பின் தனித்த அம்சம் குறுங்கதைகளுக்கு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள். குறுங்கதைகள் உணர்த்திடும் உணர்வினை மேம்படுத்திடும் வகையினில் அமைந்துள்ளது. என்றுமுள இசை கவனம் பெறத் துவங்கியிருக்கும் குறுங்கதைகள் எனும் இலக்கிய வகைமைக்கு வளம் சேர்க்கும் தனித்த தொகுப்பு…

                    .                  

                                          .                         

 

என்றுமுள இசை

குறுங்கதைகள்.

உதயசங்கர்.

செவ்வியல் பதிப்பகம்.

பக்கங்கள்.90

விலை 150/

தொடர்புக்கு - 9488406868

 

 

 

 

 

 

Thursday, 16 May 2019

காந்தியைக் கொன்றது ஏன்?

காந்தியைக் கொன்றது ஏன்?
காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்?
தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.
காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.
மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.
காந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை.
ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார்.
இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.
தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 70 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.
புத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ஈசுவர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்.
இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.
ஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே
எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

Sunday, 22 February 2015

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்!

 

உதயசங்கர்

gandhi

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி மகாத்மா காந்தி மீது மதன்லால் பாவா என்ற மதவெறியன் குண்டு வீசிக் கொல்ல முயன்றான். அதிலிருந்து மயிரிழையில் தப்பிய காந்தி கொஞ்சமும் பதட்டமடையாமல் தன்னுடைய பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார். ஆனால் அது தான் அவருடைய கடைசி பிரார்த்தனை கூட்டம் என்று அவருக்குத் தெரியாது. அதைப்பற்றி காந்தியுடன் இருந்த ஒரு அரசியல் தலைவர், “ பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் பைத்தியக்காரத்தனமான செயல் “ என்று கூறினார். அதைக் கேட்டு சிரித்த காந்தி, “ முட்டாள்.. இதற்குப் பின்னால் விரிந்து பரந்த சதி இருப்பது உனக்குத் தெரியவில்லையா? “ என்று கூறினார். அவர் கூறிய படியே அதற்கடுத்த பத்தாவது நாளில் நாதுராம் கோட்சே என்ற இந்து மதவெறியன் அண்ணலை சுட்டுக் கொன்றான். ஒன்றிரண்டு தடவையல்ல. மகாத்மாவைக் கொல்ல கிட்டத்தட்ட பத்து முறை முயற்சித்திருக்கிறார்கள். 1943 ஆம் ஆண்டிலிருந்தே கொலை முயற்சிகள் தொடங்கி விட்டன. காந்தியும் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் “ இதுவரை கொலை முயற்சியிலிருந்து ஏழுமுறை எனது உயிர் காப்பாற்றப்பட்டது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விடப்போவதில்லை. நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிரோடு வாழ்வேன்..” என்று கூறினார். கோட்சே இதற்கு, ” ”அதுவரை உங்களை யார் உயிருடன் விட்டு வைக்கப்போகிறார்கள். என்று பார்த்து விடுவோம்.” என்று தான் நடத்தி வந்த அக்ரானி பத்திரிகையில் பதிலளித்திருந்தான்.

அது உண்மையில் நடந்தேவிட்டது. ஜனவரி 30 ஆம் தேதி மாலை அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த படேலிடம் காந்தி பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்று கூறி விடை கொடுத்தனுப்பி விட்டு புறப்பட்டார். பேத்தி ஆவாகாந்தியும், மருமகள் மனுகாந்தியும் இரண்டு பக்கங்களிலும் தோள் கொடுக்க தேசத்திற்காக தன்னையே உடல் பொருள் ஆவி அனைத்தையுமே ஈந்து தன்னையே சத்திய சோதனைக்களமாக மாற்றிய நைந்து போன உடலுடன் கூடிய அந்த வயதான முதியவர் பிரார்த்தனை மண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. நேரம் மாலை 5.10 மணி. அப்போது காந்திக்கு முன்னால் முப்பத்தைந்து வயது இளைஞன் நின்று தன் உடலை வளைத்து வணங்குகிறான். மகாத்மாவும் பதில் வணக்கம் சொல்கிறார். அந்த இளைஞன், “ இன்று பிரார்த்தனைக்கு நேரமாகிவிட்டதல்லவா? “ என்று கேட்கிறான். காந்தி பதில் சொல்வதற்கு முன்னால் அவனுடைய உள்ளங்கைகளில் முளைத்த துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக பாய்கின்றன. காந்தியின் இதயத்துக்குக் கீழேயும் வயிற்றுக்குக் கீழேயும் குண்டுகள் பாய்ந்தன. ஹே ராம்.. என்ற சப்தத்துடன் காந்தி விழுந்தார். அந்தக் கணமே அவருடைய உயிர் பிரிந்தது.

காந்தி சநாதனவாதி. இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர். வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்?

தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் போது இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கும் நாட்டு விடுதலை கிடைத்த போது இருந்த மகாத்மா காந்திக்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள். இந்த மாற்றங்களை அவரே, “ உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துகளை கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றிருக்கிறேன்..” என்று கூறியிருக்கிறார். அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் இந்து மதப்பற்றாளர். ஆனால் மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததினால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” என்று முழங்கினார். காந்தி முன்மொழிந்தது புவியியல் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் உள்ளடக்கிய ( inclusive nationalism ) தேசியம்.

காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேருவும் நாத்திகர்கள். அது மட்டுமல்ல அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ’ கடவுள் தான் உண்மை ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ‘ உண்மையே கடவுள் ‘ என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர். இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கச் செய்தது.

மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறிவன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.

காந்தி ராமராஜ்யம் என்ற சொல்லை அவர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை அவரே விளக்கினார். “ ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. கடவுளின் அரசு என்ற பொருளிலேயே கூறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ராமனும் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை. ராமராஜ்யம் என்பதற்கு இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம். அரசியல்ரீதியாகப் பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்து போன நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும். அதில் நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும். ஆகவே வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார். இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினார். பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குரானாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனவே தான் “ என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.

தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்த மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர். காந்தியின் மரணத்தில் கூட கலவரம் விளைந்திடத் திட்டமிட்ட நாதுராம் கோட்சே தன்னுடைய கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தான். அந்தளவுக்கு வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் வெறியர்கள். பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பத்திரமாக இருந்த மகாத்மா சுதந்திரஇந்தியாவில் ஐந்து மாதங்களுக்குள் கொலையுண்டார் என்பது சாதாரணமான விஷயமல்ல. அவர் இறந்து 67 ஆண்டுகளில் அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.

புத்தர், ஏசு, காந்தி, என்று புனிதர்களின் வரிசையில் இடம்பிடித்த மகாத்மா, உலகம் முழுவதும் தன்னுடைய அகிம்சைக் கொள்கைக்காகவும் சத்யாக்கிரகப்போராட்டத்திற்காகவும், இன்றும் நினைக்கப்படுகிற மகாத்மா தன் பொக்கைவாய்ச்சிரிப்போடு நம்மைப் பார்த்து அவருடைய வழக்கமான பஜனைப் பாடலைப் பாடுகிறார்.

ரகுபதி ராகவ ராஜாராம்

பதீத பாவன சீதாராம்

ஈசுவர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்.

இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்கிறதா உங்களுக்கு.

ஈசுவரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே

எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள் கடவுளே!

அவரால்

இப்போது வேறு என்ன சொல்ல முடியும்?

நன்றி – வண்ணக்கதிர் 22-02-15